Theneehead-1

Vol: 14                                                                                                                                                18.03.2017

ஏன் இத்தனை வெறுப்பு?

ஷங்கர்ராமசுப்ரமணியன்

ாம் பிறரை, நேசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் மன்னிப்பதற்கும் மறந்துபோகிறோமா?

சமீபத்தில் சுசிலீக்ஸ் என்ற பெயரில் நடிகர், நடிகையரின் அந்தரங்கப் படங்கள் விவகாரம், முகiswaryaநூல், வாட்ஸ்அப் மற்றும் பொதுவெளியில் அதிகபட்சமாக விவாதிக்கப்பட்டது. அடுத்து, ஐக்கிய நாடுகள் சபை நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய பரதநாட்டியம் குறித்து சமூக ஊடகங்களில் வெவ்வேறு வகை மீம்ஸ்களாக கேலி வீடியோக்களாகப் பெருகியதையும் முக்கியமான அரட்டைப் பொருளாக மாறியதும் நமது ஆழமான பரிசீலனைக்குரியது.

சசிகலா, ஜக்கி வாசுதேவ் முதல் வைகோ வரை ஒரு சமூகம் நாள்தோறும் கேலிக் கதாபாத்திரங்களை உருவாக்கி தொடர்ந்து சிரித்துக்கொண்டேயிருக்கிறது. அதற்கு முன்னாள் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு எல்லாரும் சேர்ந்து நம் சமூகத்துக்கு உதவிவருகிறார்கள். சுசிலீக்ஸ், ஐஸ்வர்யா தனுஷ் போன்றவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பாக மட்டுமல்ல; வாடிவாசல் முதல் நெடுவாசல் வரையிலான பொதுப் பிரச்சினைகள் வரை சமூக ஊடகங்களில் வெளிப்படும் விமர்சனங்கள், கேலிகள், தார்மிக ஆவேசங்கள், நகைச்சுவைகளில் உச்சபட்ச வெறுப்பு செயல்படுகிறது.

வன்மம் பொறுக்கேறிய நகைச்சுவை

முற்போக்கிலிருந்து பிற்போக்கு வரை அத்தனை அடையாள அரசியல்களின் கீழும் உள்ளடங்கியிருக்கும் வெறுப்புதான் தன்னை வெவ்வேறு முகமூடிகளில் வெளிப்படுத்திக் கொள்கிறது. இத்தனை விதமான வெறுப்பு களும் வன்மம் பொறுக்கேறிய நகைச்சுவை களும் இன்னொரு குழு மீது, பிற நம்பிக்கைகளின் மீது, பிற தரப்புகளின் மீதும் வெளிப்படையாகப் பரிமாறப்படும் காலம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ‘தூ’ என்ற எச்சில் உமிழ்வது மொழியாக முகநூலில் வெளிப்படுவதை முகநூலர்கள் சாதாரணமாகப் பார்க்க முடியும். “நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிர்ஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிர்ஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்” என்று சென்ற நூற்றாண்டிலேயே எழுதிச் சென்றுவிட்ட ஆல்பெர் காம்யூ நம் காலத்தைப் பற்றிச் சொன்ன தீர்க்க தரிசனம் என்று இன்று சொல்லிவிடலாம்.

அந்தரங்கத்துக்கும் பொதுவெளிக்கும் தனிப்பட்ட தகவல் வெளிப்பாட்டுக்கும் ஊடக வெளிப்பாட்டுக்கும் இடையிலான எல்லைகள் தகர்ந்துவரும் காலம் இது. ஊடகப் பரவலாக் கத்தின் நீட்சியாக உடலும் மாறி ஒரு தசாப்தம் ஆகிவிட்டது. தொழில்நுட்பமும் மாறும் வாழ்க்கை முறையும் நமது மதிப்பீடுகளையும் உறவுநிலைகளையும் வேகமாக மாற்றிவருகிறது.

எல்லை தாண்டிய விமர்சனம்

இந்தச் சூழ்நிலையில் சாதாரண, நடுத்தர மக்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் முதல் வீடியோக்கள் வரை இணையத்தில் சாதாரண மாகக் கிடைக்கையில், ‘ஷோ பிசினஸ்’ என்ற ழைக்கப்படும் சினிமா உலகைச் சேர்ந்தவர் களின் அந்தரங்கங்கள் பற்றி மட்டும் இத்தனை கிளுகிளுப்பை ஒரு சமூகம் ஏன் அடைகிறது? தான் செய்ய விரும்புவது, முழுமையாகச் செய்யாமல் விட்டது, செய்ய இயலாமல் இருப்பது என்பதால் இத்தனை பரபரப்பா? அந்த வீடியோக்களில் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பங்குபெற்றதால் அவர்களை விலகி நின்று ரகசியமாக ரசிக்கவும் ஆனால், பொதுவெளியில் விமர்சிக்கவும் உரிமை உண்டு என்று நினைக்கிறோமா?

சர்வதேசப் பெண்கள் தினத்தன்று ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய பரதநாட்டியமும் இப்படி எல்லை தாண்டிப் பேசப்பட்ட ஒன்றுதான். அந்த நடனம் மிகப் பரிதாபகரமானது என்று நடன ஆளுமை அனிதா ரத்னம் விமர்சிக்க, அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கிளம்பிய ‘ட்ரோல் வீடியோக்கள்’ வீடுகள், அலுவலகங்களின் வேடிக்கைப் பேச்சானது.

நாம் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா?

ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய பரத நாட்டியம் குறித்து, இன்னொரு நடன ஆளுமையான அனிதா ரத்னம் விமர்சிப்பது அவசியம்தான். அடிப்படையான தகுதிகளே இல்லாமல், ஒருவர் தன்னுடைய பிற செல்வாக்கை மட்டுமே பயன்படுத்தி ஓரிடத்தில் நுழைகிறார் என்றால், அதன் மீதான விமர்சனமும் நியாயமானதுதான். ஆனால், ஐஸ்வர்யா தனுஷ் நடனத்தின் மீதான விமர்சனம் இந்த இரு வரையறைகளுக்குள் அடைத்துவிடக் கூடியதுதானா?

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரத நாட்டிய அரங்கேற்றங்கள், நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பொதுமக்களாகிய நமக்கு பரத நாட்டியம் சார்ந்து அவை குறித்தெல்லாம் என்ன கரிசனம் இருந்தது; இருக்கிறது? இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு கலை வடிவத்தில் யாரோ ஒரு பிரபலம் அசட்டுத்தனமாக நடத்திய தவறுக்காக ஒட்டுமொத்த இணையத் தமிழ் குடிமக்களும் ஏன் கேலி பேச வேண்டும்? ஒரு பிரபலம் என்பதற்காகவே ஒருவர் தன் வாழ்க்கையில் தவறுகளோ தத்துப்பித்துகளோ செய்வதற்கு அனுமதி இல்லையா அல்லது நாம் எவரும் இப்படியான தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா? ஐஸ்வர்யா தனுஷ், வடிவ சுத்தமாக சாஸ்திரோர்த்தமாகப் படைப்பாற்றலுடன் அதே நிகழ்ச்சியில் ஆடியிருந்தால், அதை யாராவது ஒரு பொதுஜனம் சிரத்தையெடுத்து பார்ப்பதற்காவது விரும்பியிருப்பாரா?

எங்கோ பேசும் விரல்கள்

பரத நாட்டியம், நவீன ஓவியம், நவீன கவிதை, நவீன நாடகம், மாற்று சினிமா எனத் தீவிரமாகவும் காத்திரமாகவும் செயல் படுபவர்கள் மற்றும் அவர்களது பங்களிப்புகள் குறித்த அக்கறையின்மையே பொதுப்போக் காகச் செயல்படும் இடத்தில்தான் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனம் இவ்வளவு பேசப்படுகிறது.

இன்று இணையமும் மொபைல்பேசித் தொழில்நுட்பமும் நமது உலகத்தைச் சுருக்கி யிருப்பதோடு, பல லட்சம் பிரபஞ்சங்களாகத் துண்டாடியும் இருக்கிறது. அலுவலகத்தில் இருக்கும்போது, அலுவலகத்தின் யதார்த்தத் தோடு முழுமையாக ஒருவர் இல்லாமல் இருக்க முடியும்; வீட்டில் இருக்கும்போது வீட்டின் யதார்த்தமே தெரியாமல் ஒருவர் வாழ்ந்துவிட முடியும். பயணங்களில் எல்லாருமே குனிந்த படி இருக்கின்றனர். எதிர் இருக்கையில் இருப்பவரையோ கடக்கும் நிலவெளிகளையோ பார்க்க வேண்டியதில்லை. விரல்கள் எங்கோ பேசிக்கொண்டிருக்கின்றன. அடிப்படை மனித உறவுகள், அன்றாட யதார்த்தத்தின் மீதான பிடிமானம் ஆகியவை தரும் விவேக ஞானத் தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோமோ என்று தோன்றுகிறது.

கையிடுக்கில் வழியும் நீரைப் போல இருக்கின்றன உறவுகள். சந்தோஷமாக நிறைவாக இருப்பதல்ல; உணர்வதுகூட அல்ல; சந்தோஷத்தை வெளிப்படுத்தினால் போதும். ‘ஃபீலிங் ஹாப்பி!’ நமது சந்தோஷத்தை சந்தைதான் கையில் வைத்துள்ளது. நமது மன அழுத்தங்களுக்கு, கண்ணீருக்கு எந்தச் சந்தையும் இன்னும் வரவில்லை. துக்கம் தனியுடைமையாகத்தான் இன்னும் இருக்கிறது.

நாம் பிறரை, பிற தரப்பினரை, பிற சமூகக் குழுவினரை, பிற வர்க்கத்தினரை, பிற நம்பிக்கை யாளர்களை நேசிப்பதற்கும் புரிந்துகொள் வதற்கும் மன்னிப்பதற்கும் மறந்துபோகிறோமா என்று தோன்றுகிறது. பிறரைப் பார்த்துச் சிரிக்காமல் நமது சமரசங்கள், நமது பின்ன டைவுகள், நமது பேராசைகளைப் பார்த்தும் சிரிக்கலாம். அதுதான் உண்மையான நகைச் சுவையாக இருக்கும்!

ஷங்கர்ராமசுப்ரமணியன் | தொடர்புக்கு: shankar.m@thehindutamil.co.in
    (Tamil.The Hindu)

dantv