Theneehead-1

Vol: 14                                                                                                                                                                18.04.2017

மாற்றங்களை வரவேற்கவேண்டிய காலமிது

           கருணாகரன்

யுத்தம் முடிந்து விட்டது. புலிகள் இல்லாமற்போய் விட்டனர் அல்லது செயற்பாட்டுக்களத்தில் இருந்து அகற்றப்பட்டு விட்டனர். ஆட்சிகளும் மாறி விட்டன. அதற்கேற்ற மாstruggle1திரித் தலைவர்களும் மாறிவிட்டனர். ஆனால், இனப்பிரச்சினை, வேலையில்லாப்பிரச்சினை, பொருளாதார நெருக்கடி, காணாமல் போனவர்களைப் பற்றிய விவகாரம், நில விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என எந்தப் பிரச்சினையுமே தீரவில்லை. அத்தனையும் கொதிநிலையிலேயே உள்ளன.

காலம் மட்டும் வீணாக நீண்டு செல்கிறது. அப்படியானால், இதற்கு என்ன காரணம்? இந்தத் தாமதங்களுக்கு யாரெல்லாம் பொறுப்பு? அடுத்ததாக என்ன செய்யலாம்? இதுவே நம்முடைய இந்தக் காலகட்டத்தின் மிகப் பெரிய கேள்விகள்.

யுத்தம் முடிந்து விட்டால் எல்லாமே சரியாகி விடும் என்றுதான் பொது அபிப்பிராயம் நிலவியது. அப்படிப் பொது அபிப்பிராயம் நிலவியது என்று சொல்வதைவிட, அப்படியான ஒரு எண்ணத்தை, யுத்தகாலத்தில்  அரசாங்கமும் ஊடகங்களும் உருவாக்கியிருந்தன என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்.

யுத்தத்துக்குச் செலவிடப்படும் நிதி மிஞ்சும். அந்த நிதியை நாட்டின் முன்னேற்றத்துக்கும் மக்களுடைய நல்வாழ்வுக்கும் பயன்படுத்த முடியும். யுத்தம் முடிந்து விட்டால் படையினர் மக்களின் குடியிருப்புகளில் இருந்து விலக்கப்பட்டு விடுவார்கள். யுத்தக் களத்தில் நின்ற படையினர் வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள். அரசியல் கைதிகள் பொது மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளும் நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்கப்படும். இடங்களும் வளங்களும் மீள் நிலைப்படுத்தப்படும் என்றெல்லாம் மக்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் குண்டு வீச்சுகளும் இராணுவக்கெடுபிடிகளும் உயிரிழப்புகளும் நடக்கவில்லையே தவிர, மற்றும்படி  அத்தனை பிரச்சினைகளும்  அப்படியேதான் உள்ளன. இதனால் நாடு கொதிநிலையிலேயே தொடர்ந்தும் உள்ளது. அதன் வெளிப்பாடே நடந்து கொண்டிருக்கின்ற மக்கள் போராட்டங்களாகும்.

யுத்தம் முடிந்த பிறகான சூழலில், மக்களுடைய எத்தகைய எதிர்பார்ப்புகளையும் நாட்டின் தலைவர்கள் நிறைவேற்றவில்லை. புதிய கனவுகளை உருவாக்கவும் இல்லை. புதிய தொடக்கங்களை உண்டாக்கவும் இல்லை. பழைய பிரச்சினைகளைத் தீர்க்கவும் இல்லை.

இவ்வாறு நாட்டுக்குத் தேவையான எதையும் செய்யாதவர்களை, எதையும் செய்ய முடியாதவர்களை எப்படித்  தலைவர்களாகக் கொள்ள முடியும்? எப்படித் தலைவர்களாக இவர்கள் இருக்க இயலும்? ஆனால், துரதிருஸ்டமாக இப்படியானவர்களே தொடர்ந்தும் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடமே ஆட்சியும் அதிகாரமும் உள்ளது. அதை இவர்களுக்கு மக்களே வழங்குகியிருக்கிறார்கள். இது மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது துரதிருஷ்டம். மக்கள் தங்களுடைய தலைகளில் தாங்களாகவே மூட்டிக்கொண்ட நெருப்பு இது.
 

எந்தப் புதிய மாற்றங்களையும் உருவாக்க முடியாதவர்களை, எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்க வக்கற்றவர்களையெல்லாம் எதற்காக மக்கள் தொடர்ந்தும் தெரிவு செய்து, அதிகாரத்தில் இருத்துகிறார்கள் என்று தெரியவில்லை. நியாயமாகச் சிந்திப்போரையும் மாற்று அரசியலாளர்களையும் மெய்யாகவே மக்களுக்காக உழைக்கக்கூடியவர்களையும் மக்கள் ஏனோ புறக்கணிக்கின்றனர். அல்லது அடையாளம் காணத்தவறுகின்றனர்.

இதனால், செயலற்றவர்களும் சுயநலமிகளும் நாட்டைப் பிறருக்குத் தாரை வார்த்துக் கொடுக்க முற்படுவோருமே தெரிவு செய்யப்பட்டு, ஆட்சி அதிகாரத்தில் இருத்தப்படுகிறார்கள். அப்படியானவர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் வரலாற்றுக்கும் எதிராகச் செயற்படுகிறார்கள். தனியே தம்முடைய நலன்களை மட்டும் நாட்டையும் மக்களையும் வைத்துப் பெற்றுக்கொள்கிறார்கள். எப்படிப்பார்த்தாலும் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்குள்தான் இந்த நாட்டின் தலைவிதி அடங்கியிருக்கிறது. அவர்களே எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களாகவும் அரசாங்கத்தின் உயர் பீடங்களில் அமர்ந்திருப்போராகவும் இந்த ஆயிரம் குடும்பங்களும் உள்ளன. ஆகவே இந்த ஆயிரம் குடும்பங்களுக்காகவே இந்த நாடும் இந்த நாட்டிலுள்ள சனங்களும் பலியிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை மாற்றியமைக்காத வரையில் இலங்கையில் சுபீட்சம் இல்லை. இலங்கையர்களுக்கு மீட்சி கிடையாது.

சம்பிரதாயபுர்வமாக புத்தாண்டு, தீபாவளி, பொஸன், வெசாக், ரம்ழான், நத்தார், பொங்கல் எனப் பண்டிகைகளும் சுதந்திரதினம், மேதினம் என நாட்டின் நாட்களும் வந்து போகும். மெய்யாகவே இவையெல்லாம் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தராது. எல்லாத்திருநாளும் அதிகாரத்தரப்பினருக்கானதாகவே இருக்கும். 

கடந்த எழுபது ஆண்டுகளாக இனப்பிரச்சினையை முன்னிறுத்திய அரசியலே முன்னெடுக்கப்பட்டது. அதிலும் கடந்த முப்பது ஆண்டுகளாக யுத்தத்தை மையப்படுத்திய அரசியலே இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது. யுத்தத்தின் மூலமே, போரில் வெற்றியடைவதன் மூலமாகவே  இனப்பிரச்சினைக்குத்தீர்வைக் காண முடியும், விடுதலையைப் பெற முடியும்  என புலிகள் நம்பினார்கள். புலிகளைத் தோற்கடித்து, தமிழ்த்தரப்பைத் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவருவதன் மூலமாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வை உருவாக்க முடியும் என அரசாங்கமும் நம்பியது. ஆயுதப்போராட்டத்தின் மூலமே தமிழர்களுக்கான விடுதலையை எட்ட முடியும் எனத்தமிழ் மக்களும் நம்பினார்கள்.

இதனால், போரில் வெல்வதன் மூலமே தமது இலக்கை எட்டமுடியும் என்ற நம்பிக்கையோடு தமிழ்த்தரப்பும் அரசாங்கமும் தீவிரமாகப் போரிட்டன. மறுவளத்தில் ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதே இதனுடைய அப்படையாகும். போரில் ஏதாவது ஒரு தரப்பு நிச்சயமாகத் தோற்கடிக்கப்படும். அப்படி ஒரு தரப்பு தோற்கடிக்கப்படும்போது, எப்படி நாட்டிலே அமைதியையும் தீர்வையும் எட்ட முடியும்? ஏனென்றால், ஒரு தரப்புத் தோற்கடிக்கப்படும்போது சமனிலை அடிபட்டுப்போகிறது. அப்படிச் சமனிலை அடிபட்டுப்போகும்போது, வெற்றியடைந்த தரப்பே மேல்நிலைச் சக்தியாக உருவெடுக்கும். அந்த மேல்நிலைச் சக்தி தன்னை மிகக் கண்ணியமான முறையில் தகவமைத்துக் கொண்டால் மட்டுமே அமைதிச் சூழலையும் தீர்வையும் எட்டமுடியும். அதற்கு நியாயத்தை நீதியாக வழங்கக்கூடிய திராணியும் மனப்பாங்கும் அந்த மேல்நிலைச் சக்திக்கு இருக்க வேணும். ஆனால், இலங்கையில் அப்படியான ஒரு குணாம்ச நிலையை எந்த  அரசியறச் சக்திகளும் கொண்டிருக்கவில்லை.

இதுவே தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் காரணமாகும். இதை நேடியாகச் சொன்னால், இன்று அரசியல் அதிகாரத்தில் இருப்போர்  அல்லது ஆட்சியில் பங்கெடுத்துக்கொண்டிருப்போர் அத்தனைபேரும் கடந்த காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முரண்பாட்டு அரசியலின் – அழிவு அரசியலின் பிதாமகர்களும் தளபதிகளுமாவர். யுத்தம் முடிந்து, காலம் மாறி, களநிலைமை மாறிய பிறகுகூட இவர்களிடத்திலே மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. அதற்கான சாத்தியங்களும் தென்படவில்லை.

இந்த நிலையில்தான் சனங்கள் தங்களுக்கான புதிய அரசியல் தெரிவுகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர். கடந்த காலத்தின் பழைய குப்பைகளைக் கழித்து ஒதுக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது. இது தனியே தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியற் பரப்பில் நடந்தால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த இலங்கைச் சமூகங்களிடத்திலும் நடக்க வேணும். குறிப்பாகச் சிங்களத் தரப்பில் புதிய தேர்வாளர்களைக் கண்டறிய வேணும். இந்த வகையில் இளைய தலைமுறையினர் இந்த நாட்டை நிர்வகிப்பதற்கு இடமளிப்பது அவசியம். வயதானவர்களும் பழையவர்களும் நாட்டுக்குப் பெரிய பங்களிப்புகளை எல்லாம் செய்ய வேண்டாம். தியாகங்களைப் புரிய வேண்டாம். சற்று ஓய்வெடுத்துக் கொண்டாலே போதும். அதுவே சிறப்பு.

இனியும் யாரும் எதற்காகவும் யாருக்காகவும் காத்துக்கொண்டிருக்க முடியாது. இது கதைகளைக் கேட்கும் காலமல்ல. செயல்களை ஆற்ற வேண்டிய காலம். உலகம் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பகையும் முரண்பாடுகளும் வேறு நிலைகளில் கையாளப்பட்டு, ஒருங்கிணைவும் கூட்டும் உருவாக்கப்படுகின்றன. வரலாற்றுப்பகைமையுடைய நாடுகள் புதிய வர்த்தக உடன்படிக்கைகளிலும் கலாச்சாரப் பரிவர்த்தனைகளிலும் சேர்ந்து ஈடுபடுகின்றன. ஏனென்றால், புதிய உலக ஒழுங்கு அப்படித்தான் உருவாகியுள்ளது. அமெரிக்கத் தலைவரைச் சீனா செங்கம்பளம் விரித்து வரவேற்கிறது. சீனத்தலைவரும் இந்தியப்பிரதமரும் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு, அந்த மகிழ்ச்சியில் சேர்ந்து விருந்துண்கிறார்கள். இப்படித்தான் இன்றைய உலகம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இலங்கைக்குள் உள்ள சமூகங்கள் ஒருவருடைய முகத்தை மற்றவர் பார்த்து இயல்பாகச் சிரிக்க முடியாத நிலையை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கின்றன. இனமுரண்களை மிகக் கவனமாகப் பழைய அரசியல் தலைமைகள் வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், இனமுரண் அரசியலில்தான் அவற்றின் வேர் உள்ளது. இனமுரண் அரசியல் இலலையென்றால், இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளும் தலைவர்களும் காணாமலே போய்விடுவதை நாம் எங்கள் கண்களினாலேயே பார்க்க முடியும்.

ஆகவே அவற்றின் இருப்பு, இன முரண்களிலேயே கட்டப்பட்டிருக்கிறது. இதைத் தவிர்ப்பதே இன்றைய தேவையாகும். இனியும் இனமுரண் அரசியல் அல்லது இனரீதியான அரசியல் சோறுபோடாது. அப்படி அது தொடர்ந்தும் இருக்குமானால், கடந்த காலத்தில் அதற்கு நாம் எங்கள் இரத்தத்தையும் உயிரையும் பலியிட்டதைப்போல, இனியும் ஏதோ ஒரு வகையில் பலியிட வேண்டியிருக்கும். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, அவற்றை எந்த நிலையிலும் வளர்க்கவோ பராமரிக்கவோ கூடாது. 1971 இல் ஜே.வி.பி கிளர்ச்சி அடக்கப்பட்டது. அதோடு ஜேவிபியின் போராட்டமோ அதனுடைய அடையாளமோ அழிந்து போனதா? இல்லையே! அது 1989 இல் இன்னொரு வடிவில் வெடித்தது. அப்போதும் அது மிக மோசமான முறையில் ஒடுக்கப்பட்டது. இருந்தபோதும் இன்னும் ஜேவியின் அடையாளம் அப்படியேதான் உள்ளது. ஆட்சியாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் எச்சரிக்கையாகவும் அச்சுறுத்தலாகவும் தலையிடியாகவும் ஜேவிபியினர் இப்போதும் உள்ளனர். பாராளுமன்றத்திலும் வெளியிலும் அவர்கள் முன்னிறுத்துகின்ற, எழுப்புகின்ற, தெரிவிக்கின்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத நிலையில்தான் அரசாங்கமும் பிற கட்சிகளும் உள்ளன.

இதற்குக் காரணம், சரி பிழைகளுக்கு அப்பால் ஜேவிபியினர் போராட்டப்பாரம்பரியத்திலிருந்து வந்தமையே ஆகும். அதற்காக அவர்கள் அத்தனைபேரும் சுத்தமான தங்கக் கட்டிகள் என்று, இங்கே வாதிடவில்லை. தமிழ்த்தரப்பிலும் போராட்டப் படிமுறைகளுக்குள்ளால் வந்த அரசியற் பிரதிநிதிகளும் தலைவர்களும்  இருக்கிறார்கள்தான். சந்தர்ப்பவசமாக அரசியல் அதிகாரத்துக்கு வந்தவர்கள் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே கழுவேற்ற வேண்டியவர்கள். கடந்த காலத்தின் அரசியல் நடைமுறைத் தவறுகளுக்கும் இரத்தம் சிந்திய அரசியலுக்கும் பொறுப்பானர்கள். இவற்றுக்குப் பொறுப்புச் சொல்லாமல், இவர்களால் ஒரு அடி கூடச் சரியான பாதையில் நடக்க முடியாது. ஆனால், அப்படிப் பாவத்தின் பாத்திரத்தைக் கழுவி, பிராயச் சித்தம் தேடுகின்ற மனப்பாங்கும் திடசித்தமும் திராணியும் இன்றைய எந்தத்தலைவர்களிடத்திலும் இல்லை.

ஆகவே, நாட்டின் எதிர்காலத்தைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டுமானால், புதிய தலைவர்களையும் புதிய கட்சிகளையும் பற்றியே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. பல இடங்களிலும் இன்று இளைய தலைமுறையினர் புதிய சிந்தனையோடும் வீச்சோடும் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். உழுத்துப்போன அரசியல்வாதிகளை விட்டு அவர்கள் புதியதாகச் சிந்திக்கிறார்கள். நேர்மையாகச் செயற்படுகிறார்கள். மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அதற்காக உழைக்க முன்வருகிறார்கள். அவர்களே நம்பிக்கையாளர்களாகத் தெரிகிறார்கள். நிச்சயமாக அவர்களால்தான் புதிய மாற்றங்களை உண்டாக்க முடியும். அதை அவர்கள் செய்வார்கள். செய்யத்தான் போகிறார்கள். மாற்றம் நிகழ்ந்தே தீரும். அது வரலாற்றின் விதி.

dantv