Theneehead-1

Vol: 14                                                                                                                                                12.02.2017

நந்திக்கடலோரம் ஒரு வரலாற்றுத் தொடக்கம்

-           கருணாகரன்

நந்திக்கடலோரம் ஒரு போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்தது. 2017 இல் இன்னொmanthiரு போராட்டம் ஆரம்பித்திருக்கிறது. நந்திக்கடலின் கிழக்குக் கரையோரமான முள்ளிவாய்க்காலில் 2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். பலரும் எதிர்பார்த்திராத விதமாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. அங்கே திரண்டிருந்த இரண்டு லட்சம் வரையான மக்களும் மிஞ்சிய விடுதலைப்புலிகளும் படையினரிடம் சரணடைந்தனர்.

ஆனால், இப்போது 2017 இல் அதே நந்திக்கடலின் மேற்குக் கரையோரமான கேப்பாப்பிலவில் மக்கள் போராட்டமொன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப்போராட்டத்தின் எழுச்சி இப்படி அமையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. போராட்டம் மெல்ல மெல்ல விரிவடைந்து கொண்டே போகிறது. தமக்கான வாழிடத்தைத் தாருங்கள் என்று கேட்டுப் போராடும் மக்களுக்கு ஆதரவாக பல திசைகளிலிருந்தும் ஆதரவு அலைகள் பெருகி வருகின்றன. ஆனால், துரதிருஸ்டவசமாக இந்தப் போராட்டம் தமிழ்ப்பரப்பிற்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மக்களுடைய நியாயக் குரலும் அதனுடைய தாற்பரியமும் இலங்கையின் பொதுவெளிக்குக் கொண்டு செல்லப்படவில்லை. குறிப்பாகச் சிங்கள, முஸ்லிம் மக்களிடமுள்ள ஆதரவுச் சக்திகளிடம் இது சென்றடையவில்லை.

“கேப்பாப்பிலவில் என்ன நடக்கிறது? அதைபற்றி அறியலாமா?” என்று தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினைகளைக் குறித்துச் சிந்திக்கும் சிங்கள நண்பர்கள் கேட்கிறார்கள். இந்தப்போராட்டத்தைப்பற்றிச் சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு முழுமையான விவரம் தெரியவில்லை. அவர்கள் முல்லைத்தீவுக்கு வந்தபோதும் அவர்களை யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. பதிலாக அவர்களைப் படைப்புலனாய்வுப் பிரிவின் ஆட்களாக இருக்குமோ எனச் சந்தேகிக்கும் விதமாகவே நோக்குகிறார்கள். இதனால் வந்தவர்கள் சரியான முறையில்  செய்திகளைச் சேகரிக்க முடியவில்லை. இவர்களுக்கு உண்மை நிலவரத்தைத் தெரியப்படுத்தி, வழிப்படுத்துவதற்குத் தமிழ்த்தரப்பிலும் பொருத்தமான ஆட்களில்லை.  

ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் சிங்களச் சமூகத்திடம் இந்தச் செய்திகளை எடுத்துச் செல்லக்கூடிய ஊடகங்களையும் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டுத் தரப்புகளையும் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்வது அவசியம். அது இந்தப் போராட்டத்தை மேலும் வலுவுட்டும். இன்றைய அரசியற் சூழல் என்பது பல முனைகளாலும் அரசாங்கத்துக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். இதில் தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற எல்லைகளைக் கடப்பது சிறப்பு. ஆனால், அதற்கான சாத்தியங்கள் உண்டா என்று யாரும் கேட்கலாம். நாட்டிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புதிய அரசியலமைப்புக்கும் அதை நிறைவேற்றுவதற்கான சர்வசன வாக்கெடுப்புக்கும் ஏனைய தரப்பினருடன் சேர்ந்தியங்கலாம் என்றால், ஏன் இந்த மாதிரிப் பிரச்சினைகளில் சேர்ந்து இயங்க முடியாது? ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தில் பரந்த மனதோடு புத்திபுர்வமாக இயங்க வேண்டிய பொறுப்பு தமிழ்த்தரப்பு மக்களுக்குண்டு. ஆனால், அது சற்றுக் கடினமானதே. என்றாலும் அந்தக் கடினத்தைக் கடந்தே ஆகவேண்டும். ஆனால், இதைப்பற்றி யோசிக்காத நிலையே தமிழ்ப்பக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதனால் இந்தப் போராட்டம் மிகக் சுருங்கிய நிலையில் தமிழ்ப்பரப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலும் வடக்கிற்குள் மட்டும் மட்டுமே. கிழக்கில் விரிவடையவில்லை. கொழும்புக்குச் சென்றடையவில்லை. ஆகையால் முல்லைத்தீவின் ஒதுக்குப்புறத்திலுள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் நடக்கின்ற மிகச் சிறிய எதிர்ப்பு நடவடிக்கை என்ற விதமாகவே இந்தப் பிரச்சினை பொதுவெளியில் அடையாளப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் சிலர் இதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதற்குப் பதிலாளித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன  “கேப்பாப்பிலவு மக்கள் கோருகின்ற காணி அரசுக்குச் சொந்தமானதே தவிர, அந்த மக்களுக்குரியதல்ல. அப்படி அந்தக் காணிகள் தங்களுடையவைதான் என்று அந்த மக்கள் உரிய ஆவணங்களை முன்வைத்தால் தாம் அங்கிருந்து விலகிக்கொள்வோம்” என்றிருக்கிறார்.

இராணுவத்தரப்பின் இந்த அறிவிப்பு பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அந்தக் காணிகள் அரசுக்குச் சொந்தமானவையா? என்று. ஆனால், சனங்களோ அது தங்களுக்குரிய காணி, தாங்கள் குடியிருந்த நிலம் என்கிறார்கள். இதைப்பற்றி அறிவதற்காக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டால், அவர்கள் சரியான தகவல்களைத் தருவதற்குத் தயங்குகிறார்கள். ஏறச்சொன்னால் எருதுக்குக் கோவம். இறங்கச் சொன்னால் முடவனுக்கு வருத்தம் என்ற நிலையில் படைத்தரப்புக்கும் சனங்களுக்கும் பயப்படுகிறார்கள். யாருக்கும் பயப்படாமல் நீதிக்கு மரியாதை செய்தால் போதுமானது.

படைத்தரப்புச் சொல்வதைப்போல, அரசுக்குச்  சொந்தமாக நிலம் என்றாலும் காணியற்ற மக்களுக்கு அதை வழங்குவதற்கு படைத்தரப்பு ஒத்துழைக்க வேணும். மக்கள் அங்கே வாழ்ந்திருந்தபடியால் அதற்கு முன்னுரிமை அளித்து அதை வழங்குவதற்குரிய வகையில் விலகி வழிவிட வேணும். மக்களுக்காகவே அரசும் சட்டங்களும் விதிகளும் படைகளும். அப்படிச் செய்யும்போது படையினரின் மீதும் அரசாங்கத்தின் மீதும் இருக்கின்ற கசப்பும் நம்பிக்கையீனங்களும் குறையும். இது பகையை வளர்க்கும் காலமல்ல. பகையை மறக்கும் காலமாகும்.

ஆகவே மக்களுடைய நலன்களுக்கும் அவர்களுடைய உணர்வுகளுக்கும் இடமளித்து இந்த விடயத்தை அரசாங்கம் கையாள வேண்டும். தாம் ஒரு போதும் பொதுமக்களின் காணிகளைப் பிடிக்கவில்லை என்று படையினர் சொல்ல முடியாது. கேப்பாப்பிலவைப்போல, இயக்கச்சி, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, மயிலிட்டி, பலாலி, கிளிநொச்சி, மல்லாவி எனப்பல இடங்களில் பொதுமக்களுடைய காணிகளைப் படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.

ஆகவே, இந்த நேரத்தில் கேப்பாப்பிலவைப்போல படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஏனைய இடங்களைச் சேர்ந்த மக்களும் தங்களுடைய இடங்களை விடுவிக்கக்கோரி பரந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அது இந்தப் போராட்டத்துக்குப் பலத்தைச் சேர்க்கும். கூடவே, ஏனைய இடங்களையும் விடுவிக்கக்கூடிய ஒரு நிலையை உருவாக்கும். நாடு தழுவிய ரீதியில் இந்தப் பிரச்சினை பொதுமைப்படுத்தப்பட்டால், இது ஒரு முக்கியமான விவகாரமாக அனைவராலும் உணரப்படும்.

நிலங்களை விடுவிப்போம் என்று கடந்த தேர்தல் காலங்களில் சில அரசியற் கட்சிகkeppapilavu-1ள் பெரும் பிரகடனங்களையெல்லாம் செய்திருந்தன. அவற்றை இந்தச் சந்தர்ப்பத்தில் காணவேயில்லை. குறைந்த பட்சம் இதுவரையில் இந்த மக்களுடைய பிரச்சினையைக் கவனத்தில் எடுத்து, இவர்களுக்கான தீர்வை இந்த அரசியற் கட்சிகள் வழங்கியிருக்க வேணும். அப்படிச் செய்யவில்லை. ஏதோ சம்பிரதாயமாக சில போராட்டங்களை முன்னெடுத்தனர். போராடுகிறோம் என்று சாட்டுக்கு வாகனங்களில் வந்து இறங்கி, தொண்டர்கள் புடை சூழ நடந்து காட்சி காட்டினார்கள். வெள்ளை ஆடைகள் கசங்காமல், முகத்தில் வெயில் படாமல் சில மணிநேரங்களில் போராட்டத்தை முடித்துக் கொண்டு, மறுபடியும் வாகனங்களிலேயே திரும்பிச் சென்றனர்

ஆகவேதான்  இனி அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை. தலைவர்களையும் கட்சிகளையும் நம்பிக்கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர். தலைவர்களும் கட்சிகளும் போராடுவதாகப் பாவனை பண்ணுகின்றனவே தவிர, மெய்யான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்றும் சனங்களுக்குப் புரிந்து விட்டது. ஆகவேதான் தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிகளை அவர்கள் தேர்ந்து கொண்டனர்.

அரசியல் கட்சிகள் அல்லது இயக்கங்கள் அல்லது தலைவர்கள் போராடிய காலம் போய் விட்டது. அவர்கள் தங்களை வைத்து காய்களை நகர்த்துகிறார்கள், காரியங்களைச் சாதிக்கிறார்கள், பிழைப்புச் செய்கிறார்கள் என்ற உண்மைகள் படிப்படியாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. எனவேதான் இப்போது சனங்கள்  யாருடைய அனுசரணையும் இல்லாமல் சுயமாகப் போராடுகிறார்கள். தங்களுடைய பிரச்சினைக்காகத் தாங்களே களத்தில் இறங்கியிருக்கிறார்கள். அப்படிப் போராட்டத்தில் இறங்கிய மக்கள் இரவு பகலாகத் தொடர்ந்து போராட்டக் களத்திலிருக்கிறார்கள். ஏனென்றால் அது அவர்களுடைய பிரச்சினை. மருத்துவமனையில் நோயாகிப்படுக்கையில் படுத்திருக்கும் உறவினரை மீட்டெடுக்கும்வரை கண்ணும் கருத்துமாக உறவினர்களே இருப்பார்கள். ஏனையவர்கள்  சம்பிரதாயத்துக்கு கொஞ்ச நேரம் வந்து பார்த்து விட்டுப்போய் விடுவார்கள். தங்களுடைய போராட்டத்துக்கும் அரசியல்வாதிகளுக்குமிடையிலான போராட்டத்துக்கும் இடையிலான போராட்டத்தைப்பற்றி ஒருவர் இப்படி விளக்கமளித்தார். உண்மைதான். சம்பிராயப் போராட்டங்கள், பாவனை பண்ணும் காரியம் என்பதற்கு அப்பால் எதையுமே சாதித்ததில்லை. ஆனால், கடந்த வாரங்களில் வவுனியாவில் காணாமல் போகடிக்கப்பட்ட உறவுகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் அரசாங்கத்தைக் கீழிறங்கி வரச் செய்திருந்தது. இதற்குக்காரணம். இந்தப் போராட்டத்தை அந்த மக்கள் சுயமாக, தங்கள் பிரச்சினைக்காகச் செய்திருந்ததேயாகும். அது ஒரு பாவனைபண்ணும் போராட்டமாக இருந்திருந்தால் எந்தப் பெறுமதியுமில்லாமல் வழமையான ஒன்றைப்போலப் போயிருக்கும். 

ஆகவேதான் மக்கள் தங்களுடைய பிரச்சினைக்கான போராட்டத்தில் நாள்கணக்காக, வாரக்கணக்காக, அதற்கும் மேலாகப் பசியோடும் பட்டினியோடும் களைப்போடும் நிற்கிறார்கள். தங்களுடைய கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு அல்லது பதில் கிடைக்கும்வரை எழுந்து செல்வதில்லை என்பதில் அவர்களுக்கு அசையாத உறுதியோடிருக்கிறார்கள். ஏனென்றால், அது அவர்களுடைய பிரச்சினை அல்லவா.


புலிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு இலங்கை அரசாங்கமும் சிங்கள மக்களில் பெரும்பகுதியினரும் நினைத்திருக்கக்கூடும், இலங்கையில் இனித் தமிழ்மக்களுடைய எதிர்ப்பு நடவடிக்கைகள் இருக்காது என. அப்படியான ஒரு எண்ணமே போர் முடிந்த பிறகான சிங்கள அரசியற் சூழல் காணப்பட்டது. இன்னும் அதே எண்ணத்தையே பெரும்பான்மையான சிங்களத்தரப்புக் கொண்டிருக்கிறது. போரை அரசாங்கம் எதிர்கொள்ளும்போதிருந்த மனநிலையும் எதிர்பார்ப்பும் கூட இதுதான். எப்படியாவது போரில் புலிகளைத் தோற்கடித்து விட்டால் எல்லாமே சரியாகி விடும் என. ஆனால், அப்படி நிலைமை அமையவில்லை.

உலகத்தில் அப்படி ஒரு நடைமுறை எங்கும் இருப்பதில்லை. பிரச்சினைகளைத் தீர்க்காத வரையில், சனங்களின் உணர்வுக்கும் அவர்களுடைய தேவைகளுக்கும் மதிப்புக் கொடுக்காதவரையில் அதிகார அடுக்குக்கு எதிராக எப்போதும் மக்களின் உணர்வுகள் கிளர்ந்து கொண்டேயிருக்கும். அரசாங்கம் என்னதான் சூழ்ச்சிகரமான பொறிகளை வைத்திருந்தாலும் மக்களுடைய பிரச்சினைகளை அதனால் மறைத்து விட முடியாது. தற்போது தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை அரசாங்கம் தனக்குச் சார்பாக, தன்னுடைய கைகளுக்குள் வைத்திருக்கலாம். அப்படிக் கூட்டமைப்பினரை வைத்திருந்தால், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் பார்த்துக் கொள்ளலாம். அல்லது கூட்டமைப்பின் மூலமாக அவற்றுக்கு ஒரு இடை நிலைத்தீர்வைக் கொடுத்து விடலாம் என்று அரசாங்கம் சிந்திக்கக்கூடும். அப்படியானால், அரசாங்கத்தை மட்டுமல்ல, கூட்டமைப்பையும் விட்டே மக்கள் விலகித்தான் நிற்பர். இது இயல்பான ஒன்று. மக்களுடைய உணர்வு இப்படித்தான் எப்போதும் தொழிற்படும். இப்போது நடந்து கொண்டிருப்பதும் இதுவே. ஆகவே இன்றைய மக்களின் போராட்டங்கள் என்பது, இலங்கைத்தீவின் அரசியல் முறைமைகளை மாற்றி அமைப்பதற்கான அடிக்கற்களாகவே தோன்றுகின்றன.

வரலாறு எப்போதும் புரிந்து கொள்ளக்கடினமான பக்கங்களையே கொண்டது. விசித்திரமானது என்று சொல்லப்படுவதுண்டு. அது எப்படியான திருப்பங்களையும் முடிச்சுகளையும் கொண்டது என்று யாருக்கும் தெரிவதில்லை. இப்போதைய நிகழ்ச்சிகளும் அவற்றின் போக்கும் இதை உறுதி செய்கின்றன.

ஆகவே இது ஒரு புதிய வரலாற்றின் புதிய தொடக்கமே. அதாவது நந்திக்கடலோரம் ஒரு போராட்டம் முடிய இன்னொரு போராட்டம் தொடங்கியுள்ளது.

dantv