Theneehead-1

Vol: 14                                                                                                                                                17.03.2017

சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடும் மக்களின் போராட்டங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

பொறுப்பு வாய்ந்தோரிடம் கையளித்த உறவுகளை மீளக்கையளிக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் பிராந்திய அலுவலகத்திடம் மகஜர் ஒன்றை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கையளித்தனர்.

சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தி பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சட்டத்திற்கும், மனித உரிமைக்குமான கற்கை நிறுவகம், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நல்லூர் ஆலய முன்றலில் இருந்து கோவில் வீதியூடாக நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகளின் பிராந்திய அலுவலகம் வரை பேரணியாகச் சென்ற மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இதேவேளை, கிளிநொச்சி உலக உணவு ஸ்தாபன அலுவலகத்திற்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

இந்நிலையில், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கையளிக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு ஐ.நா வை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றது.

ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில், வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதேவேளை, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி திருகோணமலையிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

dantv