Theneehead-1

Vol: 14                                                                                                                                                16.02.2017

கிழக்கில்  எழக தமிழ்

         கருணாகரன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியலுக்கு அப்பால் இரண்டு நிகழ்ச்சிகள் கடந்த வாezhugathamlரம் மட்டக்களப்பில் நடந்தேறியுள்ளன. ஒன்று, தமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ்”. இரண்டாவது, விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் பின்னாளில் இலங்கை அரசில் பிரதிஅமைச்சருமாக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணாவின் புதிய கட்சி அங்குரார்ப்பணம். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் கிழக்கின் அரசியல், சமூக நிலைமைகளில் எதிர்காலத்தில் தாக்கங்களை உண்டு பண்ணக்கூடியவை.

கருணாவின் அரசியல் நகர்வுகள் இன்றைய நிலையில் கடுமையான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் உள்ளாகியிருப்பது உண்மை. ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த்தேசியத் தரப்புகளின் செயற்குறைபாடுகளும் பலவீனங்களும் எதிர்காலத்தில் கருணாவைப் பலப்படுத்தக்கூடும். அதற்கான முறையில் தன்னுடைய செயற்திறனை உருவாக்கிக் கொள்வது கருணா தரப்பிற்குரியது. அரசியலில் எதுவும் நடக்கும். எப்படியும் நடக்கும் என்பதை இந்த இடத்தில் நினைவிற் கொள்வது நல்லது. ஆகவே, கிழக்கின் சிக்கலுக்குரிய எதிர்கால அரசியலில் இந்தப் புள்ளியையும் இணைத்தே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

தவிர, தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் மூலமாக கிழக்கில் தன்னை விரிக்க முயன்றிருக்கிறது. இதற்காக அது பெருமெடுப்பில் ஒரு நிகழ்வைச் செய்வதற்கு கடுமையன முயற்சிகளை மேற்கொண்டது. எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லை என்றாலும் “எழுக தமிழ்” நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்த்தரப்பினால் வழமையாக முன்வைக்கப்பட்டு வரும் பிரகடனங்கள் இந்த நிகழ்ச்சியிலும் முன்வைக்கப்பட்டன. அதேவேளை இன்னொரு அறிவிப்பும் இங்கே பிரத்தியேகமாக விடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதன்மையாளராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், “வடக்குக் கிழக்கு இணைப்பைப்பற்றி முஸ்லிம்களுடன் பேசத்தயார்” என்று அறிவித்திருக்கிறார்.

ஆனால், இந்த நிகழ்வில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவும் இல்லை. அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவும் இல்லை. அதற்கான உரையாடல்களோ, ஏற்பாடுகளோ “எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழு”வினரால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. இருந்தபோதும் முஸ்லிம்களை நோக்கிக் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால், விக்கினேஸ்வரனின் ஐந்து ஆண்டு காலத்தினுள்ளான அரசியல் பிரவேசம், செயற்பாட்டுப் பரப்பு போன்றவற்றிலும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற சமூகத்தினர் மீதான கரிசனைகள் இருக்கவில்லை. குறைந்த பட்சம் வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கூட விசேட அக்கறைகள் காட்டப்படவில்லை. முஸ்லிம்கள் திருப்தியடையக்கூடிய விதமாக, நம்பிக்கை கொள்ளும்படி விக்கினேஸ்வரனின் நிர்வாகம் செயற்படவில்லை. இதனையிட்டு இந்தப்பத்தியாளர் உட்படப் பலரும் பகிரங்கத்தளத்தில் விவாதித்துள்ளனர்.

இதற்கெல்லாம் ஒரு பதிலை விக்கினேஸ்வரன் சொல்லியிருந்தாரே தவிர, செயற்பாட்டின் மூலமாகப் பதிலளிக்க முன்வரவில்லை. செயற்பாடில்லாத காகித அறிக்கையை முஸ்லிம் தரப்புகள் மறுத்து, நிராகரித்திருந்தன. இதை இங்கே இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுக் கூற வேணும். ஏனென்றால், பிற தரப்பை அழைக்கும்போது அந்தத் தரப்பு திருப்திபெறக்கூடிய வகையில், நம்பிக்கை கொள்ளக்கூடிய முறையில் நம்மை வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்தத் தரப்பு எந்தத் தயக்கமுமில்லாமல் நம்மை நெருங்கி வரும். ஆகவே வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை விக்கினேஸ்வரனுடைய நிர்வாகம் உரிய முறையில் வரவேற்றுப் பராமரித்திருக்க வேணும். அப்படிச் செய்திருந்தால், அது கிழக்கிலுள்ள முஸ்லிம்களை விக்கினேஸ்வரனைக் கவனிக்க வைத்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இத்தகைய நிலையில்தான் கிழக்கில் சம்பிரதாயபுர்வமாக முஸ்லிகளை நோக்கிய அழைப்பையும் விக்கினேஸ்வரன் விடுத்திருக்கிறார். ஆகவே இந்த அறிவிப்பையும் முஸ்லிம்கள் பெரிதாகக் கவனத்திற் கொள்ளப்போவதில்லை. இத்தகைய ஒருபக்க நிலைப்பட்ட அறிவிப்பையே ஏற்கனவே சிங்களத்தலைவர்கள் தமிழ்ச்சமூகத்தை நோக்கி விடுத்திருக்கின்றனர். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு, ஒரே தேசம், ஒரே தேசியம் என்றவகையில்.

அப்படிச் சிங்களத்தலைவர்களால் விடுக்கப்பட்ட அறிவிப்பை தமிழ்தரப்பு ஒரு போதும் கவனத்திற் கொள்ளவில்லை. அதை நம்பவுமில்லை. ஏற்றுக்கொள்ளவுமில்லை. பதிலாக அது ஒரு மேலாதிக்கச் சிந்தனையின் பாற்பட்ட வெளிப்பாடு என்றே தமிழ்த்தரப்பினால் நோக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

இங்கும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக முஸ்லிகளுடன் பேசத்தயார் என்ற விக்கினேஸ்வரனின் அறிவிப்பை முஸ்லிம்கள் மேலாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். விக்கினேஸ்வரனுடைய இந்த அறிவிப்புத் தொடர்பாக கிழக்கிலுள்ள பல முஸ்லிம்களுடன் பேசினேன். அவர்களுடைய பொதுவான அபிப்பிராயம், “தமிழ் – முஸ்லிம் தரப்புகளுக்கிடையே உள்ள இடைவெளிகளைக் குறைப்பதைப்பற்றிய நம்பிக்கையான செயற்பாடுகள் எதையும் முஸ்லிம்கள் உணரவில்லை. சிங்களத்தரப்போடு எப்படி நிபந்தனையில்லாமல் இணக்கத்துக்குப்போகமுடியாதிருக்கிறதோ அப்படித்தான் தமிழ்த்தரப்போடு முஸ்லிம்களும் உடனடியாக உடன்பாடு எதற்கும் போகமுடியாதுள்ளது” என்பதாக உள்ளது. “மெய்யான அக்கறைகள் இப்படி மேடைப்பேச்சின் வழியாக ஏற்படாது“ எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆகவே வலுவடைந்திருக்கும் இடைவெளிகளைக் குறிப்பதற்கான நெகிழ்ச்சிக்கு நிறைய வேலைகளைச் செய்ய வேணும். அதற்கான அன்புருக்கம் தேவை. பரஸ்பரப் புரிந்துணர்வும் நெகிழ்வும் அவசியம். கூடவே இது ஒரு பெரிய வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படவும் வேணும். எல்லாவற்றுக்கும் அப்பால் முஸ்லிம்களின் விருப்பத்தையும் நம்பிக்கையையும் அறிய வேண்டும். அத்துடன் கிழக்கிலுள்ள தமிழர்களின் விருப்பம், அவர்களுடைய தேவைகள் என்ன என்பதையும் அதற்கான சம உரிமைகளையும் பேணவும் வேண்டும். தேவைகளுக்காகப் பயன்படுத்தும் நிலை நல்லதல்ல.

எழுக தமிழின் பிரகடனத்திலும் அதனுடைய சிந்தனைப் புலத்திலும் முஸ்லிம்களைப் பற்றியும் பிற சமூகத்தினரைப் பற்றியுமான கரிசனைகளும் கவனங்களும் துலக்கமாக இல்லை. குறிப்பாகக் கிழக்கின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகளைக் குறித்த தெளிவான வாக்கியங்களும் இல்லை. தமிழ் மக்கள் பேரவையோ அல்லது அதற்கு நெருக்கமான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியோ முஸ்லிம்களைக் குறித்தும் கிழக்கின் பிரத்தியேக நிலைமையைக் குறித்தும் சிறப்பான கவனத்தைக் கொண்டதாக இல்லை.  எத்தகைய தெளிவான சித்திரத்தையும் இதுவரை அளித்ததில்லை. இப்போது கிழக்கில் எழுக தமிழ் நிகழ்வைச் செய்ய முற்பட்டபோதே அங்கே முஸ்லிம்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும், கிழக்கின் அரசியல் நிலைமைகளைக் குறித்துக் கவனம் செலுத்த வேணும் என்ற உணர்வு பிறந்திருக்கிறது. அந்தளவுக்கு கிழக்கின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் முற்றிலும் வேறாகி வளர்ச்சியடைந்துள்ளன. இதில் முஸ்லிம் சமூகத்தின் திரட்சியும் வலுவும் தனியான கவனத்திற்குரியதாக உள்ளது.

வடக்குக் கிழக்கு இணைப்பைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால் அதை யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு மட்டும் பேசி விடமுடியாது. யாழ்ப்பாணத்தின் அறிவுறுத்தலை கிழக்குத் தமிழர்கள் அனுசரிக்க முற்பட்டாலும் முஸ்லிம்கள் அதற்கு இடமளிப்பர் என்பது கேள்வியே. ஆகவேதான் முஸ்லிம்களுடன் பேசியே ஆகவேண்டும் என்ற புரிதல் பேரவையினருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது யதார்த்த நிலை மெல்லிய அளவில் உணரப்பட்டுள்ளது. இதன் விளைவே விக்கினேஸ்வரனின் அழைப்பு. இதை அவர்கள் மட்டக்களப்பில் செயற்படத்தொடங்கிய பின்புதான் உணர்ந்திருக்கிறார்கள் என்பது நகைப்பிற்குரியது. தவிர, ஏற்கனவே சுமந்திரன் முஸ்லிம்களை நோக்கி அடித்த இணைப்பு மணியை இன்னொரு வகையில், இப்போது விக்கினேஸ்வரன் அடித்திருக்கிறார். இதில்கூட இருவரும் ஒன்றாகவே உள்ளதைக் காணமுடியும்.

சுமந்திரனும் சரி, விக்கினேஸ்வரனும் சரி மனப்புர்வமாக முஸ்லிம் சமூகத்தைezhugatamil-1 நோக்கி இறங்கிப் பொது வெளிக்குப் போகத்தயாரில்லை. முஸ்லிம்களை நோக்கி மட்டுமல்ல, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் பிற சமூகத்தினரை நோக்கியும்கூட. இதனை ஏற்கனவே பல சந்தர்ப்பங்களிலும் கிழக்குத் தமிழ்த்தலைமைகள் வருத்தத்தோடு குறிப்பிட்டு வந்துள்ளன. குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் பிரித்தானியப்பிரதமர் டேவிற் கமரூன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர்கள் வடக்கிற்கு வந்திருந்தனர். கிழக்கே செல்லவில்லை. இப்படி வெளிநாடுகளில் தலைவர்களும் பிரதானிகளும் வடக்கிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை கிழக்கிற்கும் கொடுக்க வேணும் என்ற வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடந்து கொள்ளவில்லை என்ற குறையைக் கிழக்குப் பிரதிநிதிகள் வெளிப்படுத்தியிருந்தனர். ஆகவே செயல்முறையிலான இடைவெளிகள் வடக்கிற்கும் கிழக்கிற்குமிடையில் நிறைய உண்டு. இதனையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மேலோட்டமாக எதையும் பேச முடியாது. அப்படிப் பேசுவதால் பயனொன்றும் ஆகிவிடாது.

வடக்குக் கிழக்கு இணைப்பு, தமிழர்களுக்கான தனியான அலகு, காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்று நீளமானதொரு பட்டியல் தமிழ்த்தரப்பிடம் உண்டு. இந்தப் பட்டியலை வெற்றிகரமாக்க வேண்டுமாக இருந்தால், இந்தப் பட்டியல் உள்ளடக்கியிருக்கும் பிராந்தியத்தில் உள்ளவர்களை ஒரு முகப்படுத்துவது அவசியம். அதற்கான அரசியலை மேற்கொள்ள வேணும். அதற்கு அடிப்படையான ஜனநாயகப் பண்புகளையும் பல்லின, பல்வகைமைப் பண்பாட்டையும் அதற்கான சிந்தனையையும் பின்பற்ற வேணும். இதையெல்லாம் செய்யும்போதே எதிர்பார்க்கப்படும் விடயங்களை நோக்கிய சாத்தியங்களை உண்டாக்க முடியும்.

தற்போது கிழக்கிற்குப் பயணம் செய்திருந்த விக்கினேஸ்வரன், வடக்கின் முதல்வர் என்ற அடிப்படையிலும் வடக்குக் கிழக்கின் இணைப்பை விரும்புகின்றவர் என்ற வகையிலும் ஒரு சம்பிரதாயச் சந்திப்பைக்கூட கிழக்கின் முதலமைச்சரோடோ அங்குள்ள மாகாணசபையினரோடோ செய்திருக்க வேணும். ஆனால், அதை அவர் செய்யவில்லை. இதற்கு முன்னரும் அப்படி ஒரு சந்திப்பைச் செய்ய வேணும் என்று சிந்திக்கவில்லை. வடக்குக் கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேசுவோருக்கு இது அவசியமான ஒரு பொறுப்பு. கிழக்கு முதலமைச்சருக்கு இது அவசியமானதல்ல. அவர் ஒரு போதும் வடக்கோடு கிழக்கும் இணைய வேணும் என்று கேட்டதில்லை. வேண்டுமானால் நட்புபுர்வமாகச் சந்திக்கலாமே தவிர, வடக்குக் கிழக்கு இணைப்பின் அடிப்படையில் அல்ல.

ஆனால், வடக்குக் கிழக்கு இணைப்பின் அவசியத்தை அவரும் உணர்வது அவசியம். அவருடைய பதவி வகிப்பு அனுபவத்திலேயே இதை அவர் உணர்ந்திருக்கிறார். இருந்தாலும் இந்த இணைப்புகள் வெறும் அரசியல் சொல்லாடல்களின் வழியாகப் புரிந்து கொள்ளப்பட முடியாதது. அதற்கும் அப்பால் அது பல நிலைகளில் நுண் இழைகளால் பின்னப்பட வேண்டியது. மட்டுமல்ல இது மிக மிக உணர்ச்சிகரமான ஒரு விசயமாகவும் இன்று ஆகியுள்ளது. எனவே இதனை விக்கினேஸ்வரன் கருவதைப்போல எளிதாகச் சொல்லவோ கடந்து செல்லவோ முடியாது.

இவ்வளவுக்கும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் மிகச் செறிவாக வாழ்கிறார்கள். முஸ்லிம்களின் சம்மதமும் ஆதரவும் இல்லாமல் வடக்குக் கிழக்கு இணைப்பு மட்டுமல்ல, கிழக்கு மாகாண நிர்வாகத்தில் தமிழர்களின் செயற்பாடுகள் வெற்றியளிக்கவும் முடியாது. தவிர, இப்போது கிழக்கு மாகாணசபையை முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக ஆட்சி செய்கிறார். இருந்தபோதும் முஸ்லிம்களின் பங்கேற்பில்லாமல் நடந்த நிகழ்வில் முஸ்லிம்களுடன் பேசத்தயார் என்று பகிரங்க அழைப்பை விட்டிருக்கிறார் விக்கினேஸ்வரன். இது என்ன மாதிரியான அர்த்தத்தை அந்தச் சமூகத்தில் உண்டாக்கியிருக்கும் என்பதைப்பற்றி அதிகமாக விளக்கத் தேவையில்லை.

இந்த நிகழ்வைக்குறித்துக் கிழக்கிலுள்ள தமிழர்களிடமும் பேசினேன். அவரகள் தெரிவிக்கும்போது, “ஆம். பெரிய அளவில் தமிழ் மக்களின் ஆதரவு இருக்கவில்லை என்றே சொல்ல வேணும். நல்ல முறையில் பொலிஸாரும் வீதி போக்குவரத்து பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். அரச ஆசீர்வாதம் நன்றாக இருந்தது. முஸ்லீம்கள் பங்ezhugatamil-2கு பற்றவில்லை. அவர்களது அரசியல் வேறாக இருப்பதால் அவர்கள் இதில் அக்கறை காட்டாமல் விட்டிருக்கலாம். ஆனால், பேரினவாத அரச ஒடுக்கு முறையும் நெருக்கடிகளும்  அவர்களுக்கும் உள்ளது. ஆகவே அதை வெளிப்படுத்துவதற்காக ஏதோ ஒரு வகையில் அவர்கள் இந்தப் போராட்டத்துக்கு அண்மையாக வந்திருக்கலாம். இது இன்றைய காலத்தின் தேவையாகவே இருக்கிறது. ஆனால் அதனை வெளிக்காட்ட விரும்புகிறார்கள் இல்லை. காணி உரிமை தொடர்பான கோரிக்கைகள் அவர்களுக்கு உவப்பாய் இல்லை” என்றார் அந்த நண்பர்.

இன்னொரு தமிழ் நண்பர் குறிப்பிடும்போது 'எழுக தமிழ்'  நிகழ்வில் இஸ்லாமிய மக்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மற்றைய சமூகங்களை நோக்கி சவால் விடுவது போன்ற ஒரு நடவடிக்கையாகத்தான் 'எழுக தமிழ்' நடந்தது என்று நினைக்கிறேன்“ என்றார் அவர்.

ஆகவே கிழக்கின் தமிழ் முஸ்லிம் தரப்புகளிடத்தில் பெரிய திருப்பங்களை உண்டாக்கும் வகையில் எழுக தமிழ் நடக்கவில்லை. கிழக்கில் எழுக தமிழ் உரிய முறையில் வெற்றியடைந்திருந்தால், அது அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக இருந்திருக்கும். அத்துடன் வடக்குக் கிழக்குச் சமூகங்களை ஒருங்கிணைத்திருக்கும். குறைந்த பட்சம் கிழக்கில் 30 ஆண்டுகளாக துயரத்துள் புதையுண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக, அவர்களுடைய வாழ்க்கையை மீட்கும் வழியாகவாவது இருநதிருக்கும். அப்படி இருந்திருந்தால் அவர்கள் எழுக தமிழைத் தங்களுடைய தலைகளில்வைத்துக் கொண்டாடியிருப்பர்.என்ன செய்வது? காகிதப் பூக்களாகவே எல்லா மலர்களும் உள்ளன. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்ற மாதிரித்தான் எல்லாமே உள்ளன. எல்லாமே கலங்கலாக, மங்கலாகவே தெரிகின்றன.0

dantv