|
புலிப் பாசிசம் தோற்கடிக்கப்பட்டமையே, 2009ம் ஆண்டின் மாபெரும் வரலாற்று நிகழ்வாகும்!
சண்முகம் சுப்பிரமணியம்
2009ம் ஆண்டு எம்மைக் கடந்து சென்றிருக்கிறது, அல்லது அதைக் கடந்து நாம் 2010ம் ஆண்டில் பிரவேசித்திருக்கிறோம். கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டுகளும், மனித குலத்துக்கு சில நன்மைகளையும், சில தீமைகளையும் வழங்கிவிட்டுச் சென்றிருக்கின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டை நாம் எடுத்து நோக்குகையில், பொதுவாக மனித சமுதாயம் பெரும் நன்மைகளை பெற்ற ஆண்டாக அமையவில்லை என்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது. அதேவேளையில் கடந்த ஆண்டு, உலகம் இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்கிய ஆண்டாகவும் இருந்தது. அதில் ஒன்று, உலகப் பொருளாதார நெருக்கடியாகும். 1990ல் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் சோசலிச அமைப்பு தகர்க்கப்பட்ட பின்பு, முதலாளித்துவத்தின் மேன்மை பற்றியும், ஒற்றை வல்லரசு (அமெரிக்கா) தலைமை பற்றியும் ஏகாதிபத்தியம் பேசி வந்த சூழலில், இந்தப் பொருளாதார நெருக்கடி, முதலாளித்துவ பொருளாதார முறைமையினதும், ஏகாதிபத்திய அமைப்பினதும் கையாலாகாத் தன்மையை உலக மக்கள் முன்னால் தோலுரித்துக் காட்டியது. மற்றொன்று, சுற்றுச்சூழல் பற்றிய பிரச்சினையாகும். மனிதருக்கு வாழ்வதற்கு இருக்கின்ற இந்த ஒரேயொரு உலகத்தை அழிவுக்கு இட்டுச் செல்லும் வகையில், புவி வெப்பமடைதலும், சுற்றுச்சூழல் மாசு அடைவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமைக்கான பிரதான பொறுப்பு ஐரோப்பாவிலும், அமெரிக்கக் கண்டத்திலும் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகளையே சாரும். அவை தமது பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சியுறுத்தி, அதன் மூலம் தமது சுரண்டலை அதிகரிக்கவும், உலகை ஆதிக்கம் செய்யவும், கடந்த நூற்றாண்டில் மேற்கொண்ட கட்டுப்பாடற்ற இயந்திர மயமாக்கலின் விளைவாகவே சுற்றுச்சூழல் பிரச்சினை தோன்றியது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளையும், அண்மையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹெக்கில் நடைபெற்ற மாநாடு வரை, இந்த முதலாளித்துவ நாடுகள் சீர்குலைத்தே வந்துள்ளன. எனவே முதலாளித்துவம் உருவாக்கிய இப்பிரச்சினையும் உலக மக்களுக்கு எதிரானது என்பதையே வரலாறு நிரூபித்து நிற்கிறது. இத்தகைய ஒரு உலகச் சூழலில், உலக அர ங்கில் முன்னுதாரணமாக, எமது இலங்கை பாரிய சாதனை ஒன்றை கடந்த ஆண்டில் நிலைநாட்டியுள்ளது. அதாவது நாட்டை கடந்த 30 வருடங்களாக பீடித்திருந்த உள்நாட்டு யுத்த சூழலில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்கால உலக வரலாற்றில் உள்நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக யுத்தம் இடம் பெறும் நாடுகளில,; அதை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்த ஒரேயொரு நாடு இலங்கை மட்டுமே என்று கூறினால் அது மிகையாகாது. இந்தப் பாரிய வெற்றி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இன்றைய அரசாங்கம் பதவியேற்ற பின்பே, மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என்றுதான் கூற வேண்டும். 1983ல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முன்னைய அரசுகள் பல முயற்சிகளை எடுத்த போதும், அவை எதுவும் வெற்றி பெறவில்லை. தற்போதைய வெற்றிக்கு அடிப்படையான காரணம், சரியான அரசியல் தலைமையே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இலங்கையின் உள்நாட்டு யுத்தம், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையின் கூர்மையான ஒரு அரசியல் வெளிப்பாடு என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. இதை சீன மக்களின் மாபெரும் தலைவர் மாஓசேதுங் அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியலாகும்’ என்பதாகும். அந்த வகையில், இலங்கைத் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்கான போராட்டமும் ஆரம்பத்தில் அரசியல் ரீதியான போராட்டமாக, அதாவது இரத்தம் சிந்தாத யுத்தமாகத்தான் ஆரம்பமானது. ஆனால் அதை நடாத்திய தலைமை ஏகாதிபத்தியத்துக்கும், முதலாளித்துவத்துக்கும் சார்பான, மிகவும் பிற்போக்கான தலைமையாக இருந்ததினால், அதன் போராட்டங்கள் தவறான இலக்குகளை நோக்கி செலுத்தப்பட்டு தோல்விக்கு மேல் தோல்வியைத் தழுவிக் கொண்டன. தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய பூர்ஷ்வா தலைமைகள் தோல்வியடைந்த சூழலில், இலங்கையில் படு பிற்கோக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சி, அக்கட்சியிலேயே மிகவும் பிற்போக்கான அரசியல்வாதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் 1977ல் ஆட்சிக்கு வந்தது. அவரது அரசு தமிழ் மக்கள் மேலான தேசிய ஒடுக்குமுறையை, அவர்கள் மேலான யுத்தமாக மாற்றியது. அதன் காரணமாக, தமது கையாலாகாத தமிழ் தலைமைகளை ஒதுக்கிவிட்டு, பல குட்டி முதலாளித்துவ தமிழ் இளைஞர் குழுக்கள் தமிழ் மக்களின் தலைமையை தமது கையில் எடுத்துக் கொண்டன. அவர்கள் ஆயதப்போராட்ட வழிமுறையை, தமது போராட்ட வடிவமாக வரித்துக் கொண்டனர். அதாவது தமிழ் மக்களின் போராட்டம், ‘இரத்தம் சிந்தாத அரசியலிலிருந்து’ விடுபட்டு, ‘இரத்தம் சிந்தும் அரசியலாக’ மாறியது. ஆனாலும் கூட, பழைய தமிழ் தலைமைகள் எந்த தமிழ் ஆதிக்க சக்திகளை சார்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனவோ, எந்த ஏகாதிபத்திய சக்திகளை சார்ந்து நின்றனவோ, அந்த சக்திகளையே இந்த புதிய குட்டி முதலாளித்துவ ஆயதப்போராட்ட சக்திகளும் சார்ந்து நிற்கத் தொடங்கின. போராட்ட வடிவம் தான் மாறியதே ஒழிய, போராட்டத்தின் உள்ளாந்த சாரமோ, போராட்ட இலக்கோ மாற்றப்படவில்லை. எனவே அவாகளும் தோல்வியைத் தழுவுவது தவிர்க்க முடியாததாகியது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விடயமென்னவெனில், ஒரு போராட்டத்தின் வடிவம் என்பதும் முக்கியமானதாக இருப்பினும், அடிப்படையான விடயம், அப்போராட்டத்தின் இலக்காகும். அதுதவிர அப்போராட்டத்தை தலைமைதாங்கும் சக்திகளின் தன்மை, எதிரியையும், நட்பு சக்திகளையும் பற்றிய சரியான கணிப்பீடு, சரியான தந்திரோயாயங்கள் போன்ற விடயங்களும் ஒரு போராட்டத்தைப் பொறுத்தவரையில் முக்கியமானவை. ஆனால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்காக ஆரம்பத்தில் அரசியல் ரீதியாகப் போராடியவர்களும் சரி, பின்னர் ஆயத ரீதியாகப் போராடியவர்களும் சரி, இந்த விடயங்களில் ஒரேமாதிரியான தவறுகளையே திரும்பத்திரும்ப இழைத்தனர்.
முக்கியமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடிய அத்தனை பேரும், அதை வெறுமனே ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகவே முன்னெடுக்க முனைந்தனர். அதனால் தமது அதிகாரத்தை எப்பொழுதும் நிலைநாட்ட விரும்பிய, தமிழ் சமூகத்தில் ஆதிக்க சக்திகளாக இருந்த நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ – உயர்சாதி மேட்டுக்குடி குழாமே அவர்களது தலைமை சக்தியாக இருந்தது. அந்த குழாமினர் தமிழ் மக்களுக்கு தீங்கிழைத்து வந்த, சிங்கள மேட்டுக்குடி பேரினவாத சக்திகளுடனும் (அது ஐக்கிய தேசியக்கட்சியின் வடிவத்தில் இருநதது), அவர்களுடன் கூட்டுச்சேர்ந்து நின்ற ஏகாதிபத்திய சக்திகளுடனும், காலத்துக்குக்காலம் ஐக்கியப்பட்டு நின்றனவே தவிர, உறுதியான வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை. உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சினை என்பது வெறுமனே தேசியப் பிரச்சினை மட்டுமன்று. அது சாராம்சத்தில் தேசிய உரிமைகளுக்கும், ஜனநாயக உரிமைகளுக்குமான போராட்டமாகும். அதாவது தமிழ் மக்களின் போராட்டமென்பது அடிப்படையில் ஒரு தேசிய ஜனநாயகப் போராட்டமாகும். இன்னும் விரிவாகச் சொல்லப்போனால், சிங்கள ஆளும் பூர்ஷ்வா வர்க்கத்தால் தமிழ் மக்கள் மேல் திணிக்கப்படும் பேரின ஒடுக்குமுறையையும், தமிழ் மேட்டுக்குடி ஆளும் வர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் ஜனநாய மறுப்பையும் எதிர்த்த போராட்டமாகும். எனவே இப்போராட்டத்தில் முழுத் தமிழினமும் ஒன்று என்ற கருத்தும், தமிழ் மக்கள் முழுப்பேருக்கும் ஏகத் தலைமைத்துவம் என்ற வாதமும் தவறானவை. ஆனால் தமிழ் மக்கள் மேல் இந்தத் தவறான கருத்தே அன்றும் இன்றும் திணிக்கப்பட்டு வருகிறது. அதனால் தான் தமிழ் மக்கள் தமது போராட்டத்துக்கு உள்நாட்டிலும், உலகம் முழுமையிலும் நண்பர்களை வென்றெடுப்பதற்குப் பதிலாக தனிமைப்பட்டுப் போக நேர்ந்தது. இன்று தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் வந்தடைந்துள்ள பரிதாபரமான முடிவு இந்த உண்மையையே தெட்டத்தெளிவாக நிரூபித்து நிற்கிறது. 30 வருடங்களாக பல விலைமதிப்பற்ற உயிர்களை உரமிட்டு கட்டி வளர்க்கப்பட்ட ஆயுதப்போராட்ட இயக்கத்தை, எவ்வாறு சில ஆண்டுகளில் (2006-2009) அரசாங்கத்தால் தகர்த்தெறிய முடிந்தது? எங்கு அதற்கான பிழை நடந்துள்ளது? இவை பற்றியெல்லாம் ஆராய்ந்து, தமது எதிர்காலப் போராட்டத்தை சரியான தடத்தில் கொண்டு செல்ல வேண்டியது உண்மையான தமிழ் தேசிய ஜனநாயக சக்திகளின் கடமையாகும். ஆனால் இன்னமும் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை பலவந்தமாக கைப்பற்றி வைத்திருக்க முனையும் தமிழ் முதலாளித்துவ பிற்போக்கு சக்திகள், கடந்து வந்த தவறான பாதையைப் பற்றி மீள பரிசீலனை செய்யும் நோக்கம் எதுவுமின்றி, மீண்டும் மீண்டும் அதே பாதையில் பயணிக்கவே முனைகின்றன. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை என்பது இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட ஏகாதிபத்தியவாதிகளினால் (குறிப்பாக பிரித்தானியா) உருவாக்கப்பட்டதாகும். அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் போது அதிகாரத்தைக் கையளித்துவிட்டுச் சென்ற சிங்கள முதலாளித்துவ வர்க்கம், தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக, அந்த இனப்பிரச்சினையை இனவாதமாக மாற்றி அரசியல் செய்தது. இந்த நடவடிக்கைகளின் போது தமிழ் மக்கள் இன ஒடுக்குமுறைக்கு உள்ளானதை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே தமிழ் மக்கள் தம்மீதான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடியது நியாயமே. அதன் காரணமாகத்தான் ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களது நியாயமான போராட்டத்தை, ஏகாதிபத்தியத்தையும், அதற்கு துணைநின்ற உள்நாட்டு முதலாளித்துவத்தையும் எதிர்த்த சிங்கள முற்போக்கு சக்திகள் ஆதரித்து நின்றன. ஆனால் தமிழ் மக்களின் தலைமையை அபகரித்துக் கொண்ட தமிழ் முதலாளித்துவ சக்திகள், தமிழ் மக்களது போராட்டத்தை தவறான பாதையில் வழி நடாத்திச் சென்றன. ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டிய தமிழ் தலைமைகள் அதை ஆதரித்து நின்றன. சிங்கள பேரினவாத சக்திகளை எதிர்க்க வேண்டிய தமிழ் தலைமை, காலத்துக்கு காலம் அதனுடன் கள்ளக்கூட்டுச் சேர்ந்து கொண்டு, சாதாரண சிங்கள மக்களுக்கு எதிரான இனவாத அரசியலை நடாத்தியது. நாட்டின் அரிய சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டு, தமது உரிமைகளுக்குப் போராடாது, நாட்டைப் பிரிக்கும் கோரிக்கையை முன்வைத்து, ஏகாதிபத்தியத்தின் வேட்டைக்களமாக நாட்டை மாற்ற முயன்றது. வரலாற்று வளர்ச்சிப் போக்குக்கு மாறான இந்நடவடிக்கையால் தான், தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய முதலாளித்துவப் பிற்போக்கு சக்திகள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் இன்று தூக்கி வீசப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் கடந்தகால அரசியல் தலைமைகளை எடுத்து நோக்குகையில், விடுதலைப் புலிகளே பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தின் உச்சக் கட்ட வடிவமாக உருவெடுத்தனர். புலிகளுடன் சகல உள்நாட்டு தமிழ்ப் பிற்போக்கு சக்திகளும், சர்வதேசப் பிற்போக்கு சக்திகளும் அணிவகுத்து நின்றன. அவர்களது ஆலோசனையுடனும், வழிகாட்டலுடனும் புலிகள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்த சகல முற்போக்கு – ஜனநாயக சக்திகளையும் முற்றாகத் துவம்சம் செய்தனர். தமிழ் இனத்தைவிட சிறியதும், தமிழ் மக்களது சகோதர இனமாகத் திகழ்ந்ததுமான முஸ்லீம் மக்களை வடக்கிலிருந்து விரட்டி, கொடுங்கோலன் ஹிட்லர் யூதர்களுக்கு செய்தது போல, இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டனர். யுத்தத்தில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத, சாதாரண சிங்கள மக்களை (கூடுதலான மக்கள் கிராமப்புற விவசாயிகள்), முதியோர், குழந்தைகள், பெண்கள் என்ற வேறுபாடு கூட இல்லாமல் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தனர். புலிகளின் இத்தகைய நடவடிக்கைகள், முன்னைய பிற்போக்குத் தமிழ் தலைமைகளின் தொடர்ச்சியாக இருந்த அதேவேளையில், அதன் உச்சகட்ட பரிணாமமாக, பாசிச நிலைக்கு இட்டுச் சென்றதை அடையாளம் காட்டியது. அது தமிழ் தேசியம் என்ற சுலோகத்தை உச்சரித்துக் கொண்டு, உண்மையில் தமிழ் மக்களைக் கூறுபோட்டது. தமிழ் மக்களுக்கு ஒரு பக்கத்தில் தமிழ் தேசிய வெறியை ஊட்டிக்கொண்டு, மறுபக்கத்தில் தமிழ் மக்களின் பொருளாதார வளங்களையும், மனித வளங்களையும், தமிழ்ப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் சூறையாடி, தனது பாசிசக் கட்டமைப்புக்கு பயன்படுத்திக் கொண்டது. தமிழ் மக்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமாக இருந்து வந்த ஜனநாயக மரபுகளையும், மனிதநேயப் பண்பாடுகளையும் சிதைத்து, பாசிச வடிவிலான அராஜக நெறிமுறைகளை உருவாக்கியது. புலி இயக்கம் தனது பாசிசக கட்டமைப்பை நிலைநிறுத்துவதற்காக, இறுக்கமான கட்டுக்கோப்பு கொண்ட படையொன்றை உருவாக்கியதுடன், உலகின் எல்லாப் பாகங்களில் இருந்தும், சகலவிதமான நவீன இராணுவ உபகரணங்களையும் வாங்கிக் குவித்து, தன்னைப் பலப்படுத்திக் கொண்டது. வெற்றி கொள்ளப்பட முடியாத படை என்ற பிம்பத்தை உலக அரங்கின் முன்னிலையில் நிலைநிறுத்தியது. இதனால் பல உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் புலிகளை ஒரு மாபெரும் சக்தியாகக் கணித்து அவர்களுடன் தொடர்புகளைப் பேண ஆரம்பித்தனர். இவ்வளவு இருந்தும் புலிகளால் தமிழ் மக்களுக்கு ஒரு சிறு நன்மையைக் கூட செய்ய முடியாமல் போனதுடன், இறுதியில் தம்மைக்கூட பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. இந்த நிலை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது, ஆய்வுக்கும் சிந்தனைக்கும் உரிய ஒன்றாகும். 2002 இல் ரணில் விக்கிரமசிங்க அரசுடன் புலிகள் செய்துகொண்ட யுத்தநிறுத்த ஒப்பந்தமானது, 2003 வரை புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது. அதன் பின்னர் ஏனைய யுத்த நிறுத்தங்கள் போலவே சேடம் இழுக்கத்தொடங்கியது. மகிந்த ராஜபக்ச 2005 டிசம்பரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும், முன்னைய அரசு தலைவர்களைப் போலவே, புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் புலிகளோ தொடர்ந்து யுத்தப்பாதையிலேயே பயணிப்பதிலேயே ஆவலாக இருந்தனர். ஏனெனில் யுத்தம் ஒன்றே கடந்த காலத்தில் புலிகளுக்கு பிராணவாயு வழங்கிய ஒரேயொரு ஆதாரமாக இருந்தது. எனவே அரசாங்கம் பொறுமை காத்தபோதும், புலிகள் அதை அரசாங்கத்தின் பலவீனம் எனக் கருதிக்கொண்டு, வடக்கு கிழக்கில் படைகளின் மீதும், பொலிசார் மீதும் கொலைவெறித் தாக்குதல்களை நடாத்தி நூற்றுக்கணக்கானோரைக் கொன்றொழித்தனர். புலிகளின் அடாவடித்தனங்களின் மத்தியிலும் 2006 பெப்ரவரியில் ஜெனிவாவில் முதற்தடவையாக மகிந்த ராஜபக்ச அரசுக்கும் புலிகளுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதன்பின்னர் 2006 யூனில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவுக்கு புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கென சென்றுவிட்டு, பேச்சுவார்த்தை எதிலும் ஈடுபடவில்லை. 2006 ஓக்ரோபரில் மீண்டும் ஜெனிவாவில் மகிந்த ராஜபக்ச அரசுக்கும் புலிகளுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இரண்டாம் நாள், புலிகள் ஒரு தலைப்பட்சமாகவும், தன்னிச்சையாகவும் முறித்துக் கொண்டு வெளியேறினர். புலிகளுக்கு எப்பொழுதும் சாதகமாக செயல்பட்டு வந்த நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சோல்ஹெய்ம் அவர்களைக்கூட, புலிகளின் போக்கு விசனத்துக்குள்ளாக்கும் அளவுக்கு அவர்களது தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் இருந்தன. ‘உலகில் யார் என்ன சொன்னாலும் சரி, நான் நினைத்ததைத்தான் செய்வேன்’ என்பது தான் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நடைமுறையாக இருந்தது. இருந்தும் அரசாங்கம் தொடர்ந்தும் ஏதோ ஒரு வழியில் புலிகளுடன் பேசலாம் என்ற எண்ணத்திலேயே இருந்து வந்தது. ஆனால் புலிகளின் நடவடிக்கைகளோ மேலும் மேலும் மோசமான நிலையை எடுக்கத் தொடங்கியது. அவர்கள் அரச படைகள் மீது மட்டுமின்றி, சாதாரண மக்கள் மீதும் தமது தாக்குதல்களை நடாத்த ஆரம்பித்தனர். அதில் மோசமாக அமைந்தது, 2006 யூலை மாதத்தில் மூதூர் பகுதியில் மாவிலாறு அணையை மூடிய புலிகள், பல்லாயிரக்கணக்கான சிங்கள – முஸ்லீம் - தமிழ் விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கையுடன் விளையாட ஆரம்பித்தனர். அதன் மூலம் புலிகள் கொஞ்சம் கூட மனித நேயமற்றவாகள், சமாதானத்துக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் என்ற அபிப்பிராயத்தை நாட்டு மக்கள் மத்தியில் புலிகள் உருவாக்கினர். இந்த நடவடிக்கையானது, புலிகள் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப்போட்ட கதையாக அமைந்தது. மறுபக்கத்தில், புலிகளின் செயல், எப்படியாகிலும் மாவிலாறு பகுதி மக்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கத்தைத் தள்ளிவிட்டது. அதன் பின்னரே அரசாங்கம் திட்டவட்டமான முறையில் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. 2006 ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அரச படைகள் முதலில் மாவிலாறு அணையை புலிகளிடம் இருந்து விடுவித்ததுடன், தொடர்ந்து மூதூர் பகுதியை விடுவித்தன. அதன் பின்னர் அரச படைகள் தொடர்ந்து முன்னேறி வாகரையை விடுவித்தன. தொப்பிக்கல-கொக்கட்டிச்சோலை பகுதியையும், தொடர்ந்து காஞ்சிக்குடிச்சியாறு-அம்பாறைப் பிரதேசத்தையும் அரச படைகள் விடுவித்ததுடன், 2007 ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டது. புலிகளிடமிருந்து வடபகுதியை விடுவிப்பதற்கான யுத்தம் மும்முனைகளில் ஆரம்பிக்கப்பட்டது முதலாவது யுத்தமுனை 57 பிரிவு இராணுவத்தால் 2007 ஆண்டு மார்ச் மாதம் வவுனியா பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. கிழக்கு மாகாணம் யுத்தம் முடிவுற்ற பின்னர், இரண்டாவது யுத்தமுனை விசேட படையணி முதலாவது பிரிவு இராணுவத்தால் (இது பின்னர் 58 பிரிவு இராணுவமென அறியப்பட்டது.) 2007 ஆண்டு செப்டம்பரில் மன்னார் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவது யுத்தமுனை 59 பிரிவு இராணுவத்தால் 2008 ஆண்டு ஜனவரி மாதம் வெலிஓயா பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. மன்னாரை விடுவிப்பதற்கான நடவடிக்கை பல மாதக்கணக்கில் நடைபெற்ற போது புலிகள், அரச படைகளை மன்னாரை கைப்பற்றவோ, அதற்கும் அப்பால் முன்னேறிச் செல்லவோ அனுமதிக்கமாட்டார்கள் என்ற பிரச்சாரம் புலி சார்பு ஊடகங்களால் பெரிய எடுப்பில் முடக்கிவிடப்பட்டது. ஆனால் அரசாங்கம் மன்னார் இராணுவ நடவடிக்கையை இழுத்தடித்ததின் காரணம், புலிகளின் இராணுவ சக்தியை அங்கு படிப்படியாக இழுத்து சிதைப்பதற்காகத்தான் என்பதை காலம் தாழ்த்தியே புலிகளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மன்னார் பிரதேசம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று முனைகளிலும் முன்னேறிய இராணுவம் துணுக்காயையும், குமுழமுனையையும், பூநகரியையும் கைப்பற்றிக் கொண்டது. அதையடுத்து மாங்குளம், புளியங்குளம், நெடுங்கேணி, முள்ளியவளை, பரந்தன், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், தர்மபுரம், விசுவமடு, புதுக்குடியிருப்பு, முல்லத்தீவு என புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் ஒவ்வொன்றாக வீழ்ந்தன. இறுதியாக புலிகள் பதுங்கியிருந்த வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியை 2009 மே 18ம் திகதி கைப்பற்றிய இராணுவம், புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட புலித்தலைமையை முற்றாக அழித்ததுடன், புலிகளால் தமது பாதுகாப்புக் கேடயமாகப் பிடித்து வைத்திருந்த மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை விடுவித்தது. இந்த இறுதி நடவடிக்கையின் மூலம், இலங்கை மண்ணிலிருந்து புலிப்பயங்கரவாதம் முற்றுமழுதாக ஒழித்துக்கட்டது. இந்த நடவடிக்கையானது அண்மைக்கால உலக வரலாற்றில் ஒப்புவமை இல்லாத ஒன்றாகும்.
இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. புலிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, சர்வதேச ஏகாதிபத்திய மற்றும் பிற்போக்கு சக்திகள் அதை நிறுத்தி, புலித்தலைமையை காற்பாற்றிவிட, பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளன. முதலில் அவர்கள் எப்படியும் புலிகள் வழமைபோல இராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என எதிர்பார்த்தார்கள். அது நடக்காது என்று தெரிந்தவுடன், யுத்தத்தை நிறுத்தும் படி இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசு மிரட்டலுக்கு எல்லாம் அடிபணியாது என்று கண்டவுடன், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு, பொருளாதார நெருக்குதல் என பல வழிகளின் மூலம் இலங்கை அரசக்கு அழுத்தம் கொடுக்க முயன்றனர். (அதை இன்றுவரை தொடர்வதுடன், யுத்த வெற்றிக்கு ஒரு முக்கிய பங்காற்றிய முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விலைக்கு வாங்கி, ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு எதிராக களமிறக்கி தமது நோக்கத்தை ஈடேற்ற முனைகின்றனர்) ஒரு கட்டத்தில் அமெரிக்க கடற்படையும், விமானப்படையும் இணைந்து, நேரடி நடவடிக்கையிக் மூலம் புலித்தலைமையை காப்பாற்றவும் முயன்றனர். புலிகளை முற்றாக அழித்த இந்த இறுதி யுத்தத்தின் போது, மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம் காண்பித்த உறுதியான நிலைப்பாடு, மிகவும் உயர்வாக மதிப்பிடக் கூடிய ஒன்றாகும். பொதுவாக இப்படியான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய நாடுகளாக, கடந்த காலத்தில் பெரும்பாலும் சோசலிச நாடுகள் மட்டுமே இருந்துள்ளன. இலங்கை போன்ற ஏழ்மையான சிறிய நாடு ஒன்றை வழமையாக ஏகாதிபத்திய நாடுகள் உருட்டி மிரட்டி தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது வழமையாகும். ஆனால் மகிந்த அரசு மீது அவர்களது நோக்கத்தை ஈடேற்ற முடியாமல் போய்விட்டது. அதற்கு காரணமாக பலர் பலவிதமான காரணங்களைக் கூறக்கூடும். இந்தியாவின் பன்முக உதவி, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளின் ஆயுத உதவிகள் எனப் பலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம். அதில் கணிசமான உண்மை உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அவை எல்லாவற்றையும் விட, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட அரசு ஒன்று இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததும், அதற்கு பாரம்பரியமாக ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட இலங்கை மக்கள் வழங்கிய ஆதரவும் மிக முக்கிய காரணங்களாகும். அத்துடன் இலங்கையின் முப்படையினரும் ஒருங்கிணைந்த முறையிலும், சிறந்த திட்டங்களுடனும் போர் நடவடிக்கைகளை முன்னெடுத்தமையும் காரணங்களாகும். எந்த ஒரு போராட்டத்திலும் தலைமை என்பது மிக முக்கியமான அம்சமாகும். இந்தப் போராட்டத்தில் அரசியல் தலைமையின் சிறந்த, விட்டுக்கொடுக்காத வழிகாட்டலும், அரச - இராணுவ தலைமைகளின் சிறந்த ஒருங்கிணைப்பும் வெற்றிக்கான உத்தரவாதமாக அமைந்தன. 30 வருடங்களாக நீடித்த போரில் அரசாங்கம் தனது இறுதி வெற்றியை இப்பொழுது ஈட்டியுள்ளது. ஆனால் உள்நாட்டுப் போரில் பெற்ற வெற்றி மட்டும் பிரச்சினைகள் எல்லாவற்றினதும் தீர்வாக ஆகிவிடப் போவதில்லை. போர் வெற்றி என்பது ஒரு நீண்ட பயணத்தின் முதலாவது அடி மாத்திரமே. போர் வெற்றியின் பின்னர், அரசாங்கம் இப்பொழுது போரினால் இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதிலும், பொருளாதார அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்வதிலும், இயல்பு வாழ்க்கையை உருவாக்குவதிலும் முனைந்து செயற்பட்டு வருகின்றது. இவையெல்லாம் அத்தியாவசியமான நல்ல நடவடிக்கைகளே. ஆனால் இவற்றின் மூலம் ஆழமாகிப்போன இனங்களுக்கிடையிலான தேசியப்பிளவை சரிக்கட்டிவிட முடியாது. தேசியப்பிளவுக்கும், உள்நாட்டு யுத்தத்திற்கும் காலாயமைந்த காரணிகள் இனங்காணப்பட்டு, அவை நிவர்த்தி செய்யப்படாதவிடத்து, போர் வெற்றி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகிவிடும் ஆபத்து உள்ளது. போருக்கான காரணி என்ன என்பது வெள்ளிடை மலை. தமிழ் மக்களுக்குள்ள தேசிய இனப்பிரச்சினையே அதுவாகும். சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழ் மக்கள், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார அபிவிருத்தி போன்ற அடிப்படையான விடயங்களில் புறக்கணிப்புக்கு உள்ளாமையினாலேயே இனப்பிரச்சினை தோன்றி, அது யுத்தமாக உருமாறியது. சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை கையேற்ற ஐக்கிய தேசியக்கட்சி ஆரம்பித்து வைத்த தமிழ் மக்கள் மீதான இனப்பாகுபாட்டுக் கொள்கை, தொடர்ந்து வந்த எல்லா அரசுகளாலும் ஏதோ ஒரு வகையில் பின்பற்றப்பட்டு வந்ததினாலேயே இந்தச் சூழல் உருவானது. எனவே இனிமேலாகிலும் அந்தத் தவறுகள் நிகழாதபடி பார்த்துக் கொள்வது அரசின் தலையாய கடமையாகும். அதேவேளையில் தமிழ் தேசியவாத சக்திகளும் இந்த யுத்தத்தின் தோல்வியிலிருந்து பெறுமதியான பாடங்களைக் கற்றுக் கொள்வது அவசியமானதாகும். தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பது உண்மையாகும். அவை உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட தீர்க்கப்படவில்லை என்பதும் உண்மையாகும். அதைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் கடப்பாடு தமிழ் தேசியவாத சக்திகளுக்கு உள்ளது என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினை என்பது தமிழ் தேசியவாதிகளுக்கு மட்டும் உரிய ஒரு பிரச்சினை அல்ல என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அது ஒரு தேசியப் பிரச்சினை. அதற்கு இனவாத ரீதியில் திர்வு கண்டுவிட முடியாது. கடந்த காலத்தில் அவ்வாறு கையாளப்பட்டதனாலேயே அது தோல்வி கண்டது என்பது, வரலாறு வழங்கிய பாடமாக எமது கண் முன்னால் இருக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினையை, இதுவரைகால தமிழ் தலைமைகளும் செய்தது போல, இனவாத அடிப்படையில் போராடி தீர்வு கண்டுவிட முடியாது. முதலில் தமிழ் மக்களுக்கு இதுவரை காலமும் தலைமைதாங்கிய பிற்போக்கு – முதலாளித்துவ சக்திகளின் தலைமை தூக்கி எறியப்பட வேண்டும். தமிழ் தேசிய இனத்தின் நியாயமான அபிலாசைகளை தீர்ப்பதற்கு நாட்டின் நீதியை விரும்பும் அனைத்து மக்களையும், சர்வதேச முற்போக்கு சக்திகளின் ஆதரவையும் வென்றெடுக்கக் கூடிய ஒரு முற்போக்குத் தன்மைவாய்ந்த சரியான தலைமை உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் போராட்டத்திற்கு இலங்கையில் இருக்கின்ற சிங்கள – முஸ்லீம் முற்போக்கு சக்திகளினதும், சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளினதும் ஆதரவு இல்லாமல் தீர்வு கண்டுவிட முடியாது என்ற அடிப்படை உண்மையை தமிழ் தேசியவாத சக்திகள் உணர வேண்டும். எப்படிப் பார்க்கிலும் கடந்து சென்ற 2009 ஆண்டு என்பது, இலங்கை என்ற நாட்டுக்கு மட்டுமின்றி, இங்கு வாழும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும், ஒரு வரலாற்றுத் திருப்பு முனையாக அமைந்த ஆண்டாகும். இலங்கையின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் புலிப்பாசிசம் என்பது தடையாக இருந்து வந்துள்ளதை வரலாறு தெளிவாக எடுத்துக்காட்டி நிற்கிறது. எனவே புலிகளுக்கு எதிரான வெற்றியானது தமிழ் மக்களின் வெற்றியுமாகும். எனவே இந்த அருமையான சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முற்போக்கு – ஜனநாயக – தேசபக்த சக்திகள் முன் கையெடுத்து செயல்படுவது அவசியமாகும். ஏனெனில் தோல்வியடைந்த பிற்போக்கு சக்திகள் தமது அதிகாரத்தை மீள அமைப்பதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துவர் என்பதற்கு வரலாற்றில் எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. அது எமது நாட்டிலும் கண் முன்னே நடந்து வருகிறது. நேற்றுவரை ஏகாதிபத்தியத்திற்கு பிடிக்காமல் இருந்து வந்த முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, தற்போதைய தேசபக்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஜனாதிபதி தேர்தலில் ஏகாதிபத்திய சக்திகளால் களமிறக்கி விடப்பட்டுள்ளார். நேற்றுவரை எதிரும் புதிருமான அரசியல் செய்துவந்த ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பியும் சரத் பொன்சேகாவை ஆதரித்து நிற்கின்றன. அதுமட்டுமின்றி, தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட சரத் பொன்சேகாவை தமிழ் பிற்போக்கு சக்திகளும் (புலி ஆதரவாளர்கள் அடங்கலாக) ஆதரிக்க முனைகின்றன. இவையெல்லாம் எதை எடுத்துக் காட்டுகின்றன? இனம், மொழி, மதம், நிறம் என்பதெல்லாம் முதலாளித்துவ – பிற்போக்கு அரசியல்வாதிகளால் தமது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக கிளறி விடப்படுபவையே. தமது நலன்களுக்கு ஆபத்து என்று உணர்ந்தவுடன் இச்சக்திகள் தமது வேஷங்களைக் கலைத்துவிட்டு ஒன்று சேரத் தயங்கமாட்டார்கள் என்பதையே, இந்த சக்திகள் எல்லாம் ஒன்றுபட்டு சரத் பொன்சேகாவை ஆதரித்து நிற்பதன் மூலம் நிரூபித்து நிற்கின்றன. எனவே தமிழ் - சிங்கள – முஸ்லீம் முற்போக்கு சக்திகளும் தமது இன்றைய காலகட்ட கடமையை உணர்ந்து ஒன்றுபட்டு செயல்படுவது அவசர அவசயமானது. 2009ம் ஆண்டுக்கு விடைகொடுத்து, 2010ம் ஆண்டுக்குள் பிரவேசித்துள்ள இந்த முக்கியமான காலகட்டத்தில், தமிழ் - சிங்கள – முஸ்லீம் முற்போக்கு சக்திகள் ஐக்கியப்பட்டு செயற்படுவதையே வரலாறு எம்மிடம் வேண்டி நிற்கின்றது.
|
|