Theneehead-1

Vol: 14                                                                                                                                                12.03.2017

நடிப்புச் சுதேசிகள்

கருணாகரன்

தற்போது தமிழ் அரசியல் பரப்பில் சூடான விவாதங்களை எழுப்பியிருப்பது, இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வழங்க வேண்டும் எனத் தமிழ்த்தேசியக்கூட்டமைTNA MPSப்பு கோரிய விவகாரம். இதைவிட வேறு சில விசயங்களும் உண்டு. ஆனால், இதுவே முதல்நிலையில் உள்ள விவகாரமாகும்.

இந்தக் குற்றச்சாட்டைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக உரத்த தொனியில் முன்வைத்திருக்கிறது. தமிழ் ஊடக வெளியும் சீறிக் கொண்டேயிருக்கிறது. இணையத்தளங்கள் கூட்டமைப்பைக் கிழித்துத் தோரணம் கட்டிக்கொண்டிருக்கின்றன. முகப்புத்தகங்களைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை. அவை நெருப்பாக எரிந்து கொண்டிருக்கின்றன. இதில் முதலாம் நிலைக்  குற்றவாளியாக்கப்பட்டிருப்பவர் சுமந்திரன். இரண்டாவது, மூன்றாவது நிலைக் குற்றவாளிகள் சம்மந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர். ஏனையோர் அடுத்த வரிசையில் இருப்பவர்கள்.

ஆனால், பொதுப்பார்வையில் ஒட்டமொத்தமாகக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தவறென்றே கருதப்படுகிறது. தனிப்பட்ட சிலரின் நலன்களுக்காக வரலாற்றுத் துரோகத்தைக் கூட்டமைப்பு இழைக்கிறது. மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக நடந்து கொள்கிறது.

அதாவது, முள்ளிவாய்க்காலில் பெருமளவு சனங்கள் கொல்லப்பட்டுப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழர்களுக்குச் சாதமான ஒரு சூழல் வரமாகக் கிடைத்திருந்தது. அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் கூட்டமைப்புச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. பதவிச் சுகத்துக்காகவும் அரசியல் சலுகைகளுக்காகவுமே அவலப்பட்ட சமூகமொன்றின் துயரத்தையும் கண்ணீரையும் இப்படிச் சில்லறை விலைக்குக் கூறு போட்டுக் கூட்டமைப்பு விற்றுக்கொண்டிருக்கிறது. இதனால்தான் அரசாங்கத்துக்கு நிபந்தனையில்லாத ஆதரவைக் கண்மூடித்தனமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுடைய எத்தகைய பிரச்சினைகளுக்கும் எத்தகைய தீர்வையும் காண்பதற்கு அது தயாராக இல்லை என்று சனங்கள் எண்ணுகிறார்கள். இது சனங்களின் அவதானிப்பாகும்.

இந்த அடிப்படையிலேயே அரசியல் ஆய்வாளர்களும் அவதானிகளும் கூட்டமைப்பின் மீது குற்றம் சாட்டிவருகின்றனர். சிலர் இதற்கும் மேலேபோய்ப் பகிரங்கமாகவே கண்டனங்களைத் தெரிவிக்கின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால்,  கூட்டமைப்பின் மீது கடுமையான கோபமும் அதிருப்தியும் நம்பிக்கையின்மையும் தமிழ் மக்களிடம் உருவாகியுள்ளது. இதையே இந்தப் பகிரங்கமான எதிர்ப்புக்குரல்கள் வெளிப்படுத்துகின்றன. இதனால் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எங்கே காணப்படுகின்றனரோ அங்கேயெல்லாம் அவர்களை வழிமறித்துக் கேள்வி கேட்கவும் திட்டவும் செய்கின்றனர் மக்கள். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சரவணபவன் எம்பியைச் சுற்றிவளைத்து முற்றுகைப்போரை நடத்தியது, கொழும்பில் மாணவர்கள் சுமந்திரனைச் சுற்றிவளைத்துக் கேள்விகளால் தாக்கியது என்று பல நிகழ்ச்சிகள் உண்டு.

இப்படிக் கூட்டமைப்பின் மீது சனங்களுக்கும் அதனை முன்னர் ஆதரித்தோருக்கும் உண்டாகியிருக்கும் கசப்பை உணர்ந்து கொண்ட சிலர், “தமக்கும் கூட்டமைப்பின் தீர்மானங்களுக்கும் தொடர்பில்லை. இலங்கைக்குக் கால அவகாசத்தை வழங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். அரசாங்கத்தின் போக்கில் எமக்கு நம்பிக்கையில்லை. மைத்திரி நம்பமுடியாதவராக இருக்கிறார். ரணில் நரித்தனத்தைக் காட்டுகிறார்” என்றெல்லாம் கதைவிடத் தொடங்கியிருக்கின்றனர்.

இது எந்த வகையில் நியாயமானது? இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இன்னும் அழுத்தமாகச் சொன்னால், இது சுத்தமாக அயோக்கியத்தனமன்றி வேறென்ன? மக்களுக்கு இதை விட ஏமாற்றும் பொய்யுரைப்பும் வேறுண்டா?

ஏனென்றால், இவர்கள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல் வரிசைக்காரர்களான சுமந்திரன், சம்மந்தன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் சரிபிழைகளுக்கு அப்பால் இவர்களைப்போல இல்லாமல் ஒரே நிலைப்பாட்டில் அரசாங்கத்துடன் இணைந்தே காரியங்களைச் செய்ய வேணும் என்று பகிரங்கமாகக் கூறுகின்றனர். சுமந்திரன் இதைப்பகிரங்கமாகவே விவாதிக்கிறார். தன் பக்கத்து நியாயங்களை முன்வைக்கிறார். அதனால் வருகின்ற எதிர்ப்பையும் விமர்சனங்களையும் அவர் நேருக்கு நேர் முகம் கொடுக்கிறார். இதில் ஒரு சுயாதீனத்தன்மையும் குறைந் பட்ச நேர்மையும் உண்டு.

ஆனால், ஏனையவர்களின் நிலை அப்படியல்ல. குறிப்பாக சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் அTNA-1ரசாங்கத்துக்கு எதிராகவும் சுமந்திரன், சம்மந்தன் அணிக்கெதிராகவும் போர்ப்பரணி பாடுகின்றனர். கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தவறிழைத்துக் கொண்டேயிருக்கிறது என்று சொல்லி ஒரு பெரீய குற்றச்சாட்டுப்பட்டியலை முன்வைத்திருக்கிறார் சிறிகாந்தா.

சிவாஜிலிங்கமோ போகிற வருகிற இடங்களிலெல்லாம் சுமந்திரன், சம்மந்தன் எதிர்ப்புப் புராணத்தை வாசிக்கிறார். இவர்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதற்கு மாறாக அரசாங்கத்துக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார். அப்படியே சுமந்திரனுக்கும் சம்மந்தனுக்கும் விசுவாசமாக இருக்கிறார். அப்படியென்றால் முதலில் ரெலோ ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேணும். தாங்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என. அதன்படி, கூட்டமைப்பில் தொடர்ந்தும் இருக்கிறதா இல்லையா என்பதையும் சேர்த்துத் தீர்மானிக்க வேணும். அல்லது அதிலிருந்து விலகி, புதிய நிலைப்பாட்டை உடைய தரப்புகளாக இணைந்து தனித்தரப்பாக மாறலாம்.

இதைப்போலவே சுரேஸ் பிரேமச்சந்திரனும் இப்படியும் அப்படியும் நடந்து கொள்ளாமல் ஒரே நிலைப்பாட்டை எடுக்க வேணும். கூட்டமைப்பின் தலைமைப்பீடத்துடன் கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக உள் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் சுரேஸ். கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்வது தொடக்கம், அதனுடைய தீர்மானங்கள் ஜனநாயக அடிப்படையில் அமைய வேணும் என்றெல்லாம் கேட்டு வருகிறார். இவை நியாயமானவையே. “அரசாங்கத்துடன் அளவுக்கதிகமாக நெகிழ்ந்து கொடுக்கத்தேவையில்லை. அப்படி ஆதரவழிப்பதாக இருந்தாலும் அந்த ஆதரவின் மூலம் தமிழ்ச்சமூகத்துக்கு நன்மைகள் கிடைப்பதாக இருக்க வேணும். அதாவது, தமிழ் மக்களுக்கு நன்மை ஒன்று கிட்டுமாக இருந்தால் மட்டுமே அரச ஆதரவை வழங்க வேணும். இல்லையென்றால் எதற்காக ஆதரவழிக்க வேணும்?” என்று கேள்வி எழுப்புகிறார். இதுவும் சரியானதே. ஆனால், இதையெல்லாம் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அதாவது தமிழரசுக்கட்சி கேட்பதாக இல்லை. அது தன்னுடைய சகபாடிகளின் குரலை ஒருபோதுமே மதிப்பதில்லை.

இந்த நிலையில் அடுத்ததாக என்ன செய்வது எனச் சுயமாக முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு சுரேசுக்குரியது. ஏனென்றால், இப்படி ஆண்டுக்கணக்காக உரசல் விமர்சனங்களை வைத்துக் கொண்டே சம்மந்தனின் காலடியில் எல்லோரும் இருப்பதைச் சம்மந்தன் தனக்கு வாய்ப்பாக எடுத்துக் கொண்டார். அதனால் இவர்கள் என்னதான் கதைத்தாலும் அதைப்பற்றியெல்லாம் சம்மந்தன் பொருட்படுத்துவதே இல்லை. இவர்களுடைய எதிர்ப்பையெல்லாம் செல்லாக்காசாக்கி விட்டார்கள் சம்மந்தனும் சுமந்திரனும்.

ஆனால், சுரேசுக்கு நீண்டதொரு அரசியல் பாரம்பரியமுண்டு. ஏறக்குறைய 40 ஆண்டுகால அரசியல் அனுபவமும் அரசியற் பங்களிப்பும் இருக்கிறது. அதிலும் ஆயுதப்போராட்ட அரசியல், ஜனநாயக நீரோட்ட அரசியல் என இரண்டு தளங்களிலும் செயற்பட்ட பங்கேற்பாளர். இருந்தும் இன்னும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பது ஏன்?

உண்மையில் சுரேஸ் சரியாக முயற்சித்திருந்தால் இன்று கூட்டமைப்பை நெறிப்படுத்தி, ஒழுங்குக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ரெலோவையும் புளொட்டையும் தனக்குச் சாதகமாக உள்வாங்கியிருக்கலாம். எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இவர்களுக்கிடையில் ஒரு ஒருமித்த நிலைப்பாட்டையும் வேலைத்திட்டத்தையும் சுரேஸ் ஏற்படுத்தியிருக்க வேணும். ஆனால், அதை அவர் செய்யவில்லை. பதிலாக கூட்டமைப்பை விமர்சிப்பதாகக் காட்டிக் கொண்டு தன்னைச் சுற்றவாளியாக்கிக் காட்டுவதற்கு, தனக்குத்தானே வெள்ளையடித்துக் காட்டுவதற்கே முயற்சிக்கின்றார். இதையே சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, சிறிதரன். விக்கினேஸ்வரன் போன்றோரும் செய்கின்றனர். இது நீதியற்ற செயலாகும். மக்களைச் சுத்தமாக ஏமாற்றுகின்ற வேலை. இவர்களால் பதவிகளை விட்டு விட முடியாது. அதேவேளை தாம் புனித அரசியல்வாதிகள் என்று தங்களைச் சொல்வதற்கும் விரும்புகிறார்கள். இதனால்தான் இந்த நடிப்பெல்லாம். 

மெய்யாகவே இந்தத் தரப்பினர்  கூட்டமைப்பின் தலைமைப்பீடமான சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் மீது நம்பிக்கையற்றிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து அவர்களை நீக்க வேணும். அல்லது அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேணும். குறிப்பாக இலங்கைக்குக் கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்று தெரிவித்து, எட்டுப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள் என்றால், இதே கருத்தை உடைய ஏனைய தரப்பினரையும் மாகாணசபை உறுப்பினர்களையும் பிற கட்சிகளின் தலைவர்களையும் இணைத்து இந்த எதிர்ப்புத்தீர்மானத்தை மேற்கொள்ளலாமே. அதுதான் சரியானது. அப்படிச் செய்வதே கட்சிக்கும் கொள்கைக்கும் நல்லது. அதுதான் மக்களுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதாகும்.

ஆனால் அதைச் செய்வதற்கு யாருக்கும் துணிச்சலும் இல்லை. விருப்பமும் இல்லை. ஏனென்றால், சsuresh Pனங்களை நம்புவதற்கும் வரலாற்றை நம்புவதற்கும் யாருமே தயாராக இல்லை. என்னதான் சொன்னாலும் சம்மந்தனின் காலடிக்குள்ளும் சுமந்திரனின் கைக்குக் கீழும்தானிருப்போம் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடு. வெளியே எதிர்ப்புக் குரலை எழுப்புவது எதற்காக என்றால், சனங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத்திராணியில்லை என்பதாலேயே. அதனால் சனங்களுக்கொரு கதை, கட்சிக்குள்ளே ஒரு கதை என்று இரண்டு கதைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்போது இவர்களுடைய கதைகளைக் கேட்பதற்கு யாருமே இல்லை என்ற நிலைதான் உருவாகியிருக்கிறது. கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கு என்று தெரியாமலா சொன்னார்கள்.

தொடக்கத்தில் சுரேஸ் முன்வைத்த விமர்சனங்களையும் அவர் கூட்டமைப்பின் உள்ளே எழுப்பிய கேள்விகளையும் பலரும் ஆதரித்தனர். ஊடகங்கள் சுரேஸை ஆதரித்துப் பேசின. ஆனால், இன்று அப்படியல்ல. இப்போது கூட்டமைப்பைப்பற்றி விமர்சிக்கும் சிவாஜிலிங்கத்தை அரசியல் கோமாளியாகவே பலரும் பார்க்கின்றனர். ஏறக்குறைய சிறிகாந்தா, சிறிதரனின் நிலையும் இதுதான். சும்மா “டப்பா வெடி” என்ற மாதிரி. சுரேஸின் கதைகளுக்கும் இதே நிலைதான்.

இந்த இடத்தில்தான் சுமந்திரனும் சம்மந்தனும் பலமடைகின்றனர். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை பொதுவெளியிலும் பல தடவை நியாயப்படுத்துகின்றனர். கட்சிக்குள்ளும் நியாயப்படுத்துகின்றனர். அவர்களுடைய நியாயங்களை நேருக்கு நேர் நின்று எதிர்க்க முடியாத நிலையே ஏனையவர்களுக்குள்ளது. குறிப்பாக “தடம்புரளுகிறதா தமிழ்த் தேசியம்” என்ற பொருளில் மன்னாரில் கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியை சிவகரன் ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்வின்போது சம்மந்தனை நோக்கிப் பல கேள்விகள் முன்னிறுத்தப்பட்டன. எல்லாவற்றையும் கேட்ட சம்மந்தன் மிகச் சுருக்கமாகப் பதிலளித்து விட்டு நிதானமாக எழுந்து சென்றார். அவ்வளவு நேரமும் சம்மந்தனை மடக்கி விட்டோம் என்று சந்நதமாடியவர்கள் அத்தனைபேரும் வாயைப் பிளந்தபடியே நின்றனர். சம்மந்தன் படியிறங்கிப் போன பிறகு சம்மந்தனைப்பற்றியே ஆளுக்காள் பேசிக் கொண்டிருந்தனர். சம்மந்தனோ மைத்திரியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தார்.

ஆகவே இதுதான் உண்மை நிலைமை. நடிப்புச் சுதேசிகள் சனங்களுக்கு ஒரு நிறத்தையும் கட்சிக்கும் தலைமைக்கு இன்னொரு நிறத்தையும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகவே சனங்கள் கூட்டமைப்புக்குச் சமாதி கட்டவே முயற்சிக்கின்றன. ஒப்பீட்டளவில் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கின்றது கஜேந்திரகுமார் தரப்புத்தான். அவர்களும் இல்லையென்றால், இந்தக் கோமாளிகள் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்திருப்பார்கள்.

ஆனால், அதற்காகக் கஜேந்திரகுமார்தான் அடுத்த கட்ட அரசியலுக்குப் பொருத்தமானவர் என்று யாரும் கருத முடியாது. அவருடைய குதிரைகள் எப்போதும் கற்பனையிலேயே ஓடிக்கொண்டிருப்பவை. நொண்டிக்குதிரை என்றாலும் பரவாயில்லை. அது நம்கையில் இருக்கும் குதிரையாக இருக்க வேணும் என்று தெரியாமலா சொன்னார்கள்.

மாற்று அரசியலுக்கான அரங்கொன்று சூடேறிக் கிடக்கிறது. அதிலே களத்தை அமைப்பது யர் என்பதே இன்றுள்ள கேள்வியாகும். வரலாறு எதையும்  விட்டு வைப்பதில்லை. புதியதை நோக்கிப் பயணிக்கத் தவறுவதுமில்லை. இதைப் புரிந்து கொண்டு செயலாற்றக்கூடிய துணிச்சலும் ஆற்றலும் உள்ளவர்களே தேவை.

dantv