Theneehead-1

Vol: 14                                                                                                                                                                14.04.2017

சிறுநீரக நோயினால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிப்பு: அதிர்ச்சியில் தட்டான்குளம் கிராம மக்கள்

நாட்டில் மூன்று தசாப்தகாலம் நிலவிய யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, thattankulamபின்னர் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், சொல்லொண்ணாத் துயரங்களை சுமந்து நிற்கின்ற பலர் எம்மில் வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தம் காரணமாக 1995 ஆம் ஆண்டில் வடக்கின் கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் வவுனியா தட்டான்குளம் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட ஒரு பகுதியினர் கடுமையான சிறுநீரகப் பாதிப்பிற்கு முகங்கொடுத்து வருகின்றமை பதிவாகியுள்ளது.

வவுனியா, வெண்கல செட்டிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கிராமமே தட்டான்குளம்.

வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, வவுனியா – பூந்தோட்டம் மற்றும் நெலுக்குளம் ஆகிய நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களில் 135 குடும்பங்கள் 2006 ஆம் ஆண்டில் தட்டான்குளம் கிராமத்தில் மீள்குடியேறினார்கள்.

நாளாந்தம் தோட்டம் செய்தல், கூலித்தொழில் போன்றவற்றை செய்து தங்களின் சீவியத்தை நடத்திவரும் இந்த மக்களின் எமனாக சிறுநீரக பாதிப்பு மாறிவருகின்றது என்றால் மிகையாகாது.

கிராமத்தில் சிறியோர் முதல் பெரியவர்கள் வரை 100 க்கும் அதிகமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் தட்டான்குளம் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

தங்களின் கிராமத்திலிருந்து கிடைக்கும் குடிநீரினாலேயே சிறுநீரக தாக்கம் ஏற்படுவதாக இங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டினர்.

கடின உழைப்பினால் தேடும் வருமானத்தின் மூலம் நிம்மதியாக சாப்பிட முடியாமல், மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துக் கொள்வனவிற்கு செலவிட நேரிட்டுள்ளதாகவும் அடிக்கடி வைத்தியசாலையை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்தனர்.

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் தாம் வாழ்ந்துவருவதாக தட்டான்குளம் கிராம மக்கள் சுட்டிக்காட்டினர்.

கிராமத்திலுள்ள கிணறுகளின் நீரைப் பருக முடியாத நிலையில், ஒரேயொரு குழாய்க் கிணற்றின் மூலமே குடிநீரைப் பெற்றுக்கொள்வதாகவும் அந்த நீரைக்கூட தேவைக்கேற்றவாறு பெறுவதில் சிரமம் காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.

மக்கள் பிரதிநிதிகள், வட மாகாண சபை, செட்டிக்குளம் பிரதேச சபை மற்றும் அரச அதிகாரிகள் தமது நிலைமை குறித்து ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே இந்த மக்களின் ஆதங்கம்.

தட்டான்குளம் மக்கள் எதிர்நோக்கியுள்ள சிறுநீரகப் பாதிப்பு தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கத்திடம் தொடர்பு கொள்ள நியூஸ்பெஸ்ட் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

dantv