Theneehead-1

Vol: 14                                                                                                                                                20.03.2017

அனுமதி இல்லாமல் பாடத் தடை: இளையராஜா பாடல்களை இனி பாட மாட்டேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் ஏன்? இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் விளக்கம்!

அனுமதியில்லாமல் இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடுவதற்குத் தடை விதித்spb balaது நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து இனி இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாட மாட்டேன் என்று பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், தன் இசை ரசிகர்களுக்கு சனிக்கிழமை இரவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதன் விவரம்: ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சலீஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்து கொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.

சில நாட்களுக்கு முன், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எனக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை.

ஏற்றுக் கொள்ளத் தயார்: என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். "எஸ்.பி.பி. 50' என்ற பெயரில் கடந்த வருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸன்ம் வரவில்லை. ஆனால், அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்தச் சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

மேடைகளில் இனி பாட மாட்டோம்: இந்தச் சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்தக் கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன்.

விவாதம் வேண்டாம்: உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என தனது முகநூல் பதிவில் எஸ்.பி.பி. குறிப்பிட்டுள்ளார்.

சென்னை: இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடுவது தொடர்பாக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஏன் என்று இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் விளக்கமளித்துள்ளார்.

தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் மேடையில் பாடக்கூடாது என்று அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தச் சென்றிருந்த பிரபல பிண்ண்னிப்பாடகர் எஸ்.பி.பிக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்ததாக எஸ்.பி.பி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தார். இது தமிழ் திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் காப்புரிமை விவகாரங்களில் இளையராஜாவுக்கு ஆலோசகராக இருக்கும் பிரதீப் குமார் என்பவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.  நோட்டீஸ் அனுப்பப்படுவது என்பது வழக்கமான நடைமுறைதான். இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதி பெற்று, உரிய ராயல்ட்டி தொகை செலுத்தி விட்டு பயன்படுத்திக் கொள்ளுமாறுதான் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஒரு முறைபடுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும்.

சாதாரணமாக மேடைக் கச்சேரிகள் செய்பவர்களிடமிருந்து ராயல்ட்டி எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால்  வணிக நோக்கத்துடன் பாடல்களைப் பயன்படுத்துவோர் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதீப்குமார் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

dantv