Theneehead-1

Vol: 14                                                                                                                                                                21.04.2017

மொலிடூக்கர் - Mollydooker - (1)

முருகபூபதியின் சமாந்தரங்கள் ( சிறுகதைத்தொகுதி)

                                                                     ப. தெய்வீகன்

சிறுகதைகள்  என்பவை  அநேக  தருணங்களில்  இயல்புவாழ்வில் கடந்து  செல்லும்  சில  சம்பவங்கள்  ஆழ்மனதில்  சடுதியாக ஏற்படுத்துகின்ற  அதிர்வுகளின்  வெளிப்பாடு. ஓSamantharangal Murugapoopathy Bookயாமல்  தொந்தரவு செய்கின்ற  அகச்சீண்டல்களின்  நீட்சி  என்றும்  கூறலாம்.  இவை பெரும்பாலும்   அபுனைவுகளாக - அந்நியமற்ற மனிதர்களின் உண்மை முகங்களுடன்  உரையாடுபவையாக -  வாசகனின் எதிரில் நின்று அனுபவங்களை   அசைபோடுபவையாக  அமைவதுண்டு.

இப்படிப்பட்ட  அபுனைவுகள்  ஆத்ம கனதியுடன் கதை பேசக்கூடியவை. இந்த சிறுகதைகளின்  பிரசவங்கள்  மிகுந்த வலியுடன் வெளித்தள்ளப்பட்டவையாக இருக்கும்.  "என்னை பேசவிடுங்கள்" என்று  மிகுந்த  ஓர்மத்தோடு   கதறியழுகின்ற வலிகளை வெளிபடுத்துகின்ற   உணர்வுக்குவியலாக   இருக்கும். அந்த  ஓலத்தின் ஒவ்வொரு  துளியும்   ஜீரணம்  செய்யமுடியாத   அலைக்கழிப்புக்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட   சிறுகதை  தொகுதிதான்  முருகபூபதி  அவர்கள்  எழுதிய "சமாந்தரங்கள்"

தான்  புலம்பெயர்ந்த  87   காலப்பகுதியில்   தன்னால் ஜீரணிக்கமுடியாத   ஒரு  வாழ்வு  நிலை  மாற்றத்தை  நிச்சயம் ஏற்றுக்கொண்டேயாகவேண்டிய  ஒரு  நிர்ப்பந்தத்துடன் புலம்பெயர்வாழ்வை   அணைத்துக்கொள்ளும்  முருகபூபதி,  தான் இழந்துவிட்ட  வாழ்க்கை  என்ன - அவை  என்ன வகையான அலைக்கழிப்புக்களை   தன்னுள்  ஏற்படுத்தியிருக்கிறது போன்றவற்றை   இந்த  சிறுகதை தொகுதியில்   பேச விளைகிறார்.

இந்தக்  கதைகளில்  அவர்   நேரடியாக  தனது  புலம்பெயர்வு  வாழ்வு பற்றி   மாத்திரம்   உரையாடாமல்  தான்  தாயகத்தில் இழந்தவற்றையும்   நினைவு  கூருகிறார்.   அந்த  நினைவுகளுக்கு சமாந்தரமாக  நிகழ்காலங்களின்  மாற்றங்கள்  தன்னுள் ஏற்படுத்துகின்ற   சிந்தனை  சிதறல்களை  கவலையோடு  பதிவு செய்கிறார்.

அந்த  வெள்ளந்தியான  வெளிநாட்டு  வாழ்க்கை  கணங்களை சிலவேளைகளில்   எள்ளி  நகையாடுகிறார்.  தன்னைப்போன்ற புலம்பெயர்ந்த   சாதாரண  மனிதர்களின்  உணர்வுப்போராட்டங்கள் எத்தகைய   கனதி  மிக்கது  என்பதையும்  எடைபோடுகிறார்.

இதுபோன்ற  சிறுகதைகள்  -  சிறுகதை  தொகுதிகள்  இன்று  ஏராளம் வரத்தொடங்கிவிட்டன.    இப்படிப்பட்ட    கதைகளும்   அவற்றின் நீட்சிகளும்கூட   வெவ்வேறு  தளங்களுக்கு  சென்றுவிட்டன.  ஆனால், ஈழத்தமிழர்களின்  புலம்பெயர்வு  வாழ்வு  தொடர்பாக  பதிவு செய்யப்பட்ட  ஆரம்பகால  கதைகளில்  ஒரு  முக்கிய  பிரதியாக "சமாந்தரங்கள்"   பிரதான   பாகத்தை  வகிக்கிறது.  அந்த காலப்பகுதியில்   சம்பிரதாயமாகிப்போன "டொலர்  தேசங்களை எற்றுக்கொள்ளுதல்"   எனப்படும்   புலம்பெயர்வு    ஒவ்வொரு ஈழத்தமிழனையும்    எத்தகைய  நெளிவு   சுளிவுகளின்   ஊடாக  தமது வாழ்வோடு   சமரசம்   செய்யவைத்திருக்கிறது   என்பதை  முருகபூபதி அவர்களின்   கதைகள்    விரிவாக    பேசுகிறது.

புலம்பெயர்ந்து   தனிமையில்    வாழ்கின்றவர்களுக்கு   பாலியல் உலகம்   கட்டற்ற   வெளியை   திறந்துவிடுவது போன்ற  உணர்வை ஏற்படுத்துவதும்  அந்தச் சடுதியான  அதிர்ச்சி  உள்ளத்தில் கள்ளத்தனமான   தேடல்களை   நோக்கி   உந்திக்கொண்டிருப்பதும் வெளிநாட்டு   வழமைகளில்   தவிர்க்கமுடியாத   ஒன்று.  எண்பதுகளில் தாயகத்தை  பிரிந்த  ஒரு  தமிழ்  அகதி,  அப்படியான  ஒரு  சம்பவத்தை எவ்வாறு  எதிர்கொள்கிறான்  என்பதை  பேசும் சிறுகதை "திருப்பம்".  

தொடர்பு  வசதிகள்  மெலிந்துபோயிருந்த   அக்காலப்பகுதியில் தாயகத்தில்   ஏற்பட்ட  மரணங்கள்  புலம்பெயர்ந்து  இருந்தவர்களை எவ்வாறு  பாதித்தது....?  புரியாத  மண்ணில்  -  மொழியில் - மனிதர்களில்  தங்கள்  வாழ்வை  சிலந்தி வலைபோல பின்னிக்கொண்டிருக்கும்   மனிதர்களை  தொலைதூர செய்திகள் எப்படியெல்லாம்    உருட்டிப்போட்டது  என்பதை  பேசுகின்றது  "தவிப்பு" 

அதேபோல  ஒரு  கடிதமாகவே  தாய்க்கும்  மகனுக்கும்  இடையிலான உணர்வுப்பெருவெளியை  பேசுகின்றது  "ஆண்மை"  என்ற  சிறுகதை இவை  இந்தத்  தொகுதியில்  குறிப்பிடத்தக்கவை.

முருகபூபதி   இயல்பில்  ஒரு  ஊடகவியலாளர்.  எந்தச் சம்பவங்களிலும் அவை  சார்ந்த  தகவல்களிலும்  அபார  கவனம்  செலுத்துகின்றவர். இன்றும்கூட   வரலாற்றின்  பல  சம்பவங்களின்  தகவல்  களஞ்சியமாக - இம்மியும்   மறவாத  நினைவுகளுடன்  -  வாழ்பவர். " சமாந்தரங்கள்" தொகுதியில்கூட  அவர்  சம்பவங்களை  மிகவேகமாக உரையாடிக்கொண்டு   கடந்துசெல்கிறார்.

 படிமங்கள்  சார்ந்து  கலைத்தன்மைகளை  தனது  கதைகளின்  மீது பூசி  மெருகேற்றவேண்டும்  என்பதற்கு  அப்பால்   தனது   அனுபவ பகிர்வுகளை  -  அந்த  வலிகளை  -  வாசகன்  புரிந்துகொள்ளவேண்டும். அவற்றை   இந்த  சிறுகதைகளில்  சம்பவங்கள்  சார்ந்து  பேசவேண்டும் என்பதில்  அதிக  துரிதத்தை  அவர்  காண்பித்திருக்கிறார்  என்பதை இந்தத்  தொகுப்பு   உணரவைக்கிறது.  முன்னர்  கூறியதுபோல அக்காலப்பகுதியில்   புலம்பெயர்ந்த  தமிழ்மக்களின்  முக்கிய பிரதிநிதிகளில்   ஒருவராக  நின்று  தனது  அனுபவங்களை சிறுகதைகளாக  கொண்டுவந்திருக்கிறார்.Murugapoopathy.L

இந்தச்  சிறுகதைத் தொகுதியில்  எனக்கு  மிகவும்  பிடித்தது "மனப்புண்கள்"  என்ற  கதை.   நல்லிணக்கம்  பற்றி  உரையாடுகின்ற சிறுகதை.   எண்பதுகளின்  ஆரம்பத்தில்  ஏற்பட்ட  இன  வன்முறைகள் நண்பர்களாக  வாழ்ந்த  இரண்டு  இன  அயல்களின்  மத்தியில் ஏற்படுத்தும்   இடைவெளியும்  மீண்டும்  அவை  சேர்ந்துகொள்ளுகின்ற அழகையும்   ஒரு  சிறிய  குடும்பம்  -  மிகச்சிறியதொரு  சம்பவம் - அதில்   வந்துபோகும்  சிறுவர்கள் -  ஆகியோரை  முன்வைத்து கதைப்படுத்தியிருக்கும்  விதம்   ரசிக்கக்கூடியதாக  உள்ளது.

"சமாந்தரங்கள்"   புலம்பெயர்ந்த  ஆஸ்திரேலியத்  தமிழர்களின் முன்னோடிப்படைப்பாக  மாத்திரமல்ல - புலம்பெயர்ந்த  ஒட்டுமொத்த தமிழ் படைப்பபாளிகளின்   பதிவுகளின்  முன்பாகவும் பேசப்படக்கூடிய - வேண்டிய - சிறுகதைத்  தொகுதி.

பிற்குறிப்பு -   "மொலிடூக்கர்"   என்பது  இடதுகை  பழக்கம் உடையவர்களை   அழைப்பதற்கு  ஆஸ்திரேலியாவில் பயன்படுத்துகின்ற   தனித்துவமான  சொல்.  ஈழத்தமிழ்  இலக்கிய பரப்பில் -   முக்கியமாக  ஆஸ்திரேலியத்  தமிழ்ப்பரப்பில்  -  இதுவரை பெரியளவில்   பேசப்படாத -  தொடர்ந்தும்  பேசவேண்டிய  விடய விதானங்களை   "மொலிடூக்கர்"  என்ற  பத்தியின்  ஊடாகத் தொடர்ந்து   எழுதுவதாக  உத்தேசித்திருக்கிறேன்.  இந்தப் பத்தி ஆஸ்திரேலிய   எழுத்துக்களை   வெளி உலகுக்கு  எடுத்துச்செல்லும் களமாகவும்   அறிமுகம்    செய்துவைக்கும்   ஊடகமாகவும்   தொடர்ந்து உரையாடவிருக்கிறது.
தொடர்ந்து பேசுவோம்

dantv