Theneehead-1

Vol: 14                                                                                                                                                                16.04.2017

நேரத்தை வீணடிக்கலாமா?

By எஸ். ஸ்ரீதுரை 

தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று சேலம் மாநகரில் புதிய நகைக்கடை ஒன்றின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. நகைக் கடையைத் திறந்து வைக்க வருகை தந்தவரோ சமீப காலSALEMமாகப் பல திரைப்படங்களில் நடித்துப் பிரபலமாகியுள்ள இளம் கதாநாயகி ஒருவர்.

பிரபலங்களைப் பார்க்க முண்டியடிப்பது நம் நாட்டில் சகஜம்தானே? அதுவும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்

என்றால் பொது மக்கள் அவரை ஒரு முறை தரிசித்து ஜென்ம சாபல்யம் அடைய முட்டி மோதுவது ஒன்றும் புதிதில்லையே. நகைக் கடையைத் திறந்து வைக்க வருகை தந்த இளம் நடிகையைப் பார்க்கவும் நூற்றுக் கணக்கில் இளைஞர்கள் கூடி விட்டனர்.

நிகழ்ச்சி நடந்ததோ சேலம் நகரின் பிரதான சாலைகளில் ஒன்று (ஓமலூர் சாலை). ஆயிரக்கணக்கான வாகனங்கள் விரையும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம். பல அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் மட்டுமின்றி சேலம் மத்தியப் பேருந்து நிலையமும் அமைந்துள்ள பரபரப்பான இடம்.

சொகுசு கார் ஒன்றில் வந்து இறங்கிய நடிகையை எப்படியாவது அருகில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று முண்டியடித்த இளைஞர்கள் கூட்டத்தினால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. வேறு வழியின்றி காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு ரசிக இளைஞர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் சிரமப்பட்டுக் காரில் இருந்து இறங்கிய நடிகை வேகமாக நகைக்கடையின் வாசலை அடைந்து அதனை வெற்றிகரமாகத் திறந்து வைத்து விட்டார்.

நகைக் கடையைத் திறந்து வைத்த நடிகை, உடனடியாக கடைக்குள்ளே சென்று விட்டார். அவரை நன்றாக தரிசிக்க முடியாத அதிருப்தியில் இருந்த இளைஞர்களோடு, நடிகை வந்திருக்கும் தகவலைத் தாமதமாக அறிந்துகொண்டு ஓடோடி வந்த ரசிகர் கூட்டம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு வந்தது. சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. ஆம்புலன்சுகள், பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனமும் நகர முடியாத நிலை.

ரசிகர் கூட்டத்தை உடனடியாகக் கலைந்து செல்லும் படி காவல் துறையினர் அறிவுறுத்தியும் நிலைமை சீராகவில்லை. நடிகையை ஒரு முறை ஆசைதீரப் பார்த்துவிட்டுத் தான் கலைந்து செல்வோம் என்ற பிடிவாதம்.

இப்போது கடையிலிருந்து வெளியேறிய நடிகை, கடைவாசலில் நிறுவப்பட்டிருந்த ஒரு மேடையின் மீது ஏறி, ரசிகர்களைத் திருப்திப்படுத்த ஒரு நடனம் ஆடுகிறார். நடிகை நடனம் ஆடுவதைப் பார்த்து மேலும் தன்னிலை மறந்த இளைஞர்கள் பலர் அந்த மேடையை நோக்கி வெறிகொண்டு ஓட, குறுக்கே ஒரு கயிறு கட்டிக் காவல் துறையினர் அவர்களைத் தடுக்க வேண்டியதாகிறது.

ஒரு வழியாக மேடையிலிருந்து இறங்கிய இளம் நடிகை மிகுந்த சிரமப் பட்டுத் தனது காரில் ஏறிக் கிளம்பியதுதான் தாமதம் - அந்தக் காரைத் துரத்தியபடி இளைஞர்கள் பலர் ஓடுகிறார்கள். வேறுவழியின்றி, காவல் துறையினர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ரசிக இளைஞர்கள் கலைந்து ஓட அனைத்தும் முடிகிறது. ஒருவழியாக அந்தப் பிரதான சாலையில் போக்குவரத்து சீராகிறது. பொதுமக்களும் காவல் துறையினரும் பெருமூச்சு விடுகின்றனர். சுபம்.

என்ன ஒரு வெட்கக் கேடான சம்பவம்.

திரைத் துறையினரைப் பொது மக்கள் திரண்டு வந்து பார்த்துச் செல்வது ஒன்றும் நமக்குப் புதிய விஷயம் இல்லைதான்.

சிவாஜி, எம்.ஜி.ஆர். காலத்தில் திரளாத கூட்டங்களா. அவ்விருவரும் திரைத்துறை ஜாம்பவான்களாக இருந்தது மட்டுமின்றி, பெரும் அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பிரசாரகர்களாகவும் நமது மாநிலத்தை வலம் வந்தவர்கள்.

இன்று வரையிலும் திரை நட்சத்திரங்கள் என்றாலே நம்மவர்களுக்கு ஒரு பிரமிப்பு இருக்கத்தான் செய்கிறது. நடிக நடிகைகளை மிக அருகில் சென்று பார்ப்பதும், முடியுமென்றால் அவர்களை ஒருமுறை தொட்டுவிடுவதும், பிறகு அதனைத் தமது நட்பு வட்டாரத்தில் ஒரு சாதனையாகப் பிரகடனப் படுத்திக் கொள்ளுவது நம்மைப் பீடித்த ஒரு மனநோயாகவே இருந்து வருகிறது.

நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம். அவரவர் துறையில் அவர்களுக்குத் தெரிந்த வகையில் உழைத்துப் பணம் சம்பாதித்து வருபவர்கள்.

உண்மையாகச் சொல்லப்போனால், தத்தமது தொழிலில் கடினமாக உழைத்துப் பொருள் ஈட்டித் தமது குடும்பங்களைக் காப்பாற்றும் அனைவருமே கதாநாயக-கதாநாயகிகளே. நிஜ வாழ்க்கையில் பொறுப்புடன் உழைத்துக் கடைமையைச் செய்து வருபவர்களை விடவும் கனவுலகத்தில் உழைத்துப் பணமீட்டுபவர்கள் ஒன்றும் மேம்பட்டவர்கள் அல்லர். அவர்கள் நம்மை விடப் பிரபலமான முகங்கள் அவ்வளவே.

காலம் காலமாகத் திரைப் பிரபலங்களைக்காண மக்கள், குறிப்பாக இளம் ரசிகர்கள் கூடியதைக் கண்டிருக்கிறோம்.

ஆனாலும், சேலம் மாநகரில் கூடிய இந்தக் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே கவலையளிக்கிறது.

சென்னைப் பெருமழை, கடலில் எண்ணை கலப்பு போன்ற நிகழ்வுகளில் நிவாரணப் பணிகளுக்காக இளைஞர்கள் பலர் களம் இறங்கியதைக் கொண்டிருக்கிறோம்.

காவிரிப் பிரச்சினை, ஜல்லிக்கட்டு, மீத்தேன் வாயு திட்ட எதிர்ப்பு, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு, புதிய மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு என்று பல்வேறு சமூகப் பிரச்சினகளில் ஆயிரக்கணக்கில் களமிறங்கி அறவழியில் போராடிய - போராடி வருகிற இளைய சமுதாயத்தினரைக்கண்டு வியந்திருக்கிறோம்.

இதோ ஒரு புதிய பொறுப்புள்ள சமுதாயம் மலர்ந்திருக்கிறது என்று இறுமாந்திருக்கிறோம். இந்தப் பெருமிதங்களையும் நம்பிக்கைகளையும் பொடிப்பொடியாக்கும் வகையில், இழந்தால் திரும்பப் பெறமுடியாத தங்களது காலத்தையும் ஒரு திரைப்பட நடிகையைத் தரிசிப்பதற்காக வீணடித்த இளைஞர்களைப் பார்க்கையில் நம்மால் பரிதாபம்தான் கொள்ள முடிகிறது.

பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராடி விழுப்புண் பெற்றால் பாராட்டலாம். ஒரு கதாநாயகியை நேரில் காண்பதற்காகத் தடியடி பெற்றதை என்னென்று சொல்வது?

Dinamani -150417
 

dantv