Theneehead-1

Vol: 14                                                                                                                                                11.03.2017

ஜெனிவா என்ற பெருந்திருவிழா ஒரு பம்மாத்து அரங்கு

           கருணாகரன்

“போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக்கூறல், அரசியலமைப்புத்திருத்தம் போன்றவற்றில் இலங்கைக்குக் கால அவகாசத்தைக் கொடுப்பதற்காகச் சுமந்திரன் கடுமையாகப் பாடுபடுகிறார். இதற்காக ஜெனீவாவுக்குப்போய், அgenewaங்கே 13 நாடுகளின் முக்கிஸ்தர்களிடம் சுமந்திரன் இதைக் கெஞ்சிக் கேட்டிருக்கிறார்” என்று சுமந்திரன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார் கஜேந்திரகுமார். “இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் சுமந்திரனுக்கு ஏன் இந்தளவு கரிசனை?” என்று கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் கஜேந்திரகுமார்.

கஜேந்திரகுமார் இப்படிச் சொல்லும்போது சுமந்திரனின் மீது அநேகமான தமிழர்களுக்குக் கொதிப்பும் கோபமும் எழக்கூடும். அப்படி எழுந்துமிருக்கிறது. பலரும் சுமந்திரனையும் சம்மந்தனையும் திட்டித்தீர்க்கிறார்கள். ஜெனிவாவில் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது சனங்களின் கோபம் வரவரக் கூடி வருகிறது. அதிருப்தி பெருத்துக் கொண்டிருக்கிறது.

கஜேந்திரகுமாரின் நோக்கமும் அதுதான். குழம்பிய குட்டையில் தனக்கான தங்க மீனைப்பிடித்துக் கொள்வது. இதனால், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமை மீது மக்களுக்கிருக்கும் அதிருப்தியை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்  தீவிரமாகச் செயற்படுகிறார். அதற்குத் தோதாக  இந்த மாதிரி விசயங்கள் கஜேந்திரகுமாருக்குப் பயன்படுகின்றன.

ஆனால், உண்மை என்ன?

கஜேந்திரகுமார் சொல்வதைப்போல களநிலவரமில்லை. இதைப்பற்றிக் கஜேந்திரகுமாருக்குத் தெரியாது என்றுமில்லை. அவர் கடந்த ஆண்டுகளில் தன்னுடைய அணிகளோடு ஜெனீவாவில் முகாமிட்டு, இலங்கைக்கு எதிராக, போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி பெரும் முயற்சிகளை முன்னெடுத்தவர். கஜேந்திரகுமாருக்கு அப்பால் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பலவும் கூட எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் குற்றங்கள் தொடர்பாகப் பல ஆவணங்களையும் ஆதாரங்களையும் முன்வைத்திருந்தது. இதைவிட இன்னும் பல ஆதாரங்கள் பல்வேறு தரப்புகளால் முன்வைக்கப்பட்டன. இருந்தும் எதுவுமே நடக்கவில்லை.

“இந்தா இந்தா  இலங்கையின் கழுத்தில் சுருக்குக் கயிறு. மகிந்த ராஜபக்ஸ அணி மாட்டிவிட்டது” என்று Rajapaksha1படங்காட்டப்பட்டதே தவிர, நடைமுறையில் எதுவுமே நிகழவில்லை. எதிர்பார்ப்புகளோடு சென்றவர்கள் எல்லாம் ஏமாற்றத்தோடு களைத்துத் திரும்பியதே நடந்தது. இவ்வளவுக்கும் அப்பொழுது ஆட்சியிலிருந்தது சர்வதேச சமூகத்துக்கு – குறிப்பாக மேற்குலகத்துக்கு விருப்பமில்லாத மகிந்த ராஜபக்ஸ. அப்படியிருந்துமே இலங்கைக்கு மென் அழுத்தங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. மின்சாரக் கதிரை அல்ல. இதையெல்லாம் அனுபவபுர்வமாகவே புரிந்து கொண்டவர் கஜேந்திரகுமார்.

தற்போதைய நிலைமையோ முற்றிலும் வேறானது. இன்று ஆட்சியிலிருப்பது, மைத்திரி – ரணில் அரசாங்கம். மைத்திரி – ரணில் அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் எத்தகைய அழுத்தங்களையும் கொடுக்காது. ஆகவே இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடியை உண்டாக்கும் விதமாக ஐ.நா விலோ அதற்கு வெளியிலோ எத்தகைய தீர்மானங்களும் எடுக்கப்பட மாட்டாது. ஏனென்றால், பலரும் பலதடவை திரும்பத்திரும்பக் குறிப்பிட்டுச் சொன்னதைப்போல இது மேற்குலகம் தன்னுடைய நலன்களுக்காக உருவாக்கிய அரசாங்கமாகும். நன்றாக மனதிற் கொள்ள வேண்டியது, தற்போது அதிகாரத்திலிருப்பது மகிந்த ராஜபக்ஸ இல்லை. மைத்திரி – ரணில் அரசாங்கமே ஆட்சியிருக்கிறது என்பதையே.

எனவே, இந்த நிலையில் மைத்திரி – ரணில் அரசாங்கத்துக்கு எதிராக, அதற்கு நெருக்கடி ஏற்படும் விதமாக, அதற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் சர்வதேச சமூகம் எப்படித் தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியும்? அவர்கள் இந்த அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாப்பதைப்பற்றிச் சிந்திப்பார்களே தவிர, நெருக்கடியைக் கொடுக்கப்போவதில்லை. இதில் இந்தியா, சீனா போன்றவையும் கூட ஏறக்குறைய இணக்கமாகவே உள்ளன.

ஆகவே இலங்கைக்கு எந்தத் தரப்பும் நெருக்கடியை ஏற்படுத்தப்போவதில்லை என்பது தெளிவு. இந்த நிலையில் சுமந்திரன் கேட்டுக்கொண்டதால் மட்டும் குறிப்பிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, சாதகமாகக் கால அவகாசம் வழங்கும் தீர்மானத்தை மேற்கொண்டன என்று சொல்வது முட்டாள்தனமானது. மாறாகச் சுமந்திரனோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ எதிர்த்திருந்தால் அத்தனை நாடுகளும் இந்தத் தீர்மானத்தை மாற்றி “கால அவகாசம் வழங்க முடியாது” என்று அறிவித்திருக்குமா? நிச்சயமாக இல்லை. பதிலாக தமிழர்கள் எல்லோரும் ஒரே குரலில் எதிர்ப்புக் காட்டியிருக்கிறார்கள் என்று மட்டுமே ஒரு பதிவிருக்கும். இப்படி தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று ஒற்றுமை உணர்வைப் பல தடவை காண்பித்தாயிற்று. என்ன நடந்தது?

பதிலாக மகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்திருந்தால் இந்த நேரம் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச சமூகம் இலங்கையைக் கிழித்துத் தோரணம் (அழுத்தத்தை நடைமுறையில் கொடுக்காமல், வெறும் காட்சியாக மட்டுமே) கட்டப்போவதாக காட்சி காட்டிக்கொண்டிருக்கும். சுமந்திரனுக்கு வேலையே இருந்திருக்காது. இதுதான் சர்வதேச சமூகத்தின் அரசியல். இதுதான் தமிழ் மக்களுக்கான சர்வதேச சமூகத்தின் ஆதரவு. குறிப்பாக அமெரிக்கா வழங்குகின்ற அரசியல் கேக் இதுவே.

ஆதிக்கச் சக்திகள் தமது நலன்களின் அடிப்படையில் சிந்திக்கிற மரபார்ந்த அரசியலில் நியாயங்களையும் மாற்றங்களையும் எதிர்பார்க்க முடியாது. சர்வதேச சமூகம் என்ற மேற்காதிக்க – மேலாதிக்க - அரசியல் தனது நலனைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதேயில்லை. இதனால்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் உயிரான கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் கைவிடப்படுகின்றன. இதையும் கடந்து அதிசயம், அபூர்வம் என்றமாதிரி ஏதாவது அற்புதங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சார்பாக நடந்தால், அதிலும் ஆதிக்கச் சக்திகளின் நலன்களே அதிகமாக இருக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடாது. எனவே இந்த யதார்த்தத்தை, இந்த உண்மையை உணர்ந்து கொண்டே நாம் நமது அரசியலைப் பற்றி, நம்முடைய எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவாக ஐ.நாவில் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அமெரிக்கா இதற்குப் பூரண ஆதரவளிக்கிறது. இதைத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத் தவிர்ந்த ஏனைய தமிழ்த்தரப்புகள் எதிர்க்கின்றன. அவற்றின் கோரிக்கை அல்லது நிலைப்பாடு, இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்பது. அதாவது தாமதிக்கும் நீதி என்பது கிடைக்காத நீதியாகிவிடும் என்று அவை வாதிடுகின்றன. இந்த நிலையில் தமிழ்ப்பெரும்பான்மையையும் திருப்திப்படுத்துவதற்கு மேற்குலகம் விரும்புகிறது. குறிப்பாக அமெரிக்காவும். ஆகவே இதற்கும் அவர்கள் ஒரு பொறிமுறையை வைத்திருக்கிறார்கள். இதன்படி அமெரிக்கத் தூதர் அதுல் கொசாப் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனைச் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு ஏனென்றால், தீவிர நிலைத் தமிழ்த்தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காக. விக்கினேஸ்வரனை அமெரிக்கத் தூதர் சந்தித்தது என்பது கஜேந்திரகுமாரைச் சந்திப்பதாகவே அர்த்தம். அதாவது கஜேந்திரகுமாரை மென்னிலைப்படுத்துவதற்காக. விக்கினேஸ்வரனுக்கு ஊடாகக் கஜேந்திரகுமாருக்குச் செய்தியைக் கடத்துவதற்காக.

இதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. அரசியல் என்பது இதுதான். ஒரு அணி அரச ஆதரவாகவும் sumanthiran mpஇன்னொரு அணி அரசாங்கத்தை விமர்சிப்பதாகவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே இரண்டு விதமாக இயங்கும்போது அமெரிக்கா மட்டும் சோணாங்கித்தனமாக நடந்து கொள்ளுமா? அதுவும் இரண்டு விதமாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ, தன்னுடைய நலனுக்காக இயங்கும்.

இப்படியான அணுகுமுறையில்தான் ஒட்டுமொத்த அரசியலும் நடந்து கொண்டிருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வியுகம் அமைப்பதாகக் காண்பித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கைக்கு மென்னிலை அழுத்தமொன்றைக் கொடுத்து அதனுடைய முதுகில் தட்டிக் கொடுத்தது ஐ.நா. எனவே, சர்வதேச அரசியல் ஆதரவு, சர்வதேச சமூகத்துக்கு எம்மை வெளிப்படுத்துவது என்று நாம் நம்புவதெல்லாம் நம்மை நாமே ஒரு வகையில் திருப்திப்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் மட்டுமே. ஆழமாக நோக்கினால் இது ஒரு வகையில் உளவியல் ரீதியான ஒரு விவகாராகும். இதை இன்னும் ஆழமாக சமூக ரீதியாகப் பார்த்தால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். ஆனால், எம்மை அறியாமலே நாம் இதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதுதான் மிகக் கொடிய துயரமான நிலை.

மீண்டும் திருப்பிக் கேட்கலாம். உண்மையில் சர்வதேச சமூகம் நீதியை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறதா? அக்கறைப்படுகிறதா? ஓம் என்றால், இவ்வளவு காலமும் அதைச்செய்யாமல் ஏனிருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. தாமதிக்கும் நீதி கிடைக்காத நீதி அல்லது பயனற்ற நீதி என்பதற்குச் சமம்.

எனவே, ஜெனிவா என்ற பெருந்திருவிழா ஒரு பம்மாத்து அரங்கு என்பது இன்று தெளிவாகவே புரிந்திருக்கிறது. அதனால்தான் இந்தத் தடவை ஜெனிவாத்திருவிழா பெரிய அளவில் களை கட்டவில்லை. பலர் “ஜெனீவாவுக்குப் பயணம் – மனித உரிமைப்போருக்குப் படையணி தயார்” என்ற பேரில் வெள்ளவத்தையிலுள்ள வசந்தம் கடையில் பருத்தித்துறை வடையும் மிளகாய்த்தூளும் எள்ளுப்பிண்ணாக்கும் வாங்கமுடியாமல் போனது. இல்லையென்றால் ஊராவீட்டுச் செலவில் ஒரு உலகம் சுற்றும் பயணம் நடந்திருக்கும்.

உலகம் தன்நோக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. காய்கள் அதற்கேற்றபடி நகர்த்தப்படுகின்றன. சோகமானது என்னவென்றால், நமக்கென்று எந்தக் காயும் இல்லை என்பதே. பதிலாக எங்களுக்காக யாரோ எல்லாம் காய் நகர்த்தவேணும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நமக்கான காய்களை நாமே நகர்த்தவேணும் என்று யாரும் யோசிப்பதாக இல்லை. அப்படி யோசிப்பவர்களைச் சனங்கள் பகடி பண்ணுகிறார்கள்.

இது அனைவருக்குமான உலகம் என்று சிந்திக்கவில்லைப் பலர். இதில் சிறியவைக்கும் இடமுண்டு. பெரியவைக்கும் இடமுண்டு. சிங்கங்களுக்கு இடமிருப்பதைப்போலவே சிறு முயலுக்கும் இடமுண்டு. யானைகளுக்கும் இடமுண்டு. சிறிய எறும்புகளுக்கும் இடமுண்டு. அவற்றுக்கென்று தனியான பாதைகளும் உண்டு. இல்லையென்றால், பலமானதுதான் வாழுமென்றால் உலகில் சிங்கங்கள் மட்டும்தான் வாழ முடியும். சிங்கங்கள் மட்டும்தான் வாழுமென்றால், அந்தச் சிங்கங்களுக்கு உணவு? ஆகவே சிங்கங்கள் மட்டும்தான் வாழ நினைத்தால் உண்மையில் அவற்றினாலும் தொடர்ந்து வாழ முடியாது. இதுதான் யதார்த்தம். எனவே எல்லோருக்கும் எல்லாத்தரப்புக்கும் இந்தப் புமியில் இடமுண்டு. அவை அவை அவற்றின் இடத்தை எடுத்துக் கொள்ள வேணும். அதற்கு என அந்தத்தரப்புகளுக்கு ஏற்றவாறு இடங்களையும் சூழலையும் இயற்கை அளித்திருக்கிறது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேணும்.

ஆகவே இந்த அரசாங்கத்துக்கு நோகாத வகையில், அதற்கு ஏற்றமாதிரி, கால அவகாசத்தைக் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறது சர்வதேச சமூகம். மறு வளத்தில் தமிழ்த்தரப்பையும் சற்றுத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறது. அவ்வளவுதான். மைத்திரி – ரணில் அரசாங்கம் வெளிச்சக்திகளுக்குக் கசப்பான முறையில் நடந்திருந்தால், சுமந்திரன் இந்த நாடுகளில் காலில் விழுந்து கெஞ்சினாலும் அவை அதைப் பொருட்படுத்தியிருக்காது. தூக்கியெறிந்து தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டியிருக்கம்.

இதுதான் அரசியல் நிலவரம். இந்த நிலையில் சுமந்திரன் தேவையில்லாமல் பெட்டி தூக்கித்திரிந்திருக்கத் தேவையில்லை. ஆனால், அதற்காகச் சுமந்திரனைக் கோபித்துப் பயன் எதுவும் கிடைக்கப்போவதுமில்லை. இந்த அரசியலைப் புரிந்து கொண்டால் நமக்கும் ரத்தக்கொதிப்பு ஏற்படாது. யாரையோ நினைத்துக் கொடும்பாவி எரிக்கும் கோமாளி விளையாட்டையும் நம்மவர்கள் செய்திருக்கத் தேவையில்லை.


கடந்த கால, நிகழ்கால அரசியல்களம் தமிழ் மக்களுக்குப் பெரியதொரு படிப்பினையைத் தந்திருக்கிறது. அரசியலில் அதிகமானவர்கள் வில்லன்கள். சிலர் கோமாளிகள். அபுர்வமாக எப்போதாவது, எங்காவது சில தலைவர்கள் அல்லது நல்ல மனிதர்கள் வந்து சேருவார்கள். அவர்களே வரலாற்றில் திருப்பங்களை உண்டாக்குகிறார்கள். அவர்களே சனங்களுக்கு விசுவாசமாகவும் தேசத்துக்கு ஆன்மாவாகவும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களைக் காலமும் களமும் சரியாகக் கண்டு கொள்வதில்லை. அல்லது அவர்களைப் பிந்தியே சனங்கள் அடையாளம் காணுவார்கள். அதற்குள் காலச்சக்கரம் எல்லாவற்றையும் எங்கோ கொண்டு சென்று சேர்த்து விடும். சனங்களின் விதி எப்போதும் பிழைத்தே கிடக்கிறது. அவர்கள் கடவுளின் அன்பாணையை விடச் சாத்தானின் வார்த்தையே இனிக்கிறது. 

சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன
 

dantv