|
சென்னை துறைமுகத்திற்குள் வந்தது 'வணங்கா மண்'
சென்னை : இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு, நிவாரணப் பொருட்களுடன் நடுக்கடலில் நின்று கொண்டிருந்த, "வணங்கா மண்' கப்பல், நேற்றிரவு சென்னைத் துறைமுகத்திற்குள் வந்தது. கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டு, சரக்கு கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக, ஐரோப்பிய தமிழர்கள் திரட்டிய 884 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு "கேப்டன் அலி' என்ற "வணங்கா மண்' கப்பல், பிரான்சிலிருந்து கடந்த மே 7ம் தேதி இலங்கை புறப்பட்டது. அந்த கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பியது. எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த கப்பல், கடந்த ஜூன் 13ம் தேதி, சென்னை நோக்கி வந்தது.
மத்திய அரசின் முறையான அனுமதியின்மையால், சென்னைத் துறைமுகத்திற்குள்ளும் நுழைய முடியவில்லை. வேறு வழியின்றி, சென்னையிலிருந்து ஐந்து கடல் மைல் தொலைவில், சர்வதேச எல்லையில் நிவாரணக் கப்பல் நின்றிருந்தது.
மனிதாபினமான அடிப்படையில், நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க உதவுமாறு, வெளியுறவு அமைச்சர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் கடிதம் எழுதினார். தமிழக அரசின் சார்பில், அமைச்சர் பொன்முடி நேரில் சென்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, செஞ்சிலுவை சங்கம் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பும் வகையில், பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்து வந்தன. இதற்கான ஒருங்கிணைப்பு முயற்சிகளை மனிதம் என்ற அமைப்பு செய்து வந்தது.
இந்நிலையில், நிவாரணப் பொருட்களை பெற்று, வினியோகம் செய்ய இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஒப்புதல் அளித்தது. சர்வதேச எல்லையில் தத்தளிக்கும் கப்பல் சென்னைத் துறைமுகத்திற்குள் நுழைய மத்திய அரசு அனுமதித்தது. இதைத் தொடர்ந்து, "வணங்கா மண்' நிவாரணக் கப்பல் நேற்றிரவு சென்னைத் துறைமுகத்திற்குள் வந்தது.
இந்த கப்பலின் கேப்டன், முகமது முஸ்தபா கூறியதாவது: இலங்கை சென்றபோது, ராணுவத்தினர் எங்களை ஐந்து நாள் கப்பலிலேயே சிறை வைத்தனர். சோதனை நடத்தி, ஆயுதங்கள் இல்லை என்று உறுதி செய்த பின்னரும் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றினர். இது சர்வதேச விதிகளுக்கு மாறானது. பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. பொருட்களை இறக்கிவிட்டு, கோல்கட்டா செல்கிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து, "வணங்கா மண்' கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டு, கன்டெய்னர்களில் ஏற்றப்படுகின்றன. இவை, வழக்கமாக செல்லும் சரக்கு கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன. இரண்டு நாட்களில், இந்த பணிகளை முடித்து, நிவாரணப் பொருட்கள் கொண்ட சரக்கு கப்பல் இலங்கைக்கு செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- Dinamalar-
|