Theneehead-1

Vol: 14                                                                                                                                                18.03.2017

நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்' : ஜெயலலிதாவின் மகன் என உரிமை கோரிய நபருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த மகன் என்று உரிமை கோரிய கிருஷ்ணமூர்த்தி என்பவரை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து அனுப்பியது.jeyalalitha sobanbabu

ஜெயலலிதாவுக்கும் தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுக்கும் பிறந்தவர் என்று உரிமை கோரலுடன் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் கிருஷ்ணமூர்த்தி என்பவர். இவருடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி மகாதேவன் மிகவும் கோபமாக, “நான் இவரை நேரடியாக சிறைக்கு அனுப்பி விட முடியும். இவரை இப்போதே சிறையில் அடைக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவேன்” என்று எச்சரித்தார்.

மேலும் நாளை போலீஸ் கமிஷனர் முன்பு இவர் நேரில் ஆஜராகி தன்னிடம் உள்ள அசல் ஆவணங்களை சரிபார்த்தலுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி.

ஜே.கிருஷ்ணமூர்த்தி என்ற இந்த நபர் தான் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தெலுங்கு நடிகர் ஷோபன்பாபுவுக்கும் பிறந்தவர் என்று உரிமை கோரினார். மேலும் இது தொடர்பாக சில ஆவணங்களை கோர்ட்டுக்கு சமர்ப்பித்த இவர் தன்னை ஜெயலலிதாவின் வாரிசாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் போயஸ் இல்லம் உட்பட ஜெயலலிதா சொத்துகளுக்கு தானே வாரிசு என்றும் கோரினார்.

மேலும், தனக்கு சசிகலா தரப்பிலிருந்து மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு ஒரு வாரம் முன்னதாக உயர்நீதிமன்ற பதிவேட்டிற்கு வந்தது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது, மனுதாரர் பொய்யான ஆவணங்களை தயாரித்துள்ளதாக நீதிபதி குற்றம்சாட்டினார்.

“எல்.கே.ஜி. மாணவரிடத்தில் காட்டினால் கூட இது போலி ஆவணங்கள் என்று கூறிவிடுவார். பொதுவெளியில் கிடைக்கக் கூடிய புகைப்படத்தை சேர்த்துள்ளீர்கள். யார் வேண்டுமானாலும் போகிற போக்கில் பொதுநல மனு செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? நீதிமன்றத்துடன் விளையாடாதீர்கள். கமிஷனர் இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை சோதிக்கட்டும்” என்று கோபத்துடன் உத்தரவிட்டார்.

மனுதாரர் தான் 1985-ம் ஆண்டு பிறந்ததாகவும், ஓராண்டுக்குப் பிறகு ஈரோடைச் சேர்ந்த வசந்தமணி குடும்பத்தினர் தன்னை தத்து எடுத்ததாகவும் இந்த வசந்தமணி 1980-ம் ஆண்டுகளின் இறுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இல்லத்தில் பணியாற்றியதாகவும் தன் மனுவில் தெரிவித்துள்ளார்.

தத்து எடுத்துக் கொண்டதற்கு ஆதாரமாக ஜெயலலிதா, ஷோபன் பாபு, வசந்தமணி ஆகியோரது புகைப்படங்களும், கையெழுத்துகளும், சாட்சியாக எம்.ஜி.ஆர் கையெழுத்து அடங்கிய ஆவணத்தையும் கிருஷ்ணமூர்த்தி சேர்த்திருந்தார்.

ஆனால் இந்த ஆவணம் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறிய காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு கை, காலை அசைக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார் என்று தெரிவித்த நீதிபதி, “ஆனால் இந்த ஆவணம் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டதாகக் காட்டுகிறது” என்றார்.

மனுதாரருடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதி, “உங்களுடைய ரோல் என்ன இதில்? இந்த நீதிமன்றம் மூலமாக நீங்கள் சமூகத்திற்கு சில நல்ல காரியங்களை செய்துள்ளீர்கள். நான் இவரை நேரடியாக சிறைக்கு அனுப்பி விட முடியும். நீங்கள் இந்த ஆவணத்தில் திருப்தி அடைகிறீர்களா?” என்றார்.

dantv