Theneehead-1

Vol: 14                                                                                                                                                                14.04.2017

மலாலாவுக்கு கனடா கெளரவக் குடியுரிமை!

கனடாவின் கெளரவக் குடியுரிமை பெற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நாடாளுமன்றத்தில் உரையாற்றச் செல்லும் மலாலா யூசப்சாய்.mala

பாகிஸ்தானில் தலிபான்களின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகிப் பின்னர் பெண்கள் கல்வியை வலியுறுத்தி சமூக சேவையாற்றியமைக்காக நோபல் பரிசு வென்ற மலாலா யூசப்சாய் (19), கனடாவின் கெளரவ குடியுரிமை பெற்றார்.

அவருக்கு கெளரவக் குடியுரிமை வழங்குவதாக கனடா கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தது. அது தொடர்பான அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி தலைநகர் ஒட்டாவாவில் புதன்கிழமை நடைபெற்றது. அந்நாட்டு நாடாளுமன்ற வளாக கோபுரத்தில் பறக்க விடப்பட்ட தேசியக் கொடி அவருக்கு வழங்கப்பட்டது.

குடியுரிமை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கனடா நாடாளுமன்றத்தில் மலாலா உரையாற்றினார்.

அப்போது அவர் குறிப்பிட்டதாவது: முன்னேறிய நாடுகளின் கூட்டமைப்பான ஜி7-இன் தலைமையை கனடா அடுத்த ஆண்டு ஏற்கவுள்ளது. ஜி7 தலைமைப் பொறுப்பு வகிக்கும் காலத்தில், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கல்விச் செல்வத்தை இழக்க நேரிடும் சிறார்களின் கல்வி உரிமையைக் காக்க கனடா குரல் கொடுக்க வேண்டும். வீட்டையும் நாட்டையும் இழக்கும் சிறார்கள் தங்களின் கனவுகளையும் இழந்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது என்று தனது உரையில் மலாலா குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கற்கப் பள்ளிக்கூடம் செல்லக் கூடாது என்ற தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 2012-ஆம் ஆண்டு தடை விதித்தனர்.

அந்தத் தடையை மீறி மாணவர்கள் சென்ற பள்ளிப் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலின்போது மலாலா தலையில் பலத்த காயமடைந்தார். இதைத் தொடர்ந்து உலகின் கவனத்தை ஈர்த்த அவர், லண்டனில் சிறப்புச் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பின் தனது கல்வியை பிரிட்டனில் தொடர்ந்தார்.

பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு பெண் கல்வி, சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்திப் பேசி வரும் அவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 

dantv