|
யாழ்.தேர்தல் பணிகளுக்கு டக்ளஸ் தலைமை: வவுனியா நகர சபைக்கு ரிஷாத் பொறுப்பு
2009 இலும் மேயர் பதவி சு.க.வுக்கே - சுசில்
யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குழுவொன்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.
1976ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் யாழ். மேயராகத் தெரிவானார். 33 வருடங்களின் பின் மீண்டும் எமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராகத் தெரிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபைக்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு அநுராதபுரம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் சிலரும் இந்தக் குழுவில் அடங்குவர்.
வவுனியா நகரசபைக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன், சுமதிபால அடங்களான குழு நியமிக்கப்பட்டுள்ளன.
இரு உள்ளூராட்சி சபைகளிலும் சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, டெலோ, ஈரோஸ். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அடங்கிய குழு போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் யாழ், வவுனியா மக்களின் கருத்து மிக முக்கியமாகும்.
வவுனியாவில் இயல்பு நிலை காணப்படுகிறது. மாலை வேளையில் நுகேகொடை நகரைப் போல வவுனியா நகரம் மக்கள் கூட்டத்தினால் நிறைந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கும் நாம் விஜயம் செய்தோம். அங்கு ஆசிரியர் பற்றாக்குறை எதுவும் கிடையாது.
தொண்டர் ஆசிரியர்களுக்கு தேர்தலின் பின்னர் நியமனம் வழங்க உள்ளோம்.
ஏ-9 வீதியினூடாக லொறிகளில் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதால் அங்கு பொருட்களின் விலைகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
30 வருடங்களாகக் கிடைக்காத கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் வடபகுதி மக்களுக்குத் தற்பொழுது கிடைத்து வருகிறது. அந்த மக்கள் அதிகாரப் பகிர்வு குறித்து எதுவும் கோரவில்லை.
யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 1000 பேர் விண்ணப்பம்
யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இதுவரை சுமார் ஆயிரம் பேர் விண்ணப்பத்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார். இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இதன்பிறகு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறினார்.யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்கனிப்பில் பங்குபற்ற விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தளம், குருணாகல், அநுராதபுரம், களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்கனில் யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான சுமார் 10 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இவர்களின் விண்ணப்பங்களின் அடிப்படையில் எத்தனை கொத்தணி வாக்குச் சாவடிகளை அமைப்பது என தீர்மானிக்கப்பட உள்ளதாக மேலதிகத் தேர்தல் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
|