Theneehead-1

Vol: 14                                                                                                                                                                19.04.2017

படித்தோம் சொல்கின்றோம்

நவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல்

இங்கிலாந்தில்  புகலிடம்பெற்ற  ஈழத் தமிழ்ப்பெண்களின் ஆளுமைப்பண்புகளை பதிவுசெய்திருக்கும் அரிய முயற்சி

                                                                      முருகபூபதி

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை சென்றிருந்தவேளையில் கொழுnavajothyம்பின் புறநகரத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி சேவையிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. தங்கள் தொலைக்காட்சிக்கு நேர்காணல் தரும்படி சொல்லப்பட்டது. கொழும்பில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு ஒரு வாகனம் வந்து அழைத்துச்செல்லும் வழியில் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது.

சாரதியுடன் வந்திருந்தவர், என்னைப்பார்த்து, " ஒரு நிமிடம் சேர்..." என்று சொல்லிவிட்டு, அருகிலிருந்த ஒரு தொடர்மாடிக் குடியிருப்புக்குச்சென்றார். ஒரு நிமிடம் பல நிமிடங்களாக கழிந்தது. சிறிதுநேரத்தில் அவர் திரும்பி வந்து வாகனத்தில் ஏறினார். எனினும் வாகனம் புறப்படவில்லை. தாமதம் பொறுமையை சோதித்தது.

மேலும் சில நிமிடங்களில் ஒரு அம்மணி அந்தவாகனத்திற்கு வந்து ஏறினார். எங்கோ திருமணத்திற்கோ அல்லது ஏதோ வைபவத்திற்கோ செல்லும் விதமாக தன்னை அலங்கரித்திருந்தார். பெர்ஃபியூம் வாசம் மூக்கைத்  துளைத்தது.

என்னைப்பார்த்துப்  புன்னகைத்தார். நானும் பதிலுக்கு புன்னகைத்தேன். தொலைக்காட்சி நிலையம் வந்ததும் அவரும் எம்முடன் இறங்கினார்.

நிலைய கலையகத்தின் வாசலில், " இவர்தான் இன்று உங்களுடன் நேர்காணல் நடத்தவிருப்பவர்." என்று என்னை அழைத்துக்கொண்டு வந்தவர் சொல்லி, அந்த அம்மணியை அறிமுகப்படுத்தினார்.

மீண்டும் ஒரு புன்னகையை வரவழைத்தேன்.

ஒளிப்பதிவு கலைக்கூடத்தினுள் சென்றோம். அங்கிருந்த ஒருவர் ஒளிப்பதிவு கருவிகளை சரிசெய்து, கோணம் பார்த்துக்கொண்டிருந்தார். மற்றும் ஒருவர் மின்விளக்குகளை நாம் அமரும் ஆசனத்திற்கு  ஏற்றவாறு  ஒளிபாய்ச்சுவதற்கு திருப்பிக்கொண்டிருந்தார்.

   அந்த அம்மணி அருகில் அமர்ந்தார். அவர் கையில் ஒரு சிறிய குறிப்பேடும் பேனையும் இருந்தன. " சேர்... அவர்கள் அவற்றை ஒழுங்கு செய்யட்டும். நீங்கள் உங்கள் பெயர், இடம், உங்களைப்பற்றிய  அறிமுகத்தை   சொல்லுங்கள். பின்னர் அதிலிருந்து நான் கேள்விகள் கேட்கிறேன். என்ன வகையான கேள்விகள் கேட்கவேண்டும் என்பதையும்  சொல்லிவிடுங்கள். இன்னும் சில நிமிடங்களில் தொடங்குவோம்." என்றார்.

எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எழுந்து சென்றுவிடத்தான் விரும்பினேன். எனது பெயரே தெரியாமல், எனது எழுத்துலகம் பற்றி அறியாமல் வந்திருப்பவரிடம்  என்ன சொல்வது...?"

நான் எழுந்துசென்றால் அன்றைய தினம் அவருக்கு கிடைக்கக்கூடிய வேதனம்  கிடைக்காது. பார்க்கப்பாவமாக  இருந்தது. பெண் என்றால் பேயும்  இரங்குமல்லவா...? தனது அலங்காரத்திற்கு செலவிட்ட அந்த நேரத்திலாவது  தான் யாரைப்பேட்டி காணப்போகின்றோம் என்பதை தெரிந்துகொண்டிருக்கலாம். அல்லது வாகனத்தில்  வரும்போதாவது கேட்டிருக்கலாம்.

ஒளிப்பதிவு கலையகத்திற்குள் வந்தபின்னர் அவர் கேட்டது அதிசயமாகப்பட்டது. பின்னர் ஒருவாறு நேர்காணலை முடித்துக்கொண்டு வெளியே வந்தேன். அந்த நேர்காணல் ஒளிபரப்பிய தகவலும்  தெரியாது. தெரிந்துகொள்ளும்  ஆர்வமும்  இல்லை.

இனிமேல் தொலைக்காட்சி - வானொலி நேர்காணலுக்குச்செல்லும் முன்னர் எச்சரிக்கையாக  இருக்கவேண்டும்  என்பது  எனக்கு  அன்று புத்திக்கொள்முதலானது.
-------------------------------------
இங்கிலாந்திலிருந்து  எழுத்தாளராகவும், வானொலி ஊடகவியலாளராகவும்  அதே சமயம் இலக்கிய - சமூகச்செயற்பாட்டாளராகவும்  இயங்கும் நவஜோதி ஜோகரட்னம் வெளியிட்டுள்ள நேர்காணல் தொகுப்பு " மகரந்தச்சிதறல்" நூலைப்படிக்கத்தொடங்கியபோது,    கொழும்பில்  நான் பெற்ற  அனுபவம்  நினைவுக்கு வந்தது. அத்தகைய  துர்ப்பாக்கிய அனுபவத்தை  பெற்றுக்கொள்ளாத  பாக்கியசாலிகள்தான்  நவஜோதி சந்தித்திருக்கும்  பெண்கள்.

நேர்காணல் என்பதும்  ஒரு தேர்ந்த கலை. அதிலும் நாம் பயிற்சிபெறவேண்டியவர்களாகவே  இருக்கின்றோம். நேர்காணல்களில் ஈடுபடுபவர்களுக்கு தேடலும், வாசிப்பு அனுபவமும் முக்கியமானது. ஒலிவாங்கியை  கையில் எடுத்தவர்கள்  எல்லோருமே ஊடகவியலாளர்கள் அல்ல.  தம்முடன் உரையாடவிருப்பவர் பற்றி ஓரளவும்  தெரியாமல்  முழுமையான  நேர்காணலை  தயாரித்துவிட முடியாது.

நிதானம்,  தனிப்பட்ட விருப்பு வெறுப்பற்ற பண்புகள்,  கூர்மையான செவிப்புலன், கிரகிக்கும்  ஆற்றல் என்பன சிறந்த நேர்காணலை ஒலி - ஒளிபரப்புவதற்கு பெரும் துணைபுரியும்.

நவஜோதி,  எனது இனிய நண்பரும் ஈழத்து இலக்கிய உலகின் மூத்ததலைமுறை படைப்பாளியுமான அகஸ்தியர் அவர்களின் புதல்வி. அவ்வப்போது நவஜோதியின் எழுத்துக்களைப் படித்திருக்கின்றேன்.  நானும் இங்கிலாந்திற்கு 2008 ஜனவரியில் வந்திருந்தசமயம் சந்தித்திருக்கிறார். நடா. மோகன் நடத்தும் சண்ரைஸ் வானொலிக்காக  என்னைப்பேட்டிகண்டவர்.  எங்கள் ஊர்  நீர்கொழும்பில்  நடா மோகனை  குழந்தைப்பருவத்தில் பார்த்திருக்கின்றேன். அவர் பற்றி தனியாக பிறிதொரு சந்தர்ப்பத்தில்  எழுதவேண்டும்.

சண்ரைஸ் வானொலிக்காக  சந்தித்த பெண்கள், தத்தமது கருத்துக்களை சுதந்திரமாக எந்தத்தடையுமின்றி தெரிவித்திருப்பதாக நவஜோதி தமது    நூலின் முன்னுரையில்  பதிவுசெய்துள்ளார். கேள்விகளை தொடுத்திருக்கும் பாங்கில் மற்றவர்களின் கருத்துச்சுதந்திரத்திற்கு  இவர் தந்துள்ள மரியாதை முன்னுதாரணமானது என்பதை  நூலுக்குள் பிரவேசிக்கும்பொழுது தெரிந்துகொள்கின்றோம்.

மகரந்தச்சிதறல் நூலை, தமது அருமைத்தாயார் திருமதி நவமணி அகஸ்தியருக்கு நவஜோதி சமர்ப்பணம் செய்துள்ளார். தமது எழுத்துக்களை இன்றும் தேடித்தேடி பத்திரப்படுத்திவைத்திருக்கும் அக்கறையுள்ள தாயாரையும் தொடர்ச்சியாக  இலக்கியத்துறையில் ஊக்கமளித்து வந்திருக்கும் தந்தையையும் பெற்ற பாக்கியசாலிதான் நவஜோதி. இந்த நூலின் முகப்பினை வடிவமைத்திருப்பவர் நவஜோதியின் புதல்வன் செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம் (செல்லப்பெயர் - சிம்பா) இங்கிலாந்தில் வோறிக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயில்கின்றார்.

இசை, நாட்டியம், நாடகம், ஓவியம், இலக்கியம், அரசியல், மருத்துவம், தொழில் முயற்சி முதலான அங்கங்களில் 33 பேருடன் தாம் நடத்திய நேர்காணல்களின் தொகுப்பினை நவஜோதி ஜோகரட்னம் நேர்த்தியாக வரவாக்கியிருக்கிறார். தமிழ்நாடு கருப்பு பிரதிகள் அச்சிட்டிருக்கும் இந்நூலில் இடம்பெற்றிருக்கும் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், தையல் சுந்தரம் பரந்தாமன் ஆகியோர் இதனைப்பார்க்காமலேயே  விடைபெற்றுவிட்டனர்.

அத்துடன் இந்த அரியமுயற்சியை பார்க்கும் சந்தர்ப்பம் நவஜோதியின் தந்தையார் அகஸ்தியருக்கும் கிட்டாமல்போய்விட்டது.

"நேர்காணல் என்பது எனக்கும் பேட்டி தருபவருக்கும் இடையில் நடைபெறும் ஒற்றைவழிப்பயணமல்ல. பல்லாயிரக்கணக்கான நேயர்கள் வானொலி அலைவரிசைகளில் எங்களிmagarasitharalன் உரையாடல்களைப் பார்த்தும் கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள் என்ற ஒருவித மன உணர்வு எப்போதும் என் நெஞ்சில் ஊர்ந்து கொண்டேயிருந்திருக்கின்றது." என்று தமது முன்னுரையில் நவஜோதி குறிப்பிட்டிருக்கும் வரிகள்  இந்தப்பதிவில் முதலில் குறிப்பிட்ட  அந்த அம்மணி உட்பட,   தேடல் மனப்பான்மையற்ற   வானொலி, தொலைக்காட்சி  ஊடகவியலாளர்களுக்கும்  சிறந்த ஆலோசனையாகும்.

இசை என்ற அங்கத்தில், தையல்சுந்தரம் பரந்தாமன், சரஸ்வதி  பாக்கியராஜா, அம்பிகா தாமேதரம், மாதினி சிறீக்கந்தராசா, சிவசக்தி சிவநேசன், பொன்னையா ஜெயஅழகி, துஷி - தனு சகோதரிகள் ஆகியோரும்,
நாட்டியம் என்ற அங்கத்தில் நளாயினி ராஜதுரை, விஜயாம்பிகை இந்திரகுமார், ராகினி ராஜகோபால், ஜெயந்தி யோகராஜா, பிறேமளா ரவீந்திரன் ஆகியோரும்,

நாடகம் என்ற அங்கத்தில், ஆனந்தராணி பாலேந்திரா, ரோகினி சிவபாலன், ஆகியோரும்,
ஓவியம் என்ற அங்கத்தில் அருந்ததி இரட்ணராஜ், மைதிலி தெய்வேந்திரம் பிள்ளை, ஆகியோரும்,
இலக்கியம் என்ற அங்கத்தில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், புனிதா பேரின்பராஜா, தமிழரசி சிவபாதசுந்தரம், யமுனா தர்மேந்திரன், றீற்றா பற்றிமாகரன், மாதவி சிவசீலன், உதயகுமாரி பரமலிங்கம்( நிலா), ஆகியோரும்,

அரசியல் என்ற அங்கத்தில், மங்கையற்கரசி அமிர்தலிங்கம், நிர்மலா ராஜசிங்கம், ரதி அழகரடனம், சசிகலா சுரேஷ்குமார் ஆகியோரும்,மருத்துவம்  என்ற அங்கத்தில் டாக்டர் மாலா ராதகிருஷ்ணன், மீனாள் நித்தியானந்தன், ஜெயானி நிர்மலன், வசந்தி கோபிநாதன் ஆகியோரும்,தொழில் முயற்சி என்ற  அங்கத்தில் சுவர்ணா நவரட்னம், ரஜேஸ்வரி சிவம் ஆகியோரும்  தமது குடும்ப - சமூகப் பின்னணி, வாழ்வியல் அனுபவங்கள், தாங்கள் சார்ந்திருந்த துறைகளில் எதிர்நோக்கிய சுவாரஸ்யங்கள், சவால்கள், இடர்பாடுகள் மற்றும் சாதித்தவற்றையும்  நேயர்களுக்கும் வாசகர்களுக்கும் சொல்லும்போது,  தமது கருத்தியலையும்  ஆக்கபூர்வமான  ஆலோசனைகள் முதலான இன்னபிற விடயங்களையும்   பதிவுசெய்கிறார்கள்.

நவஜோதியும் நிதானமாக,  யார் யாரிடம் எத்தகைய கேள்விகளை கேட்கவேண்டும் என்ற முன்தீர்மானத்துடன்,  இவர்களை நேயர்களுடன்  இணைத்திருக்கிறார். பின்னர்,  நூல்வடிவில்  வாசகர்களுடன் அவர்களை இணைத்திருக்கிறார். அந்தவகையில் இந்த முயற்சி வெற்றியாகவே அமைந்திருக்கிறது.

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றுபவர்களுக்கு  இந்த நூல் பயனுள்ளதாகும். ஆனால், எத்தனைபேர் படிப்பார்கள் என்பது எமக்குத்தெரியாது,

இத்தகைய நூல்களை  மாநகர நூலகங்களிலும் - பாடசாலை, கல்லூரிகள், பல்கலைக்கழக நூலகங்களில் மாத்திரமல்லாது, தமிழ்ப்பத்திரிகை - வானொலி - தொலைக்காட்சி  அலுவலக நூலகங்களிலும்  இடம்பெறச்செய்து வாசிக்கச்செய்யவேண்டும். (இத்தகைய வேண்டுகோள்களும் எமது அபிலாஷைகள்தான்)

"பண்ணிசையில் நாட்டியத்தை கொண்டுவரவேண்டும் என்ற தனது நெடுநாள் ஆசை லண்டனில்தான் நிறைவேறியது"  எனச்சொல்கிறார் தையல் சுந்தரம் பரந்தாமன்.

" குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்" தளபதி படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் கொண்டுவந்துவிட்டார். ஆனால், அது ஒரு குத்துப்பாடலுக்குள்  செருகப்பட்டதுதான் கொடுமை.

1966  காலப்பகுதியில் யாழ்ப்பாணம் இராமநாதன் அக்கடமியில் இசை விரிவுரையாளராக இருந்திருக்கும் தையல் சுந்தரம் அவர்கள், லண்டனில் வதியும் அதன் பழைய மாணவிகளைக்கொண்டே நாட்டியத்தில் பண்ணிசையை புகுத்தி கலை நிகழ்ச்சி நடத்தி நிதிசேகரித்து  இராமநாதன் அக்கடமிக்கு அனுப்பியிருக்கிறார்.

இலங்கை வானொலி இசைக்கு வழங்கிய முக்கியத்துவம் பற்றியும் அங்கிருந்த இசைக்கலைஞர்களின் உழைப்பையும் நினைவுபடுத்துகிறார் சரஸ்வதி பாக்கியராஜா.

உலகில் பல நாடுகளில் இசைநிகழ்ச்சி நடத்தியிருக்கும் அம்பிகா தாமோதரம், நேபாளம்சென்ற சமயம் அவர்களின் மொழியில் பயிற்சி பெற்று அந்தமொழியிலேயே பாடியிருக்கிறார்.  அத்துடன், லண்டனில் குஜராத்தி மாணவர்களின் நடன அரங்கேற்றத்தில் குஜராத்தி மொழியில் பாடி ஆசத்தியிருப்பவர்.  இலங்கையில் சிங்கள மாணவர்களுக்காகவும் அரங்கேற்றங்களில் பாடியிருக்கிறார்.

Melodic System பின்பற்றி வரும் நாம், மேற்கத்தைய இசை மரபையும் (Harmonic  System)  வைத்து சுருதி சுத்தத்துடன் கர்நாடக இசையை முன்னெடுத்துச்செல்லவேண்டும்  என்கிறார் மாதினி சிறீக்கந்தராசா.கந்தளாயில்  ஒரு காலத்தில் தமிழ் மீனவர்கள் பாடிய நாட்டுப்பாடலை தமிழ்நாட்டில்  வாழ்ந்த  திகோணமலைக்கவிராயர் தருமு சிவராம் எவ்வாறு கவிதையாக மாற்றியிருக்கிறார் என்ற செய்தியை சுவாரஸ்யமாகச்சொல்கிறார்  தமிழரசி சிவபாதசுந்தரம்.

வலையில்  சிக்கிய ஆமைக்கும் மீனுக்கும் நண்டுக்கும் தவளைக்கும் மத்தியில் யார் அதிலிருந்து தப்பிக்கத்தெரிந்த அதிபுத்திசாலி என்ற வாதம்தான் அந்த  நாட்டுப்பாடலின்  ஆழம்பொதிந்த  கருத்து.
முன்னர் இலங்கையில் பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் சில கவிதை மேடைகளில் இதனைப்பாடிக்கேட்டிருக்கின்றோம். மகரந்தச்சிதறல்  நூலிலிருந்துதான் அதன் ரிஷிமூலத்தை நாம்  தற்போது அறிகின்றோம்.

மறைமலை  அடிகளைப் பெற்ற தாயார் சின்னம்மை புங்குடுதீவில் வல்லன் என்ற இடத்தைச்சேர்ந்தவர் என்றும்  1920 களில் இறுதிக்காலத்தில்  இங்குதான் வாழ்ந்திருக்கிறார்  என்ற செய்தியையும் இந்த நேர்காணலில் அறிகின்றோம்.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ச்சிறார்கள் தமிழ் அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்கள் தொடர்பாக எழுப்பும் கேள்விகளை ஆராய்கிறார் றீற்றா பற்றிமாகரன்.

ஆங்கில இலக்கியம், மேற்கத்தைய நாடகம் மற்றும் இசையில் ஞானம் மிக்கவரும்  நாடக எழுத்தாளரும் ( ஒரு பாலைவீடு, கண்ணாடி வார்ப்புகள் முதலான நாடகங்கள்) மனித  உரிமைப்போராளியுமான நிர்மலா ராஜசிங்கம், இலங்கையில் கொல்லப்பட்ட ரஜனி திராணகமவின் சகோதரி. இலங்கையிலும் லண்டனிலும்  கலந்துகொண்ட போராட்டங்கள் குறித்து விரிவாகப்பேசியிருக்கிறார். போரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையைப்பற்றிய (சுமதி சிவமோகன் எழுதியது) In the shadow of the gun என்ற பரிசுபெற்ற நாடகத்தையும் தமிழில் மொழிபெயர்த்து லண்டனிலும் கனடாவிலும் மேடையேற்றிய  நிர்மலாவுடனான  நேர்காணல் இத்தொகுப்பில் மிக முக்கியமானது. நாம் அறியாத பல செய்திகளை உள்ளடக்கியது.

" பெண்களுக்கு ஒரு சரித்திரம் இருக்கிறது. அதை ஆண்கள் நிழலாக்கலாம். ஆனால், அதனை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியுடன் பெண் எழுத்துக்களை எழுதியாகவேண்டும்"  என்று வலியுறுத்துகிறார்  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

ஈழத்து தமிழ் இலக்கிய முன்னோடி எழுத்தாளர் சி. வைத்திலிங்கத்தின் புதல்வி யமுனா தர்மேந்திரன், லண்டனில் ஹரோ பிரதேசத்தில்  நூலகராக பணியாற்றுபவர். வாசகர் வட்டத்தினை அமைத்து இயக்குவிப்பவர். வாசிப்பிலிருக்கும் தேக்கம் களைவதற்கு நல்ல ஆலோசனைகளைத்தருகிறார்.

சில்லிருக்கையின் துணையுடன் வாழும் உதயகுமாரி பரமலிங்கம் என்ற  படைப்பாளினியின் தன்னம்பிக்கை செயற்பாடுகள் சிலிர்ப்பைத்தருகின்றது. அவரது வாழ்வே போராட்டம்தான். ஆனால், தன்பலம்  தான் அறிந்து இயங்கும் அவருடைய இயல்பை அர்த்தமாகவும் அழகாகவும் நவஜோதி வெளிக்கொண்டுவந்திருக்கிறார். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள  ஆசைப்படுபவர்கள்  இந்த நேர்காணலை அவசியம் படிக்கவேண்டும்.

மேடை நாடகம்  -  வானொலி  நாடகம், சினிமா முதலானவற்றுடன்  தொலைக்காட்சி, வானொலி, மேடை  நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளராகவும் இயங்கியிருக்கும் ஆனந்தராணி பாலேந்திராவின் அனுபவங்கள், சமகாலத்தில் எம்மவர்களின் பிள்ளைகளுக்குத்தேவையான சிறுவர் நாடகத்துறைக்கு மெருகூட்டும் ஆலோசனைகளையும் தருகிறது.

இந்த நூலின் இறுதிப்பகுதியில் இடம்பெறும் மருத்துவம்  என்ற அங்கத்தில்  நான்குபெண்கள்  முன்வைக்கும்  கருத்துக்களும் ஆலோசனைகளும்  புகலிடத்தமிழர்களை  நோக்கியே நகருகின்றன. இந்த அங்கத்தை மாத்திரம் நவஜோதியின் அனுமதியுடன்  தனியாகப்பிரித்தெடுத்து   ஒரு  நூலாக்கி புகலிடத்தமிழர்களிடம்  யாராவது   வழங்குவார்களாயிருந்தால்  அது பெரும்  புண்ணியமாகும்.

குறிப்பிட்ட நேர்காணல்கள்,  எம்மவர்களின் புகலிட வாழ்வுக்கோலங்களை சித்திரிக்கின்றன. அத்துடன் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளையும்  தருகின்றன. வீட்டில் செய்யவேண்டிய  பயிற்சிகள் பற்றிய பாடங்களாகவும் அந்த நேர்காணல்கள்  அமைந்துள்ளன.

குறிப்பாக  டாக்டர் மாலா ராதாக்கிருஷ்ணன் சிறந்த உளவளத்துறை ஆலோசகராகவே  நாம்  அறிந்துகொள்ள வேண்டிய சமூக - குடும்பச்சிக்கல்களையும்   சொல்லித்  தீர்வுகளும் தருகின்றார்.இவருடைய சகோதரர்தான் ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் கிரிக்கட் துடுப்பாட்ட வீரர் தெய்வேந்திரா. இவர் ஐம்பதுகளில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் நாயகனாகத்திகழ்ந்தார் (பக்கம் 241) என்பது எமது நினைப்பின் பிரகாரம்  தவறு. அவர் அறுபதிற்குப்பின்னர்தான் அங்கு பிரபலமானார்.

1968 இல் யாழ். பரமேஸ்வராக்கல்லூரி பல்கலைக்கழகமாக மாறியது (பக்கம் 17) என்ற  தகவலும்  தவறுதான். இவை -  நேர்காணல் தொகுப்புகளில்  நேர்ந்துவிடக்கூடிய  சிறிய தவறுகள்தான். எனினும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நவஜோதி ஜேகரட்னம் எமது தமிழ் மக்களுக்கு குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எம்மவருக்குப் பயனுள்ள நேர்காணல்களை லண்டன்  சண்றைஸ் வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கிறார்.  இத்கைய நேர்காணல் தொகுப்பு முறைமையை ஏனைய நாடுகளில் வானொலிகள் நடத்தும் ஊடகவியலாளர்களும்  தொடரவேண்டும் என்று சொல்லத்தக்கதாக  இந்த நூல் அமைந்துள்ளது.

தமிழில்  வானொலி  நேர்காணல் துறையில் பயிற்சி பெறுவதற்கு விரும்பும்  புதிய தலைமுறையினருக்கும்   இந்த நூல் பாடநூலாக விளங்கும்.

கல்வி, மருத்துவம், இசை, ஓவியம், நடனம், விளையாட்டு  என்பன அஞ்சல்  ஓட்டப்பாணியில்  தலைமுறை தலைமுறையாக வளர்வதுபோன்று  வானொலி - தொலைக்காட்சி ஊடகத்துறையும்  வாழையடி  வாழையாக  வளரவேண்டும்.

அவ்வாறு  வளர்வதற்கு  நவஜோதி   பாதை செப்பனிட்டுக்கொடுத்துள்ளார். அவருக்கு  எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.   இந்த நேர்காணல் தொகுப்பில் இடம்பெறும் 33 பெண்களும்  இங்கிலாந்திலிருந்துகொண்டு  செய்த  சேவைகள் காலத்தையும்  கடந்து பேசப்படும்.
----0----
 

dantv