Theneehead-1

Vol: 14                                                                                                                                                15.03.2017

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மசோதா, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட 28 நாடுகளை கொண்ட அமைப்பாக ஐரோப்பிய யூனியன் திகழ்ந்து வந்தது. இந்த அமைப்பை சேர்ந்த நாடுகளில் உள்ள மக்கள், பிற உறுப்பு நாடுகbritexitளில் சென்று வசிக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வசதிகளை பெறவும் வழிவகை உள்ளதால், பிற உறுப்பு நாடுகளை சேர்ந்த ஏராளமான குடிமக்கள் இங்கிலாந்தில் குடியேறினர். இதனால் உள்நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிவிட இங்கிலாந்து முடிவு செய்து, பொதுமக்களின் கருத்தை அறிய கடந்த ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு ஆதரவாக 51.9 சதவீதம் பேரும், ஐரோப்பிய யூனியனிலேயே தொடர வேண்டும் என 48.1 சதவீதம் பேரும் வாக்களித்தனர். மெஜாரிட்டி மக்கள் ஆதரவு அளித்ததால், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதியானது.

இருப்பினும் இதுதொடர்பாக சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. உறுப்பு நாடுகளுடன் இங்கிலாந்து முறைப்படி பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தின் அனுமதியை அரசு பெற வேண்டும் என்று கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது.

இது தொடர்பான சட்ட மசோதா இங்கிலாந்து பாராளுமன்ற கீழ்சபையில் தாக்கலானது. இந்த மசோதா மீது பிரபுக்கள் சபை (மேல்சபை) கொண்டு வந்த திருத்தங்கள் ஏற்கப்படவில்லை.

மசோதாவின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. ஓட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 274 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 118 ஓட்டுகள் பதிவாகின. இதனால் மசோதா, சிக்கலின்றி நிறைவேறியது.

இதுபற்றி ‘பிரிக்ஸிட்’ துறைக்கான செயலாளர் டேவிட் டேவிஸ் கூறும்போது, “ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரத்தில், பாராளுமன்றமானது அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்த மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தவுடன் அது முறைப்படி சட்ட அந்தஸ்தைப் பெறும். அதைத் தொடர்ந்து உறுப்பு நாடுகளுடனான பேச்சுவார்த்தையை இங்கிலாந்து இந்த மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெறுவது தொடர்பாக ஸ்காட்லாந்தில் இரண்டாவது பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியை கேட்க உள்ளதாக அதன் முதல்-மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ந் தேதி இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற வேண்டுமா என்பது தொடர்பாக ஸ்காட்லாந்தில் முதல்முறையாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் 55.3 சதவீத மக்கள் விடுதலை வேண்டாம், இங்கிலாந்துடனே நீடிப்போம் என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

இப்போது இங்கிலாந்து பாராளுமன்றம் அனுமதி அளித்தால், ஸ்காட்லாந்தில் 2018 ஜூலை முதல் 2019 ஜூன் மாதத்துக்குள் இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடத்த முதல்-மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் விரும்புகிறார். இது இங்கிலாந்துக்கு அடுத்த சிக்கலாக அமையக்கூடும். 

dantv