|
இந்தியாவில் 6 - 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய ஆரம்பக்கல்வி கல்வி உரிமைச் சட்டம் அமல்
சுதந்திர இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வி உரி மைச்சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வியை உறுதி செய்யும் சட்டம் ஏப்ரல் 1 வியாழக் கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், அனைவருக்கும் கல்வி அளிப்பதை நோக்கிய பயணத்தில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கல்வி பெறுவதை அடிப்படை உரிமை என்பதை அரசு உணர்ந்துள் ளது என்றும், அதைச் செயல்படுத்த உறுதியாக பணியாற்றும் என்றும் குறிப்பிட்ட பிரதமர், இச்சட்டத்தை அமல்படுத்துவதில் நிதிப்பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இடையூறாக இருக்காது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.
கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு அச்சாணி என்று குறிப்பிட்ட மன் மோகன் சிங், மாநில அரசுகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பி னரும் இச்சட்டத்தின் நோக்கங்களை உணர்ந்து, உண்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக ஆசிரியர்களின் பணியே இதில் தலையாயது என்று குறிப்பிட்ட அவர், குழந்தைகளின் திறன்களை வெளிக்கொண்டு வருவதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தனது சொந்த வாழ்க்கையில் கல்விக்கூடம் செல்வதற்காக மிக நீண்ட தூரம் நடந்து சென்று படித்ததையும், மின்வசதி இல்லாத காலகட்டத்தில் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து படிப்படியாக முன்னேறியதையும் தனது உரையில் குறிப்பிட்ட பிரதமர், இன்றைக்கு நான் அடைந்துள்ள உயர் பொறுப்புகளுக்கு எனது கல்வியே காரணம் என்றும், அத்தகைய கல்வியின் வெளிச்சம் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று விரும்புவதாகவும் குறிப்பிட்டார். தலித்துகள், சிறுபான்மையினர், பெண் குழந்தைகள் என நாட்டின் குழந்தைகள் எந்த பிரிவைச் சேர்ந்தவர் களாக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படவேண்டும் என்றும் கூறினார்.
சட்டம் என்ன சொல்கிறது?
நாட்டில் பள்ளிக்குச்செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்ட, இடையிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திய குழந்தைகள் உட்பட சுமார் 92 லட்சம் குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வியும், 6 வயது முதல் 14 வயது வரையிலும் உள்ள அனைத்து குழந்தைகளும் அவசியம் ஆரம்பக்கல்வியும் அளிக்க வேண்டுமென கல்வி உரிமைச்சட்டம் வரையறுத்துள்ளது.
இச்சட்டத்தின்படி எந்தவொரு குழந்தைக்கும் எந்த பள்ளியும் அனுமதி மறுக்கக்கூடாது; பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் உடனடியாக பணியில் அமர்த்தப்படவேண்டும்; பள்ளிகள் போதிய அளவு ஆசிரியர்கள், மைதானம், அடிப்படை வசதிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்; குழந்தைகளின் இருப்பிடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அவசியம் ஒரு ஆரம்பப்பள்ளி இருக்க வேண்டும் என்பதை மாநில அரசும் உள்ளூர் நிர்வாகங்களும் உறுதி செய்ய வேண்டும்.
இச்சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில அரசும் தங்களது மாநிலத்தில் ஒவ்வொரு குழந்தையும் இலவச ஆரம்பக்கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசும், மாநில அரசுகளும் 55:45 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கிட வேண்டும்.
இச்சட்டத்தின்படி தனியார் கல்வி நிறுவனங்களும் சமூகத்தில் ஏழை, எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் பள்ளி நிர்வாகக்குழு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்கள் பள்ளி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
அரசின் திட்டம் என்ன?
தற்போதைய நிலவரத்தின்படி இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 22 கோடி குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 4.6 சதவீதம் பேர் (சுமார் 92 லட்சம்) மட்டுமே பள்ளிக்கூடத்திற்கு வெளியில் இருக்கிறார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறுகிறது.
இச்சட்டத்தை அமல்படுத்த ரூ.25 ஆயிரம் கோடியை மத்திய நிதிக்கமிஷன் ஒதுக்கி உள்ளது. அடுத்த 5 ஆண்டு காலத்தில் இச்சட்டத்தை அமல்படுத்த ரூ.1.71 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்துள்ளது.
இச்சட்டம் அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்று கூறி தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. வழக்கு நடந்தாலும் சட்டம் அமலாகும் என்று அரசு கூறியுள்ளது.
உடனடி சவால்கள்
இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டுமானால் நாடு முழுவதும் அடுத்த 6 மாத காலத்திற்குள் 12 லட்சம் ஆசிரியர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தகுந்த பயிற்சியை பெற்றிருக்க வேண்டும் என்று சட்டம் வரையறை செய்திருப்பதால், நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிற்கு ஆசிரியர் பயிற்சி திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்றாண்டு காலத்திற்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதிய வகுப்பறைகள், நூலக ஏற்பாடு, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்தாக வேண்டும்.
|