|
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 22 பேர் சென்றார்கள் – தமிழர்களின் அவலங்கள் தீர்ந்தனவா?
-அபிமன்யு
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒற்றுமையாக எங்களைத் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் எனக் கோரினார்கள்; 22 பேர் சென்றார்கள். தமிழர்களின் அவலங்கள் தீர்ந்தனவா?—மாறாக பன்மடங்காகப் பெருகி விட்டன!
தமிழ்மக்களின் தேவைகள் உரிமைகள் சம்பந்தமாக ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமை சிறார்கள் பலவந்தமாக புலிகளால் யுத்தமுனைக்கு அனுப்பப்பட்ட போதும் யுத்தமுனையில் புலிகள் தமது பாதுகாப்புக்காக பொதுமக்களை மனிதக் கேடயகங்களாக வைத்திருப்பதற்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பாது அதற்கு பவ்வியமாகத் துணைபோய் அரசாங்கத்தை மட்டும் திட்டிக் கொண்ட காலம் கழித்தமை ஆகியவும் இதற்கு காரணங்களாகும்.
சில நாடுகளில் சில கல்நெஞ்சக்காரர்கள் இருக்கிறார்கள்.–இவர்களின் தொழில் சமூகத்தின் அடித்தளத்தின் சிலரை ஆசைவார்த்தைகள் கூறி தங்களுடன் கூட்டிச் சென்று அவர்களின் அவயவங்கள் சிலவற்றை தாங்களாகவோ அல்லது மனிதாபிமானமற்ற வேறு சிலர் மூலமாகவோ சிதைப்பார்கள். அப்பாவிகளாக ஓடியாடி உற்றார் உறவினருடன் வாழ்ந்த வாழ்வைச் சீரழித்து அவர்களை அவலங்களுக்கு உள்ளாக்குவர். பின்னர் அவர்களைத் தெருவில் நிறுத்தி அவர்களது அவய குறைபாடுகளையும் அவலங்களையும் போவோர் வருவோரிடம் காட்டி வருவாய் ஈட்டி சுகபோகங்கள் சுகிப்பர்! அவ்வப்போது அந்த ஏதலிகளுக்கு ஏதாவது கிடைக்கும். ஆனால் அவர்களது வாழ்வோ தொடர்ந்தும் பஞ்சமும் இன்னல்களும் அவலங்களுந்தான்! உண்மையில் அந் நிலைமை தொடரவே அந்தக் கல்நெஞ்சக்காரர்கள் விரும்புவார்கள். ஏனென்றால் அவர்களது பிழைப்புக்கு சுகபோக வாழ்விற்கு அதுதான் மூலதனம்!– அதற்கு சமுதாயத்தின் சில புல்லுருவிகள் துணை போவார்கள்!
ஆனால் அங்ஙனம் அந்தக் கல்நெஞ்சக்காரர்களால் அந்த மனச்சாட்சி அற்றோரால் ஏதிகளாக்கப்பட்டோர் பாவங்கள் பரிதாபத்துக்குரியவர்கள்! பாரதியாரின் வார்த்தைகளில் கூறுவதானால் “கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் காரணங்கள் எவை எனும் அறிவும் இலார்”.–அவர்களை வைத்துப் பிழைப்பவர்களையே தங்களது ஆபத்பாந்தவர்கள் என எண்ணுவார்கள்; அப்படித்தான் அவர்களை வைத்துப் பிழைப்பு நடாத்தும் அந்தக் கல்நெஞ்சக்காரர்களும் அவர்களது எண்ணங்களைத் திசைதிருப்பி வைப்பார்கள்!
அந்தக் கல்நெஞ்சக்காரர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை!—அவர்கள் சமூகத்தில் சிலரை அவலங்களக்கு ஆட்படுத்தி விட்டு பணம் சேகரிக்கிறார்கள்; இவர்களோ தமிழ்மக்களை அவலங்களுக்கு ஆட்படுத்தி விட்டு வாக்கு சேகரிக்கிறார்கள்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்களின் இன்றைய நிலைமையை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கீழ்க்கண்டவாறு விபரிக்கிறார்கள்:-
• தமிழ்மக்கள் ஏதுமற்ற ஏதிலிகளாகியுள்ளனர். • ஐந்து இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். • ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; பலர் அங்கங்களை இழந்தும் பாரதூரமான காயங்களிற்குள்ளாயும் மன உளைச்சல்களிற்குள்ளாயும் துன்பப்படுகின்றனர். • பலர் வீடு வாசல்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து தடுப்பு முகாம்களிலே கைதிகளாக வாழ்கின்றனர். • பதினோராயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். • விடுவிக்கப்பட்டவர்கள் எந்தவித நிவாரணமோ வாழ்வாதாரமோ இன்றி தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுமாறு விடப்பட்டுள்ளனர். • எமது மக்களில் பெரும்பாலானோரது வாழ்க்கை நிலைகள் பரிதாபமானதாகக் காணப்படுகின்றது.
–தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே தமிழ்மக்களின் இத்தகைய பரிதாப நிலைமையைச் சுட்டிக் காட்டுவது அவர்கள் மீதான கரிசனையால் அல்ல! அல்லது அவர்களது துயர்களைத் தீர்ப்பதற்கு திட்டுகளையும் சாக்குகளையும் தவிர ஏதாவது தீர்க்கமான செயற்பாடுகள் வைத்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை! –அந்தக் கல்நெஞ்சக்காரர்கள் போல் தமிழ்மக்களின் அவலங்களின் மீது தமது பிழைப்பைத் தொடர்ந்தும் நடாத்துவதற்கு!
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒற்றுமையாக எங்களைத் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் எனக் கோரினார்கள்; 22 பேர் சென்றார்கள். தமிழர்களின் அவலங்கள் தீர்ந்தனவா?—மாறாக பன்மடங்காகப் பெருகி விட்டன!
தமிழ்மக்களின் தேவைகள் உரிமைகள் சம்பந்தமாக ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமை சிறார்கள் பலவந்தமாக புலிகளால் யுத்தமுனைக்கு அனுப்பப்பட்ட போதும் யுத்தமுனையில் புலிகள் தமது பாதுகாப்புக்காக பொதுமக்களை மனிதக் கேடயகங்களாக வைத்திருப்பதற்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பாது அதற்கு பவ்வியமாகத் துணைபோய் அரசாங்கத்தை மட்டும் திட்டிக் கொண்ட காலம் கழித்தமை ஆகியவும் இதற்கு காரணங்களாகும்.
இப்பொழுது அந்தக் கல்நெஞ்சக்காரர்கள் போல் தாங்களே காரணமாக இருந்து விட்டு தமிழ் மக்களிடம் எதுவித மன்னிப்பும் கோராது அவர்களது அவலங்களைக் கூவி வாக்குகள் கேட்கிறார்களே!
–இவர்கள் தமிழ்மக்கள் ஏமாளிகள் எனத் தீர்மானித்து விட்டார்களா? –இவர்களுக்கெல்லாம் வெட்கம் என்பதே இல்லையா? –இவர்களுக்கெல்லாம் மனச்சாட்சி என்பதே இல்லையா?
|