|
ஜனாதிபதித் தேர்தலும் சிறுபான்மை இனங்களும்!
பூ.சந்திரா
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் என்பது சிறுபான்மை இனங்களைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தற்போது ஜே.வி.பி முதற்கொண்டு ஜனாதிபதி முறையை அமுல் செய்த யூ.என்.பி. வரை மிதமிஞ்சிய அதி்காரங்களைக் கொண்ட ஜனாதிபதி பதவியை ரத்துச் செய்ய வேண்டும் என ஓங்கிக் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன.
எனவே இன்றைய சந்தர்ப்பத்தில், சிறுபான்மை மக்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சற்று ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. இதுவரை காலமும் நடந்தேறிய ஜனாதிபதித் தேர்தல்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் தரப்பாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் திகழ்ந்ததைப் போலவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் சிறுபான்மை மக்களின் வாக்குகளே தீர்க்கமானவையாக இருக்கப் போகின்றன.
இதனை அடிப்படையாகக் கொண்டே இனவாத சக்திகள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்து அரசியலில் சிறுபான்மை மக்களின் முக்கியத்துவத்தையும் ரத்துச் செய்துவிட வேண்டும் எனத் திடசங்கற்பத்துடன் முழுமூச்சாக செயற்பட்டு வருகிறார்கள். சோலிசம் பேசும் ஜே.வி.பியினர் ஜனாதிபதி முறை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டதில் இருந்தே இதனை எதிர்த்து வருவதன் பிரதான நோக்கம் வடிகட்டிய இனவாதமே அன்றி வேறில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது தனிநபர் ஒருவரிடம் வரம்பு மீறிய அதிகாரங்களை வழங்கியிருப்பது பாதகமான அம்சம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியான உண்மையே. அதேபோல் சிறுபான்மையினருக்கு அரசியல் முக்கியத்துவத்தை வழங்கியிருப்பதும் இந்த ஜனாதிபதி முறையேயாகும். எனவே, சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக நியாயமான, உறுதியான தீர்வைப் பெறும் வரை ஜனாதிபதி முறை சிறுபான்மையினரால் நிராகரிக்க முடியாததொன்றாகவே காணப்படுகின்றது.
1982 லிருந்தே ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைமுறைக்கு வந்தது. 1982 ஜனாதிபதித் தேர்தலில் தனது இரண்டாவது பதவிக் காலத்திற்காகப் போட்டியிட்ட ஜே.ஆர். ஜெயவர்தனாவுக்கு சிறுபான்மையினத்தவரின் வாக்குகள் அச்சுறுத்தலாகக் காணப்பட்டன. 1977ல் யூ.என்.பி அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட இனக் கலவரம் மற்றும் ஜே.ஆர். அரசு பின்பற்றிய தாராளமயக் கொள்கை என்பன வடக்கு, கிழக்கு பொருளாதாரத் துறையின் உயிர்நாடியாகத் திகழ்ந்த விவசாயக, கைத்தொழில் துறைகளை வீழ்ச்சிக்குள்ளாக்கின.
இதனால் ஏனைய மாவட்டங்களைப் போல் வடக்கு, கிழக்கிலும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கியதுடன் இளைய தலைமுறையினர் மத்தியில் அமைதியின்மை தோற்றம் பெற்றமையானது ஜே.ஆர். ஜயவர்தன மீதான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளை 1971 லிருந்து 1977 வரை பதவியில் இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவைப் பிரதமராகக் கொண்ட அரசு பின்பற்றிய தன்னிறைவு பொருளாதாரக் கொள்கை வடக்கு, கிழக்கின் விவசாய, கைத்தொழில் பொருளாதார துறையில் பெரும் வளர்ச்சிப் போக்கை ஏற்படுத்தியிருந்தது.
எனவே, இப்பிரதேசங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் கட்டுப்பாட்டில் இருந்தது. இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு - கிழக்கு மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக விளங்கியது. இதனைக் கருத்தில் கொண்டே ஜே.ஆர். ஜயவர்தனா, ஸ்ரீல.சு.கட்சித் தலைவியான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சிவில் உரிமையைப் பறித்ததன் மூலம் தனது வெற்றிக்குச் சவாலான ஜனாதிபதி வேட்பாளரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை போட்டியில் இருந்து ஓரங்கட்டினார். ஆனாலும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பதிலாக ஸ்ரீல.சு.க வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளை ஹெக்டர் ஹொப்பேகடுவ சுருட்டிக் கொண்டு விடுவார் என அச்சமுற்ற ஜே.ஆர். ஜெயவர்தனா சிறுபான்மை மக்களின் அரசியல் பலத்தைச் சிதைத்துவிடும் நோக்கில் தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலத்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருந்தார். இதன்மூலம் சிறுபான்மை மக்களின் அரசியல் பலத்தை சிதறடித்து, 1982 ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தனா இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகக் தெரிவானார்.
1982 ஜனாதிபதி தேர்தலில் யூ.என்.பி. வேட்பாளர் ஜே.ஆர். ஜெயவர்தனாவின் வெற்றிக்கு தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் உதவியதற்கு கைமாறாகவே, ஜே.ஆர். ஜெயவர்தனா 1983 கறுப்பு ஜூலை இன அழிப்புக் கலவரத்தை சிறுபான்மை தமிழ் மக்களுக்குப் பரிசாக அளித்திருந்தார்!
1983 இனக்கலவத்தின் பிரதிபலிப்பே இந்நாட்டையும் மக்களையும் சகல மட்டத்திலும் 30 வருடகாலமாகச் சீர ழித்த உள்நாட்டு யுத்தமாகும். 1982 இற்குப் பின்னரான 1988, 1994,1999,2005 ஆகிய வருடங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் சுயமாகச் சிந்தித்து வாக்களிக்கும் உரிமைக்குப் பதிலாக வடக்கு, கிழக்கில் இயங்கிய ஆயுதக் குழுக்களின் அபிலாசைக்கேற்ற வாறு செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருந்தனர். இதன் காரணமாக அரசியல் தீர்வொன்றிற்கான பேரம்பேசும் சக்தி வீண்விரயமாகியது.
மேற்கூறப்பட்ட நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் பலம் ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமான சக்தி என்பதாகும். இந்த அரசியல் யதார்த்தம் சிறுபான்மை மக்களால் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படவேண்டும்.
பாரிய உயிர்ப்பலிகள், பேரழிவுகள், மீளப்பெற முடியாத இழப்புகள், பாரிய அளவிலான இடப்பெயர்வுகள், லட்சக் கணக்கான மக்களின் அகதிவாழ்க்கை என எமது மக்கள் எதிர் கொண்டுள்ள துன்பகரமான நிலைமை சொல்லிமாளாது. இவ்வாறான நிலைமையிலும் “சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே” என்ற பாரதியின் பாடல் வரிகளுக்கு முன்னுதாரணமாக எம்மிடையிலான சுயநல அரசியல் தலைமைகளின் தேவைகளுக்கிணங்க முன்வைக்கப்படும் சாத்திமற்றதும், அழிவுகளுக்கு மட்டுமே உரித்தானதுமான உணர்வூட்டும் ஏமாற்றுப் பிரசாரங்களுக்கு பலியாகாமல் புத்திசாதுரியமாக செயற்பட வேண்டியது இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவரதும் பொறுப்பாகும்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பேரினவாதிகளின் பிரதான எதிர்பார்ப்பு ஜனாதிபதி முறையை ரத்துச் செய்தல் என்பதாகும். சிறுபான்மை தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்படாமல், ஜனாதிபதி முறை ரத்துச் செய்யப்படுவதானது சிறுபான்மை மக்களின் அரசியல் பலத்தை ரத்துச் செயல்வதென்பதாகும். இந்த நிலைமையைத் தோற்கடிப்பதுடன், 30 வருடகால யுத்தத்தின் விளைவுகளான, இழந்துபோன +பிவிருத்தி, அழிந்துபோன பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பல், சிதைக்கப்பட்ட வதிவிடங்களைப் புனரமைத்தல், வரண்டுபோன வாழ்வாதாரங்களைச் சீர்செய்தல், கருகிப் போயிருக்கும் கல்விச் செல்வத்தைச் செழிக்கச் செய்தல், மறந்துபோன கலை, கலாசார, பாண்பாட்டு விழுமியங்களுக்குப் புத்துயிரூட்டல், உடல் உளரீதியாகப் பாதிப்புக்குள்ளாகி விரக்தியின் விளிம்புக்கே தள்ளப்பட்டுள்ள எம்மக்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுத்தல் போன்றவற்றுற்கு முன்னுரிமை கொடுக்கும் அதேவேளை, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி பலவருடங்களாகத் தமது இளமைக்காலத்தை சிறைக்கூடங்களில் வீணடித்துக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர் யுவதிகளினதும் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் அடையாளம் காணப்பட்ட புலி உறுப்பனர்கள், சந்தேகத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமிகள் முதல் இளைஞர் யுவதிகள் வரையிலான பதினையாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் விடுதலையைக் கருத்தில் கொண்டும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தம்மத்தியிலான வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
- தினகரன் - -
|