|
சிங்கக் கொடி சிங்களவர்களின் கொடி! அது தமிழரின் கொடியாகுமா?
(சாகரன்)
‘ சிங்கக் கொடி, அது சிங்களக் கொடி. அது தமிழர் கொடி அல்ல.’ ‘சிங்கக் கொடி சிறிலங்காவின் கொடி. அது ஈழத்தின் கொடி அல்ல.’ சிங்கக் கொடி இலங்கையின் கொடியாக தீர்மானித்த நாளில் இருந்து தமிழ்மக்களுக்கு இப்படித்தான் சொல்லித்தரப்பட்டது. தமிழருக்கு உணர்த்தப்பட்டது. இது தமிழர் தரப்பினரால் மட்டுமல்ல இலங்கை அரசுகளின் செயற்பாடுகளினாலும் உணர்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்வந்த இலங்கை பேரினவாத அரசுகளின் செயற்பாடுகள் இவ்வாறுதான் இருந்து வந்தன. தமிழர் பாராளுமன்ற தலைமைகளும் தமது நாற்காலிக்கனவுகளை நனவாக்க பாவித்து வந்த தாரக மந்திரம் இதுதான். இலங்கை தமிழர்களின் நாடும் கூட என்ற உணர்வுகள் வரக்கூடாது என்பதில் இவர்கள் இருவரும் கணிசமான பங்களிப்பை செய்தே வந்திருக்கின்றனர்.
இன்று திடீரென சிங்கக் கொடி ஈழத்தின் கொடி. அது தமிழரின் கொடியும் கூட. அதுவும் தமிழ் பிரதேச பொதுக்கட்டிடங்களில், வீதிகளில், கடைகளில், வீடுகளில் சிங்கக் கொடியை கட்டி அதனை தமிழரினதும் கொடி என்று சொன்னால் சற்று வித்தியாசமாகவும், அதே வேளை ஏற்றுக் கொள்ள முடியாமலும் தவிக்கும், தவிர்க்கும் தமிழ் மக்களின் நிலையே இன்று தமிழ் பகுதியில் பார்க்க முடியும் அவல நிலையே காணப்படுகின்றது. இவ்விடயத்தில் இலங்கை அரசும் அவர்களுடன் இணைந்து செயற்படும் தமிழர் கட்சிகளும் அவசரப்படும் நிலமையை காணக்கூடியதாக இருக்கின்றது. இது தமிழ் மக்கள் மத்தியில் எதிர் மறையான உணர்வுகளையே ஏற்படுத்தி வருகின்றது என்பதே யதார்த்தம்.
முதலில் சிங்கக் கொடி சிங்களக் கொடி என்ற நிலையில் இருந்து அது இலங்கையின் கொடி என்ற நிலைக்கு மாற்றப்பட வேண்டும். இதன் பின்பு இலங்கை தமிழ் மக்களினதும் நாடு என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் பின்பே சிங்கக் கொடி தமிழர்களினதும் கொடி என்றும், நாம் இலங்கையர் என்ற உணர்வையும் ஏற்படுத்த முடியும். இதை விடுத்து எடுதேன், வெட்டினேன் என்று புறப்பட்டால் எல்லாம் பிழைத்து போய்விடும். 60 வருடமாக புரையோடி இருக்கும் பிரச்சனையின் முரண்பாடுகளை ஒரு இரவில் மாற்ற முடியாது. அது எவ்வளவு சரியான விடயமாக இருந்தாலும் கூட. இதுதான் சிங்கக் கொடியிற்கும் நடக்கின்றது. மகிந்த அரசின் தற்போதைய செயற்பாடுகள் இத் திசைவழி பயணிக்க தொடங்கி இருப்பது போல் தோன்றுகின்றது. இலங்கை இனப்பிரச்னைக்கு அவர்கள் வைக்கும் தீர்வுத்திட்டத்திலேயே இப்பயணத்தின் நேர்வழி பற்றி இறுதித் தீர்மானம் எடுக்க முடியும்.
புலிகளை அழிக்க தூக்கிய துப்பாக்கிகளுக்குள் தமிழ் மக்களும் அகப்பட்டு செத்து போயினர். இத் துப்பாக்கிகள் தற்போது மௌனம் ஆக்கப்பட்ட போதும் இவை தமக்கெதிராக திருப்பப்படலாம் என்ற பய உணர்வு தமிழ் மக்களுக்கு இருப்பது இயல்பானதே. குடந்த கால அனுபவங்கள் அப்படி. அகதிகள் முகாங்களில் அகதிகளுக்கு தண்ணீர் இறைத்தும், மலசல கூடங்களை துப்பரவாக்கியும், சாப்பாடு சமைத்து பரிமாறியும்., காயப்பட்வர்களை தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தும், எம் இளைஞர், குழந்தைகளுடன் இணைந்து விளையாடியும்…… தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை வளர்க்கும் நீங்கள், சிங்கக் கொடி விடயத்திலும் நம்பிக்ககை ஊட்டும் செயற்பாடுகளை முதலில் செய்யவேண்டும். பின்புதான் கொடிகளை கட்டடங்களில் ஏற்றவேண்டும். நம்பிக்ககைகளை நீங்கள் ஊட்டினால் நீங்கள் கொடிகளை ஏற்றத் தேவையில்லலை அவை தானாகவே பொது மக்களால் ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை(சல்யூட்)யும் செய்யப்படும்.
1947 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது இலங்கையின் சகல மக்களும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்து எதிராக வீதியில் இறங்கி போராடி கிடைத்தது என்றால் அது இல்லை என்பதே பதில். இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் இந்திய மக்கள் அனைவரும் இந்தியர்களாக ஒன்றிணைந்து போராடி பிரட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விரட்டி வெற்றி பெற்றார்கள். போராட்டத்திற்காக இணைந்த இந்திய மக்களின் கரங்கள் இன்று வரை இந்தியர்களாகவும் ஒருமைப்பாட்டிற்குள்ளும், நாட்டுப்பற்றுக்குள்ளும் இணைந்து கிடக்கின்றது. இந்தியக் கொடி இந்தியர்களின் கொடி என்றும், அது தமிழர்களின் கொடி, கன்னடர்களின் கொடி. தெலுங்கர்களின் கொடி. இந்திக்காரர்களின் கொடி…… இப்படியாக வந்ததுதான் இந்தியன் என்ற உணர்வும், ஒருமைப்பாடும்.
அங்கிருந்த தலைவர்கள் தமக்குள் கொள்கை ரீதியாக முரண்பட்டாலும் நாம் இந்தியர் என்ற உணர்வை தேசிய ரீதியில் தமது தொண்டர்களுக்கு ஊட்டி வளர்த்தனர், சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதன் பின்பும். இலங்கை நிலமை அப்படியில்லை. இனவாதத்தையும் பிரிவினை வாதாத்தையும் ஊட்டி வளர்த்தனர் அரசியல்வாதிகள். இந்த யதார்த்த நிலமைகளை நாங்கள் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது இறுதியில் தமிழன் தனியாக் போனால்தான் தன்மானத்துடன் வாழ முடியும் என்று சொல்ல வைத்தது, செயற்பட வைத்தது, போராட வைத்தது, ஆயுதம் ஏந்த வைத்தது. இவ் ஆயுதங்கள் பிழையான தலைமையிடம் சென்று வலுப்பெற்று பாசிஷமாக உருவெடுத்தது.
இறுதியில் இன்று எல்லாவற்றையும் இழந்து தமிழ் மக்களை ஏதுமற்றவராககியது. இன்று மீண்டும் இணைந்து வாழ்வது தான் எல்லோருக்கும் நலம். அது இலங்கைக்கு நலம். தமிழருக்கும் நலம். சிங்களவருக்கும் நலம். முஸ்லீம்களுகும் நலம். பறங்கியருக்கும் நலம் என்ற உணர்வலைக்குள் தள்ளப்பட்டு இரக்கின்றனர் இலங்கை மக்கள். 60 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்ட இந்ந ஞானத்திற்கு நாங்கள் கொடுத்த விலை 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்களின் இழப்பு, 5 இற்கு மேற்பட்ட இனக்கலவரங்கள. பல கோடி பெறுமதியான சொத்து இழப்புக்கள். பல வெளிநாட்டு வல்லூறுகள் எம்மை கூறு போட்டு வியாபாரம் செய்ய துடித்த நிகழ்வுகள், என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இறுதியில் கிட்லரை விஞ்சும் ஒரு பாசிஷ புலித் தலைவனை இலங்கையில் உருவாக்கி அவனையும் அவர் கூட்டாளிகளையும் அழித்தொழித்து, இதற்காக பல ஆயிரம் மக்களையும் விரும்பியோ விரும்பாமலோ கொன்று. எஞ்சியோரை அகதி முகாங்களில் அடைக்க வேண்டியதாயிற்று. பல இலட்சம் மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றி அவ் நாடுகளில் அவர்கள் தமது சுயம்களை இழந்து கொண்டும் வாழவைத்திருக்கின்றது. இவர்கள் எதிர்காலத்தில் தாம் இருக்கும் நாடுகளில் தமிழர்களாக இல்லாமலும் போய்விடுவார்கள் போலவும் தோன்றுகின்றது.
இவ் நிலமை ஏற்படுவதற்கு சிங்களத் தலைமைகள் மட்டும் அல்ல தமிழர் தலைமைகளும் காரணம். பிரிடிஷ்காரன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கும் போது அதற்கு அருகில் உள்ள இலங்கைக்கும் சுதந்திரத்தை கொடுத்து விட்டு செல்லும் போது எமக்கிடையே ஒருமைப்பாட்டையும் ஏற்படவிடாமல் செய்து விட்டு சென்றான். விரும்பியே இதனை செய்தான் என்பது உண்மையானாலும் எமக்குள் ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு நாமும் ஆவன செய்யவில்லை.
டி. எஸ். சேனநாயக்கா ஆரம்பித்து வைத்த பிரித்தாளும் சூழ்ச்சி ஜே. ஆர் ஜெயவர்த்தன காலத்தில் உச்சத்தை அடைந்து, பிரேமதாஸ காலத்தில் பால் ஊற்றி வளர்கப்பட்டது. இதன் பின்பு வந்த இலங்கை அரசு தலைவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றதுபோல் செயல்பட முனைவது போல் தோன்றினாலும், அவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறையவே உள்ளது. இனவாதத்தினால் ஏற்பட்ட பயனை நாம் கடந்த 60 வருடங்களாக அனுபவித்து வருகின்றோம். இனியும் இதனை அனுபவிக்கவேண்டுமா? இதனை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்? இனங்களுக்கிடையே நம்பிக்கை ஏற்படும் விதமாக நடக்க வேண்டியவர்கள் நடக்கவேண்டும். இலங்கையில் வாழும் சகல இனங்களும் சம உரிமையுடன் இரண்டாம் தர பிரஜைகள் என்ற உணர்வுகள் ஏற்படாவண்ணம் வாழும் நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இங்கு சகலருக்கும் சக, சம வாழ்வு உறுதிப்புடத்தப்பட வேண்டும். இதனை நோக்கிய அரசியல் தீர்வுத்திட்டத்தை நோக்கி பயணிக்க ஆவன செய்யப்பட வேண்டும். இதற்கு நிறைய உழைக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும்.
தமிழ் மக்களுக்கு பிரத்தியேகமான பிரச்சனைகள் உண்டு. முஸ்லீம்களுக்கும் பிரத்தியேகமான பிரச்சனைகள் உண்டு. மலையக மக்களுக்கும் பிரத்தியேகமான பிரச்சனைகள் உண்டு என்பதை இலங்கை அரசு உணர வேண்டும், ஏற்கவேண்டும். இந்த அடித்தளத்தில் இருந்து தான் நாம் பிரச்சனைகளை தீரக்க புறப்பட முடியும். மாறாக சிறுபான்மை மக்களுக்கு பிரத்தியேகமான பிரச்சனை இல்லை என்ற மறுப்பு வாதம் மீண்டும் சிறுபான்மை மக்களை மீண்டும் கிராமங்களை நோக்கி வகுப்புக்கள் எடுக்கவே தள்ளிவிடும் விருபத்தகாத நிகழ்வுகளை எதிர்காலத்தில் தள்ளிவிடும். இது மனித குல வரலாற்றின் தவிர்க்க முடியாத வரலாற்று உண்மை.
தமிழ் மக்கள் மத்தியில் இலங்கைக்குள் சம உரிமையுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்;. இதற்கு முதலில் தமிழ் மக்களின் உண்மையான இன பிரச்சனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாறாக தமிழர்களின் பிரச்சனை பயங்கரவாதப்பிரச்சனை என்று மட்டும் எண்ணினால் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் மாறிய நிகழ்வுகளுக்கே மீண்டும் கொண்டு சென்றுவிடும். தமிழர்களின் இனப்பிரச்சனை என்பது வேறு. புலிகளின் பயங்கரவாதப்பிரச்சனை என்பது வேறு. புலிகளின் பயங்கரவாதப் பிரச்சனைக்கு இராணுவ நடவடிக்ககை மூலம் வெற்றி கண்டு விட்டீர்கள். ஆனால் தமிழர்களின் இனப்பிரச்சனை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இதனை ஏற்றுக் கொண்டு இது தீர்கப்படவேண்டும். அப்படி செயற்பட்டால்தான் சிங்கக் கொடி இலங்கையரின் கொடியாக பரிணமிக்கும். இலங்கை தமிழ் மக்களின் நாடு என்ற உணர்வு எல்லாத் தமிழரிடமும் ஏற்படும். சிங்கக் கொடி தமிழரின் கொடி என்ற உணர்வு தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படும். அக் கொடி இலங்கை வாழ் சகல மக்களின், சிறப்பாக தமிழ் மக்களின் மனங்களிலும், மனைகளிலும் தானாக ஏற்றப்படும்.
புலிகளை வென்ற போருக்கு பிந்திய நிகழ்வுகள் நம்பிக்கை ஊட்டுவதாக இருப்பது ஆறுதலான விடயம். யுத்தம் முடிவுற்ற வடக்கில் 180 நாட்களில் இயல்பு நிலையை ஏற்படுத்தியே தீர்வது என்று கங்கணம் கட்டி இலங்கை அரசு செயற்படுகின்றது. புனருத்தாரணம் புனர் நிர்மாணம். மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுதல் என்ற வேலைத்திட்ட செயற்பாடுகளுக்காக சகல அமைச்சர்களும் வடக்கில் முகாமிட்டு தங்கியிருக்கின்றனர். கடந்த 60 வருடங்கிளில் இலங்கையின் அரசுப் பொறுப்பில் இருந்த அரசுத் தலைவர்களையும் விட மகிந்த ஒரு தீர்மானத்துடனும், ஒரு செயற்திட்டத்துடனும் ஒரு கால வரையறுக்குள் இவற்றை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று செயற்படுகின்றார் என்பதை மட்டும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் இதனை உணரும் வகையிலும் இச் செயற்பாடு முனைப்படைந்து வருகின்றது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதும் மகிழ்ச்சியானதுமான நிலைமையே.
ஓன்று மட்டும் தெரிகின்றது இன்னும் சில வருடங்களில் இலங்கை ஒரு வளம் மிக்க நாடாக மலரப் போகின்றது. வடக்கு கிழக்கு இலங்கையின் பாகங்கள் அல்ல என்ற மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் போய் வடக்கும் கிழக்கும் இலங்கையின் பகுதிகள் என்ற மனப்பான்மையுடனான அணுகு முறைகளை இலங்கை அரசு கடைப்படிக்கப் போகின்றது. இதனால் வடக்கு கிழக்கும் அபிவிருத்தி அடையப் போகின்றது. இவ் அபிவிருத்தி எந்த அளவிற்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையப் போகின்றது தமிழ் மக்களை இலங்கையில் சமத்துவம் உள்ள இனமாக சுய கைளரவத்துடனும் சமாதானத்துடனும் வாழ வழி செய்யப் போகின்றது என்னதெல்லாம் பொறுத்திருந்து பார்கப்பட வேண்டிய விடயங்கள். இந்த வளம் சகல மக்களும் சமமாக அனுபவிக்கும் ஏற்றத்தாழ்வு அற்ற சமூக அமைப்புக்கள் ஏற்பட நாம் உழைக்க வேண்டும். தேசிய நீரோட்டத்தில் இணைந்து செயற்பட வேண்டிய நம்பிக்கைகளை இலங்கை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் சரியான வழிப்பாதையில் பயணித்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்;. மூன்றில் இரண்டு என்ற பூச்சாண்டிகள் மட்டும் போதாது 13 வது திருத்தச்சட்டத்தை முதலில் முழுமையாக அமுல்படுத்தலில் இருந்து ஆரம்பித்து, அதன் தொடர்சியாக சர்வ கட்சி மகாநாட்டின் முடிவுகளின் அடிப்படையில் பயணிக்க வேண்டும் இலங்கை அரசு. இதற்கு பிரதான அரசியல்கட்சிகளின் அனுசரணை மட்டும் போதாது. ஏனைய ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளின் ஆதரவுகளும் முக்கியம்.
முதல் கட்டமாக, எதிர்காலத்தில் 9 மாகாணசபைகள்; இயங்கப் போகின்றன. nதில் 2 மகாணசபைகளில் தமழர் முதல் அமைச்சர்களாக இருக்கப் பேகின்றனர் என்ற சமிக்கைகள் நம்பிக்கையூட்டுபவையாக இருக்கின்றன. இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கப் போவது JVP ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியும். துமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பழைய புலிகள்pன நிகழச்சி நிரலை விடுவதான அறிகுறிகள் தென்படவில்லை. இவர்களும் தமிழ்மக்களின் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்து தமது நாற்காலிக் கனவுகளை நனவாக்க முயல்வர்.
ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் கூறிவரும் 13 வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறுவது தான் வேடிக்ககையிலும் வேடிக்கை. 13 வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் அமைந்த வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண சபைகளின் தேர்தலில் பங்குபற்றி வெற்றிகள் சிலவற்றையும் ஈட்டி பதவியிலும் இருக்கின்றன. இதே சட்டமூலத்தின் அடிப்படையில் அமைந்த தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கு கிழக்க மாகாணங்களை நீதி மன்றம் வரை சென்று பிரித்தது ஜேவிபி. மேலும் கிழக்கில் மாகாணசபை தேர்தலை நடைமுறைப்படுத்திய போது அதனையும் எதிர்தது. தற்போது இனப்பிரச்சனைக்கு ஏற்கனவே சட்டமூலமாக்கப்பட்ட 13 திருத்தச் சட்டமூலத்தின் அடிப்படையில் அதிகாரத்தை பரவலாக்கி ஆமுல்படுத்தும் ஆரம்ப அரசியல் தீர்வையும் எதிர்கின்றது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எதனை முன் மொழிந்தாலும் எதிர்கும் அரசியல் நிலைப்பாடடை எடுப்பது ஜேவிபி இன் அரசியல் ஆகிவிட்டது.
ஜேவிபி இன் பேச்சில் மாக்சிஸம், நடைமுறையில் இன ஒற்றுமைக்கு எதிரான செயற்பாடு. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய எவ்வித தீர்வுத்திட்டமும், வரைவுகளும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. இருந்தால் அதனை அவர்கள் பகிரங்கமாக முன் வைக்க வேண்டும். இந்நிலையில் தேசியக்கட்சியாக வளரவேண்டும் என்ற கனவுகள் மட்டும் அவர்களிடம் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் எதனையும் தமது கட்சி நடத்தவில்லை என்பதை மட்டும் வைத்துக்ககொண்டு எவ்வளவு காலம் தான் இவர்கள் அரசியல் நடத்தப் போகின்றார்கள். இலங்கையில் மிக முக்கியமான பிரச்சனை இனப்பிரச்சனை. இதற்கே அவர்களிடம் தீர்வுத்திட்டம் இதுவரை இல்லை. இனப்பிரச்சனையில் ‘இயக்கத்திற்கு எதிரான உராய்வு விசை’ போல் எதிர்பதையே அரசியலாக கொண்டுள்ளது ஜேவிபி.
யூஎன்பி பற்றி சொல்லத் தேவையில்லை அவர்கள் எப்போதும் தமிழ் மக்களின் தீர்வு பற்றிய சரியான நிலைப்பாட்டை மட்டுமல்ல எடுத்த சில தீர்மானங்களையும் இல்லாமல் செய்வதில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள். எங்கள் துர்ப்;பாக்கிய நிலைமை கடந்த கால தமிழர் மிதவாத இனவாத தலைமைகளின் நம்பிக்கை நட்சத்திரம் யூஎன்பி தான். அது தமிழ் காங்கிரஸில் இருந்து தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக்கூட்டணி வரையிலான மிதவாதக்கட்சிகளுக்கு இது பொருந்தும். இது நூறு வீதம் புலிகளுக்கும் பொருந்தும். யூஎன்பி யும் தமிழ் மக்களின் நண்பன் என்று வேடம் போட்டு தமிழ்மக்களை இல்லாது ஒழிப்பதில் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தது என்பது ஒரு வரலாற்று ‘துன்பியல்’ நிகழ்வே.
தமிழரசுகட்சியில் ஆரம்பித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு வரை, இலங்கை தேசியவாதத்தை முன்னிறுத்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தியாக செயற்பட்ட சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிகட்சிகளை; ஆதரிச்சதும் கிடையாது. அவர்களை தமிழர் பகுதியில் கருத்தச் சொல்ல அனுமதித்ததும் கிடையாது. இவர்கள் தமிழ்மக்கள் பிரச்சனையை எடுத்துக் கொண்டது தமது அரசியல் வாழ்விற்காகவே. தவிர தமிழ் மக்களின் விடிவிற்காக அல்ல. புலிகளின் நிகழ்ச்சி நிரலில் வேலை செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பிரபாகரனின் அந்தியேட்டி கிரியை நடை பெறுவதந்கு முன்பே கிஷோரில் ஆரம்பித்து சுரேஸ் வரைக்கும் அணிமாறியதும், மாறமுனைவதும் தம் நாற்காலிக் கனவுகளுக்காகவே ஒழிய தமிழ் மக்களின் நலன்களுக்காக அல்ல. இவர்களை நம்ப இன்னும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தயாராக இருக்கும் போது இவர்களின் பிழைப்புக்கள் ஓடிக் கொண்டே இருக்கும். பாராளுமன்ற நாற்காலிகளும், மாநகர சபை நாற்காலிகளும் இவர்களால் இன்னும் சில காலம் நிரப்பப்படக்கூடிய நிலைமைகளும் உள்ளன. இதற்கு மாற்று ஜனநாய சக்திகளுக்கிடையே நிலவும் ஒற்றுமை இன்மையும் ஒரு காரணம் என்று தோன்றினாலும், இவர்கள் யாவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் பரந்து பட்ட ஜக்கிய முன்னணியை அமைக்க முடியாமல் இருப்பதற்கு இவர்களிடையே உள்ள ஏகபோக தலைமைச் சிந்தனையுடைய அமைச்சர்களே முக்கிய காரணம். புலிகளின் பக்கத்தில் மட்டுமல்ல புலிகளுக்கு எதிரான ஜனநாயக சக்திகளிடையேயும் ஏகபோகம் என்ற நிலைப்பாடு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை அமைப்பதில் பெரும் தடைக்கல்லாக இருந்து வருகின்றது என்பது ஒரு துர்ப்பாக்கிய நிலமையே.
எனவே முதலில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்ககைள் ஏற்படும் விதமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கட்டும், நாமும் தேசிய கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்து செயற்படுவது பற்றி சிந்திக்கின்றோம். தமிழ் மக்களும் சிங்கக் கொடி தமிழ் மக்களினதும் கொடி என்று உணர்வு பூர்வமாக முடிவெடுத்து சிங்கக் கொடியை தங்கள் மனங்களிலும் மனைகளிலும் ஏற்றுவர். இவ் இடைப்பட்ட காலத்தில் தேசியக்கட்சியுடன் ஐக்கிய முன்னணி அமைத்து தேர்தலை சந்திப்போம். இதன் தொடர்சியாக தமிழர் கட்சிகளும் உலர்ந்து உதிர்ந்து இல்லாமல் போய் தேசியக்கட்சிகள் மட்டும் தமிழர் பிரதேசங்களில் ஆட்சியை அமைக்கும். அதுவரை நமக்குள் ஏற்படும் ஐக்கிய முன்னணியே சரியானது, பலமானது. வெண்டைகாய் கொட்டை உதாரணமும் பொருந்தாது.
(சாகரன்) (ஆடி 01, 2009)
|