Theneehead-1

Vol: 14                                                                                                                                                18.03.2017

கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் பொசாசோ துறைமுகத்தை அடைந்தனர்

சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் 8 பேரும் பொசாசோ துறைமுகத்தை அடைந்துள்ளனர்.aris-13

கொள்ளையர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மாலை 5.30 அளவில் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சோமாலியாவின் மொகடிசு துறைமுகத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

பயணத்தின் போது ஜிபுடி துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த ஏரிஸ் – 13 கப்பல், மொகடிசு துறைமுகத்தை நோக்கி மீள பயணத்தை ஆரம்பித்தது.

எனினும், கடந்த 13 ஆம் திகதி இரவு ஏரிஸ் கப்பல், சிறிய கப்பல்களில் வந்த சோமாலியக் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.

கடத்தப்பட்ட நாளிலிருந்து கப்பலில் பயணித்தவர்களுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

14 ஆம் திகதி இரவு வட மேல் திசையை நோக்கி 20 கிலோமீற்றர் தூரத்திற்கு கொள்ளையர்களால் ஏரிஸ் கப்பல் கொண்டு செல்லப்பட்டதுடன், ஹாபோ நகரிற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்ததாக ஐரோப்பா சங்கத்தின் கடற்படை உறுதி செய்தது.

கப்பலின் உரித்து நிறுவனம் கொள்ளையர்களுடன் கலந்துரையாடியதுடன், கொள்ளையர்கள் கப்பம் கோரியிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் புன்ட்லேன்ட் பாதுகாப்பு பிரிவினர் ஏரிஸ் கப்பலை அண்மித்திருந்ததுடன், ஐரோப்பா சங்கத்தின் கடற்படைக்கு சொந்தமான கிலீசியா இராணுவக்கப்பல் இந்து சமுத்திரத்தில் இருந்து ஏரிஸ் கப்பலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில், கொள்ளையர்கள் மற்றும் புன்ட்லேன்ட் பாதுகாப்பு பிரிவினருக்கு இடையே துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக நேற்று தகவல் பதிவாகியது.

இலங்கை நேரப்படி நேற்று மாலை 4 – 5 மணிக்கு இடையில் கப்பலில் இருந்தவர்கள் தமது உறவினர்களுக்கு தொலைபேசியூடாக அழைப்பை ஏற்படுத்தி துப்பாக்கிப் பிரயோகத்தை நிறுத்துவதற்கு தலையீடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அவ்வாறு இல்லாவிடின் ஒரு மணித்தியாலத்திற்குள் தம்மை கொலை செய்வதாக கொள்ளையர்கள் அறிவித்துள்ளதாகவும் அவர்கள் உறவினர்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

dantv