Theneehead-1

Vol: 14                                                                                                                                                17.03.2017

நேர்காணல்

உண்ணும் முன் உன் உறவை நினை!“

“உண்ணும் முன் உன் உறவை நினை“ என்ற மந்திரச் சொல்லோடு ஆரம்பிக்கப்பட்டது பச்சிலைப்பள்ளி அபT.Loganathanிவிருத்திச் சங்கம். 2009 இல் இறுதிப்போரினால் பாதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி மக்களையும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தையும் மீள் நிலைப்படுத்தி முன்னேற்றுவற்காக லண்டனில் இந்தச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அனர்த்தகால முதலுதவியாக உணரப்பட்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம் இப்போது பன்முகப்பணிகளைச் செய்து முன்னிலைபெற்றிருக்கிறது. இந்தச் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் முக்கியமானவரான தம்பாப்பிள்ளை லோகநாதன் ( இரத்தினம்) சங்கத்தின் ஏழாவது ஆண்டு நிறைவையொட்டி சங்கத்தின் மையப்பணிமனைக்கு லண்டனில் இருந்து வருகை தந்திருந்தார். புதிய திட்டங்கள், செயற்பாடுகளை வேகமூட்டுதல், பணிகளைத் தொடர் கண்காணிப்புக்குட்படுத்துதல் என புதிய ஆண்டில் சங்கத்தை மேலும் புதிதாகச் செயற்படுத்தும் நோக்கத்துடன் அவர் தொடர் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.  இந்தச் சந்தர்ப்பத்தில் அவரைச் சந்தித்து இந்த நேர்காணலைச் செய்திருந்தோம்.

பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கத்தைப்போல ஒவ்வொரு பிரதேசத்துக்குமான அமைப்புகள் உருவாகுமானால் கணிசமான அளவுக்கு பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும். அந்த வகையில் ஏனையோருக்கு ஒரு தூண்டலாக இந்த நேர்காணல் அமையும் என நம்புகிறோம்.  

பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கத்தின் ஸ்தாபகரும் இணைப்பாளருமான திரு. தம்பாப்பிள்ளை லோகநாதன் (இரத்தினம்)

 

 1.   பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கத்தை நீங்கள் ஏன் ஆரம்பித்தீர்கள்? எப்படியான சூழலில் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது?

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அல்லற்பட்டுக்கொண்டிருந்த எமது பிரதேச உறவுகளுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அவசர உதவிகளைச் செய்ய வேண்டும் எனச் சிந்தித்தோம். இதற்காக அவசர அவசரமாக லண்டனில் இருந்த நண்பர்களாகிய நாம் (மூத்ததம்பி செல்வரத்தினம், தம்பாப்பிள்ளை லோகநாதன் ஆகிய நான், கந்தசாமி சிவராசா, கனகசபை சிவா ஆகியோர்) இணைந்து இந்த அமைப்பை உருவாக்கினோம். பின்னர் இந்தச் சங்கத்துக்கான நிர்வாகக்குழு உருவாக்கப்பட்டது. அப்போது லண்டனில் வாழ்ந்த பச்சிலைப்பள்ளிப் பிரதேச மக்களும் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பலரும் பங்களித்தனர். இன்னும் இந்தப் பங்களிப்பைப் பலரும் செய்து வருகின்றார்கள். “உண்ணும் முன் உன் உறவை நினை” என்ற மகுட வாசகத்தோடு நாங்கள் தொடங்கிய பணிக்கு இன்று பலருடைய பங்களிப்புக் கிடைத்திருப்பதையிட்டு மகிழ்வடைகிறேன்.

சங்கத்தின் தொடர்ச்சியான பணிகள் பின்னர் விரிவடையத் தொடங்கியது. அங்கத்தவர்களின் எண்ணிக்கை கூடியது. பங்களிப்பும் அதிகரித்தது. அந்த நிதியை ஆதாரமாகக் கொண்டு பச்சிலைப்பள்ளியில் பணிகளை விரிவாக்கம் செய்தோம். இதற்காக பச்சிலைப்பள்ளி அபிவிருத்திப் பேரவை என்ற பெயரில் அதே ஆண்டு பளையில் ஒரு அலுவலம் திறக்கப்பட்டது. இதன்மூலம் வாழ்வாதார உதவிகள், தையல் பயிற்சி, கணினிப் பயிற்சி, கணித வகுப்புகள், க.பொ.த. சதாராண தர மாணவர்களுக்கான கணிதக் கல்வி போன்ற பணிகளை முன்னெடுத்தோம். இந்த வகுப்புகளில் ஏறக்குறைய 400 பேர் வரையில் படித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களுக்கான சத்துணவுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  இதற்குக் காரணம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் போசாக்கற்ற நிலை குழந்தைகளைப் பாதித்திருந்ததைக் கவனித்தோம். ஆகவே இந்தப் பிள்ளைகளை ஆரோக்கியமான பிள்ளைகளாக வளர்த்தெடுக்க வேண்டும் என விரும்பினோம். இதன் விளைவாக உருவாக்கப்பட்டதே பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கத்தின் சத்துணவுத்திட்டம். ஆனால், சிறப்பாக லண்டனில் இயங்கிய சங்கத்திலிருந்து சிலர் ஒதுங்கியிருக்க முற்பட்டனர். சிலர் வேறு விதமாகச் சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என்று கருதினார்கள். இதனால் சங்கத்தைப் பொறுப்பேற்று வழிநடத்த வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.

2.   யுத்தப்பாதிப்பு வன்னியிலிருந்த எல்லோருக்கும் ஏற்பட்டது. ஆனால் நீங்கள் தனியே பச்சிலைப்பள்ளி மக்களுக்காக என இந்தச் சங்கத்தை ஆரம்பித்ததும் பணிகளை அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமே செய்ய முற்பட்டதும் ஏன்?

அநேகமாக எமது தாயகத்தின் எல்லா ஊர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் புலம்பெயர் நாடுகளில் சங்கங்களும் அமைப்புகளும் உதவும் ஆட்களும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அப்படியான ஒரு அமைப்பு பச்சிலைப்பள்ளிக்கு இருக்கவில்லை. இதனால் எங்களின் பிரதேசத்துக்கு என ஒரு அமைப்புத் தேவை என உணர்ந்தோம். அதன் விளைவாக உருவாக்கப்பட்டதே இந்தச் சங்கம்.

இறுதி யுத்தத்தில் பேரழிவைச் சந்தித்தது முள்ளிவாய்க்கால் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதற்கு முன்பு எமது பச்சிலைப்பள்ளிப் பிரதேசம் முற்றாகவே அழிக்கப்பட்டது. ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்தும் முகமாலை, கிளாலித்தளங்களிலிருந்தும் ஏவப்பட்ட அத்தனை வெடிப்பொருட்களையும் பச்சிலைப்பள்ளி மண்ணே தன்னுடைய உடலில் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் பச்சிலைப்பள்ளி அழிந்து கொண்டிருந்தது. குடாரப்புத் தரையிறக்கத்தின் பிறகு இத்தாவில் பகுதியில் நடந்த யுத்தம் பச்சிலைப்பள்ளியின் முகத்தையே மாற்றி அமைக்கும் வகையில் நடந்தது. வடக்குக் கிழக்கில் முற்றாக அழிவடைந்த மிகச் சில பகுதிகளில் ஒன்று பச்சிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. உச்சமான அழிவைச் சந்தித்த பிரதேசம் என்று முள்ளிவாய்க்கால் பகுதியைச் சொல்வார்கள். அது உண்மையே. ஆனால் இப்போது அந்த முள்ளிவாய்க்காலில் எல்லோரும் மீளக்குடியேறி இயல்பு வாழ்க்கை உருவாகி வருகிறது. ஆனால் பச்சிலைப்பள்ளியில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற முடியாத நிலையிலேயே உள்ளனர். அந்தளவுக்கு அங்கே அழிவுகளும் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளும் இருக்கின்றன. தொடர்ச்சியாக கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன. இருந்தும் செல்லும் முகமாலை, இத்தாவில், கிளாலிப் பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிகளை முழுதாக அகற்றுவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் வரையிலாவது செல்லும் என கண்ணிவெடிகளை அகற்றும் பிரிவைச் சேர்ந்த டெனி என்பவர் தெரிவித்திருக்கிறார். இதிலிருந்தே பச்சிலைப்பள்ளியின் அழிவைப்பற்றி நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

எனவேதான் நாங்கள் பச்சிலைப்பள்ளிப்பிரதேசத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என்று தீர்மானித்தோம். ஆனாலும் நாங்கள் பச்சிலைப்பள்ளியைத் தவிர்ந்து பிற இடங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களுடைய நிலைமையைக் கருத்திற்கொண்டு உதவிகள் அளித்திருக்கிறோம். ஒரு சிறிய உதாரணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவு மற்றும் பாதிப்பையொட்டி அங்குள்ள மக்களுக்குப் பெருந்தொகையான உலர் உணவுப் பொருட்களை வழங்கினோம். இப்படிப் பல.

3.   சங்கத்தின் தற்போதைய பணிகள் என்ன? அல்லது எவ்வாறானவை?

முன்பள்ளிச் சிறார்களுக்கான சத்துணவு வழங்குதல், வசதியற்ற நிலையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிகளை அளித்தல், வீட்டுத்தோட்டத்தை ஊக்குவித்தல், இயற்கை வேளாண்மையை மேம்படுத்துதல், சிறுகைத்தொழில் பயிற்சியளித்தல் போன்றனவற்றைச் செய்து வருகிறது சங்கம். இதில் வீட்டுத்தோட்டம், பனம்பொருள் கைப்பணிப்பயிற்சி போன்றவற்றுக்கு யு.என்.டி.பி உதவியளித்து வருகிறது
இதைவிட பிரதேசத்தின் கலை, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்துதலும் பாதுகாத்தலும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மரநடுகை போன்றவற்றை மேற்கொள்ளும் நடவடிக்கையிலும் சங்கம் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது. அத்துடன் புதிதாக ஒரு பண்ணையை ஆரம்பித்திருக்கிறோம். முதற்கட்டமாக இங்கே பயிர்ச்செய்கையை மேற்கொண்டிருக்கிறோம். இந்தப்பண்ணை புதுக்காட்டுச் சந்திக்கும் பளைக்கும் இடையில் உள்ளது.

4.   சங்கத்தின் விரிவாக்கம் எப்படியுள்ளது? புலம்பெயர் நாடுகளில் எங்கெங்கே இதனுடைய பணிகளும் கிளைகளும் உள்ளன?

லண்டனுக்கு அடுத்ததாக சுவிஸில் ஒரு கிளை இயங்குகிறது. 2012 சுவிஸ் கிளை ஆரம்பிக்கப்பட்டது.  இந்தக் கிளை சத்துணவுத்திட்டத்தின் வெற்றிக்கு பெரும் பங்களித்துச் செய்து வருகிறது. இப்போது பிரான்சிலும் கனடாவிலும் இத்தாலியிலும் கிளைகளை ஆரம்பிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  ஆர்வமுள்ளவர்கள் எம்மைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். சரியான வழிகாட்டலைச் செய்து வருகிறோம். இவர்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் பச்சிலைப்பள்ளியின் வளர்ச்சியில் பெரிய பங்களிப்புகளைச் செய்யலாம் எனத்திட்டமிட்டுள்ளோம். ஏனையவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம். இப்போது உங்களுக்கான இந்தப் பதிலைச் சொல்லிக்கொண்டிருக்கும் நள்ளிரவை அண்மித்த நேரத்தில் இன்னொரு உதவி அமைப்பினர் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகளைச் செய்வதற்கு பெருந்தன்மையோடு முன்வந்திருக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி. அவர்களுடன் இது தொடர்பாக விரைவில் பேசி ஒழுங்குகளைச் செய்வோம்.

5.   சங்கத்தின் நிர்வாகம், அதனுடைய நடவடிக்கைகள், அது எதிர்கொண்டுள்ள சவால்கள் எல்லாம் எப்படியானவை?

எந்த ஒரு செயலுக்கும் சவால்கள் இருக்கும். எமது சங்கத்துக்கும் சவால்கள் உண்டு. சங்கத்தை ஆரம்பித்தவர்களில் சிலர் தொடக்கம் சங்க நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் வரையில் சங்கத்தை நெருக்கடியான நிலைக்குள் தள்ள முயற்சித்ததுண்டு. ஆனால், அதையெல்லாம் கடந்து, அந்தச் சவால்களையெல்லாம் முறியடித்து இன்று சங்கம் பெரு விருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சவால்களை முறியடித்தவர்கள் எமது சங்கத்துக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் மக்களே. அத்துடன் சங்க நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் சோர்வில்லாமல் அர்ப்பணிப்புடன் இந்தப் பொதுப்பணியில் இயங்கி வருவது இன்னொரு பலமாகும்.

இதைவிட சங்கத்தைத் தொடர்ச்சியாக இயக்குவதற்குச் சட்டரீதியான பதிவைச் செய்வதிலும் எமக்கான காணியை வழங்குவதிலும் எமக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உதவியிருக்கிறார். நிர்வாக வழிப்படுத்தல்களையும் தாராளமான ஒத்துழைப்புகளையும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர்களாக இருந்த த. முகுந்தன், எஸ். சத்தியசீலன் ஆகியோர் செய்திருக்கின்றனர். சங்கத்தின் வளர்ச்சியில் சத்தியசீலன் பேரார்வம் காட்டியிருந்தார். வருகின்றமை மகிழ்ச்சியானது. அது எங்கள் மக்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாகும். தொடர்ந்தும் அவருடைய ஆதரவு எமக்குக் கிடைத்து வருகிறது.

பின்னர் பச்சிலைப்பள்ளிப்பிரதேச செயலாளராகப் பணியாற்றி வரும் திருமதி ஜெயராணி பரமோதயன் எமக்கான காணியை வழங்குவதில் உதவியிருக்கிறார். தொடர்ந்தும் திருமதி ஜெயராணியின் பங்களிப்புகள் கிடைத்து வருகின்றமை மகிழ்ச்சியைத் தருகிறது. இப்போதுள்ள சவால்களாக நாம் கருதுவது, பச்சிலைப்பள்ளி – பளைப்பிரதேசத்தின் குடிநீர் மாசுபடும் நிலை காணப்படுகிறது. பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் போதாமையில் உள்ளது. ஆங்கில அறிவும் பயிற்சியும் குறைவாகவே காணப்படுகிறது. இயற்கை வளங்கள் யுத்தத்தினால் முழுதாகவே அழிந்து விட்டன. பச்சிலைப்பள்ளி என்ற பெயருக்கு ஏற்றமாதிரி பனைகளும் தென்னைகளும் காடுகளும் குளங்களுமாக இருந்த அழகான ஊர்கள் இன்று அழிந்த நிலமாகி விட்டன. லட்சத்துக்கு மேற்பட்ட தென்னைகள் அழிந்து விட்டன. பச்சிலைப்பள்ளியின் அடையாளமாக எல்லோரும் சொல்கிற பனை வளம் முற்றாகவே அழிந்து விட்டது. மிஞ்சிய பனைகளை வீட்டுத்திட்டத்துக்கு என்று சொல்லி வெட்டுகிறார்கள். இதைப்போலவே கண்டபாட்டுக்கு மணல் அகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. இப்படி அளவுக்கு அதிகமாக மணல் அகழப்பட்டால் பளைப்பிரதேசம் அழிந்தே விடும்.

6.   இயற்கை வேளாண்மை, சூழல் பாதுகாப்பு இரண்டும் இன்றைய நிலையில் முக்கியமானவை. அதைப்போல, அழிவடைந்த பிரதேசத்தை மீள் நிலைப்படுத்தும் பணியும் அவசியமானது. இந்தத்திட்டங்கள் எந்தளவுக்கு வெற்றியளித்துள்ளன? இதை எப்படிச் செயற்படுத்துகிறீர்கள்?

இயற்கை வேளாண்மையின் அவசியம் இன்று உலக அளவில் உணரப்பட்ட ஒன்றாக உள்ளது. இதற்காக உலகமெங்கும் ஏராளமான அமைப்புகள் இயங்கி வருகின்றன. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது சான்றோர் வாக்கு. நோயற்ற வாழ்வு வாழ வேண்டுமென்றால், நல்ல உணவு தேவை. நல்ல உணவு என்பதே இன்று உலகில் சவாலான ஒன்றாக மாறியிருக்கிறது. இரசாயனப் பாவனை இல்லாத, இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களைப் பெறுவது இன்று கடினமான ஒன்றாக ஆகியுள்ளது. வணிக நோக்கில் அதிக உற்பத்தியைப் பெறுவதற்காக இரசாயனப்பாவனையை உற்பத்தியாளர்கள் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இது உணவுப்பொருட்களை நஞ்சாக்கி விடுகிறது. இந்த நஞ்சையே நாம் தினமும் உண்கிறோம். இப்படியான நிலையில் எப்படி நோயற்ற வாழ்க்கையை வாழ முடியும்? ஆகவேதான் நாங்கள் இயற்கை வேளாண்மையைப் பற்றிச் சிந்திக்கிறோம். நாங்கள் மக்களின் நல்வாழ்வைப் பற்றிச் சிந்திக்கின்ற மக்கள் அமைப்பினர். ஆகவே, மக்களுக்கு எவையெல்லாம் தேவையாக இருக்கிறதோ அதைச் செய்ய விரும்புகிறோம்.

பச்சிலைப்பள்ளிப் பிரதேசம் விவசாயச் செய்கைக்கு முக்கியமான ஒரு இடம். குறிப்பாக சிறுபயிர்ச்செய்கையும் நெல் விவசாயமும் தென்னையும் மரமுந்திரிகை, கொய்யா, மா போன்றவை பச்சிலைப்பள்ளியின் சிறப்பாக உற்பத்தியாகும். யுத்தத்திற்குப் பிறகு மீண்டும் புதிதாக பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கின்ற மக்களுக்கு நாம் உரிய முறையில் வழிகாட்டுவது அவசியம் என்பதால் இயற்கை வேளாண்மையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இயற்கை வேளாண்மை நம் வாழ்வோடு இருந்த ஒன்று. அதை இடையில் கைவிட்டு விட்டோம். இப்போது அவசியம் கருதி மீண்டும் படிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் கவலைக்குரியது. எங்களிடம் இருந்த ஒன்றை நாங்கள் இழந்து விட்டு, இப்போது வெளியிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களுடைய இயற்கை வேளாண்மைத்திட்டத்திற்கு யுஎன்டிபி உதவி செய்கிறது. விவசாயிகளில் சிலர் ஆர்வமாக இருக்கிறார்கள். மாதிரிப் பண்ணையையும் ஆரம்பித்திருக்கிறோம். எதிர்காலத்தில் இதை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நம்புகிறோம். இதேவேளை பிளாஸ்ரிக் பொருட்பாவனையைக் குறைக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறோம். இது தொடர்பான விழிப்புணர்வைச் சங்கம் செய்து வருகிறது. இதற்குப் பதிலாக பனம்பொருட்களை உற்பத்தி செய்கிறோம். எதிர்காலத்தில் வாழை போன்ற இயற்கைத் தாவரங்களிலிருந்து பயன்பாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் திட்டமும் உள்ளது. இதற்காக எமது நிர்வாகப் பிரிவு திறமையாகச் செயற்படுகிறது.

தொடக்கத்தில் மக்களிடம் இந்தத் திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது அவர்கள் உடனடியாக இவற்றுக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்றில்லை. ஆனால், நாம் மக்களுக்கான விழிப்புணர்வைச் செய்து வழிப்படுத்தும்போது அவர்கள் அதில் நம்பிக்கை வைத்து இயங்கத் தொடங்குகிறார்கள். பச்சிலைப்பள்ளி இயற்கை வளங்கள் அதிகமாக உள்ள பிரதேசம் என்ற காரணத்தினால் இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று நம்புகிறோம். குறிப்பாக பனை, தென்னை போன்ற பயிர்களுக்குப் பெயர் போன இந்தப் பிரதேசத்திலிருந்து பல லட்சம் மரங்கள் அழிந்து விட்டன. ஆனால், யுத்தம் முடிந்த பின் வந்த இந்த ஏழு ஆண்டுகளில் 20 வீதமான மரங்களே மீள் நடுகை செய்யப்பட்டுள்ளன. பனை நடுகை இன்னும் மேம்படுத்தப்படவேண்டியுள்ளது. இதில் இன்னும் கண்ணிவெடி அகற்றப்படாத இடங்களும் உண்டு. இதனால் அங்கெல்லாம் மரநடுகையைச் செய்ய முடியவில்லை. இதேவேளை மரங்களைத் தங்களுடைய தேவைகளுக்காக வெட்டுகின்ற மக்கள் அதற்குப் பதிலாக புதிய மரங்களை  வைப்பதில் அக்கறைப் படுவது குறைவு. இதனை நாம் சுட்டிக்காட்டி மரநடுகையில் மக்களை ஈடுபடுத்தி வருகிறோம். இதைப்போல மண் அகழ்வு பளைப்பகுதியில் உச்சமாக நடந்திருக்கிறது. எமது பிரதேசம் மிகவும் ஒடுங்கிய நிலப்பகுதியைக் கொண்டது. இரண்டு பக்கமும் கடலால் சூழப்பட்ட பிரதேசம். ஒரு பக்கம் கிளாலி – ஆனையிறவுக் கடல். மற்றப்பக்கம் நாகர்கோயில் மருதங்கேணி வீரக்களி ஆற்றுக்களப்பு. இந்த இடைப்பட்ட நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து மிக உயரம் குறைந்ததாக இருக்கிறது. இப்படியான ஒரு நிலையில் மண் அகழ்வைச் செய்தால் கடல் நீர் உள்ளே புகுந்து கொள்ளும். இதை புவியியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆகவே எமது பிரதேசத்தைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாகும். எமது முன்னோர்கள், எமக்கு இந்த நிலத்தைப் பாதுகாத்துத் தந்திருக்கிறார்கள். இதை நாம் பாதுகாத்து எமது எதிர்காலத்தலைமுறையினருக்குக் கொடுக்க வேண்டும். இது எமது பொறுப்பாகும். மண்ணை விற்பது எங்கள் தலையை விற்பதற்குச் சமனாகும். ஆகவே மணல் அகழ்வை நாங்கள் தடை செய்ய வேணும் என்ற நோக்கில் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.

இவற்றைச் செயற்படுத்துவதற்கு பிரதேச செயலகம், பிரதேச சபை போன்றவற்றையும் ஊர்களில் உள்ள மக்கள் அமைப்புகளையும் தொடர்பு கொண்டு, அவற்றின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுச் செயற்படுத்துகிறோம்.

7.   பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச் சங்கத்தின் எதிர்காலத்திட்டம் என்ன?

இந்தச் சங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதையும் யுத்தத்தினால் அழிவடைந்த எமது பிரதேசத்தை மீள் நிலைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பணி இன்னும் விரிவாகச் செய்யப்படவேண்டியுள்ளது. எமது பிரதேசத்தில் . . .................. மாற்று வலுவுள்ளோர் இருக்கிறார்கள். ................ பிள்ளைகள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள். இவர்களுக்கான உதவிகள் தேவை. இதற்கு எமது உறவுகள் உதவி செய்ய வேணும். குறிப்பாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற மக்கள் இந்த உறவுகளை ஒரு கணம் சிந்திக்க வேணும் என்று கேட்கிறேன். பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் சிறிய அளவில் உதவி செய்தால், சிறிய சிறிய பங்களிப்புகளைச் செய்தாலே அது பெரிய வளமாக எமது மக்களுக்கும் எமது பிரதேசத்துக்கும் பயன்படும். சிறு துளி பெரு வெள்ளம் என்பதைச் சொல்லித்தான் தெரியவேணும் என்றில்லை. நாம் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு நாம் சேவை செய்வது நமது கடமையாகும். எங்கள் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மண்ணைப் பாதுகாத்து வளப்படுத்த வேண்டியது நமது கடமையல்லவா. நாம் பிறந்த புமி இது. நடைபயின்ற நடைபயின்ற மண்ணும் இதுவல்லவா!எமது சங்கம் ஏராளம் திட்டங்களை உருவாக்கியுள்ளது. மரநடுகைத்திட்டம். சத்துணவுத்திட்டம். சூழல் பாதுகாப்புத்திட்டம். கலை பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை. இயற்கை வேளாண்மை. கால்நடை வளர்ப்பு. தேனீ வளர்ப்பு. பனம்பொருள் உற்பத்தி. இயற்கை உரம் தயாரித்தல் எனப் பல திட்டங்கள். இவற்றில் ஒவ்வொரு தனியாட்களும் பங்களிப்புகளைச் செய்யலாம். இப்படி ஒவ்வொரும், ஒவ்வொரு குடும்பமும் செயற்பட்டு வரும்போது எமது பிரதேசம் மிக வேகமாக வளர்ச்சியடையும். அதுவே எமது நோக்கமாகும். ஆனால், அந்த நோக்கத்தை  அடைவதற்கு எமது பிரதேசத்தினுடைய பொறுப்பான சகலரும் உழைக்க வேணும். குறிப்பாக எமது பிரதேசத்தைச் சேர்ந்த படித்தவர்கள் பொது நோக்குடன் சிந்தித்துச் செயலாற்ற வேணும்.

8.   இப்படிப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீங்கள். ஆனால், இவற்றின் நடைமுறை வெற்றி எப்படி அமையும்? இதில் எவ்வளவு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்? குறிப்பாக இளைய தலைமுறையின் ஈடுபாடு எப்படி உள்ளது?

கவலையளிக்கும்  விசயம் என்னவென்றால், எமது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மக்கள் இல்லை என்பது கவலையளிக்கும் விசயமே. பெரிய இன்னல்களைச் சந்தித்து வந்த மக்கள் பொது நோக்கில் சிந்தித்தால் பெரிய வளர்ச்சிகளை எட்டலாம். இளைஞர்களை வழி நடத்தக்கூடிய தலைமை எங்களிடம் இல்லை. ஆனால், இளைய தலைமுறை ஆர்வமாக உள்ளது. இதை எப்படி வளப்படுத்துவது என்று ஆழமாகச் சிந்திக்க வேணும்.

9.   சூழல் பாதுகாப்பு முக்கியமானது. அதிலும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது இன்று மிக மிக அவசியமானதாக உள்ளது. ஆனால், அதுதான் மிகச் சவாலானது. பல்வேறு அதிகாரத்தரப்புகளும் சமூகத்திலுள்ள சிலரும் இயற்கை வளங்களை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதை எப்படிச் செய்வது?

இதற்கு விழிப்பு நடவடிக்கையே அவசியம். ஒவ்வொரு கிராமத்திலும் இதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேணும். இன்று வரட்சி அதிகமாக ஏற்படுவதற்குக் காரணம் சூழல் பாதிக்கப்பட்டிருப்பதேயாகும். இயற்கை வளங்கள் அபகரிக்கப்பட்டால் இயற்கைச் சூழல் பாதிப்படையும். இயற்கை பாதித்தால் அது உயிரனங்கள் அத்தனைக்குமே பாதிப்பைத் தரும். இதைப் படித்தவர்களே புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? ஆகவேதான் மக்களை ஒருங்கிணைத்து நாம் போராட வேணும். மக்களோடு தெருவில் இறங்கிப் போராடினால் எவரும் அதற்குப் பணிந்தே ஆகவேணும்.

10.  அபிவிருத்திச் சங்கத்துக்கு மக்களுடைய பங்களிப்பு எப்படியாக அமைய வேணும்?

மக்களுக்குச் சேவை செய்யும் அமைப்பை மக்கள் பலப்படுத்த வேணும். அப்போதுதான் அந்த அமைப்புத் தொடர்ந்தும் சேவையைச் செய்ய முடியும். ஆனால், மக்கள் தங்களுடைய தேவைகளைப் பெறுவதில் குறியாக இருக்கிறார்களே தவிர, அந்த அமைப்பை வளர்ப்பதற்கு உதவ வேணும் என்று சிந்திப்பதாக இல்லை. குறிப்பாக இந்தச் சங்கத்திற்கெனக் காணி உண்டு. அந்தக் காணியை அடைத்து, அதை ஒரு முக்கியமான சேவை இடமாக மாற்றும் பணியை மக்கள் முன்னின்று செய்திருக்க வேணும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அபிவிருத்திச் சங்கம் மக்களுக்குப் பணி செய்கிறது. அதைப்போலச் சங்கத்தையும் வளர்த்தால்தான் அந்தப் பணிகள் தொடரும். இன்னும் விரிவாக்கம் பெறும். மரத்தைப் பராமரிக்காமல் கனியைப் பறிக்க முடியுமா? மாட்டைப் பராமரிக்காமல் பாலை எடுக்க முடியுமா? அப்படித்தான் இதுவும். ஆகவே மக்கள் தங்களுடைய இந்தச் சங்கத்தைப் பாதுகாத்துப் பராமரித்து, தாமும் பயன் பெற வேணும். பிரதேசமும் அபிவிருத்தியடைய வேணும. அதையே நாம் விரும்புகிறோம். இது ஒரு தொடர் ஒட்டம். ஒரு தலைமுறையுடன் நின்று விடக்கூடாது.

dantv