Theneehead-1

Vol: 14                                                                                                                                                                20.04.2017

ராஜமெளலி நேரில் சென்று விளக்கம்: சத்யராஜ் மன்னிப்பை விடாது கோரும் கன்னட அமைப்புகள்!

பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில்  தடை செய்யக் கோரும் அமைப்புகளிடம் இயக்குநர் ராஜமெளலி நேரில் சென்று விளக்கம் கொடுத்தும் சத்யராஜ் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் எனbaahupali்று கன்னட அமைப்புகள் பிடிவாதமாக உள்ளன. 

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. பாகுபலி 2 படம் எப்போது வெளிவரும் என்று சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க கர்நாடகாவில் மட்டும் இன்னமும் அந்தப் படத்தின் விநியோக உரிமையை வாங்க ஆளில்லாத நிலையே உள்ளது. ஒரே காரணம் - சத்யராஜ்!

சில மாதங்களுக்கு முன்பு, காவிரி நீர் பிரச்னை தமிழக கர்நாடக மாநிலங்களில் வெடித்துக்கிளம்பியபோது கர்நாடகத்துக்கு எதிராக சத்யராஜ் பேசியுள்ளார். இதுதான் இப்போது பெரிய சிக்கல் ஆகியிருக்கிறது. கர்நாடகத்துக்கும் கன்னடர்களுக்கும் எதிராக பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவர் நடித்துள்ள பாகுபலி 2 படம் கர்நாடகாவில் வெளியாகும் என்று கன்னட அமைப்புகள் மல்லுக்கட்டுகின்றன. பிரச்னை பெரிதாக உள்ளதால் பாகுபலி 2 படத்தின் கர்நாடக உரிமையை வாங்கத் தயங்கி கடைசியில் இதுவரை அது விற்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் சத்யராஜ் மன்னிப்பு கேட்காமல் பாகுபலி படத்தை கர்நாடகாவில் வெளியிடமுடியாது என்று கன்னட அமைப்புகள் தங்கள் முடிவில் தொடர்ந்து உறுதியாக உள்ளன. படத்தை எதிர்க்கும்  முக்கிய பிரமுகர்களை பாகுபலி படக்குழு நேரில் சென்று சந்தித்து தடையை விலக்குமாறு கோரின. ஆனால் சத்யராஜ் மன்னிப்பு கேட்காமல் படத்தைத் திரையிடமுடியாது என்பதில் கன்னட அமைப்புகள் உறுதியாக உள்ளன.

கர்நாடகா ஃபிலிம் சேம்பரின் தலைவர் எஸ்ரா கோவிந்த் இந்த விவகாரம் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது: என்னையும் நடிகர் அம்பரீஸையும் இயக்குநர் ராஜமெளலி நேரில் வந்து சந்தித்தார். நாங்கள் பாகுபலி தெலுங்குப் படத்தை வெளியிடுவதைத் தடுப்பதாக அவர் கூறினார். ஆனால் நாங்கள் படத்துக்கு எதிரானவர்கள் அல்லர் என்பதை அவரிடம் கூறினோம். சத்யராஜ் மீதுதான் எங்களுக்குப் பிரச்னை உள்ளது என்றோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்யராஜ், காவிரி பிரச்னையின்போது கர்நாடகாவுக்கு எதிராகப் பேசியுள்ளார். கன்னட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார். நாங்கள் ஏன் எங்கள் முடிவிலிருந்து பின்வாங்கவேண்டும்? எங்களிடம் மன்னிப்புக் கேட்கும்படி சத்யராஜுக்கு அறிவுரை சொல்லுமாறு ராஜமெளலிக்குச் சொன்னோம். எங்கள் முடிவிலிருந்து மாறமாட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் படம் வெளியாகும் நாளன்று பெங்களூரில் பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார் கன்னட சலுவளிக் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ். அன்று பெங்களூரில் ஒரு பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த இயக்குநர் ராஜமெளலி கூறியதாவது: காவிரி விவகாரத்தில் சத்யராஜைக் குறி வைப்பது சரியல்ல. இது வருந்தத்தக்க விஷயம். சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பான செய்திகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். சத்யராஜுடன் கடந்த 5 வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறேன். இன்னொருவரைக் காயம்படுத்தும் மனிதராக அவரைக் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. இணையத்தளங்களில் சில வீடியோக்களைப் பார்த்தோம். அதை ஆராய்ந்து பார்க்கும்போது சத்யராஜ் சொன்ன கருத்துகள் எல்லாம் 9 வருடங்களுக்கு முந்தையவை. அதற்குப் பிறகு அவருடைய 30 படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளன. பாகுபலி 1 படமும் வெளியானது. அதில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. இப்போது திடீரென அந்தப் பிரச்னையைக் கொண்டுவருவது சரியல்ல.

சத்யராஜ் இந்தப் படத்தின் இயக்குநர் அல்லர். அவர் படத்தின் கதாநாயகனோ கதாசிரியரோ தயாரிப்பாளரோவும் அல்லர். அவர் ஒரு துணை நடிகர்தான். அவர் இந்தப் படத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்துமுடித்துவிட்டார். எனவே பாகுபலி 2 படத்தைத் தடை செய்வதன் மூலம் சத்யராஜுக்கு எவ்வித பாதிப்பும் நேரப் போவதில்லை. மக்கள் இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்வார்கள். இது சரிசெய்யப்படும். இந்தப் பிரச்னையுடன் நாங்கள் எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை. இது மிகவும் உணர்ச்சிகரமான பிரச்னை. இந்தப் பிரச்னை குறித்து பேசுவதா வேண்டாமா என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் குழப்பத்தில் உள்ளோம். ஆனால் சத்யராஜ் மீதான கோபத்துக்கு பாகுபலி படத்துக்குத் தடை விதிப்பது சரியல்ல என்றார்.

வாட்டாள் நாகராஜ் இந்த விவகாரம் பற்றிக் கூறும்போது: படத்துக்கு நாங்கள் எதிரி அல்ல. ஆனால் கட்டப்பாவாக நடித்துள்ள சத்யராஜை நாங்கள் எதிர்க்கிறோம். காவிரி விவகாரத்தின்போது கர்நாடகாவையும் கன்னட மக்களையும் அவர் மோசமாகப் பேசினார். நாங்களும் தமிழ்நாடுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் தமிழர்களுக்கு எதிராகப் பேசவில்லை. எனவே சத்யராஜ் தன்னுடைய பேச்சுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் என் தலைமையில் உள்ள 2000 அமைப்புகளும் பாகுபலி 2 படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டால் தடுத்து நிறுத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன் என்கிற கேள்வியை விடவும் இப்போது எதிர்பார்க்கப்படுவது - இந்தச் சிக்கலை சத்யராஜும் பாகுபலி படக்குழுவும் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்? இந்தத் தீவிர எதிர்ப்பைத் தாண்டி கர்நாடகாவில் பாகுபலி எப்படி வெளியாகும்?

dantv