|
யாழ் நகரமுதல்வர் மீது துப்பாக்கிச் சூடு ! முதலவரும் அவரது கணவரும் மயிரிழையில் உயிர் தப்பினர் !! இச்செய்தியை திரித்துவெளியிட்ட யாழ். தினக் குரலின் திட்டம் அம்பலம் !!!
- யாழ்ப்பாணம், 1 ஏப்ரல்
யாழ் நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் மீது இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலிருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று யாழ்ப்பாணம் வருவதாக ஏற்பாடாகியிருந்தபடியினால், ஜனாதிபதி கலந்துகொள்ளவிருக்கும் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மண்டப ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து திரும்பும் வழியிலேயே திருமதி பற்குணராஜா மீது மேற்படி தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இச் சம்பவத்தை யாழிலிருந்து வெளிவரும் ‘தினக்குரல்’ பத்திரிகை திரித்து வெளியிட்டுள்ளது. இன்று மாலை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் திருமதி பற்குணராஜா அவர்களும் மேற்படி சம்பவத்தில் நேரடி சாட்சிகளாயிருந்த அவரது கணவர் மற்றும் மாநகரசபை ஊழியர்கள் இருவரும் தெரிவித்திருந்த சாட்சியங்களிலிருந்து அறியவருவதாவது: இன்று (01-04-2010) அதிகாலை 1.30 மணியளவில் துரையப்பா விளையாட்டு மைதானத்திலிருந்து திரும்பிய திருமதி பற்குணராஜாவின் வாகனத்தை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் அங்கஜன் ராமநாதன் என்பவரின் தேர்தல் பிரசார வாகனத் தொடரணி ஒன்று பின்தொடர்ந்துள்ளது. பின்னர் யாழ் ஆரியகுளத்திலிருந்து பலாலி மற்றும் பருத்தித்துறை வீதிகள் பிரியும் இடத்தில் திருமதி பற்குணராஜாவின் வாகனம் மேற்படி அங்கஜன் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது அங்கஜனின் தந்தையான ராமனாதன் தனது மகனின் வாகனத் தொடரணியிலிருந்து கைத் துப்பாக்கி ஒன்றுடன் இறங்கிவந்து, தடுத்து நிறுத்தப்பட்டிருந்த யாழ் மாநகர முதல்வரின் வாகனத்தில் அமர்ந்திருநத முதல்வரின் தலையில் துப்பாக்கியை வைத்து, அவரை வாகனத்திலிருந்து வெளியே இழுத்து எடுத்துள்ளார். அப்போது முதல்வர் கூக்குரலிட்டு தப்பியோடியபோது, ராமனாதன் அவரை நோக்கி சுட்டதாகவும் தெரிய வருகிறது. தெய்வாதீனமாக யாழ் நகர முதல்வர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பியோடியதைத் தொடர்ந்து, ராமனாதன் தன்னுடைய மகனின் வாகனத் தொடரணியிலிருந்து இரண்டு வாகனங்களை சுட்டு நெருப்பூட்டிவிட்டு வேறொரு வாகனத்தில் தப்பியோடியுள்ளார். ராமனாதன் தனது மகனின் வாகனத் தொடரணியிலிருந்த வாகனங்களை தானே சுட்டு தீமூட்டியதை நேரடியாகக் கண்ட சாட்சியொருவர், மேற்படி பதிதிரிகையாளர் சந்திப்பில் தான் கண்ட காட்சிகளை விபரித்திருந்தார். உண்மை நிலைமைகள் இப்படியிருக்க யாழ் தினக்குரல் பத்திரிகை தனது இன்றைய பிரதான செய்தியில் மேற்படி சம்பவத்தை திரித்து, அங்கஜன் குழுவினரின் வாகனத் தொடரணிக்கு இனந்தெரியாத குழுவினர் நெருப்பூட்டியதாக தெரிவித்திருந்ததுடன், யாழ் நகர முதல்வர் மீதான தாக்குதலை இருட்டடிப்பும் செய்துள்ளது. யாழ் நகர முதல்வர் சார்ந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்களே மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொது மக்களை நம்பவைக்கும் நோக்கத்தில் ‘தினக் குரல்’ பத்திரிகையினால் திட்டமிட்டே மேற்படி செய்தி திரித்து வெளியிடப்பட்டதாக உண்மை விடயம் தெரிந்த வட்டாரங்களில் நம்பப்படுகிறது. அங்கஜன் ராமனாதனின் தேர்தல் ‘கட் அவுட்’ ஒன்றும் இனந்தெரியாத விசமிகளால் எரியூட்டப்பட்டிருந்ததாக சில தினங்களுக்கு முன்னர் இதே ‘தினக் குரல்’ பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் திரு சி.வி.கே.சிவஞானம் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்ததும் இங்கு கவனிக்கத் தக்கது.
- யாழ் நிருபர்
|