Theneehead-1

Vol: 14                                                                                                                                                18.03.2017

கூடுதலாகக் கிடைக்கும் ஆதாயங்களை ஏற்றுக்கொண்டு சிங்கள சமூகத்துடன் தொடர்ந்து ஈடுபடுவதைத் தவிர தமிழர்களுக்கு வேறு தெரிவு எதுவும் இல்லை

                                                 எம்.சூரியசேகரம்

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் ஆகிய அனைவரையும் ஐக்கியப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா அரசியலமைப்பு அவர்களின் அபிலாசைகள் மற்றும் தேவைகள் என்பனவற்றைப் பூரtamil sinhala community்த்தி செய்ய வேண்டும். பன்முகத்தன்மையில் ஐக்கியத்தை பேணுவதே வழிகாட்டும் கொள்கையாக இருக்கவேண்டும். அது எந்தவிதத்திலோ அல்லது வடிவத்திலோ பாகுபாடற்ற சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் அனைத்து ஸ்ரீலஙகாவாசிகளுக்கும் கிடைப்பதற்கு உத்தரவாதம் வழங்கவேண்டும். இந்த நிலமைகளின் கீழ் மட்டுமே ஸ்ரீலங்கா மோதல்கள் மற்றும் யுத்தங்கள் அற்ற ஒரு நாடாக வளர்ச்சி அடையமுடியும். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் தேசிய மற்றும் உத்தியோகபூர்வ மொழிகளாக ஆக்கப்பட வேண்டும். பௌத்தம், இந்துசமயம், இஸ்லாம் மற்றும் கிறீஸ்தவம் ஆகிய அனைத்து மதங்களும் சமமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். ஸ்ரீலங்கா பாடசாலைகளில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் அனைத்து நான்கு மதங்களும் மற்றும் மூன்று மொழிகளும் போதிக்கப்பட வேண்டும்.

பல கலாச்சாரங்கள் மற்றும் பல மதங்கள் உள்ள ஒரு நாட்டில் எங்கள் பிள்ளைகளை நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு ஏற்றவகையில் அவர்களை தயாராக்குவதற்கு ஸ்ரீலங்காவால் முடிந்த சிறந்த வழி அதுதான். பாலின பாகுபாடு மற்றும் சாதி பாகுபாடு என்பன கட்டாயம் சட்டபூர்வமாக மற்றும் அரசியலமைப்பு ரீதியாக அகற்றப்பட வேண்டும். பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் என்பனவற்றுக்கு குறைந்தபட்ச பிரதிநிதித்துவம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். மும்மொழி நிர்வாகம் மற்றும் கலாச்சார, அரசியல் பன்மைத்தன்மை என்பன ஸ்ரீலங்கா முழுவதும் நிலவ வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அரசியலமைப்பு பாரபட்சம் அற்ற, ஜனநாயகமயமான மதச்சார்பற்ற ஒன்றாக இருக்க வேண்டும்.

அத்தகைய ஒரு அரசியலமைப்பு, தடையற்ற மற்றும் நீடித்த சமூக, அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் மற்றும் ஒரு அமைதியான, நிலையான, மோதலற்ற, யுத்தமற்ற ஸ்ரீலங்காவுக்கு முன் நிபந்தனையான ஒன்று. அப்போதுதான் அனைத்து ஸ்ரீலங்காவாசிகளினதும் படைப்பாற்றல் மற்றும் திறன் என்பனவற்றை தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் மற்றும் ஸ்ரீலங்கா அடையாளம் என்பது ஒவ்வொரு பிரஜையிடத்திலும் அர்த்தமுள்ளதாகவும் நெஞ்சார்ந்ததாகவும் மாறும்.

சுதந்திரத்திற்குப் பின்னான எங்களது 69 வருட காலமும் உள்ளக மோதல்கள், ஆயுதக் கிளர்ச்சிகள் மற்றும் யுத்தங்கள் என்பனவற்றின் வரலாற்றைத் தவிர வேறு எதையும் கொண்டிருக்கவில்லை. அதாவது நாங்கள் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய பெறுமதிமிக்க 69 வருடங்களை வீணடித்து விட்டோம்.

இந்திய யூனியனின் நிறுவனக் கொள்கை மிகவும் தூண்டுதலாக உள்ளதுடன் எங்களுக்கு மதிப்புமிக்க வரலாற்று பாடங்கள் மற்றும் முன்பாகவுள்ள சாத்தியமான வழிகளையும் வழங்குகிறது. முன்னோடியாக உள்ள இந்திய அனுபவத்தைப் பற்றிப் பார்ப்போம்.

இந்திய யுனியன் 450 ஆண்டுகள் அதன் காலனித்துவ அடக்கு முறையில் இருந்து சுதந்திரம் பெற்றபோது, துரதிருஸ்டவசமாக ஏற்பட்ட பாகிஸ்தானின் பிரிவினையைத் தவிர, தொலைநோக்கு பார்வை கொண்ட காந்தி, நேரு, பட்டேல், அம்பேத்கார் மற்றும் பலரின் முயற்சியினால், கீழ்கண்டவற்றின் துல்லியமான அடிப்படையில் அது மதச்சார்பற்ற, ஜனநாயகமான, பல மொழிகளைக் கொண்ட பன்மைத் தன்மையான நாட்டை உருவாக்கியது. சந்தேகமின்றி இந்தியா உலகத்திலேயே மிகவும் சிக்கலான ஒரு நாடு. இந்தியா அளவில் ஸ்ரீலங்காவை வி 50 மடங்கும் மற்றும் சனத்தொகையில் 63 மடங்கும் பெரியது. எங்களிடம் இரண்டு மொழிகள் உள்ள அதேவேளை அவர்களிடம் 29 பெரிய மொழிகள் உள்ளன, அதனால் அவர்கள் கணிசமான அளவு அதிகாரப் பகிர்வுகளை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வழங்கி 29 மாநிலங்களை உருவாக்கினார்கள், அது ஒவ்வொரு மாநிலத்துக்கும் திறமையாகவும் மற்றும் ஜனநாயகமாகவும் ஆட்சி நடத்தி அதன் குடிமக்களுக்கு சேவைகளை வழங்க அனுமதியளித்தது. இந்தியாவில்; 6 மதங்கள் உள்ளன ஆனால் அதில் கவனிப்பதற்கு சுவராசியமாக உள்ளது என்னவென்றால் அவர்கள் 6 மாநிலங்களை மட்டும் உருவாக்காததுதான்.

இந்தியர்கள் எந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர்களுக்கு முழு மத சுதந்திரத்தை வழங்கினார்கள். எந்த மதமும் எவராலும் எந்த மாநிலத்திலும் பின்பற்றப் படலாம். அத்தகைய தொலைநோக்கானதும் மற்றும் சாத்தியமானளவு மோதலற்ற அரசியலமைப்பு 1956ல் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட அதேவேளை எதிர்க்கட்சியில் உள்ள சிறுபான்மை சமூகத் தலைவர்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இன்றுவரை மோதல்கள் மற்றும் யுத்தங்களுக்கான விதைகளைத் தூவிய விவேகமற்றதும் மற்றும் தேவையற்றதுமான சிங்களம் மட்டும் கொள்கையை அதே வருடம் ஸ்ரீலங்கா அறிமுகப்படுத்தியது. கம்யுனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜிக் கட்சி ஆகிய இரண்டு ஸ்ரீலங்கா தேசியக் கட்சிகள் மட்டுமே அன்று சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்தன.  லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வா பாராளுமன்ற விவாதத்தில் ஆற்றிய புகழ்பெற்ற உரையில் சிங்களம் மட்டும் மசோதாவுக்கு எதிராக வாதாடும்போது, தீர்க்கதரிசியை போல “ஒரு மொழி இரண்டு நாடுகள் மற்றும் இரு மொழிகள் ஒரு நாடு” என்று கூறினார், அது பிரத்தியட்சமான உண்மையாக மாறியுள்ளது. இந்த விடயம் இன்றுவரை தீர்க்கப்படாத ஒன்றாகவே எஞ்சியுள்ளது.

அம்பேத்கார் அவாகளால் வரையப்பட்ட இந்திய அரசியலமைப்பு உலக வரலாற்றில் முன்னெப்போதும் செய்திராத தைரியமான இலட்சியப் பரிசோதனை ஆகும். பல மேற்கத்தைய அறிஞர்கள் அதற்கு எதிராக வாதித்ததுடன் அது செயற்திறமையற்ற பரிசோதனை மற்றும் பொறுப்பற்றதும் மற்றும் தோல்விக்கான வீழ்ச்சி என்று எதிர்வு கூறினார்கள் ஆனால் பின்னர் அது அதிசயப்படத்தக்க வகையில் வெற்றி பெற்றதும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். பல நூற்றாண்டுகளாக கொடிய வறுமை, கல்வியறிவின்மை மற்றும் வேலையின்மை போன்ற துயரங்களுடன் காலனித்துவ அடக்குமுறையின் கீழ், இருந்த ஒரு நாடு  எழுச்சி பெற்று அபிவிருத்தி அடைந்துவரும் நிலையில் இத்தகைய தைரியமான பரிசோதனையை ஏற்றெடுத்ததோடு, அதில் வெற்றியும் பெற்று தசாப்தங்களின் பின் தசாப்தங்களாக இன்றுவரை அதைத் தக்கவைத்து வரும்போது உலகின் ஏனைய பாகங்களில் உள்ள மற்றைய அமைப்புகள் உயிர்வாழ்வதற்காக பிரிவடைவதோ அல்லது போராட்டம் நடத்தி வருவதோ, இந்திய யூனியனை நிறுவியவர்களினது தைரியத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் நிரூபித்துக் காட்டியுள்ளது. பல வழிகளிலும் அது தனித்தன்மையான இலட்சிய பரிசோதனை, உலக வரலாற்றில் முன் எப்போதும் மேற்கொண்டிராத ஒன்று. மதச்சார்பற்ற கொள்கை மற்றும் மொழியை அடிப்படையாக கொண்ட மாநிலங்கள் என்பனவற்றை உருவாக்கியிராவிட்டால் இந்தியா பல சுதந்திரமான தோல்வியுற்றதும் நோய்வாய்ப்பட்டதுமான நாடுகளாக உடைந்து சிதறியிருக்கும்.

இப்போது இந்த கிரகத்திலேயே இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இந்தக் கருத்தில் உலகத்தில் இது மற்றெந்த நாட்டினைப் போலவும் இல்லை. உலகத்தில் இந்தியாவில் மட்டும்தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதி உட்பட தேசியத் தலைவர்கள் எந்த மத நம்பிக்கை கொண்டவர்களில் இருந்தும் தோன்றுகிறார்கள். அது பல பிரிவினைவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது ஆனால் அதன் மதச்சார்பின்மை மற்றும் அனைத்து பிரதான மொழிகளுக்கும் இடமளித்தல் போன்ற கொள்கைகளினால் அது பிரிவடையாமல் தற்காத்துக் கொண்டது. ஜனநாயக ஆட்சியின் கீழ் இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ச்சியடையும் நாடாகவும் மற்றும் மிகப்பெரிய பொருளாதாரம் உள்ள நாடாகவும் ஏற்கனவே மாறிவிட்டது. இந்தியா அதன் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்னும் வெகுதூரம் செல்லவேண்டி உள்ளது, ஆனால் அதன் வலிமையான மற்றும் தொலைநோக்கான அடித்தளம் என்பனவற்றின் காரணமாக உதாரணத்திற்கு இன்று நாங்கள் காணும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நொருங்கும் தன்மை மற்றும் அதன் உயிர் பிழைப்புக்கான பிரச்சினைகள் போல இல்லாமல் இந்தியா நிச்சயமாக வலிமையில் இருந்து வலிமை பெற்று முன்னேறும். இந்தியாவால் அதை அடைய முடியுமாயின் அதை இந்த நாட்டில் நாங்கள் ஏன் அடைய முடியாது என்பதற்கான காரணம் எதுவுமில்லை. இந்தியா போராடவேண்டி இருந்ததுடன் ஒப்பிடுகையில் ஸ்ரீலங்காவில் உள்ள பிரச்சினை வெகு அற்பமே.

முஸ்லிம்களுக்கு தனியான ஒரு நாட்டை உருவாக்கும் குறுகிய மத அடிப்படைத் தத்துவம் காரணமாக குதர்க்கவாதம் பேசி இந்திய யூனியனை விட்டு பாகிஸ்தான் பிரிந்தது என்பதை இப்போது நாம் தெளிவாகக் காணலாம். பாகிஸ்தானை உருவாக்கி 70 ஆண்டுகள் ஆனதின் பின்பும் அது இன்னமும் ஏழ்மையான பின்தங்கிய நாடாகவே உள்ளது, பெருமளவு ஜனநாயகத்தை எதிர்க்கும் சர்வாதிகார முறையாலேயே அது ஆளப்படுகிறது ஆனால் அதன் பலம் ஆயுதங்களாகவே உள்ளது, அதன்படி இந்தியா என்கிற நாடு ஒரு இராணுவத்தை கொண்டுள்ள அதேவேளை பாகிஸ்தானில் இராணுவம் ஒரு நாட்டைக் கொண்டுள்ளது. அப்படியான ஒரு ஆட்சியில் மக்கள் அதன் சமன்பாட்டின் கீழ் ஒருபோதும் வர மாட்டார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் சர்வாதிகார ஆட்சி என்பனவற்றின் கீழ் பெண்களின் நிலையும்கூட மிகவும் கொடூரமானது. பிரிவினை ஏற்பட்ட நேரத்தில் பெரும்பாலும் பாகிஸ்தானில் இருந்த அநேக முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கியிருப்பதையே தெரிவு செய்தார்கள்.

இன்று 178 மில்லியன் முஸ்லிம்கள் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியின் கீழ் வறுமை நிலையில் வாழும்போது 138 மில்லியன் முஸ்லிம்கள் இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழுகிறார்கள். மிகவும் மோசமான பகுதி என்னவென்றால் பாகிஸ்தானும் கூட அமெரிக்காவின் கைப்பாவையாக உலக பயங்கரவாதத்தின் தலைமையகமாக மாறியுள்ளது. அது தோன்றிய 70 வருடங்களில் 33 வருடங்கள் நேரடியான இராணுவ ஆட்சியின் கீழும் மற்றும் மீதி 37 வருடங்களும் மறைமுகமான இராணுவ ஆட்சியின் கீழும் இருந்து வந்துள்ளது.

2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வு, எல்லோருக்கும் நன்கு தெரிந்தது அதனால் அந்த மோசமான துயர வரலாற்றை நான் மீண்டும் சொல்லத் தேவையில்லை, அது உட்பட 30 வருட வீழ்ச்சிக்குப் பின்னும் ஸ்ரீலங்காவில் தமிழ் ஈழம் எனும் தனிநாட்டை நிறுவ ஆரவாரமாக கூக்குரல் இடுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை அடியாக இருக்கட்டும்.

இந்தியாவின் பரிசோதனை அரசியலமைப்பை உருவாக்குபவர்களின் சிந்தனைக்கு ஏராளமான தீனி கொடுக்கிறது. நிரந்தரமான முறைகேடான ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் முன்னுதாரணமில்லாத ஊழல், பொலிஸ் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வது உட்பட அனைத்துவிதமான ஊழல்களும் தற்போதைய  தமிழ்நாட்டு அரசாங்கத்தின் படுதோல்விக்கு வழிவகுத்துள்ளது, ஆனால் இந்தியாவின் மத்திய அரசாங்கம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு விவகாரங்களை நடத்துவதற்காக ஏற்றெடுக்க அவசரம் காட்டவில்லை. இது மத்தியில் யார் ஆட்சி நடத்தினாலும் இந்தியாவின் ஆட்சியில் உள்ள மதிநுட்பம் மற்றும் முதிர்ச்சி என்பனவற்றை எடுத்துக்காட்டுகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னான 69 ஆண்டுகளிலும் மற்றும் 30 வருடங்கள் மோசமான யுத்தத்துக்கும் பின்புதான் ஸ்ரீலங்கா அரசியல்வாதிகளுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அரசியலமைப்பு தேவை என்பதை உணரமுடிந்துள்ளது. முன்னைப் போலில்லாது இப்போது பரவலான பொதுசன ஆலோசனை ஏற்கனவே இடம்பெற்றுள்ளது மற்றும் ஆலோசனைக் குழுக்களின் பரிந்துரைகள் இப்போது பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தற்போதைய அரசாங்கத்திற்கு பாராட்டு வழங்குகிறது.

இது, கடந்தகால தவறுகளான ஒற்றையாட்சி, சிங்களம் மட்டும், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் பாரபட்சமான தரப்படுத்தல், சிங்களம் மட்டும் ஆனால் தமிழும் கூட, ஸ்ரீலங்கா ஒரு பௌத்த நாடு, பௌத்தத்துக்கு அரசியலமைப்பில் அதி உன்னத இடம் வழங்கப்பட வேண்டும் போன்றவற்றை திருத்துவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு. பரவாலாக மக்களை கலந்தாலோசிக்கும் இந்த புதிய முயற்சிக்காக புதிய அரசாங்கத்தை பாராட்டும் அதேவேளை, நீதியும் நியாயமுமான ஒரு அரசியலமைப்பை உருவாக்கும் வாய்ப்பு திரும்பவும் தவறிப் போய்விடுமோ என நான் பயப்படுகிறேன்.

நமக்கு ஏன் ஒரு ஒற்றையாட்சி தேவை? சிங்களத் தீவிரவாதிகளை சமாதானப்படுத்துவதைத் தவிர தர்க்க ரீதியாக வேறு எந்தக் காரணத்தையும் என்னால் காண முடியவில்லை, அதுவும் விசேடமாக தமிழர்கள் தங்கள் கோரிக்கையான ஈழம் என்கிற தனிநாட்டை கைவிட விரும்பும் சமயத்தில். கஜேந்திரகுமார் போன்ற ஈழவாதிகள் சமீபத்தைய தேர்தல்கள் யாவற்றிலும் கடுமையான படுதோல்வியில் நசுங்கியுள்ளார்கள். தமிழர்கள் அவர்களை அப்பட்டமாக நிராகரித்துள்ளார்கள். ஆகையால் நாடு முழுவதுக்கும் நீதியானதும் சரியானதையும் அரசாங்கம் செய்யும்போது அதற்கு மாறாக எல்லாவற்றிலும் சிங்கள தீவிரவாதிகளின் கடைசி வார்த்தை எதற்காக? ஸ்ரீலங்காவில் பௌத்தத்துக்கு அதி உயர் இடம் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப் படுவது தொடர்பாகவும் இதே கருத்துத்தான் பிரயோகிக்கப்பட வேண்டும்.

நான் ஒரு மதவாதி அல்ல ஆனால் நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். ஏனென்றால் நான் மரியாதை செலுத்தும் மனிதர்களால் அது சரியாகவோ அல்லது தவறாகவோ நம்பப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதிகாரம் மற்றும் சலுகைகளுக்கு புத்தர் எதிரானவர். அவர் அதிகார விளையாட்டு உட்பட அனைத்தையும் துறந்ததோடு ஆழ்ந்த சிந்தனையிலும் ஈடுபட்டவர். பௌத்த மதத்தின் சக்தி ஸ்ரீலங்கா அரசியலமைப்பு அங்கீகாரத்தாலோ அல்லது பெற்றோர் வழி புரவலர் தன்மையாலோ வரப்போவதில்லை. என்னைப் பொறுத்தவரை அது இந்த உலகத்தில் உள்ள அனைத்துக்கும் தேவையான தியானத்துக்கானதும், சமாதானம், அன்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றுக்கான ஒரு மதம். பல வழிகளிலும் அது ஒரு நவீன மதம். நான் மதவாதி அல்லாத போதிலும், எனது படுக்கை அறையில் புத்தரின் ஒரு சிலையை வைத்துள்ளேன் ஏனென்றால் அது கலையம்சமான ஒரு வேலைப்பாடு அழகாகச் செதுக்கப் பட்டுள்ளது மற்றும் அதற்கு மேலாக  அவர் அன்பு, சமாதானம், நல்லிணக்கம் என்பனவற்றை கதிர்வீசுவதுடன் மற்றும் தியானத்துக்கான ஒரு சூழலையும் ஏற்படுத்துகிறார், அது ஒரு படைப்பு வேலை. அத்தகைய அழகான ஒரு மதம் நிறுவனமயமாக்கப்படவோ, அரசியல் மயமாக்கப்படவோ மற்றும் சமூகங்களைப் பிரிக்கவோ பயன்படுத்தப்படக் கூடாது. பௌத்தமதத்திற்கு அரசாங்கத்தின் அனுசரணையோ மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்போ தேவையில்லை. அது ஒரு பலவீனமான மதம் அல்ல. அது அரசாங்கம் அல்லது ஸ்ரீலங்கா இராணுவத்தின் சலுகைகள் மற்றும் அனுசரணைகள் எதுவுமின்றி தனது சொந்த வலிமை மற்றும் தகுதியில் நிலைத்து நிற்க முடியும். புத்தரின் பெயரால் மக்கள் செய்யும் தவறான செய்கைகளை தடுக்கவோ மற்றும் தலையிடவோ புத்தர் இன்று உயிருடன் இல்லாதது மிகவும் பரிதாபகரமானது.

இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீலங்காவின் சனத்தொகையில் சுமார் 70 விகிதமானவர்கள் பௌத்தர்கள். அரசாங்கத்தின் தலையீடு இன்றி பௌத்தத்தை பாதுகாக்க அவர்கள் தகுதியானவர்கள். அரச தலையீடு, மற்றும் பாரபட்சமான சலுகைகள் மற்றும் நிதி ஊக்குவிப்பு போன்றவை பௌத்தம் போன்ற ஏதாவது தெரிவு செய்யப்பட்ட ஒரு மதத்துக்கு வழங்கப்படுவது அதன் மத குருமார்களை ஊழலுக்கு ஆளாக்குவதுடன் அதன் தோற்றத்தை மங்கச் செய்வதுடன் மற்றும் நடவடிக்கைகளுக்கும் தீங்கு விளைவிக்கும். பௌத்த மதத்தின் சாரம் மறைந்துவிடும். இந்த நிகழ்வு ஸ்ரீலங்காவில் பரவலாக நடைபெற்று வருவதை நான் ஏற்கனவே அவதானித்து உள்ளேன். மதங்களில் இராணுவம் தலையிடுவது மற்றும் மதகுருமார் அரசியலில் தலையிடுவதும் எந்த நாட்டுக்கும் ஆரோக்கியமான ஒன்றல்ல. இதற்கான சிறந்த உதாரணம் பாகிஸ்தானில் உள்ளது.  ஸ்ரீலங்காவிலும் அது நடைபெறுவதைக் காணும்போது வருத்தமாக உள்ளது.

அழகான மற்றும் கருணையுள்ள மக்கள் உயர்ந்த கல்வியறிவு, கலாச்சாரம் மற்றும் நாகரிகம் என்பனவற்றுடன் திகழும் ஸ்ரீலங்கா ஒரு அழகான நாடு. இவை அனைத்தினதும் ஆசீhவாதம் நாம் பெற்றிருக்கும்போது ஏன் குழப்பம் மற்றும் மோதல்களின் விதைகளை விதைக்க வேண்டும். இதனால்தான் நாங்கள் ஒரு எளிய மதச்சார்பற்ற அரசியலமைப்பை பின்பற்ற வேண்டும் அதன் அடிப்படை, அனைத்து பிரஜைகளுக்கும் எந்த வகையான மதம், மொழி, பாலின, சாதி மற்றும் வேறு வடிவத்திலான சமூக மற்றும் அரசியல் பாகுபாடுகளின்றிய சமத்துவம் வழங்குவதாக இருக்க வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். அப்போது மட்டுமே உலகில் உள்ள மற்றைய நாடுகளைப் போல நம்மால் தடையின்றி தொடர்ச்சியான அபிவிருத்தியையும் மற்றும் முன்னேற்றத்தையும் அடைய முடியும். இது ஸ்ரீலங்காவுக்கான எனது பார்வை மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்காக விட்டுச் செல்வதற்கான ஸ்ரீலங்கா எந்த மாதிரியாக இருக்கவேண்டும் என்று நான் காணும் கனவைப் பற்றிய ஒரு விளக்கம்.

எங்களைப் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை சமூகம் (சிங்கள பௌத்தர்கள்) அரசியல் அதிகாரத்தின் முக்கிய பொறுப்பை தம்மிடம் வைத்துள்ளார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியும். அவர்கள் நீதி நியாயமாக நடந்து நல்லதைச் செய்ய முடியும். மாற்றீடாக அவர்கள் அநியாயமாகவும் அநீதியாகவும் நடந்த கெட்டவைகளையும் செய்ய முடியும். வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் ஆகியோரைப் பொறுத்தவரை வரலாற்று ரீதியாக பின்னையதே நடைபெற்று வருகிறது. முரண்பாடான விஷயமாக 1948 முதல் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ள சிங்கள அரசியல் கட்சிகள்கூட, சிங்கள மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை வழங்குவதிலும் மிக மோசமான தோல்வியையே அடைந்துள்ளன - அங்கு இன்னமும் வறுமை, போஷாக்கின்மை, தீவிரமான வேலையின்மை, தரத்துக்கு கீழான வேலை, தரமற்ற கல்வி, தரமற்ற வீடமைப்பு மற்றும் சுகாதாரம், வன்முறை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் பாலின சமத்துவமின்மை போன்றவை சிங்களவர் மத்தியிலும் காணப்படுகின்றன.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஒருவரினால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியது, 1,000,000 பிள்ளைகள் காலையில் வெறும் வயிற்றுடன் அதாவது காலை உணவு உண்ணாமல் பாடசாலைக்கு செல்கிறார்கள் என்பதை, அந்தப் பிள்ளை ஏற்கனவே பசியுடன்தான் பாடசாலையை ஆரம்பிக்கிறது. இது கிட்டத்தட்ட ஸ்ரீலங்காவில் உள்ள பாடசாலைப் பிள்ளைகளில் 25 விகிதம் ஆகும். இதற்கு மேலாக ஸ்ரீலங்கா இப்போது நவ தாராண்மைவாத பொருளாதார பொறி, சந்தைப் பொருளாதாரத்துக்கு வழியை திறந்துவிடல், சுதந்திர வர்த்தகம்(உண்மையில் அதன் கருத்து அநியாய வர்த்தகம்), சுகாதார, கல்வி மற்றும் பிறசேவைகளை தனியார் மயமாக்குதல் மற்றும் பொருளாதார சுரண்டல்களுக்கான புதிய வழிகள் மற்றும் பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் மேற்கத்தைய சக்திகள் என்பனவற்றின் அரசியல் ஆதிக்கம் என்பனவற்றுள் ஆழமாக விழுந்து கொண்டிருக்கிறது. எனவே மேற்கின் ஆதிக்கத்திலுள்ள சந்தைகளே ஸ்ரீலங்காவை ஆளப்போகின்றன. இது எங்கள் மக்களின் வாழ்க்கைக்கு அழிவுகரமான பின் விளைவுகளை தரப்போகிறது. பெயரளவில்தான் நாம் சுதந்திரமானவர்களாக ஒரு ஸ்ரீலங்கா கொடியை ஏற்றப்போகிறோம்.

சிறுபான்மை சமூகங்கள்மீது மேற்குறிப்பிட்ட நெறிமுறை சார்ந்த அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் நடவடிக்கைகள், மரபியங்கள் மற்றும் ஆட்சி முறைகள் சார்ந்த அநியாயங்கள் நடத்தப்படுவதை இப்போது சிங்கள பௌத்தர்கள் மேலும் மேலும் அங்கீகரிக்கிறார்கள். இந்த வரலாற்று தவறுகளை திருத்துவதற்கு இப்போது அவர்கள் தீர்மானிக்க வேண்டும். ஒரு பாரபட்சமற்ற மதச்சார்பற்ற அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள வைக்கும் வல்லமை மிக்க பணி அவர்களுக்கே உரியது. சுதந்திரத்துக்கு பின்னும் மற்றும் சுதந்திரத்துக்கு முந்தியதுமான காலப் பகுதிகளில் இந்தப் பணியை அவர்கள் திறமையாக மேற்கொண்டு வந்தார்கள் ஆனால் இப்போது வருத்தத்துக்கு உரிய வகையில் அவர்கள் கிட்டத்தட்ட அழிந்துபோன அல்லது அரசியல் வனாந்தரத்தில் உள்ளார்கள்.

இப்படிச் சொன்ன போதிலும் ஸ்ரீலங்காவில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள் மதச் சார்பின்மையை ஆதரிப்பதற்கு இன்னும் தயாராகவில்லை என்பது எனக்குத் தெரியும், ஏனென்றால்  அதிகாரப் பேராசை, சுய நலன்களை பாதுகாத்தல் மற்றும் அரசியல் நேர்மையின்மை என்பனவே இதற்கான காரணங்கள். ஸ்ரீலங்கா அரசியல்வாதிகள் பெருமளவில் தாங்கள் ஆட்சி செய்யும் மக்களுக்கு உண்மையானவர்களாக இருப்பதில்லை. சிங்கள பௌத்த மக்களுக்கு பொருத்தமான நேர்மையான விளக்கங்களை வழங்கினால் அவர்கள் மதச் சார்பின்மையின் தத்துவத்தையும் மற்றும் நீண்டகால ஆதாயங்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று என்னால் உறுதியாக கூறமுடியும் ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அதை ஏற்க மாட்டார்கள். அரசியல்வாதிகள் மற்றும் அரசியலமைப்பை மேற்கொள்பவர்கள் நாட்டினதும் மக்களினதும் நீண்டகால நலன்களுக்கு தேவையானவற்றின்மீது அக்கறை காட்டுவதில்லை.

இந்த விடயத்தில் அவர்கள் மக்களுடன் நேரடியாக ஈடுபடத் தவறிவிட்டார்கள். அவர்களிடம் இந்தியாவை நிறுவியவர்களிடம் காணப்பட்ட உறுதியான நம்பிக்கை, தொலைநோக்கு, அரசியல் ரீதியான விவேகம் மற்றும் மன உறுதி என்பன குறைவாக உள்ளன. இதுதான் உண்மையான சோகம். எனவே இதிலிருந்து தெரியவருவது, நாம் கற்பனை செய்துள்ள மேற்குறித்த இலக்குகளை அடைவதற்கு  அடித்தட்டு மக்களுடன் குறிப்பாக சிங்கள மக்களுடன் நேர்மையானதும் மற்றும் முடிவற்றதுமான ஈடுபாடுகளை ஏற்படுத்திக் கொள்வதின் ஊடாக கூடுதல் அடிப்படையில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்று, இருப்பினும் ஒரு நாடு என்கிற வகையில் இந்த மெதுவாக கற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்காக நாம் அதிக விலை கொடுக்க நேரிடலாம். மக்கள் மீது எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. எனவே எங்களுக்கு வேறு தெரிவு எதுவும் இல்லை ஆனால் 13+ போன்ற கூடுதல் ஆதாயங்களை ஏற்றுக்கொண்டு எங்கள் இறுதி இலக்கை பரஸ்பர ஒப்பதலுடன் கட்டங் கட்டமாக அடையும் வரை நாங்கள் சிங்கள சமூகத்துடன் ஈடுபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

 

dantv