Theneehead-1

Vol: 14                                                                                                                                                15.02.2017

 ஊடகச் செய்தி                                     

தமிழர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறிவிட்டது.

- வீ. ஆனந்தசங்கரி,

பொறுப்பேற்றவர்களின் தவறான கையாள்கையாலும் பிழையான அணுகுமுறையாலும் தமிழ் மக்களின் உரிமைகளும், சலுகைகளும் வேகமாக அழிந்து வருவதால் அவற்றை பாதுகாப்பதற்கு இலங்கையிலும் sangary2பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டிய காலம் வந்துவிட்டது. எதுவித முன்னேற்றமும் இன்றி பல வருடங்களாக இந்நிலை நீடித்து வருகின்றது. தமிழ் மக்களை பாதிக்கக்கூடிய வகையில் அறிக்கைகளை விடுகின்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்த போதிய தைரியம் இல்லாத, தமிழ் மக்களுக்காக போராடும் பல தலைவர்கள் உள்ளமை தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் சாபக்கேடாகும். அத்தகைய தலைவர்கள் களத்தில் செயற்படுபவர்களிலும் பார்க்க தம்மால் சிறப்பாக செயலாற்ற முடியுமென்றும் ஏனையோரை துரோகிகள் என வர்ணித்துக் கொண்டும் வருவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. 

நான் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற 83 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் அந்நியர் ஆட்சியின் கீழும், எஞ்சிய 69 ஆண்டுகள் 1947ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கையில் வாழ்ந்து வருகின்றேன். பிரித்தானியரின் இறுதிக்கால ஆட்சி இன்றைய இலங்கையின் நிலையிலும் பார்க்க பல வகையில் அன்றேல் எல்லா விதத்திலும் சிறப்பாக இருந்தது என்று நான் கூறுவதை அநேகர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிலர் என்னை நாட்டு பற்று இல்லாதவன் என கூறக்கூடும். ஆனால் நான் வேறு எந்த நாட்டு பற்று உள்ளவரிலும் பார்க்க குறைந்தவன் அல்ல.

தமிழர்களுக்கு பல பிரச்சினைகள் உண்டு அதேபோன்று இஸ்லாமியர்களுக்கும்  உண்டு. இலங்கைக்கு மிகச்சிறந்த தீர்வு சமஷ்டி ஆட்சி முறையே என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இதனை முதன்முதலில் கூறியவர் சுதந்திரம் கிடைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சிங்கள தலைவர்களில் ஒருவரான எஸ்.டபள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்கள் ஆவார். அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு சுதந்திரம் வழங்க வேண்டுமென சிபாரிசு செய்த சோல்பரி பிரபு ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கண்டிய சிங்கள தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். சமஷ்டி முறையே சிறந்ததென கூறிய அடுத்த சிங்கள தலைவர்  முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான கௌரவ ஜே.ஆர்.ஜயவர்த்தனா அவர்களாகும். ஆனால் அவரது ஆட்சியின் போது ஐந்தில் நான்கு அதிகப்படியான உறுப்பினர்களை கொண்டிருந்தும் துரதிஸ்டவசமாக இந்தக் கருத்தை ஓய்வுபெறும் வேளையிலேயே தெரிவித்திருந்தார். இன்னுமொரு முன்னாள் ஜனாதிபதி கௌரவ திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அம்மணி அவர்கள் இந்த கருத்தையே கொண்டிருந்தார். மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி கௌரவ மகிந்த ராஜபக்ஷ தான் பிரதம மந்திரியாக இருக்கும்வேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் சமஷ்டி ஆட்சி முறையை ஒரு தீர்மானமாக நிறைவேற்றியிருந்தார். சிங்கள தலைவர்களின் வரிசையில் இதுவரை இறுதியாக கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களே மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவேளை சமஷ்டி ஆட்சி முறையை தனது கொள்கையாக முன்வைத்தார். இப்பொழுது ஏன் சிங்கள மக்கள் இதனை மிகத் தீவிரமாக எதிர்க்கின்றார்கள். அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் எமது தலைவர்களே.

ஓவ்வொரு இலங்கையரும் தமது ஞாபக சக்தியை புதுப்பிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விபரங்களை தந்துள்ளேன். ஜனாதிபதி தேர்தலை தமிழ் வாக்காளர்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த பிரச்சாரம் காரணமாக தேடிவந்த நல்லதொரு சந்தர்ப்பத்தை நாம் இழந்துள்ளோம். இத்தகைய இடையூறுகள் இருந்தும் அத் தேர்தலில் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் 48.43 வீத வாக்குகளை பெற்று தோல்வியடைய கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் 50.29 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியபோது அவருக்கு கிடைத்த அதிகப்படியான வாக்குகள் 1,80,786 ஆகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிக்க வேண்டுமென பிரச்சாரம் செய்யாமல் அமைதியாக இருந்திருந்தால் ரணில் விக்ரமசிங்க அவர்கள் சமஷ்டி ஆட்சி முறையை அமுல்படுத்த மக்களின் ஆணையை பெற்றிருப்பார். தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்யாமல் இருந்திருந்தால் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைத்திருக்கும். தமிழ் மக்களை பிழையான வழியில் வழிநடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு 2005ம் ஆண்டு கௌரவமான முறையில் தமது பாராளுமன்ற பதவிகளை துறந்திருக்க வேண்டும். இடதுசாரி கட்சிகள் வழமையாகவே சமஷ்டி முறைமையை ஆதரிக்கின்றவர்கள். மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கிடைத்த இடதுசாரிகளின் வாக்குகள் சமஷ்டி ஆட்சி முறைக்கு விழுந்த வாக்குகள் என கருதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கிடைத்த வாக்குகளுடன் கூட்டி பார்க்கையில் நாடு சமஷ்டி ஆட்சி முறைக்கு பூரண ஆதரவை வழங்கியதாகவே கருத முடியும்.

எவரையும் குழப்பத்திற்கு ஆளாக்க நான் விரும்பவில்லை. இனப்பிரச்சனையே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதால் எல்லோருக்கும் ஏற்புடையதான ஒரு தீர்வை கண்டறிய பல முயற்சிகள் செய்கிறேன். இந்திய முறையிலான அதிகாரப்பகிர்வு இலங்கையின் பல்வேறு தர மக்களுக்கு ஏற்புடையதாக தோன்றுகிறது. ஒவ்வொருவரும் விரைவில் ஒரு தீர்வு ஏற்படுவதையே விரும்புவார்கள்.

நாட்டின் பொது நன்மையையும் அனைவரும் விரும்பும் சமாதானத்தையும் அடையும் நோக்கோடு ஜே.வி.பியை கூட இந்திய அரசியல் முறையை ஏற்க வைக்க முடியுமென்று நான் வலுவாக நம்புகிறேன். 25 மாநிலங்களை கொண்ட இந்தியா பிரிவினை பற்றி பேசுவதில்லை. மேலும் சமஷ்டியோ அல்லது ஒற்றையாட்சிN;யா என்று கவலைப்படுவதில்லை. அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர்கள் என்ற பாடத்தை இலங்கையர்கள் இந்தியர்களிடமிருந்து கற்க வேண்டும். இந்தியா உட்பட சர்வதேச சமூகம் தாம் நாட்டு பிரிவினையை ஆதரிப்பதில்லையென்று பிரகடனப்படுத்தியுள்ளனர். எமது பெரிய அயலவராகிய இந்தியாவின் ஆதங்கத்தை நாம் புறக்கணிக்க முடியாது.

இனப்பிரச்சினை தற்போது 50 ஆண்டுகளை தாண்டிவிட்டது. 1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் ஆரம்பித்து பண்டா-செல்வநாயகம் ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தீர்வு கண்டிருக்க முடியும். பத்து ஆண்டுகளின் பின் டட்லி-செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும். 1996ம் ஆண்டு திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்கள் முன்வைத்த தீர்வுத்திட்டத்துக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும். இனப்பிரச்சினை ஆரம்பித்து முதற்தடவையாக சமஷ்டி ஆட்சி முறை தீர்வாக முன் வைக்கப்பட்டது. சிறு தடங்கல்களை நீக்கி இருந்தால்கூட நாட்டின் முழு ஆதரவும் எதுவித எதிர்ப்பும் இன்றி இந்திய முறையிலான தீர்வுக்கு ஆதரவு கிடைத்திருக்கும்.

சிங்கள மக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டமைக்கு நாங்களே குற்றவாளிகள். இங்கே கூறப்பட்ட அத்தனையும் 08-01-2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றவையாகும். வெளிப்படையாக அல்லாமல் திரைமறைவின் பின் பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. திரைமறைவில் நடந்தவை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஏற்புடையதல்ல. ஏற்பட்டுள்ள மாற்றம் நல்லாட்சியை தரவில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணி உறுதியாக நம்புகிறது. அதற்கு மாறாக சில அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயற்பாட்டை கட்டுப்படுத்தியுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் பங்களிப்பும் ஜனநாயகத்தை முன்னேற்ற மேற்கொண்ட நடவடிக்கை உலகறிந்த விடயமாகும். ஒரு ஜனநாயகத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முற்றாக தோல்வியடையவில்லை. 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் நாட்டில் நடந்த மிக மோசமான ஜனநாயகத்துக்கு விரோதமாக நடைபெற்றதாகும். தேர்தலில் போட்டியிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வைப்பதற்காக கட்டுப்படுத்தப்பட்டன. அத் தேர்தலி தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு தேசிய பட்டியில் ஆசனம் உட்பட மொத்தமாக 22 ஆசனங்களை கைப்பற்றியது. அதன் விளைவாக  எந்தவொரு ஜனநாயக கட்சியும் தமிழ் பிரதேசங்களில் தலைதூக்க முடியாத நிலை எற்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அரசாங்கம் வழங்கிய தேவையற்ற முக்கியத்துவத்தால் இது சாத்தியமாகியது.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை மந்திரி சபையிலும் கூடிய அதிகாரம் கொண்ட தேசிய நிறைவேற்றுக்குழு சபைக்கு நியமித்தமையை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இது ஏனைய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை அதிகரித்துள்ளது. அதன் விளைவாக தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரத்தை அனுபவிக்கிறது. நல்லாட்சி தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை  என்பதை தமிழ் மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள்.

இன்றைய சூழ்நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது சமஷ்டி ஆட்சி முறையோ முடியாத காரியமென தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்கறியும். இன வேறுபாடின்றி சமஷ்டி ஆட்சி முறைக்கு ஆதரவு வழங்க கௌரவ ரணில் விக்ரமசிங்க 2005ம் ஆண்டு போட்டியிட்டபோது தயாராக இருந்தனர். இன்று நிலைமை முற்று முழுதாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் பேச்சுக்களும் அறிக்கைகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சந்தேகமே. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் தமது உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் உள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகம் முற்றுமுழுதாக நீக்கப்படும் வரை எதுவும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்பொழுது ஒரு விடயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதேபோல் தொடருவார்களேயானால் இவர்களால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. ஏனெனில் முதலாவதாக தேவைப்படுவது உறுப்பினர்கள் முறையற்ற வகையில் பேசுவதை நிறுத்தி கவனமாக சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.  இன்றைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள ஒரேயொரு வழி அதன் தலைவரை பாராளுமன்ற பதவிலிருந்து இராஜினாமா செய்ய வைப்பதே. ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மூன்று கட்சிகள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு தலைமையால் கலந்தாலோசிக்கப்படுவதில்லை என்பதே.

வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

 

dantv