Theneehead-1

Vol: 14                                                                                                                                                12.01.2017


யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும்  86 துவிச்சக்கர வண்டிகளை திருடிய மூவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட மூவரை யாழ். பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவர்களிடம் இருந்து 86 துவிச்சக்கர வண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டி திருட்டுக்கள் அதிகரித்திருந்தன.

குறிப்பாக யாழ். நகரின் பிரதான அலுவலகங்கள் வைத்தியசாலைகள் போன்றவற்றிற்கு செல்லும் பொதுமக்கள் தமது துவிச்சக்கர வண்டிகளை பிரதான வீதியின் வாகனம் நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விட்டு செல்லும் போது திருடர்கள் திருடி சென்றிருந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் துவிச்சக்கரவண்டி திருடர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதன்படி ஊர்காவல்துறை பொலிஸாரால் 28 துவிச்சக்கர வண்டிகளும், யாழ். பொலிஸார் 58 துவிச்சக்கர வண்டிகளும் கைப்பற்றப்பட்டிருந்ததுடன், இது தொடர்பில் மூவரை கைது செய்திருந்தனர்.



இதன்படி கைது செய்யப்பட்ட மூவரும் துவிச்சக்கர வண்டிகளை திருடி சென்று அதனை பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதாகவும் விசாரனைகளினூடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.



இதேவேளை கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை பார்வையிட்ட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் துவிச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் சான்றுகளை காண்பித்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்
.

dantv