Theneehead-1

Vol: 14                                                                                                                                                17.03.2017

டிரம்ப்பின் புதிய குடியேற்றத் தடை உத்தரவு: அமெரிக்க நீதிமன்றம் மீண்டும் நிறுத்தி வைப்பு

6 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதைத் தடை செய்யும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுக்கு, அந்த நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.trump

இராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கும் உத்தரவை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்தார்.

அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது தான் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர் அந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும், அந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்; முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கை என்று குற்றம் சாட்டினர்.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஆட்சி நடைபெறும் பல்வேறு மாகாணங்களில், அந்த தீர்ப்புக்கு எதிராக மாகாண அரசுகள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த உத்தரவுக்கு தடை பெறப்பட்டது.

டிரம்ப்பின் குடியேற்றத் தடை உத்தரவு, அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி, அதற்கு நீதிமன்றங்கள் இடைக்காலத் தடை விதித்தன.

இந்தச் சூழலில், திருத்தியமைக்கப்பட்ட புதிய உத்தரவை கடந்த வாரம் டிரம்ப் பிறப்பித்தார்.

இராக் நாட்டைச் சேர்ந்தவர்கள், கிரீன் கார்டு, நுழைவுச் சீட்டு ஆகியவற்றை வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு தடையிலிருந்து விலக்கு அளிப்பது போன்ற மாறுதல்களுடன் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவு புதன்கிழமை நள்ளிரவிலிருந்து அமலுக்கு வருவதாக இருந்தது.

இந்த நிலையில், புதிய உத்தரவுக்கு எதிராக ஹவாய் மாகாண நீதிமன்றத்தில் அந்த மாகாண அரசு தாக்கல் செய்திருந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதி டெர்ரிக் வாட்ஸன், தனது உத்தரவில் தெரிவித்ததாவது:7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடுக்கும் உத்தரவை தர்க்கரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

குற்றங்களைத் தடுப்பதற்காக, ஒட்டுமொத்த சமுதாயத்தையே குறிவைத்துத் தாக்கும் இந்த உத்தரவின் அடிப்படைக் கொள்கையே, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

90.7 சதவீதம் முதல் 99.8 சதவீதம் வரை முஸ்லிம்கள் வாழும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மட்டும் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை, குறிப்பிட்ட அந்த நாடுகளையும், முஸ்லிம் மதத்தையும் குறிவைக்கிறது என்பதை நடுநிலையாளர்கள் எவராலும் மறுக்க முடியாது.

எனவே, திருத்தியமைக்கப்பட்ட குடியேற்றத் தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் கண்டனம்: அரசு நிர்வாகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நீதித் துறையின் தலையீடு இருப்பதேயை இந்த உத்தரவு காட்டவதாக டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.

dantv