|
ஜனாதிபதியின் பதவிக் காலம்
அரசியலமைப்புத் திருத்த மசோதா எதிர் வரும் 8ந் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படவுள்ளது. மேற்கொள்ளவுள்ள திருத்தங்களுள் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர் பான திருத்தமே பரவலாகப் பேசப்படுகின்ற விடயம்.
இத் திருத்தங்கள் தொடர்பாக எதிரணிக் கட்சிகள் மத்தியில் ஒன்றுபட்ட நிலைப்பாடு இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதென அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை. இதுவரையில் மக்கள் விடுதலை முன்னணி மாத்திரம் எதிர்ப்பதாகக் கூறுகின்றது. இத்திருத்தம் எதிர்ப்புக்குரியதல்ல என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நின்று எதிர்ப்புத் தெரிவிப்பது வேறு. இரண்டு தடவைகளுக்கு மேல் பதவிக் கால த்தை நீடிக்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிப்பது வேறு.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒரு காலத்தில் பெரும்பாலான வர்களால் தீவிரமாக முன்வைக்கப்பட்ட போதிலும் இன்று அக்கோரிக்கை மீளாய்வுக்கு உட்பட வேண்டியதாக உள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையினால் நாட்டுக்கு நலன்தரும் வகையில் இதுவரை சாதிக்க முடிந்த காரியங்களை ‘வெஸ்ட் மினிஸ்டர்’ பாராளுமன்ற அமைப்பின் கீழ் சாதித்திருக்க முடியாது என்ற கருத்து இப்போது பலரால் முன்வைக்கப்படுகின்றது. இந்த நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர வேண்டுமா இல்லையா என்பது பற்றி அவசர முடிவுக்கு வர முடியாது. இது திறந்த விவாதமொன்றின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம்.
இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிப்பதற்குத் தடையாக உள்ள சரத்தை நீக்குவதை எதிர்ப்பதற்கு அறிவார்ந்த காரணம் எதையும் கூற முடியாது. இரண்டு தடவைகள் மாத்திரம் எனக் கட்டுப்பாடு விதிப்பது மக்களின் ஜனநாயக உரிமையை மறுதலிப்பதற்குச் சமன். ஒருவரை ஒரு தடவை தெரிவு செய்வதோ அல்லது தொடர்ந்து சில தடவைகள் தெரிவு செய்வதோ மக்களுக்கு உள்ள அடிப்படை ஜனநாயக உரிமை. இத்தனை தடவைகள் மாத்திரம் பதவி வகிக்கலாம் எனக் கட்டுப்பாடு விதிப்பது மக்களின் அந்த உரிமைக்கு விலங்கு போடுவதாகிவிடும். ஒருவர் எத்தனை தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்பதை மக்களிடம் விட்டுவிடுவதே உண்மையான ஜனநாயகம். மக்கள் தங்கள் முடிவைத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்.
இச் சரத்தை நீக்குவதற்கு ஜக்கிய தேசியக் கட்சி எதிர் ப்புத் தெரிவிக்க முடியாது. மூன்றாவது தடவையும் பதவி வகிப்பதற்கு ஏற்றவகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு ஜே. ஆர். ஜயவர்தன மேற்கொண்ட முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக ஆதரவளித்தது. இத் திருத்தத்தைச் சிபார்சு செய்த உபகுழுவின் மூன்று உறுப்பினர் களும் ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக்கொல்ல ப்பட்டதை ஒரு சமிக்ஞையாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை கருதியதாலேயே திருத்த யோச னையை அப்போது கைவிட்டார்கள். அக் கொலை கள் இடம்பெற்றிருக்காவிட்டால் அரசியலமைப்பு திருத்தப்பட்டு ஜே. ஆர். ஜயவர்தன மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கு முன்வந்திருப்பார்.
editortkn@yahoo.com
- தினகரன் தலையங்கம் -
|