Theneehead-1

Vol: 14                                                                                                                                                11.02.2017

சுமந்திரன் மீதான இலக்கு

-           கருணாகரன்

“மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் மட்டுமல்ல, மைத்திரி – ரணில் நல்லாட்சியிலும் புலிப் புச்சாண்டியா?“ என்று கேட்கிறார்கள் சனங்கள். “இது எதற்காக?” என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

“நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொல்வதற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் உறப்பினsumanthiran6ர்கள் சிலர் முயற்சி. கொலை முயற்சி முறியடிப்பு. சூத்திரதாரிகள் கைது. விசாரணைகள் தொடர்கின்றன. வெளிநாடுகளில் இருக்கும் புலிகள் தூண்டுதல்” என்றவாறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதையொட்டிய கைதுகள், விசாரணைகள், நீதி மன்ற நடவடிக்கைகள், சிறைவைப்பு என தொடர் காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர், நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதைக்குறித்து பத்திரிகைகளில் விரிவான ஆய்வுகளும் விவரணங்களும் எழுதப்படுகின்றன. இந்தச் செய்திகளில் எவ்வளவு உண்மையுண்டு? இதனுடைய அரசியல் நோக்கங்கள் எதுவாக இருக்கும்? இவற்றோடு தொடர்புபட்ட சக்திகள் எவை? அவற்றின் இலக்கு எது? என்ற கேள்விகள் பல்வேறு தரப்பினரிடமும் எழுந்திருக்கின்றன.

கூடவே விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள், அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பதற்ற நிலையும் உளப்பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்தக் கொலை முயற்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களையும் ஆயுதங்களையும் வைத்திருந்தனர் என்றே கைது செய்யப்பட்.டிருக்கிறார்கள். அவ்வாறே நீதி மன்றத்திலும் முற்படுத்தப்பட்டனர். பிறகு தொடர்ந்து கொண்டிருக்கும் நீதி மன்ற விசாரணைகளில் அரசியல் முக்கியஸ்தர் ஒருவரைக் கொல்வதற்கான முயற்சியிலும் இவர்கள் சம்மந்தப்பட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றில் மறுத்திருக்கின்றனர். ஆகவே இதைப்போன்று தங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் தாம் எதனோடாவது சம்மந்தப்படுத்தப்படலாம் என்று பலரும் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். எது உண்மை, எது பொய் என்று தெரியாத குழப்ப நிலையில் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களும் அவர்களுடைய உறவினர்களும் உள்ளனர். இந்த நிலைமை இவர்களிடையே ஆழமாக துக்கத்தையும் பீதியையும் இந்த விவகாரம் உண்டாக்கியுள்ளது. அவர்களில் பலரும் உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தச் செய்திகள் வெளியாகத் தொடங்கிய நாள் தொடக்கம் பல நண்பர்கள் வெளிநாடுகளிலிருந்து கூட விவரங்களை அறிவதற்காகக் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் ஆய்வுரீதியாகப் பல காரணங்களையும் முன்வைக்கிறார்கள். ஆனால், இன்னும் எவருக்கும் சரியான உண்மை என்னவென்று தெரியவில்லை. சரியான உண்மை தெரியும்வரையில் ஊகங்களே செய்தியாகப் பெருகிக் கொண்டிருக்கும்.

ஆனால், இந்தச் செய்தியைக் குறித்து இதுவரையில் அரசாங்கமோ, தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ, கூட்டமைப்பிலுள்ள ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்ற பிற கட்சிகளோ, ஜனநாயக அமைப்புகளோ, சிவில் சமூகமோ எத்தகைய அறிவிப்பையும் விடுக்கவில்லை. நாட்டிலே நல்லிணக்க முயற்சிகளும் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வரும்போது இப்படியான தடை முயற்சிகள் ஏற்படுத்தப்படுவது நிலைமைகளைப் பாதகமாக்கும். உருவாகியிருக்கும் இடை நிலை அமைதிச் சூழலையும் இது கெடுத்துவிடும் என்ற நோக்கில்கூட இந்த விவகாரம் உணரப்பட்டதாகத் தெரியவில்லை. தவிர, ஜனநாயகத்தை மீளமைப்புச் செய்ய முயற்சிக்கும் நிலையில் இத்தகைய அரசியற் கொலைகள் அதற்கு எதிரான விளைவையே உண்டாக்கும் என்ற புரிதல் கூட இருப்பதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் இந்தப் பாரதூரமான விடயத்தைக்குறித்து முறையான ஒரு கேள்வியைக்கூட யாருமே எழுப்பவில்லை. குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதைப்பற்றி வாயே திறக்கவில்லை.

இவ்வளவுக்கும் சுமந்திரன் கூட்டமைப்பின் உத்தியோகபுர்வப் பேச்சாளரும் முக்கியமான பாராளுமன்ற உறுப்பினருமாவார். மட்டுமல்ல, கூட்டமைப்பின் முதன்மையான தலைவர்களில் ஒருவராகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அதோடு கூட்டமைப்பு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் தீர்வு மற்றும் அரசியலமைப்பு விவகாரத்திலும் முக்கியமான வேலைகளைச் செய்து கொண்டிருப்பவர் சுமந்திரன். இந்த நிலையில் இப்படியானவரின் மீது கொலைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிந்த பிறகும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மௌனமாக இருப்பது எதற்காக?

இதைக்குறித்துப் பேசுவதாக இருந்தால் அது புலிகளைப்பற்றிய குற்றச்சாட்டாக அமைந்து விடும் என்று கூட்டமைப்புக் கருதுகிறதா? அல்லது இந்த விவகாரம் பொருட்படுத்தக்கூடியதல்ல. இது ஒரு கட்டுக்கதை என்ற அடிப்படையில் இதைக் கடந்து போவதற்கு அது முயற்சிக்கிறதா? அல்லது பொறுத்திருந்து நிலைமைகளைச் சரியாக அவதானித்த பிறகு பேசுவோம் என்று எண்ணுகிறதா? அல்லது, சுமந்திரன் என்ற தனி மனிதரே இதைப் பற்றிப் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டதா? எதுவாக இருக்கும்?

இப்படி ஆயிரக்கணக்கான கேள்விகள் இன்று மக்களிடம் உச்சமாக எழுந்திருக்கின்றன. உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று யாருக்குமே புரியவில்லை. இந்தக் கொலை முயற்சி எதற்காக? அல்லது இந்தக்  கொலைக்கதை ஏன் இப்போது அரங்கிற்கு வந்துள்ளது? என்பதே திரும்பத்திரும்ப எல்லோருடைய மனதிலும் எழுந்து கொண்டிருக்கும் கேள்வியாகும்.

தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மீது தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தும் புலிகளின் தரப்பிலிருந்து கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றால், இதனுடைய அர்த்தம் என்ன? உண்மையில் எது தமிழ்த்தேசியம்? எது சரியான வழிமுறை? மக்களுடைய ஆணையைப் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து தீர்வொன்றை எட்டுவது தவறு என்று கொள்ளப்படுகிறதா? அல்லது அரசை எதிர்த்துக்கொண்டே  வெளியே இருந்து செயற்படுவதுதான் சரியானது என்று கூறப்படுகிறதா? அல்லது விடுதலைப்புலிகள் இன்னமும் எதையும் குழப்பக்கூடிய – எதிலும் இடையீட்டைச் செய்யக்கூடிய நிலையில்தான் உள்ளனரா? அல்லது தமிழீழத்தை நோக்கிய பயணம் தொடரும். அதற்கிடையில் எந்தச் சமரசப்புள்ளிகளுக்கும் இடமில்லை என்று உணர்த்தப்படுகிறதா?

இந்தக் குழப்பங்களே இந்தக் கொலை முயற்சியைப்பற்றி யாரையும் வாய் திறக்க விடாமல் தடுக்கின்றன. பொதுவாகவே தமிழ் அரசியற் சக்திகளில் பெரும்பாலானவையும் புலிகளைப் பகிரங்கமாகக் கண்டிக்கப் பின்னிற்கின்றன. அதற்கு இன்னொரு வலுவான காரணம், இந்தக் குற்றச்சாட்டுகள் எந்தளவுக்கு நம்பகத்தன்மையானவை? என்பதாகும். உண்மை எது என்று சரியாகத் தெரியமுன்பு வாயைத்திறப்பது முறையில்லை என்று கூறுகின்றார், தமிழ்த்தேசிய அரசியற் கட்சியொன்றின் முக்கியஸ்தர்.

தவிர, இதில் புலிகளைக் குற்றம் சாட்டவும் முடியாது. அதேவேளை கொலையை ஆதரிக்கவும் இயலாது என்றொரு தரப்பு உள்ளது. அதேவேளை சுமந்திரனுக்கு ஆபத்து வருவதை உள்ளுர ரசிப்பதற்குரிய ஆட்களும் இருக்கிறார்கள். அதில் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் உண்டு. அதிலும் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே பல தலைகள் இந்த விருப்பத்தோடிருக்கின்றனர். அரசியல் என்பது இப்படியான மனநிலையைக் கொண்ட கொலைக்களம்தான். இன்னொரு தரப்பு சுமந்திரனைக் காப்பாற்ற வேணும் என்று நினைத்தாலும் அவருக்கு எதிரான கொலைத்தரப்பைப் பகிரங்கமாக எதிர்க்கவோ குற்றம்சாட்டவோ முடியாதுள்ளது. இதுதான் இன்றைய தமிழ் அரசியல் சூழலின் யதார்த்த (அவல) நிலைமை.

கூட்டமைப்புக்கு வெளியே இருக்கின்ற தமிழ் மக்கள் பேரவை கூட இதைப்பற்றி மூச்சே விடவில்லை. ஜனநாயக அடிப்படையில் ஒரு கொலை முயற்சி என்ற அறிவிப்புப் பொதுத்தளத்தில் முன்வைக்கப்பட்டால், அதற்கான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியது கடப்பாடு. தமிழ் மக்கள் பேரவைக்கு மட்டுமல்ல, ஈ.பி.டி.பி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்  உள்ளிட்டவைகூட இதைக்குறித்துப் பேசவில்லை. அல்லது இந்தச் செய்திகளின் பின்னாலிருக்கும் உண்மைகளைப் பற்றிய கேள்விகளையும் இதனுடைய அரசியலையும் கவனிக்கவில்லை எனலாம். இது ஒரு சட்டப்பிரச்சினை. நீதி மன்றம் சம்மந்தப்பட்ட நடவடிக்கை என்பதால், அந்த வழக்கு முடிவதற்கு முன்பாக இதனைப்பற்றி அவசரப்பட்டு எதையும் பேச முடியாது என்று சொல்லிக் கடந்து சென்று விட முடியாது. அப்படியென்றால் தமிழ்ச்சமூகம் மெய்யாகவே ஜனநாயகத்தையும் அதனுடைய விழுமியங்களையும் விரும்பவில்லையா?

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மட்டும் இதைப்பற்றித் தெரிவிக்கும்போது, இதெல்லாம் ஒரு கட்டுக்கதை என்ற மாதிரிப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தத் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. சுமந்திரனுக்கும் விக்கினேஸ்வரனுக்குமிடையில் அரசியலில் பனிப்போர் என்ற நிலையைக் கடந்து வெளிப்படையாகவே தெரிய வந்த முரண்பாடுகள் நிறைய உண்டு. ஒரே படகில் இருவரும் இருந்தாலும் இருவரும் இரண்டு வெவ்வேறு திசைகளில்தான் படகைச் செலுத்த முயற்சிக்கின்றனர் என்பது வெளியாகத் தெரிந்த சங்கதி. இல்லையென்றால் இதற்கும் மாகாணசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கும். சுமந்திரன் இலக்கு வைக்கப்பட்டதைப்போல மாகாணசபையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டிருந்தால், இப்போது வடக்கு மாகாணசபை எத்தகைய தீர்மானத்தை எடுத்திருக்கும்? எப்படிச் செயற்பட்டிருக்கும்? என்ற கேள்விகளும் இந்த இடத்தில் எழுகின்றன.

சுமந்திரன் தன்னுடைய அரசியல் கருத்துகளாலும் செயற்பாட்டினாலும் ஒரு தரப்பினரிடம் கடுமையான விமர்சனங்களைப் பகிரங்கமாகவே சந்தித்து வந்தவர். விமர்சனங்களை மட்டுமல்ல, வெளிப்படையான எதிர்ப்பையும் கூட. இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் உள்ள தீவிரத் தமிழ்த்தேசிய அபிமானிகள் சுமந்திரனை நிராகரித்தே வந்திருக்கின்றனர். ஊடகங்களிலும் ஒரு குறிப்பிட்ட தரப்பானவை சுமந்திரனை எதிர்த்தே இயங்குகின்றன. என்றாலும் இதையெல்லாம் தெரிந்து கொண்டே, எதிர்கொண்டவாறே சுமந்திரன் தன்னுடைய நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகிறார்.

சுமந்திரனின் இன்றைய ஸ்தானம் என்பது  உண்மையான அர்த்தத்தில் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பதேயாகும். கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சம்மந்தனின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதிலும் அதைச் செயற்படுத்துவதிலும் சுமந்திரனே முன்னிலைப்பாத்திரம் வகிக்கிறார். இதனை மனதார வெறுக்கிற, நிராகரிக்கிற சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களும் இதை அனுசரித்தே போகிறார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரன், சம்மந்தனோடு நெருக்கத்தைக் காட்டுவதைக்காட்டிலும் பார்க்க கஜேந்திரகுமாரோடும் விக்கினேஸ்வரனோடுமே நெருக்கத்தைக் காட்டுகிறார். என்றபோதும் சுரேஸினால் சுமந்திரனுக்கு எதிராகப் பகிரங்கமாக ஒரு அணியைத் திரட்ட முடியவில்லை. போர்க்கொடியைத் தூக்கவும் முடியவில்லை. 

இதைப்போலவே சனங்களிடம் அளவுக்கதிகமாகத் தமிழ்த்தேசிய வாதங்களையும் சிங்கள எதிர்ப்புவாதத்தையும் வைக்கின்ற சிறிதரன், அரியநேத்திரன் போன்றவர்களும் சுமந்திரனின் கைகளுக்கு அடக்கமாகவே உள்ளனர். அதை மீறிச் செல்லவில்லை. அப்படிச் சுமந்திரனை மீறிச் செல்வதற்கு யாரும் தயாருமில்லை. விக்கினேஸ்வரனைக்கண்டால் அவருக்கு ஒரு சிரிப்பும் சமந்தன், சுமந்திரனைக் கண்டால் அவர்களுக்கும் ஒரு சிரிப்புமாக இரண்டு தரப்பையும் அனுசரித்துக் கொண்டிருப்போரைச் சுமந்திரனும் அறிவார். இதனைப்பற்றி சுமந்திரன் வெளிப்படையாகவே சில இடங்களில் கூறிச் சிரித்துமிருக்கிறார். ஆகவே, சுமந்திரன் கூட்டமைப்பிலும் அதனுடைய நிகழ்ச்சி நிரலிலும் வகிக்கின்ற பாத்திரம் வலுவானதாக, மற்றவர்கள் எதிர்க்க முடியாத அளவுக்கே உள்ளது.

மறுவளத்தில் சிங்கள சமூகத்திலும் முஸ்லிம்களிடத்திலும் சுமந்திரன் வரவேற்கப்படுகின்றவராக மாறியிருக்கிறார். நீண்டகாலமாக அரசியல் அரங்கிலிருக்கும் மாவை சேனாதிராஜா போன்றவர்களை விட அரசியல் பிரவேசத்தில் குறைந்த அளவு அனுபவத்தைக் கொண்டிருக்கும் சுமந்திரனுக்கான அறிமுகமும் வரவேற்பும் அதிகம். இது சுமந்திரன் வெளிப்படுத்தி நிற்கும் அரசியல் நிலைப்பாட்டினாலாகும். ஆகவேதான் சிங்கள முஸ்லிம் தரப்பினரை விடவும் தமிழ்த்தரப்பில் சுமந்திரன் எதிர்க்கப்படும் புள்ளியாக மாறியிருக்கிறார். தமிழ்த்தரப்பின் உள்ளே புகைந்து கொண்டிருக்கும் இந்த எதிர்ப்பு நிலைப்பாடு தற்போதைய சமாதான முயற்சிகளுக்கு தமிழ்த்தரப்பின் ஆதரவின்மையையும் எதிர்ப்பையும் காட்டுவதாக உள்ளது. இதையே அரசாங்கமும் விரும்பும். இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கான கடினமான நிலையில் இருக்கும் அரசாங்கத்துக்கு அதை யாராவது குழப்புவதாக இருந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு எதுவாக இருக்க முடியும். கடந்த காலத்தில் இத்தகைய சந்தர்ப்பங்களில் சிங்களத் தரப்பிலுள்ள தீவிர நிலைச் சக்திகளே குழப்பங்களை உண்டாக்குவதுண்டு. இந்தத் தடவை தமிழ்த்தரப்பிலுள்ளவை முயற்சிப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் ஒரு வலுவான சக்தியின் மீதான கொலை முயற்சி என்பது இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கும் அதற்கு அடித்தளமாக இருக்கும் அரசியல் சாசன உருவாக்கத்திற்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவாலா? அல்லது அவற்றுக்கான தடையா? அப்படியென்றால், இலங்கையில் அமைதியும் தீர்வும் எட்டப்படவே கூடாது என்று சிந்திக்கப்படுகிறதா? இவ்வாறு சிந்திப்பது யார்? தனியே புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தானா? அல்லது அவர்களின் பேரில் இயங்கும் திரை மறைவுச் சக்திகளா?

dantv