|
தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்: ப.சிதம்பரம்
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.
சென்னை, ஜன.1: "தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் சிதம்பரம். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "புத்தாண்டு தினத்தை ஒட்டி, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன்'' என்றார்.
தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசு அவசர முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறதே?
தனித் தெலுங்கானா குறித்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த மாதம் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அறிவிக்கப்பட்டது.
இது, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளிலும் பிளவை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னையைப் போக்க, தெலங்கானா விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் 5-ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆந்திரத்தில் உள்ள 8 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா பிரச்னையில் மத்திய அரசுக்கென தனிப்பட்ட கருத்து ஏதுமில்லை.
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து?
இந்தக் கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி, இப்போது எதுவும் கூற முடியாது.
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று சில கட்சிகள் கோரிக்கை விடுக்கிறதே?
இது, அர்த்தமற்ற, அபத்தமான கோரிக்கை. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்'' என்று சிதம்பரம் கூறினார்.
|