Theneehead-1

Vol: 14                                                                                                                                                                21.04.2017

இந்துமதி ஆகிய நான்...!

ஆசி கந்தராஜா

மற்றவர்கள் என்னைப் பற்றி ஒரு மாதிரியாகப் பேசி, நீங்கள் கேள்விப்பட்டிருப்பீரinthumathi்கள். இது குறித்து எனக்கு எந்தக் கவலையும் குழப்பமும் இல்லை. கையில் இருக்கும் அழுக்கை, கழுவிவிட்டுப் போவதில்லையா? அது போல அநியாயங்களையும், துரோகங்களையும், ஊதித் தள்ளி விட்டு, நான், நானாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்துமதி, என்னுடைய பெயர்.வசதியான, கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவள். கட்டுப்பாடு என்றால் அப்படி ஒரு அநியாய கட்டுப்பாடு. அப்பா சந்திரசேகர், நிர்வாக அதிகாரியாக அரசாங்கத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர். இப்பொழுது முழு நேரமாக வீட்டில் அதிகாரம் செய்கிறார். அவர் சிரித்த நேரங்கள் குறைவு. முகத்தை எப்பொழுதும் சீரியஸ்ஸாக வைத்துக் கொள்வதால், சுற்று வட்டாரத்தில் வசிக்கும்பலருக்கு, அவருடன் பேசுவதற்கு பயம். தன்னை எதிர்த்துப் பேசாதபடி உளவியல் ரீதியாக, என்னையும் அம்மாவையும், வீட்டில் தயார் படுத்தி வைத்திருந்தார்.  அவர் செய்த ஒரே ஒரு நல்ல காரியம், என்னை பல்கலைக் கழகத்தில், அறிவியல் படிக்க விட்டதுதான்.

பல்கலைக் கழகத்தில்; எனது பெயர் ‘கட்டுப்பெட்டி’. எனக்கு நண்பர்கள் என்று பெரிதாக அங்கு யாருமில்லை. படிப்பு வீடென, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்.  சின்ன வயதிலிருந்தே எனக்கு நல்ல குரல் வளம். ஜாலியான நேரங்களில், சமீபத்தில் வெளி வந்த சினிமாப் பாடல்களைப் பாட, எனக்கும் ஆசை வரும். ஆனால் தேவாரம் பாட மட்டும் அப்பா அநுமதித்திருந்தார்.

அம்மாவைப் போலவே நானும் எலுமிச்சம் பழ நிறமும், அழகும்  என்பார்கள். ‘குதிரைபோல வளராதை, மாப்பிளை எடுப்பது கஷ்டம்’என்பது அம்மாவின் தினசரி தொணதொணப்பு. வளருவதும் வளராததும் என் கையிலா இருக்கிறது? என்று அம்மாவைத் திருப்பிக் கேட்க ஆசைதான். ஆனாலும் எனக்குப் பயம்.

இப்படியான சூழலில் வளர்ந்த எனக்கு, படிப்பு முடிந்தவுடன் கலியாணம் பேசத் துவங்கினார்கள். என்னுடைய அழகுக்கும் அப்பாவின் அந்தஸ்துக்கும், பலர் பெண் கேட்டு வந்தார்கள். எனக்கு யார் மாப்பிளையாக வரப்போகிறார் என்றுஅறிய, அடக்கமுடியாத ஆவலுடன் காத்திருந்தேன். இதனால் கலியாணம் பற்றிப் பேச்சு வரும்போது ஒளித்திருந்து ஒட்டுக் கேட்பேன். டாக்குத்தர் மாப்பிளை என்பார் அம்மா. நோய்களுடன் கட்டி அழும் வேலை, வேண்டாம் என்பார் அப்பா. என்ஜினியர்? அதுவும் வேண்டாம், ஆபத்தான வேலை என அப்பா தட்டிக் கழிப்பார். இப்படி, வந்த சம்பந்தம் ஒவ்வொன்றிலும் நுணுக்கம் பார்த்து, நொட்டை பிடித்து, சல்லடைபோட்டு, அப்பா தேர்ந்தெடுத்தது பரந்தாமனை. வசதியான குடும்பத்தின் ஓரே பையன். அழகானவன். பெரு நகரத்திலுள்ள பன்னாட்டு கம்பனியின் முகாமைத்துவ அதிகாரி. பந்தாவான வாழக்கை. கம்பனி கொடுத்த வீடும், காரும். பிறகென்ன? பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு தடல்புடலாக திருமணம் நடந்தது. வழமைபோல, இதில் எனது அபிப்பிராயம் கேட்கப்படவில்லை.  கலியாணம் முடிந்த அடுத்த மாதமே, சகல வசதிகளுடன் கம்பனி கொடுத்த வீட்டில், எங்கள் குடித்தனம் ஆரம்பமாகியது. வீட்டு வேலை செய்யவும், சமைக்கவும் தினமும் ஒரு ஆயா வந்து போனார்.

பரந்தாமன், சிரிக்காத சீரியஸ்ஸான பேர்வழி, என அறிந்து கொள்ள எனக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. சப்பாத்து முதல் சீப்புவரை அவனுக்கு நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டும். இது மேட்டுக்குடியில் வாழ்ந்து பழக்கப்பட்ட பலரின் இயல்பென்றாலும் அவனிடம் சில அசாதாரண இயல்புகளையும் நான் அவதானித்தேன்.

இரவு பத்து மணிக்கு முன்னர் வேலையால் வரமாட்டான். வந்தவன் எதுவும் பேசாமல் சமைத்து வைத்ததை சாப்பிடுவான். பின்னர் மடிக் கணினியுடன் சிறிது நேரம் கட்டி அழுது விட்டு தூங்கிவிடுவான். குளிக்கும்போதும், உடை மாற்றும் போதும், கதவையும் யன்னலையும் மறக்காது பூட்டிக் கொள்வான். மொத்தத்தில் வீட்டில் நான் இருக்கின்ற பிரக்ஞையே அவனுக்கு இருப்பதில்லை. இந்த ஒழுங்கு நடைமுறை, அலுவலக விருந்து உசாரங்களின் போதும் உறவினர்களின் வீட்டு விஷேசங்களின் போதும் மாறுபடும். அங்கு என்னைத் தன்னுடைய மனைவியென பெருமையுடன் அறிமுகம் செய்வான். ஆனால் அதிலும்ஒரு கட்டுப்பாடு. அவர்களுடன் நான் சிரித்துப் பேசாது, வணக்கத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்பாவின் கெடுபிடிக்குள்வளர்ந்த எனக்கு இது ஒன்றும் கஷ்டமாக இருக்கவில்லை. இதே வேளை, வெக்கத்தை விட்டு இங்கு இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்.திருமணத்துக்கு முன்னர் ஆண் ஸ்பரிசம் நான் அறியாததுதான். அதற்குப் பின்னரும்கட்டிய புருசனுடன் கட்டிலில் சேராமல், வேவ்வேறு அறைகளில் தூங்குவது எனக்கு கஷ்டமாக இருந்தது.

சமைப்பது, குளிப்பது, சாப்பிடுவது, சீரியல் பார்ப்பது, தூங்குவது, என ஒரே சுருதியில் ஓடிக்கொண்டிருந்தது காலத்தின் வெள்ளம். திடீரென ஒரு நாள் மகப்பேறு மருத்துவரிடம் என்னை அழைத்துப் போனான்பரந்தாமன். அது அவனது நிறுவனத்துக்கு மருத்துவ சேவைகள் வழங்கும் கிளினிக். இதனால் எனக்கு அங்கு ராஜ மரியாதை. பரந்தாமன் சொன்னதாக மகப்பேறு மருத்துவர் என்னைத் தனியாக சந்தித்தார். அவருக்கு என் அம்மாவின் வயது இருக்கும், மிகவும் கனிவாகப் பேசினார்.

முதலில், எனக்கும் பரந்தாமனுக்குமான தாம்பத்திய உறவு பற்றிக் கேட்டவர் அடுத்து பரந்தாமனின் சில மருத்துவ தகவல்களைச் சொல்லத் துவங்கினார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

‘நீங்கள் தாயாக வேண்டுமென்று பரந்தாமன் விரும்புகிறார்’.

‘நானும்தான்’என்றேன்.

‘ஆனால் இதிலொரு சிக்கல் இருக்கிறது. பரந்தாமன் ஆண்மை அற்றவர், அவரால் தாம்பத்திய உறவு கொள்ள முடியாது. சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தால் ஏற்பட்ட உளவியல் குறைபாடு, இதுவெனத் தெரிகிறது’.

திகிலடித்து உறைந்து போய், மருத்துவரை உற்றுப் பார்த்தபடி இருந்தேன். எனது ரெஸ்போன்ஸுக்கு காத்திராமல் விஷயத்தை விரிவாகச் சொல்லத் துவங்கினார்.

‘மருத்துவர் என்ற முறையிலே நான் உங்களுக்கு சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். உடல் ரீதியான ஆண்மைக் குறைபாட்டுக்கு அப்பால் அவருக்கு இன்னுமொரு பிரச்சனையும் உண்டு. பரந்தாமனின் விந்தணுக்கள் கருக்கட்ட முடியாதவை என, ஆய்வு கூட தகவல் சொல்கிறது’.

‘பின் எப்படி நான் தாயாக வேண்டுமென பரந்தாமன் எதிர்பார்க்கிறார்?’என அதிர்ச்சி விலகாமல் கேட்டேன்.
‘இந்துமதி, இன்றைய விஞ்ஞான உலகில் எல்லாமே சாத்தியம். பரந்தாமனின் விந்தணு, கருக்கட்டும் வல்லமை அற்றதுதான். இதில் அவர் சொல்ல விரும்பாத, ஏதோ ஒருவகை அழுத்தம் அவருக்கு இருக்கிறது. அதனால் முன்பின் தெரியாத ஒரு ஆணின் விந்தணுவை பாவித்து, ஐ.வீ.எவ் (IVF) முறை மூலம் உன்னை கற்பமாக்க, பரந்தாமன் விரும்புகிறார். அதற்கு உன் அனுமதியை எதிர்பார்க்கிறார். இது ஒன்றும் புதிதல்ல. விந்தணு குறைபாடுள்ள பலர் இதை செய்திருக்கிறார்கள்’

இப்படிச் சொல்லி ஒரு அணுகுண்டை என் முன்னே வெடிக்க வைத்தார், வைத்தியர்.

‘பரந்தாமனின் ஆண்மைக் குறைபாடு பற்றி, திருமணத்துக்கு முன்னர் அவருக்கு தெரியாதா?’

‘அப்படித்தான் சொல்கிறார். அல்லது அவரின் குறைபாடு திருமணத்தின் பின் நீங்கிவிடும் என அவர் நினைத்திருக்கலாம். இந்த விடயத்தில் திருமணத்துக்கு முன்னரே பரீட்சித்துப் பார்க்கும் நடைமுறை நமது கலாசாரத்தில் இல்லையல்லவா?’

வைத்தியரின் பதிலால், சொல்ல முடியாத உணர்வுகள் என்னுள் எழுந்தன. பரந்தாமன் என்னை ஏன் திருமணம் செய்தான்? என்ன நிர்ப்பந்தம்? இதனால் பரந்தாமனுக்கு என்ன நன்மை? ‘கன்னி கழியாமலே குழந்தை பெற்றுக்கொள்’என எப்படிக் கேட்க முடிகிறது? என, முன்னும் பின்னுமாக ஏராளமான கேள்விகள் என் முன்னே நின்றன. முடிவிலே, வாழாவெட்டி என்ற பெயருடன்.பெற்றோர்வீட்டுக்குச் செல்லவதிலும் பார்க்க, எனது சிலுவையை நானே சுமப்பதெனத் தீர்மானித்தேன்.

புதிய தொழில் நுட்பத்தின் கீழ், மின்னல் வேகத்தில் விஷயங்கள் நடந்தேறி, நான் கர்ப்பமானேன். வழமைபோல வளைகாப்பு முடிந்தவுடன் பிரசவத்துக்கு வீட்டுக்கு கூட்டிப் போனார் அப்பா.

வைத்தியர் குறித்த காலத்தில், கன்னி கழியாமல், ஆண்ஸ்பரிசம் இல்லாமல், நான் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தேன். குழந்தையை பார்க்க பரந்தாமன் தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்தான். தன்னுடைய மகன் என, பெயர் பதிவு செய்தான். இரு பக்க பெற்றோர்களுக்கும், குழந்தை பிறந்ததில் ஆனந்தம்.பரந்தாமனின் பெற்றோர் ஒருபடி மேலே போய், முடி இறக்கி காணிக்கை செலுத்த கதிர்காமம் போனார்கள்.

துண்டு வெட்டி, என்னை அழைத்துப் போக அப்பா ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். வீடு போவதற்கு முன்பு, மருத்துவ ஆலோசனை வழங்க, மகப்பேறு மருத்துவர் என்னுடன் தனியாகப் பேசினார்.

‘இந்துமதி, பிரசவத்தின் பின்னர் தாயின் உடலில் ஹோர்மோன்களின் அளவு கூடிக் குறைவது வழக்கமானதுதான். இருந்தாலும் உங்கள் உடம்பில் பாலியல் ஹோர்மோன்களின் அளவு மிகக் கூடுதலாக இருக்கிறது. இது ஐ.வீ.எவ் முலம் நீங்கள் கற்பமானதால் வந்த பக்க விளைவாகவும் இருக்கலாம். எனவே மூன்று மாதங்கள் வரை கவனமாக இருங்கள்’என, ஏதோ ஒன்றை சூசகமாகச் சொல்ல முயன்றார், மகப்பேறு மருத்துவர்.

‘கொஞ்சம் விளக்கமாகச் செல்லுங்கள் டொக்டர். நான் அறிவியல் படித்டிவள், புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.’

‘எஸ்றொஜின்(Estrogin),புரோஹெஸ்ரெறோன் (Progesterone), ஆகிய இரண்டும் பெண்களின் பாலியல் ஹோர்மோனகள். இவற்றின் அளவு பிரசவத்தின் பின்னர் கூடுவது இயல்பானது. ஆனால் உங்கள் உடம்பில் பெண்களின் பாலியல் ஹோர்மோன்களுடன், அன்றொஜின்(Androgen) எனப்படும் ஆண் பாலியல் ஹோர்மோனும் மிக அதிகளவில் உள்ளது.’

‘ஆண் பாலியல் ஹோர்மோனா?’

‘ஆம், அன்றொஜின் விஷயத்தில், அதன் பெயரை வைத்து பலருக்கும் குழப்பம் வருவது வழமைதான். இது ஆண் பாலியல் ஹோர்மோனாக இருந்தாலும் பெண்கள் உடம்பிலும் சிறிதளவு சுரக்கப்படுகிறது. இது கூடுவதால்தான் பெண்களுக்கு அங்கங்கே அதிகளவில் ரோமம் முளைப்பது. அதுமட்டுமல்ல, பிரசவத்தின் பின்னர், பெண்களின் பாலியல் இச்சையை இது அதிகரிக்குமெனவும் சொல்லப்படுகிறது.’

விஷயத்தை விளக்கி, ஆய்வு கூட அறிக்கையைத் தந்து விடைபெற்றார், மகப்பேறு வைத்தியர். முதல் தர வசதிகள் கொண்ட அந்த, தனியார் வைத்திய சாலைச் செலவுகள் அனைத்தையும், வழமை போல பரந்தாமனின் நிறுவனமே செலுத்தியது.

‘மூன்று மாதங்களாகுதல் எங்களுடன் இரு, இந்துமதி’என அம்மா கட்டாயப் படுத்தினார். அப்பா பேரன் பிறந்த சங்கதியை ஊரெல்லாம் சொல்லித் திரிந்தார். அம்மாவுக்கு பேரனுடன் நன்றாகவே பொழுது போனது.  பரந்தாமனின் பெற்றோர் அடிக்கடி வந்து குழந்தைக்கு நகை போட்டு அழகு பார்த்தார்கள். அதற்கும் மேலால் அவர்கள், ‘பரந்தாமனின் முக்கு, பரந்தாமனின் காது, அச்சடித்த மாதிரி பரந்தாமனேதான்’என குழந்தையுடன் விழையாடும் போது, நான் அணு அணுவாக ரணமானேன்.

அளவுக்கதிகமாக தாய்ப்பால் சுரந்ததால், தாய்ப்பாலுடன் குழந்தை வளர்ந்தது. குழந்தை முலையைக் கடிக்கும் போது கூடவே என் உடம்பு சூடாகி, உணர்வுகள் கிளர்ந்தன. இந்த அநுபவம் எனக்கு முற்றிலும் புதிது. இதுவரை நான் அறியாதது. இதனால் வழக்கத்துக்கு மாறாக, இரவிலும் குளிக்கத் துவங்கினேன்.

சாப்பாட்டு சைமேல் இருந்த மகப்பேறு ரிப்போட்டை, வாசித்த சரவணன் சிந்தனை வயப்பட்ட முகத்தோடு இருந்தான். அவன் ஒரு மருந்துக் கம்பனியின் விற்பனை பிரதிநிதி. மருந்துகள், ஸ்ரெறோயிட்ஸ், ஹோர்மோன்கள், பற்றிய சகல விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவன். சில காலமாக எங்கள் வீட்டின் பின் போஷனில் வாடகைக்கு குடியிருக்கிறான். என்னிலும் மிக இளையவன். பல விதத்திலும் பெற்றோருக்கு அவன் உதவியாக இருந்ததினால், அப்பா அவனை  தங்களுடன் சாப்பிடுமாறு சொன்னார். தொழில் காரணமாக ஊர் ஊராக அலைந்து திரியும் சரவணன், நாங்கள் தூங்கிய பின்னரே வீட்டுக்கு வருவான். வந்தவன், மேசை மீதுள்ள சாப்பாட்டை சாப்பிட்ட பின் தனது அறைக்குள் முடங்கிவிடுவான்.

ஒரு நாள் யதேர்ச்சையாக எனது ஹோர்மோன் பிரச்சனைக்கு மருந்து இருப்பதாகவும், அது பிரசவத்தின் பின்னரான மாதவிடாய் வட்டத்தை சீராக்கும் எனச் சொல்லி, இது பற்றி மருத்துவரிடம் பேசுமாறு சொன்னான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை, அதுவும் ஆவணி ஞாயிறு!

திருக்கேதீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு நாள். அதிகாலை தரிசனம் காண, சனிக்கிழமையே அப்பா அம்மாவுடன் கிளம்பி விட்டார்.பிரசவத்துக்குப் பின்னர், கணக்குப்படி இரண்டு மாதவிடாய் சுற்று நிறைவடைந்த காலமது. ஆனாலும் அதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. அன்றும் வழமைபோல உடம்பு சூடாகி பதட்டமாக இருந்தது. குளிக்கப் போய்; தண்ணீரை மொண்டு, தலையில் ஊற்றிக் கொண்டேன். வீட்டில் குழந்தை அழுத சத்தம் எனக்கு கேட்கவில்லை. நீண்ட நேர குளியலின் பின் ஈரத்துணியுடன் அறைக்குள் வந்த போது, அழுத குழந்தையை சரவணன் சமாதனப் படுத்திக் கொண்டிருந்தான்.

அப்பொழுதுதான் அது நடந்தது! அது, எனக்கான முதல் ஆண் ஸ்பரிசம். அதுவரை நான் அறிந்திராத ஆனந்தம். எனது வாழ்வில் நான் அநுபவித்த முதலும் கடைசியுமான ஆண் சுகம்!

நடந்து முடிந்த விஷயம், ஏற்றுக் கொள்ள முடியாதது. எங்கள் இருவராலும் நியாயப் படுத்தவும் முடியாதது. சரவணன் அடுத்த நாளே, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைக் காலிசெய்து விட்டுப் போய்விட்டான். அதன் பிறகு நான் அவனைக் காணவில்லை.

வெளியே சொல்ல முடியாத துயரங்கள் துரத்த, மூன்று மாதங்கள் கடந்து போனது. பரந்தாமன் என்னையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துப் போனான். குழந்தையின் அலுவல்களைப் பார்க்கவென, என்னுடன் அம்மாவும் வந்திருந்தார். வீட்டில் எனக்கு மட்டுமல்ல குழந்தைக்கான தேவைகள் எதிலும் பரந்தாமன் எந்தவித குறையும் வைக்கவில்லை.

நாட்கள் மௌனமாக உதிர்ந்து கொண்டிருந்தன. பிரசவத்தின் பின் பல மாதங்களாகியும் எனக்கு மாதவிலக்கு வரவில்லை. உடல் பருமன் கூடியது. எனக்கு ஐ.வீ.எவ் ஆலோசனை வழங்கிய கம்பனி வைத்தியரிடம் போனேன். என்னைப் பரிசோதித்த வைத்தியர் ‘நீங்கள் அவசரப் பட்டிருக்கவேண்டாம். இருந்தாலும் பரந்தாமனின் பாலியல் சிக்கல் நீங்கியதில், எனக்கு சந்தோசம். மருத்துவத்தில் இப்படி பல அதிசயங்கள் நடப்பதுண்டு’என்றார்.

‘என்ன சொல்கிறீர்கள் டொக்டர்?’

‘இந்துமதி, நீங்கள் இயற்கையான முறையில், தற்போது கர்ப்பமாயுள்ளீர்கள். இப்பொழுது ஐந்து மாதங்கள். பிரசவத்தின் பின்னரான உங்களின் அபரிதமான ஹோர்மோன்களின் அளவு, கருக்கட்டும் வாய்ப்பை அதிகரித்திருக்க வேண்டும். பரந்தாமனுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்’எனச் சொல்லி கைகொடுத்து விடைபெற்றார்.

வைத்தியரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சம்மட்டி அடிகளாக என் மண்டையைத் தாக்கியது. இதில் யார் குற்றவாளி? யாரைக் குறை சொல்வது? இனி அடுத்து என்ன? குழப்பத்தில் நான் உறைந்து போனேன்.

கால ஓட்டத்தில், நான் கர்ப்பமான செய்தியை பரந்தாமன் அறிந்திருக்க வேண்டும். இருந்தும் அதுபற்றிப் பேசவில்லை. வழமைபோலவே வீட்டில் காரியங்கள் நடந்தேறின.

பொழுது விடிந்தால் நாளை குழந்தையின் முதலாவது பிறந்த நாள். இருபக்க தாத்தா பாட்டிகளும் ஓடி ஓடி ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். வழமைக்கு மாறாக மனம் குழம்பிய நிலையில் பரந்தாமன் இருந்தான். கணினியில் வேலையை முடித்து நள்ளிரவுக்குப் பின்னர் படுக்கைக்கு சென்றவன், காலையில் எழும்பவில்லை, கட்டிலில் இறந்து கிடந்தான்.

சயனைட் அருந்தி தான் தற்கொலை செய்து கொள்வதாக, தனது மடிக் கணினியில் குறிப்பெழுதி வைத்ததுடன், காவல் துறைக்கும் மின் அஞசல் அனுப்பி இருந்தான்பரந்தாமன். பல்வேறு வதந்திகள், சந்தேகங்கள், விசாரணைகளுக்கு மத்தியில் காரியங்கள் நடந்தன. குழந்தையைக் கையில் ஏந்தியபடி, பரந்தாமனின் அப்பா கிரியைகளைச் செய்து முடித்தார்.

கண்ணீரினாலும் துயரங்களினாலும் நிரம்பி வழிந்த எனது வாழ்க்கை, மீண்டும் நகர்ந்தது. இனம் தெரியாத உணர்ச்சிக் கலவைகளின், சாட்சியாக எனக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் தந்தை, பரந்தாமன் என இம்முறையும் பதிவு செய்யப்பட்டது.

பிரசவத்தின் பின்னர் பெற்றோரின் வீட்டுக்குச் செல்ல என் மனம் ஒப்பவில்லை. இருபக்க பெற்றோர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், நான் பெண்கள் காப்பகம் ஒன்றில் அடைக்கலமானேன்.

பரந்தாமனுக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கம்பனியிலிருந்து தொடர்ந்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவை மேசை மேல் தூசு படிந்து கிடக்கின்றன. அதை நான் பெற்றுக் கொள்ளப் போவதில்லை. அது எனக்கோ, குழந்தைகளுக்கோ உரியதுமல்ல.

நான் வாழ்ந்த வனாந்தர வாழ்க்கை, மிகக் கொடுமையானது. இதற்குப் பதில் சொல்லவேண்டியவர்கள் யார்? அப்பாவா, பரந்தாமனா, நானா, சரவணனா, அல்லது காலமா? இப்படி ஏராளமானKant national கேள்விகள் என் மனதைக் கிளறின.

கேள்விகளுக்கான பதிலைச் சொல்லி எவரையும் நான் கொச்சைப் படுத்த விரும்பவில்லை.

அதனால்...,

இந்துமதி ஆகிய நான், இப்பொழுது வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்!

(ஆசி கந்தராஜா,(19. 04. 2017) குமுதம்,சிறப்பு (முத்திரை) சிறு கதை)
 

dantv