Theneehead-1

Vol: 14                                                                                                                                                20.03.2017

மாதம் மும்மாரி பொழிகிறதா? மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்?”

-    கருணாகரன்

“நாடு முழுக்கப்போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றனவே. இது அரசாங்கத்துக்கு சவாலாக உள்ளது அல்லவா!” என்று ஊடகவியலாளர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் ரணில் விக்கிரமங்கவிடம் கேட்டிருக்கிறார்.protest in sri

“அப்படியா? இதைப்பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. இந்தப்போராட்டங்கள் எல்லாம் எங்கே நடக்கின்றன? எதற்காக நடக்கின்றன?” என்று பதிலுக்குக் கேட்டிருக்கிறார் பிரதமர்.

இதைப் படிக்கும்போது உங்களுக்கு, “மந்திரி, மாதம் மும்மாரி பொழிகிறதா? மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்கும் மன்னரின் நினைவு வரலாம். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத மன்னர்களையும் தலைவர்களையும் கொண்டதுதானே நமது வரலாறு. அதற்கு இந்த ஜனநாயக யுகத்திலும் விதி மாற்றமில்லை.

“நாட்டில் நடக்கும் போராட்டங்களைப் பற்றித்தினமும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் போராடுவதையே தங்களுடைய தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இதையெல்லாம் அறியாமல் எப்படி நீங்கள் இருக்க முடியும்?” என்று மறுகேள்வியை அவரிடம் கேட்டிருக்கலாமே என்று நீங்கள் எண்ணக்கூடும்.

ஆனால், அதற்கும் இந்த மாதிரி “ஓ.. இதெல்லாம் இலங்கையிலா, எங்கள் நாட்டிலா நடக்கின்றன?“ என ஏடாகூடமாகத்தான் பதிலுக்குக் கேட்டிருப்பார். ஆகவே இது நேர்மையான பதிலைப் பெறுவதற்கான வழியாக இருக்கப்போவதில்லை. அப்படியாக இருந்தால், அவர் கேள்வியின் முதல் வார்த்தைக்கே தன்னுடைய பொறுப்பை வெளிப்படுத்திருப்பார்.

தங்களை நோக்கி எழுப்பப்படும் நெருக்கடியான கேள்விகளை எதிர்கொள்ளக் கடினமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு பொருத்தமற்ற முறையில் பதில் சொல்லித் தப்ப முயற்சிப்பது அரசியல் தலைவர்களின் வழமை. இருந்தாலும் அவர்களுக்குத் தெரியும் உண்மை என்ன என்று. ரணில் விக்கிரமங்கவுக்கும் உண்மை தெரியும்.

தன்னுடைய தவறுகளையும் தனது அரசாங்கத்தின் இயலாமை அல்லது தவறுகளையும் அவர் அறியாமல் இல்லை. குறிப்பாகத் தமக்கிருக்கும் பொறுப்புக்கூறல்களைப்பற்றி. ஆனால், அவற்றுக்குத் தீர்வு காண்பதில் அவருக்கு அக்கறையில்லை. அவரைச்சுற்றியிருப்போரின் நிலையும் இதுதான். இது அதிகாரத்தில் இருப்போருக்கு ஏற்படுகின்ற ஒரு வியாதி. இந்த வியாதிக்குட்படாமல் விதிவிலக்காக இருப்பவர்களே மெய்யான தலைவர்களாகவும் வரலாற்றைப் படைப்போராகவும் இருக்கிறார்கள். ஏனையவர்கள் ”ரைம்பாஸ், பாஸ்கள்தான்”.

அதிகாரத்துக்கு வந்து விட்டால் புலன்கள் செயற்படாமல் போவது பெரும்பாலானவர்களுக்கு நடப்பதுண்டு. புலன்கள் செயற்படவில்லை என்றால் சூழ நடப்பது என்னவென்று தெரியாது. யாருடைய குரலும் கேட்காது. இன்று அதிகாரத்திலிருப்போருக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி இதுவே. இல்லையென்றால் தங்கள் தொழிலே போராட்டம் என்ற அளவில் மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பார்களா? தங்களுடைய குரலைக் கேட்கிறார்களில்லை. தங்கள் நிலைமையைப் புரிந்து கொள்கிறார்களில்லை என்றபடியால்தானே வேறு வழியில்லாமல் மக்கள் போராட்டத்திலிறங்குகிறார்கள்.  இதோ இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொழும்பு கோட்டை வளாகத்தில் நாட்டின் பல திசைகளிலிருந்தும் வந்து கூடியிருக்கும் மக்கள் போராட்டமொன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். “காணிகளை ஆக்கிரமித்திருக்கும் படைகள் அவற்றை விட்டு வெளியேற வேணும். காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து சொல்ல வேணும் அல்லது அந்தப் பிரச்சினைக்கு நியாயமான பதில் சொல்லப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதுடன், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேணும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம உரிமை இயக்கம் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தாலும் இதற்கு, சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு உள்பட நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரும் ஆதரளித்து, ஒன்று கூடியிருக்கின்றனர்.

இந்தப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகள் ஒன்றும் புதியவை அல்ல. ஏறக்குறைய பத்து ஆண்டு வயதுடையவை. போர் முடிந்த பிறகு இவை உச்ச அழுத்த நிலையில் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகள். இப்பொழுது அதிகாரத்திலிருக்கும் நல்லாட்சிக்கான அரசாங்கம் பதவிக்கு வந்தே இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்குரிய தீர்வைக்கொடுக்கும் நிலைமைகளில் எத்தகைய முன்னேற்றங்களும் இல்லை. அதனால், கிராமங்களிலிருந்து தலைநகரத்தை நோக்கி மக்கள் வந்திருக்கிறார்கள்.

அதாவது, “கிராமங்களில் நாங்கள் நடத்தும் போராட்டங்களும் அங்கே எழுப்புகின்ற குரல்களும் உங்களுக்குக் கேட்கவில்லை என்றால், இதோ உங்கள் முன்னிலையில் வந்து நின்று போராடுகிறோம். உங்களுக்கு முன்னால் நின்று குரல் எழுப்புகிறோம். இப்போதாவது எங்களைத் தெரிகிறதா? எங்கள் குரல் கேட்கிறதா? என்று பார்ப்போம்“ எனச் சனங்கள் கூடியிருக்கிறார்கள்.

தங்களுடைய கோரிக்கைகளைச் சுமந்து கொண்டு, இவ்வளவு தொலைதூரம் பயணித்து வந்து, இந்த எளிய மக்கள் போராடுகிறார்கள் என்றால், இது பாரதூரமான ஒரு நிலையே. இதையெல்லாம் நாங்கள் அறியவில்லையே என யாரும் கைகளை விரித்துக் காட்டமுடியாது. அப்படிக் காட்ட முற்பட்டால், அது அவர்களையே நெருக்கடிக்குள்ளாக்கும். வரலாற்றின் விதியும் அதுதான்.


மக்களுடைய கோரிக்கைகள் என்பது அவர்கள் எதிர்பார்க்கின்ற நியாயமாகும். அந்த நியாயத்தை வழங்குவதற்கு அதிகார பீடமும் தலைவர்களும் அரசாங்கமும் தயாரில்லை என்றால், அவர்கள் போராடத்தொடங்குவார்கள். அந்தப் போராட்டங்களை இந்தத் தரப்புகள்  கவனிக்கவில்லை என்றால், அல்லது அந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு முற்பட்டால், மக்களின் எதிர்ப்பு வலுக்கும். அவர்கள் தவிர்க்க முடியாமல் வன்முறை வழிக்குச் செல்வார்கள். ஆகவே வன்முறையை உருவாக்குவது அரசாங்கமும் அதிகாரத்தரப்பினருமே அல்லாமல் மக்கள் அல்ல.

ஆனால், அரசாங்கமும் அதிகாரத்தரப்பும் ஒரு போதும் இதனை  ஏற்றுக் கொள்வதில்லை. பதிலாக மக்களின் மீதே குற்றத்தைச் சுமத்துவதுண்டு. மட்டுமல்ல, மக்களைத் தண்டிப்பதற்கு தன்னுடைய காவல்துறையையும் படைகளையும் சட்டத்தையும் நீதி அமைப்பையும் பயன்படுத்திக் கொள்ளும். படைகளும் சட்டமும் நீதி அமைப்பும் தனக்குக் கவசமாக இருக்கின்றன என்ற திமிரில்தான் அதிகாரத்தரப்பினர் மக்களைப்பற்றிச் சிந்திக்காமல் செயற்படுகின்றனர். இந்த நிலையில்தான் இந்தப் பத்தியின் தொடக்கத்தில் சித்திரிக்கப்பட்ட மாதிரியான தலைவர்களின் பதில்களும் வருகின்றன.

இதற்குக்காரணம் நாட்டில் பலமான எதிர்த்தரப்பு இல்லை என்பதேயாகும். எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களை எத்தகைய கேள்விக்கும் உட்படுத்தாமல், எத்தகைய மீள் பரிசீலனைக்கும் உள்ளாக்காமல் மயிற் தோகையினால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி பொருத்தமற்ற முறையில் நியாயமற்ற எதிர்ப்பைக் காட்டுகிறது. ஜேவிபி நலிந்த நிலையில் இருக்கிறது. ஊடகங்களும் சமூகச் செயற்பாட்டியக்கங்களும் இந்த ஆட்சியின் தொட்டப்பாவாக இருக்கம் மேற்குலகின் விருப்பங்களுக்கு மாறாகச்சிந்திக்க முடியாது என்ற நிலையில் எல்லாவற்றையும் அடக்கி வாசிக்கின்றன.

இப்படியிருக்கும்போது எவ்வாறு பலமான எதிர்ப்பியக்கம் ஒன்று சாத்தியமாகும். ஏனைய தரப்புகள் சிகச்சிறியவையாக உள்ளன. ஆனால், அவைதான் இப்போது மெல்ல மெல்லச் சனங்களின் குரலையும் அவர்களுடைய போராட்டங்களையும் முனைப்பாக்கி வருகின்றன. எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு யாராவது வரத்தானே வேணும். ஏனென்றால், அது எதிர்காலமாக இருக்கிறது அல்லவா!

ஒரு நாட்டின் ஜனநாயகப் போராட்டங்களுக்கும் மக்கள் குரல்களுக்கும் வலுவுட்டுகின்றவை எதிர்த்தரப்புகளே. ஆட்சியை எதிர்ப்பது, ஆளும் தரப்பை எதிர்ப்பது என்பதற்கு அப்பால், மக்களின் நிலை நின்று ஆட்சியின் குறைபாடுகளையும் அதிகாரத்தின் இறுமாப்பையும் எதிர்ப்பதே இவற்றின் பணியாக இருக்க வேணும். இந்தப்பணியைச் சரியாகச் செய்தால், நிச்சயமாக மக்கள் அந்தத் தரப்பைப் புரிந்து கொள்வார்கள். காலப்போக்கில் அந்தத்தரப்பிற்குத் தங்களுடைய ஆதரவை வழங்கி, அதைப்பலப்படுத்துவார்கள். இலங்கைக்கு அப்படியான ஒரு பாரம்பரியம் உருவாக்கப்பட வேணும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மக்கள் எழுச்சியும் போராட்டங்களும் மிகச் செழிப்பாக நடந்திருக்கின்றன. கடந்த 100 ஆண்டுகால வரலாற்றிலே அதிகமான மக்கள் போராட்டங்களும் எழுச்சிகளும் நடந்திருக்கின்றன. ஆசியாவில் அதிக போராட்டங்கள் நடந்த களம் என்றால்,  இலங்கையைத்தான் குறிப்பிட முடியும். அந்த அளவுக்கு ஏராளமான போராட்டங்கள். ஆனால், அவற்றைத் தலைமை தாங்கியவர்களே  சிதைத்ததும் உண்டு. ஏனைய சக்திகள் சிதறடித்ததும் உண்டு. அரசு ஒடுக்கியதுமுண்டு. இருந்தாலும் மக்கள் போராடாமல் பின்னின்றதில்லை.

இப்போது கூட மக்கள் போராடிக்கொண்டேயிருக்கிறார்கள். மிக மோசமான முறையில் 2009 இல் ஒடுக்கப்பட்ட மக்கள், முட்கம்பிச் சிறையினுள்ளே அடைக்கப்பட்டவர்கள் இன்று பொது வெளியில் நின்று குரல் எழுப்புகிறார்கள். ஆகவே மக்களுக்கு நியாயமான தீர்வு தேவை. அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழக்கப்பட்டே ஆக வேணும். இதுவே சனங்களின் நிலைப்பாடு. இப்பொது தங்களுடைய கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களி்ல் அதிகமாகக் கலந்து கொள்வோர் உழைப்பாளர்கள், முதியோர், பெண்கள் போன்றவர்களே. இவர்களுக்கு ஆதரவழிக்கும் வகையில் ஏனைய இளைய தலைமுறையினர் உள்ளனர். ஆனால், இதெல்லாம் ஒரு கட்டம் வரையில்தான். அப்படியானால், அடுத்த கட்டம் எப்படியிருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். வரலாற்றின் விதியை மட்டுமே நான் உங்களுக்கு அடையாளம் காட்ட முடியும். அது மீண்டும் வன்நிலையை நோக்கியே சனங்களைப் பயணிக்க வைக்கும். சூடுகண்ட புனை அடுப்பங்கரையை நாடாது என்பதெல்லாம் புனைக்குச் சரியாக இருக்கலாம். பிரச்சினைகளோடு வாழ்கின்ற மக்களுக்கு அது பொருந்தாது. அவர்கள் சாவைக் கண்டு அஞ்சுவதில்லை. அப்படிப் பயப்படுகின்றவர்களாக இருந்தால், காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவினர்களின் படங்ளை நெஞ்சுக்கு நேரே பிடித்துக் கொண்டு, கொழும்பின் வீதிகளில் நிற்பார்களா? இராணுவமுகாமுக்கு முன்னால் திரண்டு, “எதற்காக எங்கள் காணியில் குடியிருக்கிறீங்கள். வெளியேறிப்போங்கள்“ என்று சத்தமிடுவார்களா?

ஆகவே கண்ணை மூடிக்கொண்டு புனை பால் குடித்துக்கொண்டிருப்பதைப்போல, ஒரு அரசாங்கம் வீதிக்கு வந்திருக்கும் மக்களைப் பற்றிப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. அதிகாரத்திலிருப்போருக்கு தாங்கள் இருக்கின்ற உயரத்தைப் பற்றித் தெரியாமலிருக்கலாம். அந்த உயரத்தின் கால்களாக இருப்பது மக்களே. அவர்கள் தங்கள் கால்களை நகர்த்துவதொன்றும் கடினமானதல்ல.

இது ரணில் – மைத்திரி அரசாங்கத்துக்கு வாய்ப்பான காலகட்டமாகும். நியாயமான கோரிக்கையோடு மக்கள் கொழும்பு வரை வந்திருக்கிறார்கள். ஆகவே அந்த மக்களுடைய நியமான கோரிக்கைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டிய பொறுப்புண்டு. எனவே, சில விடயங்களில் அரசாங்கம் இறுக்கமான – சரியான நடைமுறையைப் பின்பற்றப்போகிறது என்று சொல்லிக் கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கும் காணி மீளளிப்புக்கும் அரசியல் கைதிகள் விடுதலைக்கும் முயற்சிக்க வேண்டும். அப்படியே ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வைக் காண முயற்சிக்கலாம்.

ஆனால், இதையெல்லாம் அவர்கள் செய்வார்கள் என்று நம்பிக்கை கொள்ள முடியவில்லை. ஏனென்றால், சனங்களின் மீது அக்கறை வைத்துச் செயற்படும் ஒரு பாரம்பரியத்தையோ பழக்கத்தையோ கொண்டதில்லை இன்றைய தலைமைகள். இதனால்தான் இவை எப்போதும் மக்கள் விரோத – மக்களை விலகிய தரப்புகளாக உள்ளன. இதில் துயரமென்னவென்றால், எப்போதும் தமக்கு எதிராகச் சிந்திக்கின்ற – தமக்கு எதிராகச் செயற்படுகின்ற தரப்பினரையும் தலைவர்களையுமே மக்கள் தெரிவு செய்கிறார்கள் என்பதுதான்.

போராடும் மக்கள் அரசியல் தெரிவுகளின்போதும் நிதானமாகச் செயற்பட வேணும். குறிப்பாகத் தங்களுடைய அனுபவங்களுக்கு விசுவாசமாக.
 

dantv