|
சம்பந்தன் ஐயாவுக்கு ஒரு கோரிக்கை!
-ஈழப்பிரியன்.
மே 18 வரை பிரபாகரனை எப்படியும் காப்பாற்றி விடவேண்டும் என்று துடியாய் துடித்தவர்கள் தமிழ்க் கூட்டமைப்பினர்.புலிகள் பலவந்தமாக மக்களையும் தம்முடன் அழைத்துச்சென்று பலியாக்கியபோது அதற்கு எதிராக வாய்திறக்க திராணியற்று இருந்தவர்கள்.அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் புலிகளின் தயவுடன் எப்படியும் நுழைந்துவிட்டால் போதும் என்பதுதான் அவர்களின் அப்போதைய குறியாக இருந்தது.
ஆனால் மே 18க்குப் பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் தாம்தாம் தமக்கு தனிப்பட்ட முறையில் எது நல்லதோ அந்த முடிவுகளுக்கு அமைய செயற்படத்தொடங்கிவிட்டனர். எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆலவட்டம் பிடிக்கும் தமிழரசுப் பாரம்பரியம் இப்போதும் அவர்களுக்கு ஆலவட்டம் பிடிக்க சம்பந்தன் போன்ற தலைவர்கள் துடிக்கின்றனர்.
இதனால்தான், இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனை கூறவைத்தது.
இந்த விடயம் தொடர்பாக தான் விடுதலைப்புலிகளிடம் நீண்ட நேரம் வாதிட்டதாகக் கூறும் இரா. சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறவைத்திருக்கின்றது. இதன் அர்த்தம் மிக இலகுவானது.
புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்கும் முடிவை எடுத்திருக்காவிட்டால் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பார்கள். அப்படி வாக்களித்திருந்தால் அவரே ஜனாதிபதியாகியிருப்பார். அவர் ஜனாதிபதியாகியிருந்தால் பிரச்னைக்குத் திர்வுகண்டிருப்பார். இதுதான் சம்பந்தர் மறைமுகமாக சொல்ல வருவது.
அதாவது இந்தத் தேர்தலில் மகிந்தவை தோற்கடிக்க வைத்து ரணில் சார்பு வேட்பாளரை பதவிக்கு கொண்டுவந்தால் தமிழர் பிரச்னைக்கு ரணில் தீர்வு கண்டுவிடுவார் என்பதுதான் சம்பந்தர் தமிழ் மக்களுக்கு சொல்ல வருவது. 2002ம் ஆண்டில் புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்ட ரணில் எப்படி தீர்வுகாண முயன்றார் என்பதை தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
தமிழ் மக்களின் ஏக தலைவர் என்ற சம்பந்தன் அன்று ஏற்றுக்கொண்டிருந்த பிரபாகரன், 2003ம் ஆண்டு மாவீரர் தின உரையில் படித்ததை சம்பந்தன் ஐயாவுக்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.‘‘எமது விடுதலை இயக்கத்திற்கும் ரணில் விக்கிரமசிங்காவின் அரசுக்கும் மத்தியில் சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், தாய்லாந்தில் ஆரம்பித்த பேச்சுக்களில் உருப்படியான, ஆக்கபூர்வமான முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. ஆறு மாத காலத்திற்குள் நிகழ்ந்த ஆறு சுற்றுப் பேச்சுக்களின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் நிறைவேற்றப்படவில்லை. போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கும் இடம்பெயர்ந்த மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் நிறுவப்பட்ட உப- குழுக்கள் செயலிழந்து போயின. அரசுடன் பேசி எமது மக்கள் எதிர்கொண்டு நின்ற பூதாகரமான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நாம் எடுத்த முயற்சிகள் பயனற்றுப் போயின. இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையைத் தோற்றுவிப்பது, இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது, போரால் அழிவுற்ற கட்டுமானங்களை மீளமைப்பது, அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பது போன்ற எமது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை உதாசீனம் செய்துவிட்டு, அரச தரப்பும் அனுசரணையாளர்களும் மனித விழுமியங்கள் பற்றியும் இறுதித் தீர்வுக்கான வழிமுறைகள், வரைபடங்கள் பற்றியுமே முக்கிய கவனம் செலுத்தினர். இதனாற் பேச்சுவார்த்தை, மக்களது பிரச்சினைகளுக்கும் அபிலாசைகளுக்கும் அப்பால் வேறு திசையில் நகர்ந்தது. இது இவ்வாறிருக்க, சமாதானப் பேச்சுக்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டி, உலக நாடுகளிலிருந்து உதவியையும் கடனையும் பெற்று, போரினால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதிலேயே ரணிலின் அரசு அதீத அக்கறை காட்டியது.’’ சம்பந்தனின் அன்றைய ஏகதலைவர் கூறிய வார்த்தைகள் இவை.
ரணில் அப்போது ஆட்சிக்கு வந்திருந்தாலும் புலிகளுடனான சமாதான பேச்சுக்கள் முறிவடைந்துதான் இருக்கும், யுத்தம் ஆரம்பமாகித்தான் இருக்கும். ஏனெனில் யுத்தத்தை நடாத்தியது சிறிலங்கா அரசு அல்லவே. பிரபாகரனின் முடிவு அது ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று.
இவை எல்லாம் இப்போது பழைய சங்கதிகள். இப்போது சரத் பொன்சேகாவுடனும் ரணில் விக்கிரமசிங்கவுடனும் சம்பந்தன் பேசுகிறாராம். இது எவ்வளவு நகைச்சுவையானது?
சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்னர் ரணில் சில நிபந்தனைகளை முன்வைத்தார். அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில். சரத் பொன்சேகா வெற்றிபெற்றதும், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கவேண்டும்.
தன்னை பிரதமராகக் கொண்ட காபந்து அரசு ஒன்றை உடனடியாக நிறுவி, அதன்முலம் பாராளுமன்றத்திற்கு நியாயப+ர்வமான தேர்தல் நடாத்தப்படவேண்டும். காபந்து அரசில் தமிழ்க்கூட்டமைப்பும் இடம்பெறவேண்டும். இவைதான் ரணில் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள். தனது கோரிக்கைகளை சரத் ஏற்றுக்கொண்ட பின்னரே அவரை ஆதரிக்கத் தொங்கினார் ரணில்.
ஆனால் ரணிலின் அறிவிப்புக்கு உடனடியாக மறுப்பை வெளியிட்டது ஜே.வி.பி. காபந்து அரசுக்கு யாரும் பிரதமராக இருக்கமாட்டார்கள் என்றது அந்த அறிவிப்பு. ஜே.வி.பி.யின் அந்த அறிவிப்பே பின்னர் சரத்தின் அறிவிப்பாகவும் வெளிவந்தது. இதற்குப் பின்னரும் தமிழ் மக்களின் இன்றைய பிரச்னைகள் குறித்து சரத்துடன் பேசுகின்ற சம்பந்தன் ரணிலையும் மத்தியஸ்தத்திற்கு வைத்துப் பேசுகின்றாராம். ஐயா, இந்தப் பேச்சுக்களில் ஜேவிபியையும் வைத்திருக்கவேண்டும் என்ற சாதாரண விடயம்கூடவா ஒரு பழுத்த அரசியல்வாதியான உங்களுக்கு தெரியவில்லை.
சரத்தை ஆதரிக்கவேண்டும் என்பது உங்கள் முடிவு. அதனை தமிழ்மக்கள் தலையில் அரைப்பதற்காக நீங்கள் நடாத்தும் இந்த கண்ணாம்ப+ச்சி விளையாட்டுக்கள் எல்லாம் தமிழ்மக்களுக்கு தெரியாததல்ல. ரணிலுடனும் சரத்துடனும் என்ன பேசுகிறீர்களோ தெரியவில்லை. ஆனால் அடுத்த தேர்தலில் ஐதேகவின் தேசியப் பட்டியல் முலம் உங்களுக்கு ஒரு இடத்தை கேட்டு வாங்கிவிடுங்கள். இல்லையெனில் அடுத்த பாராளுமன்றக் கதிரை ஒரு கனவாகவே உங்களுக்கு போய்விடும்.
|