Theneehead-1

Vol: 14                                                                                                                                                13.03.2017

சீனாவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் 63,000 அதிகாரிகளுக்கு தண்டனை

சீனாவில் ஊழலுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளில் கடந்த ஆண்டில் 63,000 அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.china-2

சீன அதிபராக ஜீ ஜின்பிங் கடந்த 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அதுமுதல், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.

அந்த வகையில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த ஆண்டில் 45,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 63,000 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதில், ஓய்வு பெற்ற 35 அரசு அதிகாரிகளும் அடங்குவர். 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும் என சீன உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ழ்ஸாகு கியாங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது: சமூக ஸ்திரத் தன்மையை தக்க வைப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உச்ச நீதிமன்றம் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. நாட்டின் அரசியல் பாதுகாப்புக்கு, குறிப்பாக மாநில அதிகாரம் மற்றும் அரசியல் அமைப்பு முறைகளுக்கு பாதுகாப்பை வழங்க உச்ச நீதிமன்றம் உறுதிபூண்டுள்ளது.

தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது, வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவர். மேலும், உள்நாட்டில் மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்களில் சிலர் திரும்பவும் தாய்நாடு வரவழைக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ழ்ஸாகு கியாங் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளில் இதுவரையில் 10.10 லட்சம் பேர் தண்டனை பெற்றுள்ளதாக சீன அரசு செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் கடந்த ஆண்டில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

dantv