|
இந்திய முதலீட்டாளர்களின் ஆர்வம் இலங்கையில் அதிகரித்து வருகிறது – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையில் இந்திய முதலீட்டு ஆர்வம் துரிதமாக அதிகரித்து வருகிறது இந்தியாவின் பல முன்னணி தொழில்முயற்சியாளர்களும் கைத்தொழில் அதிபர்களும் வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் இலங்கையில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காண்பித்துள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தற்போது விஜயம் செய்துள்ள அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அலரிமாளிகையில் நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறி;னார். இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம் பெற்றது. இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கைகள், வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியன குறித்து ராவ் திருப்தி தெரிவித்தார். வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற பல இடங்களுக்;கும் கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்த ராவ் அவ்விடங்களில் நிலைமை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டம், வடக்கில் ரயில் பாதை புனரமைப்பு ஆகியன உட்பட இந்தியா உதவியளிப்பதாக உறுதியிக்கப்பட்ட திட்டங்களை இந்தியா விரைவில் செய்துகொடுக்கும் என ராவ் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். இதேவேளை இடம்பெயர்ந்த மக்களுக்கும் அப்பகுதியில் வாழும் ஏனையோருக்கும் தங்கள் சொந்த திட்டங்கள் என்ற உணர்வு ஏற்படும் வகையில் இந்தத் திட்டங்களில் குறிப்பாக வீடமைப்புத் திட்டங்களில் அவர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான சிநேகபூர்வ உறவுகளை ஜனாதிபதியும் ராவும் உறுதிபடுத்திக் கொண்டனர். இந்திய பிரதமர் மன்மோஹன் சிங்கின் நல்லாசிகளை ராவ் ஜனாதிபதியிடம் தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, திறைசேரியின் செயலாளர் டாக்டர் பி பீ ஜயசுந்தர, இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், இந்தியத் தூதுவர் அஷோக் கே காந்தா, கூட்டுறவுச் செயலாளர் மூர்த்தி, பிரதித் தூதுவர் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|