|
சுய நிர்ணயமும் தேசமும்-4
- தி.ஸ்ரீதரன்
சுய நிர்ணயம் என்ற சொல்லாடலின் சமத்துவமான வாழ்வுரிமையைப் பிரதிபலிப்பது.பிரதானமாக காலனிகளின் சுதந்திரம் ,இனங்களின் சமத்துவத்தை வலியுறுத்துவது. அது இன்று கல்வி, பெண்ணுரிமை என பல தளங்களுக்கு வியாபித்துள்ளது.
நிலமானிய சமூகத்திலிருந்து முதலாளித்துவ சமூகம் உருவான காலத்திலும் ,ஏகாதிபத்திய உருவாக்கம் நிகழ்ந்த காலத்திலும் -பிரதானமாக மார்க்ஸ் ,ஏங்கல்ஸ், ட்ரொட்ஸ்கி, றோசாலக்சம்பேர்க் போன்றவர்கள் சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதங்களில் செழுமை மிகு கருத்துகளை வழங்கியிருந்தார்கள். ஆழமான வாதப்பிரதிவாதங்களை நிகழ்த்தியிருந்தார்கள்.
இந்த கருத்துக்கள் மார்க்சியர்கள் அல்லாதவர்களாலும் ஆய்விற்கெடுக்கப்பட்டு உலகம் முழுவதும் வியாபித்தது.
சாரம்சம் என்னவென்றால் நாடுகளிடையே சமூகங்களிடையே தேசங்களிடையே சமத்துவமான வாழ்வு என்பதே. ஆக்கரமிப்பில்லாத வகைப்பட்ட வாழ்வு என்பதே.
அந்தவிதமான வாழ்வு தமிழர்களுக்கும் ,முஸ்லீம் மக்களுக்கும் ,மலையக மக்களுக்கும் நலிவுற்ற சிங்கள பிரதேசங்களுக்கும் (அவர்கள் கோரிக்கை விடுத்தால் ) கிட்ட வேண்டும் இலங்கை ஒரு பல இன தேசமாக கட்டியெழுப்பப் படவேண்டும் என்பதே இங்கு முக்கியமானது.
ஆனால் சமூகத்தில் ஒரு பகுதியினர் மீதும் ,பிரதேசங்களின் மீதும் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை வைத்துக் கொண்டு தமக்கு ஏக அதிகாரம் வழங்குமாறு கோருவது சுயநிர்ணய உரிமையின் தார்மீக வலுக்களுக்கு நேர் விரோதமானது.
சுயநிர்ணய உரிமை ,தேசம் பற்றி பேசுபவர்கள் பலர் முஸ்லீம்மக்கள் ,மலையகத்தமிழர் ,வடக்கில் சமூக ஒடுக்கு முறைக்குள் வாழ்பவர்கள் ,பிரதேச ரீதியிலான அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் பற்றி மூச்சு விடுவதில்லை. அவ்வாறு பேசுவது தமிழர் ஒற்றுமைக்கு இழுக்கு என பாசாங்கு பண்ணுவர்கள்.
யாழ்மையவாத நிலமானிய சமூகத்தின் அதே கட்டமைப்பை கலாச்சாரம் பண்பாட்டின் பேரில் பாதுகாக்க முனைகிறார்கள். சாதிமேலாதிக்கம் , பெண் அடிமைத்தனம் அத்தனை அங்கலட்சணத்துடனும் அதனை பேணமுற்படுகின்றனர்.புழம் பெருமை பெற்ற குடும்பங்களின் வாரிசுக்களை அரசியல் தலைவர்களாக முடிசூட்டுவதற்கான திட்டங்களும் தீட்டப்படுகின்றன.
இயக்கங்களிலிருந்த தீண்டத்தகாத பிறவிகளிடமிருந்து தமிழ் அரசியல் மீட்கப்படவேண்டும் என்று களவாணித்தனமான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். யாழ்மையவாத ஏகபிரதிநிதித்துவ கருத்தியலே சுயநிர்ணயம் தேசம் என்றும் தமது ஏக உரிமை என்று கருதுகிறார்கள் போலும்.
அது அனைத்து தரப்பு ஒடுக்கப்பட்ட இன சமூகங்களுக்கும் உரியது. பௌத்த சிங்கள பேரினவாதம் எவ்வாறு வௌ;வேறு சமூகங்களின் அடையாளங்களை கலாச்சாரத்தை பொருளாதார வாழ்வை நம்பிக்கைகளை தன்னுள் கரைத்து கொள்ள அல்லது அழித்து விட முயல்கிறதோ அதன் சாயல்கள் இங்கும் காணப்படுகிறது.
வடக்கிலிந்து 20 ஆண்டுக்ளுக்கு முன்னர் வெளியேற்றப்பட முஸ்லீம் மக்கள் தொடர்பான மௌனம் . துரோகிகள் எனமுத்திரை குத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மாற்று இயக்கப்போராளிகள், சொந்த- சக சமூகங்களின் மக்கள் அரசியல் தலைவர்கள் கல்விமான்கள் தொடர்பான மௌனம், முள்வாய்காலுகப்பால் இந்த 30 வருடங்களும் விரிகிற சகல தரப்பினராலும் மேற்கொள்ளபப்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய மௌனம் எல்லாம் வசதிக்கேற்ற மௌனங்கள்.
இந்த பிரிவினர் எல்லாருக்குமாக எல்லாரும் சார்பில் உங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்பது தமிழ் பாசிசத்தை மீள நிலை நிறுத்துல் ஆகும.;
இலங்கை பெருமை மிகு தேசம் மும்மணிகளின் ஆசிகள் பற்றியதெல்லாம் பௌத்த சிங்கள இனப் பெருமிதங்களே. பௌத்த மதத்தின உயர் விழுமியங்கள் எதற்கும் இங்கு துளியள மரியாதையும் கிடையாது. உண்மையில் பௌத்தமதம் இலங்கையில் அதன் உண்மையான அர்த்ததில் மீட்கப்படவேண்டும் .
காவி உடைகளும் தாதுகோபங்களும் தமிழ்மக்களின பிரதேசங்களில் காணப்படும் வீதி புத்தர்களும் இங்கு பௌத்தம் ஆகிவிடாது. அது மனங்களால் தரிசிக்கபடவேண்டும். அதன் உயரிய கோட்பாடுகள் கிரகிக்கப்படவேண்டும். உயிர்க்கொலை ,சித்திரவதைகள், பேராசை ,ஆக்கிரமிப்பு ,ஒடுக்குதல் இவற்றுக்கு பௌத்தம் நேரிடை எதிரி. இந்த அர்த்தத்தில் எமது நாட்டில் பௌத்தம் அருகி விட்டது.
யதார்த்த சமூக பொருளாதார அபிவிருத்திகள் சமகால ஜனநாயக விழுமியங்களைப் புறக்கணித்து ஏற்படுத்தமுடியாது. மகாவம்ச துட்டகைமுனு உதாரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை சமூகத்திற்கு போதை மருந்து ஊசிகளாகி சமூக உறவுகளை சீர்குலைத்து நரகத்தின் வாயிலைத் திறக்குமே தவிர வேறொன்றும் நடக்காது.
சில வாரங்களுக்கு முன்னர் ஜேவிபியின் இரு அணிகளும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா போன்றவர்களும் அதிகாரப் பரவலாக்கல் இராணுவமயமாக்கல் பற்றிப் பேசினார்கள். ஆனால் 13 வது திருத்தம் அதற்கு மேல் அதிகாரப்பரலாக்கல் பற்றிய வலியுறுதல்கள் தீவிரமடைந்த போது இப்போது அவர்கள் மறுக்கத்தொடங்கி விட்டார்கள்.
அவர்கள் வெளிப்படையாகவே அதிகாரப் பரவலாக்கலுக்கெதிராக பேசுகிறார்கள்.அனைத்து மக்களையும் சமனாக நடத்துதல் ,மொழி உபயோகம் பற்றிய தமது பழங் கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். சம்பிக ரணவாக்க போன்றவர்களை கேட்கவே வேண்டாம். ஆங்கிலப்பத்திரிகைகள் சில பொலிஸ் கேட்டார்கள; நிலம் கேட்டார்கள் இப்போது நிதியும் கேட்கிறார்கள,; ஏதோ கேட்கத் தகாததை கேட்டு விட்டார்கள் என்று பாசாங்காக வெகுண்டெழுகின்றன.
1950களில் கொல்வின் இருமொழி ஒருநாடு. ஒருமொழி இருநாடு என்றார். ஆனால் 72 இல் அவர் தயாரித்த அரிசியல் யாப்பு அவருடைய 1956 கருத்துக்களை நிராகரிப்பதாக இருந்தது. ஆனால் 1956 இல் உரைத்தது அவருடைய தீர்க்கதரிசனத்தைப் புலப்படுத்துகிறது.
எவ்வளவுக்கு எவ்வளவு சிறுபான்மையினரின் உரிமைகள் அங்கீகரிக்கப்படுகின்றனவோ அந்த அளவிற்கு இந்த நாடு ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் ஒருதேசமாக பரிணமிப்பதற்குமான இடைவெளி அதிகரிக்கும். இன்று அந்த இடைவெளிளைக் குறைக்கும் கைங்கரியங்களே நடைபெறுகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த இடைவெளியில் என்ன செய்ய வேண்டும் ?செய்வாhர்களா தெரியவில்லை.இலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வில் அக்கறையுள்ள சிறுபான்மைச் சத்திகள் அத்தனையையும் ஜனநாயக வழியில் இணைத்துக் கொண்டு சிங்கள மக்கள் மத்தியல் செல்லவேண்டும் இனப்பிரச்சனை தீர்வில் அக்கறையுள்ள இடைவெளியொன்றிருக்கிறது. அந்த இடைவெளயில் இறங்கத்தயாராக வேண்டும்
எதிர்க்கட்சிகள் அரசியல் அதிகாரப்பகிர்வை ஆதரிப்போர் இடதுசாரிகள் , புத்திஜீவிகள் என அனைத்து தரப்பினரிடமும் செல்லவேண்டும்.நாங்கள் நாட்டைப்பிரிப்பதற்கில்லை. சமத்துவமான வாழ்வுரிமையையே கோரி நிற்கிறோம். யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் உண்மையான சமூகப்புரிந்துணர்வு ஏற்பட இணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும்.
எதையும் தட்டிக்கழிப்பதை விட ஏதோ ஒன்றை ஆக்க ப+ர்வமாக சாதிப்பதை இலக்காக கொள்ளவேண்டும். “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ” என்ற பாரதியாரின் வார்த்தைகள் இங்கு பொருத்தமானவை இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக 50:50 ,பண்டா செல்வா ஒப்பந்தத்திலிருந்து இலங்கை இந்திய -ஒப்பந்தம் , சந்திரிகா அவர்களின் ஆட்சியில் பரிந்துரைக்கப்பட்ட கூட்டாட்சி அரசியல் யாப்பு , பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களின் தலைமையிலான அனைத்துகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகள் என பல விடயங்கள் இறைந்து கிடக்கின்றன.
இவற்றிலிருந்து சில நல்ல மணிகளை நாம் பொறுக்கி எடுக்கமுடியும். முனைந்தால் முடியாததொன்றுமில்லை. இதனை செய்வதற்கு அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச் சொல் எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு சகல தரப்புக்களுமே பேச முன்வரவேண்டும். இன்றைய உலகில் பேச்சுவார்த்தை மேசை என்பதும் ஒரு மதிப்பு வாய்ந்த இடமாகும் ஊடகங்களும் அவ்வாறுதான்.
ஆனால் அவற்றில் பரஸ்பரம் எச்சம் இட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவை துப்பரவு செய்யப்படவேண்டும். நேர்த்தியாக துரதிருஸ்டியுடன் அறிவொழியுடன் விடயங்கள் முன்வைக்கப்படவேண்டும்.
இதுவே சரியாகவோ பிழையாகவோ தேசிய இன உரிமைப் போராட்டத்தை உள்வாங்கிக் கொண்டு தமது உயிரை மாய்த்தவர்களுக்கும், ஜனநாயக விரோத அராஜகங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் ,கடந்த 30 வருட யுத்தத்தில் இடையில் அகப்பட்டு மரணித்த பல்லாயிரம் மக்களுக்கும் நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
தி.ஸ்ரீதரன்
|