Theneehead-1

Vol: 14                                                                                                                                                22.03.2017

பிரிட்டனிலிருந்து சுதந்திரம்: ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு'

பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற்று ஸ்காட்லாந்தை தனி நாடாக அறிவிப்பது scotlandதொடர்பாக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஸ்காட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் வலியுறுத்தினார்.

மேலும் அது தொடர்பாக ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று அவர் அறிவித்ததையடுத்து, பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அபர்டீன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மாநாட்டில் பேசுகையில் அவர் குறிப்பிட்டதாவது:ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்துவிட்டது. அது குறித்து பிரிட்டனில் அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஐரோப்பிய யூனியனுடனான பேச்சுவார்த்தை மார்ச் மாத முடிவில் தொடங்க பிரதமர் தெரசா மே தீவிரம் காட்டி வருகிறார். ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளின்படி அந்த அமைப்பிலிருந்து பிரிட்டனின் வெளியேற்றம் நிறைவடைய இரண்டு ஆண்டுகளாகும்.

ஆனால் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருப்பதே ஸ்காட்லாந்துக்கு நன்மை அளிக்கும் என்று நமது கட்சி தொடர்ந்து நம்புகிறது. பிரெக்ஸிட் நடவடிக்கைக்கான பேச்சு நடைபெறும் வேளையில், தங்களது வருங்காலம் குறித்து ஸ்காட்லாந்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அறியப்பட வேண்டும்.
பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற வேண்டுமா என்பது குறித்து 2014-இல் பொது வாக்கெடுப்பு நடைபெற்றபோது இணைந்திருக்க வேண்டும் என்று கணிசமான வாக்கு வித்தியாசத்தில் முடிவு வெளியாகியது. அதனை நாம் ஏற்றோம்.

அந்த வாக்கெடுப்பு முடிவு வெளியானவுடன், ஒரு தலைமுறைக்கு நீடிக்கும் விதத்தில் மக்கள் கருத்து தெரிவித்ததாகவும், பெரும் மாற்றம் ஏதேனும் நிகழ்ந்தால் மட்டுமே மீண்டும் மக்கள் கருத்தை அறிய வேண்டி வரும் என்றும் அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார்.

பிரெக்ஸிட் என்பது பெரும் மாற்றம்தான். அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் மாற்றங்கள் நிகழும். அவற்றின் விளைவுகள் பற்றி ஸ்காட்லாந்து மக்களின் கருத்தையும் கேட்க வேண்டும்.

எனவே, ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு முன்பாக, ஸ்காட்லாந்து குறித்துப் புதிய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வரும் 2018-ஆம் ஆண்டு இறுதியிலிருந்து, 2019-ஆம் ஆண்டு தொடக்கத்துக்கு உள்பட்ட காலத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தலாம்.

இது தொடர்பாக ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் இந்த வாரம் தீர்மானம் தாக்கல் செய்யப்படும்.

ஸ்காட்லாந்து சுதந்திரம் தொடர்பாகப் புதிய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் என்ன ஆகுமோ என்று கன்சர்வேடிவ் கட்சி மிகவும் அஞ்சுகிறது என்றார் நிக்கோலா ஸ்டர்ஜன்.

"அனைத்துப் பகுதிகளுக்கும் நன்மை'

பிரெக்ஸிட் நடவடிக்கையில் ஸ்காட்லாந்துக்குப் உரிய நியாயம் கிடைக்காது என்று முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜன் கடந்த வாரம் தெரிவித்தபோது பிரிட்டன் பிரதமர் தெரசா மே அதனை மறுத்தார்.

"பிரிட்டனின் அனைத்துப் பகுதிகளுக்கும் நன்மை ஏற்படும் விதத்தில் பிரெக்ஸிட் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பிரிவினைவாதிகள் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்' என்றார் தெரசா மே.

இந்த நிலையில், புதிய பொது வாக்கெடுப்பு நடத்த ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப் போவதாக நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்திருப்பது பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014-இல் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பிரிட்டனிடனில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்று 55.3 சதவீதத்தினரும், பிரிய வேண்டும் என்று 44.7 சதவீதத்தினரும் வாக்களித்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

dantv