Theneehead-1

Vol: 14                                                                                                                                                17.03.2017

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 50 பேர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை கிண்ணியா வைத்தியசாலையில் நேற்று (15) மாலை 4 மணி முதல் இன்று மாலை 3 denque fieberமணி வரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் 113 டெங்கு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் 3605 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்

அவர்களில் கிண்ணியாவில் மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2088 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியாவில் 900 பேரும் திருகோணமலை நகர் பகுதியில் 379 பேரும் மூதூரில் 418 பேரும் உப்புவெளியில் 266 பேரும் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கிண்ணியாவைச் சேர்ந்த 09 பேரும் குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 03 பேரும் குச்சவெளி பகுதியில் ஒருவரும் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நேற்று மாலை 4 மணிவரையான 24 மணித்தியாலங்களில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட 36 நோயாளர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தமது சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் நிலைமை தொடர்பில் சுகாதார திணைக்களம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.முருகானந்தம் தெரிவித்தார்.

இதேவேளை, கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள 66 பாடசாலைகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளன.

இன்றும் முப்படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து கிண்ணியாவில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

நுளம்பு பெருக முடியுமான பல இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் நுளம்பின் வாழ்க்கை வட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவே அதிகளவிலான டெங்கு நுளம்புகள் பரவி வருவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.

கிண்ணியா பகுதியில் அதிகளவில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட வைத்திய நிபுணர்கள் இரண்டு பேரை அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

dantv