Theneehead-1

Vol: 14                                                                                                                                                17.03.2017

முன்னாள் போராளி: வாழ்க்கைக்கான போராட்டம்

   கருணாகரன்

இரண்டு பசு மாடுகள். படிக்கிற வயதில் நான்கு பிள்ளைகள். அதிகம் விவரமில்லாத மனைவி. சரியான பாதையில்லாத வளவு. வசதியற்ற வீடு. சல்லடையாகக்கப்பட்ட உடல். நடக்க முடியாத மனிதன். இதை இணைத்து ஒரு சித்திரத்தை உங்களுடைthiyagarajahய மனதில் வரைந்து பாருங்கள்.

எப்படியிருக்கும் அந்தச் சித்திரம்?


துடிப்பு நிறைந்த ஒரு போராளி. சண்டைக்களங்களில் எப்போதும் முன்னின்று களமாடியதால் தளபதிகளிடம் பாராட்டையும் மதிப்பையும் பெற்றவன். அப்போது உடலில் பட்ட காயங்கள் அவனுக்கு மதிப்பையும் பெருமையையும் ஏற்படுத்தியிருந்தன. ஒவ்வொரு காயத் தழும்பும் ஒவ்வொரு சண்டைக்களத்தில் அவன் நின்று இயங்கியதற்கு அடையாளம். இதெல்லாம் அவனுக்குச் சக போராளிகளிடத்திலும் சனங்களிடத்திலும் மதிப்பைக் கூட்டியிருந்தன.

அவன் செல்லுமிடங்களில் அவனை நெருங்கி வந்து பலரும் கதைப்பார்கள். அவனோடு நட்பாக இருக்க விரும்பினார்கள். அவர்களோடு நெருங்கிப் பழக அவனுக்கும் விருப்பமிருந்தாலும் கால நேரம் போதியதாக இருப்பதில்லை. எல்லோருக்கும் மெல்லியதாக ஒரு சிரிப்பு. சிலரோடு சில வார்த்தைகள். பறந்து திரிந்தான் இயக்கம் என.

இந்தச் சித்திரத்தையும் உங்கள் மனதில் வரைந்து கொள்ளுங்கள்.

எப்பிடியிருக்கும் இந்தச் சித்திரம்?


இந்த இரண்டுமே ஒருவருடையவைதான். இரண்டு விதமான வெவ்வேறு காலத்தில் எல்லாமே மாறித் தலைகீழாகி விட்டன. முன்பு செல்வாக்கோடும் மதிப்போடும் இருந்த போராளி, இன்று கவனிப்பார் இல்லாதிருக்கிறான்.

ஒரு காலம் பலரும் அவனோடு நெருங்கி உறவாட விரும்பியிருந்த நிலை இன்று முற்றாக மாறி, யாருமே கண்டு கொள்ளாத நிலை வந்திருக்கிறது.
யாரும் கவனிக்காதவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும்? அப்படி யாரும் கவனிக்காத நிலை ஏன் வந்தது?

இதுதான் தியாகராஜாவின் கேள்வி. இந்தக் கேள்வி நமக்கும்கூடத்தான்.

ஏனென்றால், இந்த இரண்டு காலத்திலும் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லவா. இப்படி மாறி விட்ட காலத்தில் எல்லாவற்றையும் நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா! அதனால் இந்தக் கேள்விகள் எங்களுக்கும்தான்.

1980 களின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்த தியாகராஜா, வன்னிப்பகுதியில் இந்திய இராணுவத்தோடு நடந்த சமர்களில் துடிப்பான போராளியாகக் களமாடினார்.  1990 களில் இலங்கை இராணுவத்தோடு நடந்த சண்டைகளில் ஒரு சாதனையாளன்.  இரண்டு காலகட்டத்திலும் தியாகராஜாவுக்கு உடல் நிறையக் காயங்கள். காயங்கள் ஆறும். தழும்பு நீங்குமா?

போராளிகளின் உடலில் வீரத்தழும்பு என்றால் அவர்கள் வெற்றியாளர்களாகவே கருதப்பட்ட காலம் ஒன்றிருந்தது. அப்போது தியாகராஜாவின் காட்டிலும் வீட்டிலும் கொடி பறந்தது. ஆனால் பின்னர் நடந்த சமரொன்றில் தியாகராஜா படுகாயம் அடைந்ததால் தொடர்ந்து செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இறுதி யுத்தம் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இடையில் நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையாகி விட்டார். வட்டக்கச்சி, இராமநாதபுரத்திலிருக்கும் வீட்டிலிருந்து நான்கு பிள்ளைகளோடு இடம்பெயரத் தொடங்கிய தியாகராஜாவை மாத்தளனில் செல் தாக்கியது. மீண்டும் காயம். காயமென்றால், சாதாரணமான காயமல்ல. பெருங்காயம். குடல் கிழிந்தது. கால்கள் சிதைந்தன. உடலில் இனிப் படுவதற்கு இடமில்லை என்ற அளவுக்கு எல்லா இடத்திலுமிருந்தும் இரத்தம் பீறிட்டது.

ஒருவாறு உயிர் தப்பிய தியாகராஜா இடையில் வந்த எல்லா நெருக்கடிகளையும் சந்தித்து, இப்போது மீண்டும் இராமநாதபுரத்தில் வந்து குடியேறியிருக்கிறார். ஆனால் நடக்க முடியாது. சக்கரவண்டியிலேயே நடமாட்டம். வீதிக்கும் வளவுக்குமிடையில் ஒரு பெரிய வாய்க்கால். பாலம் கிடையாது. வாய்க்கால் ஓரத்தில் உள்ள விளிம்பால் நடந்தே வீட்டுக்குச் செல்ல முடியும். மழைக்காலத்தில் அதில் நடக்க முடியாது. சறுக்கியோ வழுக்கியோ வாய்க்காலில் விழவேண்டியிருக்கும். கோடையில் என்றால் சமனிலை எடுத்து நடப்பது பெரிய சவால்.

இந்த நிலையில் சக்கரவண்டிலில் எப்படி ஒருவர் போய் வர முடியும்? ஆனால், வேறு வழியில்லை. எப்படியோ பிள்ளைகள் மற்றும் மனைவியின் உதவியோடு அந்த வாய்க்காலில் இறங்கி, ஏறித்தான் தன்னுடைய தேவைகளுக்காகப் போய்வருகிறார். அப்படி இயங்காது விட்டால் நான்கு பிள்ளைகளுக்கும் சோறு போடுவது எப்படி?

நடக்கக்கூடியவர்களே என்ன செய்வது? எப்படி உழைப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்போது, நடக்கவே முடியாத தியாகராஜாவினால் என்னதான் செய்ய முடியும்? ஆனாலும் பிள்ளைகள் பசி இருப்பார்களா? அல்லது அவர்களைப் படிப்பிக்காமல் வைத்திருக்க முடியுமா? எப்படியோ இயங்கித்தான் ஆக வேணும்.

தியாகராஜாவிடம் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையினால் அவர் ஒரு மாட்டை வாங்கி வளர்த்தார். ஒரு மாட்டின் மூலமாகக் கிடைக்கிற வருமானம் ஆறு பேர் கொண்ட குடும்பத்துக்குப் போதவே போதாது. இரண்டு ஏக்கர் வயலைக் குத்தகைக்கு எடுத்து விதைத்தார். வயல் விதைத்தால் வயலில் விதைத்தவன் நிற்க வேணும். இல்லையென்றால் வருவதை எடுத்துக் கொள்ளவேண்டியதுதான். விரும்பியதை எடுக்க முடியாது. என்றாலும் சோற்றுக்கு அரிசி கிடைத்தது. இப்படியிருந்தாலும் குடும்பத்தின் தேவையைத் தியாகராஜவினால் நிறைவேற்றவே முடியவில்லை.

பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. மனைவிக்கு ஒரு துணி எடுத்துக் கொடுக்க இயலவில்லை. வெளியே குடும்பத்தை அழைத்துப்போக வாய்க்கவில்லை. ஒழுங்காக ஒரு தொழிலைத் தேடிக்கொள்ள முடியவில்லை. இப்படி எல்லாமே இல்லைகளின் பட்டியலில் போய் முடிந்தது. கவலைகள் தியாகராஜாவையும் மனைவியையும் சூழ்ந்தன. அதிலிருந்து மீள வழி தெரியவில்லை. ஆனாலும் தியாகராஜா ஓய்ந்திருக்கவில்லை.

தேங்காய் மட்டைகளை எடுத்து அவற்றை ஊறவைத்துத் தும்பாக்கினார். பனை ஓலையில் பொருட்களை உருவாக்கினார். கோழிகளை வளர்க்க ஆரம்பித்தார். எல்லாம் கைக்கடக்கமான அளவில்தான். அதற்கு அதிகமாகச் செய்வதற்கு அவரிடம் நிதிவளமில்லை. நிதிவளமிருந்தாலும் உடல் வலுவில்லை. இருந்தாலும் இன்னும் இரண்டு மாடுகள் கிடைத்தால் கொஞ்சம் கூடுதலாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளலாம் என்று முயற்சித்தார்.

ஒரு உள்ளுர் தொண்டு அமைப்பு அவருக்கு இன்னொரு மாட்டை வாங்கிக் கொடுத்தது. இப்போது இரண்டு மாடுகள் தியாகராடம் உள்ளன. இரண்டிலிருந்தும் பால் எடுத்துக் கடைக்குக் கொடுக்கிறார். இரண்டையும் பராமரிப்பது அவரைப்பொறுத்தவரையில் சற்றுக்கடினம்தான். ஆனால், வேறு வழியில்லை. பிள்ளைகளுக்காக உழைத்தே ஆகவேணும். அவர்களுடைய எதிர்காலத்தோடு விளையாட முடியாது.

ஏற்கனவே இருக்கின்ற இரண்டு மாடுகளோடு இன்னும் இரண்டு மாடுகளைச் சேர்த்து வளர்த்தால் பராமரிப்புச் செலவும் குறைவு. வருவாயும் அதிகரிக்கும் என்று  தியாகராஜாவுக்கு ஆலோசனை சொல்கிறார் கால்நடை வளர்ப்பு அதிகாரி. அவர் சொல்வதும் சரியே. ஆனால், அதற்கு உடனடியாக எப்படி ஏற்பாடு செய்வது? முன்னாள் போராளிகளுக்கு என அரசாங்கம் என்ன பென்சன் கொடுக்கிறதா? அல்லது வேறு சலுகைகள் கிடைக்குமா? எதுவுமே இல்லை.

தன்னுடைய வளவில் நிற்கும் மாமரத்தின் கீழே இருந்து கொண்டு போவோர் வருவோரையெல்லாம் பார்க்கிறார் தியாகு. எல்லோருக்கும் ஏதோ அவசரம். எல்லோரும் அவரவர் பாட்டில் திரிகிறார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள். ஆனாலும் எங்கிருந்தோ ஒரு முகம் எதிர்பாராத விதமாக தியாகுவிடம் வரும் என்ற நம்பிக்கை தியாகராஜாவுக்குண்டு. ஆனால் அது எப்போதென்று தெரியாது.

இப்படித்தான்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தடவை யாரோ ஒருவர் வந்திருந்தார். வந்தவர் சுகநலன்களை விசாரித்தார். குடும்ப விவரத்தைக் கேட்டார். எல்லாவற்றையும் குறித்துக் கொண்டு போனார். விடைபெறும்போது பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காகச் சிறியதொகைப் பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். பிறகு தியாகுவுக்கும் அவருக்குமிடையில் இரண்டொரு மாதங்கள் கதை பேச்சிருந்தது. அதற்குப் பிறகு எதுவுமே இல்லை. இப்போது  புரியாத இடைவெளி மட்டுமே மிஞ்சியிருக்கு.

தியாகரராஜாவின் மனைவி மாடுகளை அவிழ்த்துக் கட்டுகிறார். வயலுக்குப் போய் புல் வெட்டி வருகிறார். பால் எடுப்பது மட்டும் தியாகு. அதைக் கொடுப்பதற்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள். காலையில் பாலைக் கொண்டுபோய்ப் பால் சேகரிக்கும் இடத்தில் கொடுத்து விட்டுப் பாடசாலைக்குப் போகும் பிள்ளைகள் மாலையில் வீட்டுக்கு வந்து, தாயுடன் சேர்ந்து புல் வெட்டிவரப்போகிறார்கள். அல்லது மாட்டுக் கட்டையைத் துப்புரவு செய்கிறார்கள்.Thiyagarajah-2

“கையில கொஞ்சக் காசிருந்தால் பிள்ளைகளை ரியுசனுக்கு அனுப்பிப்படிப்பிக்கலாம். எனக்கும் பெரிய அளவில் படிப்பு ஓடாது. படிக்கிற வயசில இயக்கத்துக்குப் போயிற்றன். இயக்கம் இருந்திருந்தால் எதுவோ நடந்து கொண்டிருக்கும். இப்ப வெறுங்கையோட இருக்கிறன் என்று கண் கலங்க மட்டுமே முடியுது“ என்று சொல்லி விட்டு கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

இந்தக் காட்சியைப் பார்க்கும்போது உங்கள் இதயம் கரைந்தொழுகக் கூடும். தவிர்க்க முடியாமல் உங்கள் கண்களில் வடியும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளலாம். ஆனால், மனதில் படிந்துள்ள துயரத்தை அப்படி எளிதாகத் துடைத்து விடமுடியாது.

அதைப்போலவே தியாகராஜாவின் துயரத்தையும் எளிதாகப் போக்கி விடமுடியாது. ஆனால், பாதிக்கப்பட்டிருக்கும் தியாகராஜாவின் குடும்பத்துக்குப் பொருத்தமான உதவிகளைச் செய்து உதவுவதன் மூலமாக நமது கவலைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். அந்த உதவிகள் தியாகராஜாவின் குடும்பத்தில் சூழ்ந்திருக்கும் துயர இருளைப் போக்கும். இப்படிச்  செய்யும்போது இரண்டு தரப்பிலும் படிந்திருக்கும் துயரம் தீர்ந்து விடும். ஒரு பேராறுதலை நாமே நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

யுத்தம் உருக்குலைத்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று தியாகராஜாவினுடையது. தம்மை மீள ஒழுங்கு படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. சிறிய பாதிப்புகளைச் சீர்ப்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாதிப்புகளை நிமிர்த்தி, நிவர்த்தியாக்கிக் கொள்வது கடினம். அதற்குப் பொருத்தமான உதவிகள் இருந்தால் மட்டுமே சீர் செய்து கொள்ள முடியும். இல்லையென்றால் வீழ்ந்த ஆலமரத்தைப்போல எழ முடியாமல் கிடக்க வேண்டியதுதான்.

ஆனால், எதிர்காலத்தின் தளிர்களாக இருக்கும் குழந்தைகளை வைத்துக்கொண்டு, ஒருவர் அப்படி எழுந்திருக்காமல் இயங்காமல் இருக்க முடியுமா?

தியாகராஜா கேட்பது அதிகமாக ஒன்றுமே இல்லை. இன்னும் இரண்டு மாடுகள் கிடைத்தால் அது பெரிய உதவியாக அமையும் என்பதைத்தான். எவ்வளவு பெரிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் இன்று இரண்டு மாடுகளை வாங்கித்தாருங்கள் என்று கேட்கிறான் என்றால் இது வாழ்க்கையின் விசித்திரமா? காலத்தின் கோலமா? அல்லது வரலாற்றின் விளையாட்டா?

“நடக்கமுடியாதவன் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வாங்க முடியுமா?” என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால், ஓட்டப்பந்தயத்திலதான் பதக்கம் வாங்கவேணும் எண்டில்லை. என்னாலும் வெற்றிப்பதக்கத்தைப் பெற முடியும். ஆனால், அதற்கு உங்களுடைய உதவியும் ஒத்துழைப்பும் தேவை என்கிறார் தியாகு.

இப்போது சொல்லுங்கள், இந்த மனிதருக்காக என்ன செய்யலாம் என்று.

dantv