|
பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் இலங்கைத் தமிழர்களுக்காக உடனடியாக செய்யப்பட வேண்டியவை!
தமிழக விமர்சகர் ஞாநி
பிரபல தமிழக அரசியல் விமர்சகர் ஞாநி, திராவிட இயக்கங்கள் பற்றி மிகக் கடுமையானதும், கூர்மையானதுமான விமர்சனங்களை முன்வைத்து வருபவர். தற்பொழுது அவர் பிரபலமான ‘குமுதம்’ வார இதழில,; வாராவாரம் ‘ஓ பக்கங்கள்’ என்ற பத்தியை எழுதி வருகின்றார். அண்மையில் அவர் அப்பத்தியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எழுதிய கருத்துகளை எமது வாசகர்களக்காக கீழே தருகின்றோம்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்று சர்ச்சைகள் தொடர்கின்றன. பலரும் என்னிடமும் தொலைபேசியில் கேட்கிறார்கள். எந்த உண்மையை நம்புவதென்று எனக்கும் தெரியவில்லை. பிரபாகரன் இருக்கிறார் என்றால் இனி என்ன ஆகும்? பிரபாகரன் இல்லையென்றால் இனி என்ன ஆகும்? இந்த இரு நிலைகளையும் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். பிரபாகரன் இருக்கிறார் என்றால், அவரை எவ்வளவு சீக்கிரமாக நெடுமாறனோ வைக்கோவோ சந்தித்து பேட்டி எடுத்து வெளியிடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. பிரபாகரன் தன்னைத்தானே தீவிரமாக சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டிய நேரம் இதுதான். உலகத்தின் மிகத் திறமைவாய்ந்த ராணுவத் தளபதிகள் வரிசையில் இடம் பெறக்கூடிய தனக்கு, இப்போது பின்னடைவு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பதை அவர் சிந்திக்க வேண்டும். ராணுவ ரீதியான தவறுகளை விட, அரசியல் தவறுகள்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அரசு போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்த போது இருந்த, உலக அரசியல் இன்று இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சோவியத்யூனியன் இல்லை. அமெரிக்கா ஒற்றை வல்லரசானது. அல்கொய்தா தாக்குதல்களுக்கு பிறகு அமெரிக்காவும் மேலைநாடுகளும் புலிகளை ஆதரித்ததை நிறுத்திவிட்டன. இந்தியா எப்போதுமே தனி ஈழத்தை ஆதரித்ததில்லை என்பது எவரையும் விட பிரபாகரனுக்கு நன்றாகவே தெரியும். நானும் பிரபாகரனும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். ஒரே வயதினர். 1983 முதல் 1992 வரை நானும் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு தனி ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று தீவிரமாக நம்பினேன். ஆதரித்து எழுத்திலும் பேச்சிலும் பிரச்சாரம் செய்தேன். இப்போது என் கருத்து மாறிவிட்டது. இன்று உலகில் எங்கேயும் எவரும் பிரிந்து போவதிற்குப் போராடுவதைவிட, சேர்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை யோசிப்பதும் உருவாக்குவதும்தான் சிறந்த தீர்வு என்று நம்புகின்றேன். ஆயுதப் போராளியான நெல்சன் மண்டேலாவை தன் ரோல் மாடலாக பிரபாகரன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரபாகரன் உயிரோடு இருப்பாரானால், மறுபடியும் ஆயுதப் போராட்டததை வலுப்படுத்துவது என்ற யோசனைக்குப் பதில், அரசியல் தீர்வு பற்றி யோசிக்கத் தொடங்க வேண்டும். மறுபடியும் ஆயுதப்போராட்டம் ஒரு ரோமாண்டிக் கனவாக இருக்க முடியுமே தவிர, இன்னும் பல தலைமுறை ஈழத்தமிழர்களை யுத்தத்தில் வன்முறையில் பலி கொடுப்பதில்தான் திரும்பவும் முடியும். இலங்கையில் பகிரங்க அரசியல் கட்சியாக புலிகள் தம்மை அறிவித்துக் கொண்டு செயல்படத் தொடங்குவதற்கான வழிகளை பிரபாகரன் யோசிக்க வேண்டும். அதற்கான ஆதரவை உலக நாடுகளிடம் திரட்டும் வேலையில் உலகெங்கும் இருக்கும் ஈழத்தமிழ் ஆதரவாளர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படிப்பட்ட மாற்றத்திற்கு இந்தியாவில் பெரும் ஆதரவு கிட்டும். இந்திய அரசும் இதை ஆதரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எளிதில் ஏற்படுத்த முடியும். ஈழ மாநிலத்தின் முதலமைச்சராக பிரபாகரனும், எதிர்க்கட்சித்தலைவராக வரதராஜப்பெருமாளோ, டக்ளஸ் தேவானந்தாவோ, கருணாநிதி – ஜெயலலிதா போல அல்லாமல் இன்னும் அதிகத் தரத்துடன் அரசியல் செய்யும் ஜனநாயக அமைப்பை, பிரபாகரன் நினைத்தால் இன்றைய சூழலில் உருவாக்கிக் காட்ட முடியும். ராணுவ வீரன் பிரபாகரனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அரசியல்வாதி பிரபாகரனாக தன்னை அதற்கு அவர் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் என் விருப்பம். மறுபடியும் ஈழத்தமிழர்களை யுத்தம் நோக்கி அழைத்துச் செல்லும் எவரும் உண்மையில் முழுமையான தமிழ் இன ஒழிப்பில்தான் அதைக் கொண்டு போய் முடிப்பார்கள். பிரபாகரன் இறந்திருந்தால்? அரசியல் தலைமைக்கு ராணுவ ஆற்றல் கட்டுப்பட்டால்தான் அரசு அமையும்: ராணுவத் தலைமைக்கு அரசியல் அடிபணிந்தால், பாகிஸ்தானைப் போன்ற சீரழிவும் குழப்பமும் தான் ஏற்படும் என்ற நிரந்தரமான அரசியல் விதியைப் புறக்கணித்ததால் பலியானவர் பிரபாகரன் என்ற வருத்தத்துடன் அடுத்தது என்ன என்று யோசிப்போம். இந்தியாவின் பொறுப்பும், இந்தியாவில் உள்ள நம்முடைய பொறுப்பும், உலக நாடுகளின் பொறுப்பும் இன்னும் கூடுதலாகின்றன. ராஜபக்ஷே அரசை குறைந்தபட்சம் 13வது சட்டத்திருத்த ரீதியான சம உரிமைகளை உடனடியாக நிறைவேற்றக் கட்டாயப்படுத்துவது முக்கியமானதாகின்றது. பலகட்சி ஜனநாயக அமைப்பை இலங்கையில் நிலைநிறுத்த உழைக்க வேண்டியிருக்கிறது. இதைச் செய்யாவிட்டால், ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டம் என்ற விஷச் சூழலில் போய் சிக்கி, மறுபடியும் தற்காலிக வெற்றிகளையும் தொடர்ந்த அழிவுகளையும் சந்திக்கும் அவலம் ஏற்படும். பிரபாகரன் இறந்திருந்தாலும் சரி, உயிரோடே இருக்கிறார் என்றாலும் சரி, உடனடியாக நம் அக்கறைக்குரிய வேலை, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் சகஜ நிலைக்கு 6 மாதத்துக்குள் திரும்ப ஏற்பாடு செய்வேன் என்று ராஜபக்ஷே ஐ.நாவிடம் சொல்லியிருப்பதை, தினம் தினம் கண்காணித்துச் செயல்படுத்த எல்லா நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்துவதுதான். அதிக பட்சம் இன்னும் 15 நாட்களுக்குள் உலகத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் நிவாரணப் பணி செய்ய அனுமதிக்கும்படி, ராஜபக்ஷே அரசை வலியுறுத்த வேண்டும். சிதைந்த நகரங்களை, ஊர்களை, கிராமங்களை மறுபடியும் எழுப்பும் வேலையை விரைவுபடுத்த வேண்டும். இவற்றைப் பற்றியெல்லாம் பேசாமல், மர்மக்கதை போல சர்ச்சைகளில் போய் சிக்குவது கூட அசல் பிரச்சினையிலிருந்து திசை திரும்பும் வேலையாகிவிடும்.
|