Theneehead-1

Vol: 14                                                                                                                                                                18.04.2017

துருக்கியில் அதிபர் ஆட்சி முறை: பொது வாக்கெடுப்பில் முடிவு:

புதிய ஆட்சி முறை 2019-இல் அமலாகும்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாturkey electionனதும் தனது இல்லத்துக்கு வெளியே கூடிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கையசைக்கும் அதிபர் எர்டோகன், அவரது மனைவி எமீன் எர்டோகன்.

துருக்கியில் அதிபருக்கு அனைத்து அதிகாரங்களையும் அளிக்கும் ஆட்சி முறை தொடர்பான வாக்கெடுப்பில் அதிபர் தலைமையிலான ஆட்சி முறைக்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர்.
துருக்கியில் அதிபர் ஆட்சி முறை குறித்து ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 51.41 சதவீதத்தினர் அதிபர் ஆட்சி முறைக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிபர் முறை தேவையில்லை என 48.59 சதவீதத்தினர் வாக்களித்தனர்.

முன்னதாக அதிபர் ஆட்சி முறை குறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும், அது தொடர்பாக மக்களிடம் நேரடிய கருத்து கேட்கும் விதமாகப் பொது வாக்கெடுப்பு நடத்த அதிபர் எர்டோகன் முடிவு செய்தார்.

பொது வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். பதிவான வாக்குகளில் மூன்று அல்லது நான்கு சதவீத அளவுக்கு தில்லுமுல்லு நடந்திருப்பதாக குர்துக்கள் கட்சியான எச்.டி.பி. தெரிவித்தது. வாக்கெடுப்பு முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அந்தக் கட்சி தெரிவித்தது.

அரசு முத்திரை இல்லாத வாக்குச் சீட்டுகளும் ஏற்கப்பட்டுள்ளன என்றும் 60 சதவீத இடங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சி கோரியுள்ளது.என்றென்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள தற்போதைய அதிபர் எர்டோகன் திட்டமிடுகிறார் என்று பிற எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

'பொது வாக்கெடுப்புடன் எல்லாம் முடிந்துவிட்டதாக அதிபர் எர்டோகன் கருத வேண்டாம்; தற்போது வெளியிடப்பட்டுள்ள முடிவுகள் செல்லாது; முடிவுகளைக் கட்டாயம் எதிர்ப்போம்' என்று துருக்கி குடியரசு மக்கள் கட்சி (சி.எச்.பி.) தெரிவித்திருக்கிறது.

எனினும் இந்த வாக்கெடுப்பு நேர்மையான முறையிலேயே நடைபெற்றதாக துருக்கியின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதிகாரபூர்வமான முழு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாக இன்னும் பத்து நாட்களாகும் என்று கூறப்படுகிறது.

அனைத்து அதிகாரங்களையும் அளிக்கும் அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வர தற்போதைய எர்டோகன் திட்டமிட்டார். பொது வாக்கெடுப்பில் அவருடைய நிலைப்பாட்டுக்கு சாதகமாக 60 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அதிபர் ஆட்சி முறை தேவையில்லை என்ற கருத்தும் அவரது நிலைப்பாட்டுக்கு இணையான ஆதரவைப் பெற்றது அவருக்கு அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளது.

தலைநகர் அங்காரா உள்ளிட்ட நாட்டின் மூன்று முக்கிய நகரங்களிலும் பிற குறிப்பிடத் தக்க இடங்களிலும் அதிபர் ஆட்சி முறை தேவையில்லை என்ற கருத்துக்கு கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது. அவருடைய சொந்த ஊரான இஸ்தான்புல்லில் அதிபர் ஆட்சி முறை தேவையில்லை என்ற கருத்துக்கு கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது. தலைநகர் அங்காரா, இஸ்தான்புல் தவிர, நாட்டின் மூன்றாவது முக்கிய நகரான இஸ்மீரிலும் அதிபர் ஆட்சி முறை தேவையில்லை என்று மக்கள் பெரும்பான்மையாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று எர்டோகன் அதிபரானார். அவரது பதவிக் காலம் வரும் 2019-ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது.

அப்போது புதிய அரசியல் சாசனம் அமலுக்கு வரும். அதன்படி, அதிபர் ஆட்சி முறை துருக்கியில் நடைமுறைக்கு வரும். அதன் பிறகு இரு முறை அதிபர் பதவிக்கு எர்டோகன் போட்டியிட முடியும். அதிபர் ஆட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் அதிபரிடமே குவிந்திருக்கும். பிரதமர் பதவி இருக்காது.
இரண்டாம் உலகப் போருக்கப் பின்னர் உருவான நேட்டோ அமைப்பில் துருக்கி அங்கம் வகிக்கிறது. ஐரோப்பிய யூனியன் அமைப்பில் சேர அது முயன்று வந்தபோதிலும், பல ஐரோப்பிய நாடுகளிடையே துருக்கிக்கு எதிர்ப்பு இருப்பதால் அது நிறைவேறாமல் உள்ளது.

சிரியா, இராக் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து வெளியேறும் லட்சக்கணக்கான அகதிகளைக் கையாள்வது போன்ற மனித நேய நடவடிக்கைகள் மூலம் ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாவது சாத்தியமாகும் என்று எர்டோகன் கருதுகிறார்.

இதனிடையே தனது அதிகாரத்தை நிலை நிறுத்தும் விதமாக, அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரத் தீர்மானித்தார்.

dantv