|
'பிரபாகரன் இறப்புச் சான்று வழங்கப்பட்டுவிட்டது': ப. சிதம்பரம்
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றை இலங்கை அரசு இந்தியாவிடம் வழங்கிவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இலங்கை அரசிடமிருந்து கிடைத்துவிட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) என்னிடம் தெரிவித்தது என்றார் அவர்.
தில்லியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு இதுவரை தரவில்லை என்று சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு தலைவர் பி.என். மிஸ்ரா கூறியிருந்தார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அளித்த பதிலில் அவர் இவ்வாறு கூறினார்.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இதை மறுத்துள்ளார். பிரபாகரன் இறப்புச் சான்று ஏற்கெனவே கிடைக்கப்பெற்றுவிட்டதாக சிபிஐ தெரிவித்ததுள்ளது என்று அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.
சிபிஐ போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சிறப்பு விசாரணைக் குழு ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு இலங்கை அரசிடம் கோரியிருந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் இலங்கை ராணுவத்துடன் நடைபெற்ற போரில பிரபாகரன் கொல்லப்பட்டார். மே 18-ம் தேதி பிரபாகரனின் உடலை கைப்பற்றியதாக ராணுவம் அறிவித்தது.
இதையடுத்து ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக பிரபாகரனின் இறப்பு சான்றிதழை அளிக்குமாறு இலங்கை அரசிடம் மத்திய புலனாய்வு அமைப்பு கோரியிருந்தது.
பிரபாகரன் மரணமடைந்து 8 மாதங்கள் கழிந்துவிட்ட நிலையில் அவரது இறப்புச் சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை என்று சிபிஐ கூறியிருந்தது. பிரபாகரன் மரணமடைந்த தகவல் கிடைத்தவுடனே அவரது இறப்புச் சான்றிதழை வழங்குமாறு இலங்கை அரசிடம் கோரப்பட்டது. ஆனால் இதுவரை பதில் இல்லை என்று சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு தலைவர் பி.என். மிஸ்ரா கூறினார்.ஆனால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதை மறுத்துள்ளார்.
தகவல் தெரியும் சட்டத்தில் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அமெரிக்கர்களுக்கு...: இந்தியாவுக்கு வரும் அமெரிக்க மக்களுக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து உள்ளது என்ற அமெரிக்க அரசின் எச்சரிக்கை வாடிக்கையான ஒன்றுதான். இதற்கு முன் கடந்த ஆண்டு இதுபோன்று இரண்டுஇ மூன்று முறை அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. தற்போதும் கடந்த 29-ம் தேதி புதிதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஓரிரு நாள்களில் தெலங்கானா கமிட்டி: ஏற்கெனவே அறிவித்தபடி தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்து ஆராயவதற்கான கமிட்டி இந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டுவிடும் என்று சிதம்பரம் கூறினார்.
கமிட்டிக்கான வரைமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வரைமுறைகள் தயாரிக்கப்பட்டவுடன் கமிட்டி அறிவிக்கப்படும். தெலங்கானா பகுதியில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதுமில்லை. எல்லா தரப்பு கருத்துகளையும் கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
அசாம் தீவிரவாதிகளுடன்... அசாம் மாநிலத்தில் உல்பா மற்றும் என்.டி.எஃப்.பி. ஆகிய முக்கிய தீவிரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் பங்கு குறித்து கேட்டபோது அது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார் சிதம்பரம்.
உள்துறை அமைச்சகப் பணிகளைப் பிரித்து புதிய அமைச்சகம் அமைக்கும் யோசனை குறித்து கேட்டபோதுஇ அது பிரதமரின் பரிசீலனையில் உள்ளது என்றார் அவர்.
இருப்பினும் தற்போது உள்நாட்டு பாதுகாப்புத் தவிர்த்த பிற விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பை இணை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டேன் என்றார் அவர்.
நன்றி: தினமணி
|