|
ஜீவ ஜீவ மரத்தின் நிழலில் வளர்ந்தவர்
- எஸ்.ஏ.பெருமாள்
தோழர் மாஜினி 28-3-2010 அன்று தனது 90 வயதில் காலமானார். இந்த முது பெரும் கம்யூனிஸ்ட் தனது வாழ்நாள் முழுவதும் எழுதுவதற்கும், மொழிபெயர்ப்பதற்கும் அர்ப்பணித்தவர். கூர்மையான விமர்சகர். திண்டுக்கல்லில் பிறந்த இவர், தென்மாவட்டங்களில் வெளியான ஆதித்தனார் அவர்களின் “தந்தி” (பின்புதான் தினத்தந்தியானது) பத்திரிகையின் பொறுப்பாசிரியராய் பணியாற்றினார். அந்தக்காலத்தில் இவர் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருந்தார். மதுரையில் காங்கிரஸ் கட்சியின் நகர செயற்குழு உறுப்பினராக (1942-47 ஆண்டுகளில்) இருந்தார்.
தந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்த போது அதில் கம்யூனிஸ்ட்டுகள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். “மாஸ்கோவில் மழைபெய்தால் மதுரையில் குடைபிடிப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்” என்னும் அர்த்தமற்ற கோஷம் இவரது பேனா முனையிலிருந்துதான் வந்தது. மாரி, மணவாளன், தில்லைவனம் போன்றவர்கள் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கொலை வெறித் தாக்குதலுக்குப் பலியாயினர். மரத்தின் நிழலில் வளர்ந்தவர்
- எஸ்.ஏ.பெருமாள்
தோழர் மாஜினி 28-3-2010 அன்று தனது 90 வயதில் காலமானார். இந்த முது பெரும் கம்யூனிஸ்ட் தனது வாழ்நாள் முழுவதும் எழுதுவதற்கும், மொழிபெயர்ப்பதற்கும் அர்ப்பணித்தவர். கூர்மையான விமர்சகர். திண்டுக்கல்லில் பிறந்த இவர், தென்மாவட்டங்களில் வெளியான ஆதித்தனார் அவர்களின் “தந்தி” (பின்புதான் தினத்தந்தியானது) பத்திரிகையின் பொறுப்பாசிரியராய் பணியாற்றினார். அந்தக்காலத்தில் இவர் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருந்தார். மதுரையில் காங்கிரஸ் கட்சியின் நகர செயற்குழு உறுப்பினராக (1942-47 ஆண்டுகளில்) இருந்தார்.
தந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்த போது அதில் கம்யூனிஸ்ட்டுகள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். “மாஸ்கோவில் மழைபெய்தால் மதுரையில் குடைபிடிப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்” என்னும் அர்த்தமற்ற கோஷம் இவரது பேனா முனையிலிருந்துதான் வந்தது. மாரி, மணவாளன், தில்லைவனம் போன்றவர்கள் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கொலை வெறித் தாக்குதலுக்குப் பலியாயினர். அவர்கள் மூவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் செய்தியை தந்தியில் “கம்யூனிஸ்டுகள் மூவருக்கு எமலோகச் சீட்டு” என்று எழுதி அதைத் தலைப்புச்செய்தியாக வெளியிட்டவர். “மனிதாபிமானமின்றி மரத்துப்போன உணர்வோடு எனது எழுதுகோல் எழுதியதை நினைக்கிறபோது என் கண்களில் ரத்தநீர் சுரக்கிறது” என்று பின்னாளில் மாஜினி பெரிதும் வேதனைப்பட்டதுண்டு.
மாஜினியின் இயற்பெயர் ஆர்.ரெங்கசாமி யாகும். தந்தி பத்திரிகையின் ஆசிரியரும் உரிமையாளருமான ஆதித்தனார் தான் மாஜினி என்ற இத்தாலியப் புரட்சியாளரின் பெயரைப் புனைப்பெயராகச் சூட்டினார். அந்தப்பெயரே பிற்காலத்தில் அவர் கம்யூனிஸ்ட்டாக மாறிய பின்பும் நிலைத்துவிட்டது. அந்தக்காலத்தில் காங்கிரசிலிருந்த இளைஞர்கள் பெரும் பகுதியினருக்கு கம்யூனிசம், கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே ஒரு அலர்ஜி, பயம், திகிலாயிருந்தது. கம்யூனிஸ்ட் என்ற வார்த்தையை நாவில் உச்சரிப்பது கூடப் பெரிய பாவம் என்று கருதினர்.
பள்ளியில் படிக்கும் போதே இந்தச் சிந்தனையில் வளர்ந்தவர் மாஜினி. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தோழர் என். சங்கரய்யா கம்யூனிஸ்ட் மாணவர் சம்மேளனத்தை உருவாக்கி வளர்த்துக் கொண்டிருந்தார். இதற்குப்போட்டியாக மாஜினி மதுரை மாணவர் காங்கிரசை ஆரம்பித்தார். அப்போது தோழர் என்.சங்கரய்யா, கிருஷ்ணகிரி தோழர் டாக்டர் அண்ணாஜியை அழைத்து ஒரு மாநாடு நடத்தினார். மாஜினி அதற்குப் போட்டியாக அடுத்த மாதமே ஒரு மாநாட்டை நடத்தினார்.
பின்பு தென்மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்கோடு விளங்கிய தந்தி பத்திரிகையின் ஆசிரியராகும் வாய்ப்புக்கிடைத்ததும் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி மிகுந்த வன்மத்தோடு எழுதிவந்தார். ஆனால் கொஞ்ச காலத்திலேயே கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வெறியைக் கைவிட்டு மார்க்சியத்தை நெஞ்சிலும், தோளில் செங்கொடியும் ஏந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் தோழராய் ஊழியராய் மாறிவிட்டார். இந்த அதிசய மாற்றத்தை நிகழ்த்தியவர்கள் அன்றைய கம்யூனிஸ்ட்டுத் தலைவர்கள் தான்.
1947ம் ஆண்டு ஒருநாள் தோழர் ஜீவாவும் சில மதுரைத் தோழர்களும் தந்தி பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றனர். ஒரு முக்கியமான செய்தியை டெலிபிரிண்டர் மூலம் தெரிந்துகொள்வதற்காகவே அங்கு சென்றனர். அதுபற்றி மாஜினி “அதுவரை கம்யூனிஸ்ட் தலைவர்கள் பற்றி எனது மனத்திரையில் தீட்டியிருந்த சித்திரம் வேறு. கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பயங்கரமானவர்கள், ஆபத்தானவர்கள், சிடுசிடு என கோபமாகப் பேசுபவர்கள், சக மனிதர்களோடு சகஜமாகப் பழகாதவர்கள் என்றெல்லாம் மனதில் இமயமலை உயரத்தில் கற்பனைக்கோட்டைகள் கட்டியிருந்தேன். ஆனால் ஜீவாவைச் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசியவுடனேயே என் இதயத்தில் எழுப்பியிருந்த கற்பனைக் கோட் டைகள் உடைந்து நொறுங்கித் தூளாகின.
ஜீவாவின் எளிமையான தோற்றமும், இனிய சுபாவமும், கள்ளங்கபடமற்ற சரளமான பேச்சும், அசைக்கவும் மறுக்கவும் முடியாத ஆணித்தரமான தர்க்கங்களும் என்னை வெகுவாக கவர்ந்தது. நான் ஒரு கம்யூனிஸ்ட் எதிரி என்று தெரிந்தும் அதை மறந்து எனக்கு ஜீவா ஒரு மணி நேரம் மார்க்சிய வகுப்பே நடத்திவிட்டார். அந்த ஒரு மணி நேரப் பேச்சில் நான் மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு என்பது என்னிடம் விடைபெற்றது. மாணவப் பருவத்திலிருந்து இருந்து வந்த எதிர்ப்பும் மாறியது. ஜீவா விடைபெற்றுச் செல்லும் போது என் மனதில் ஒரு புதியவிதை முளைவிட்டிருப்பதை உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாஜினி காலப் போக்கில் காங்கிரசிலிருந்தும், தந்திப் பத்திரிகையிலிருந்தும் விலகி “தமிழ்நாடு” “புரட்சி” போன்ற பத்திரிகை களை நடத்தினார். ஜீவாவின் அனல்கக்கும் பேச்சுக்களைக் கேட்டும், அவரது எழுத்துக்களைப் படித்தும் 1948ல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். நான் “ஜீவமரத்தின் நிழலில் வளர்ந்தவன்” என்று மாஜினி கூறுவார். ஜீவாவை அண்டத்தைக் குலுக்கும் சண்ட மாருதம் என்று கூறுவார். பின்னர் ஜனசக்தியிலும், தாமரையிலும் துணை ஆசிரியராய் பணியாற்றினார். மாஜினியின் விமர்சனக் கட்டுரைகள் மிகவும் கூர்மையானவை. வாசகர்களால் ஜனசக்தியில் விரும்பிப் படிக்கக்கூடியதாக அவரது எழுத்துக்கள் இருந்தன.
அக்காலத்தில் திராவிட இயக்கத்தையும் அதன் இனவெறி அரசியலையும் எதிர்த்துப் பல பிரசுரங்களை எழுதினார். அவற்றுள் “கருப்பும் சிவப்பும்”, “நீயா நானா” போன்ற பிரசுரங்கள் முக்கியமானவையாகும். தாமரை இலக்கிய ஏட்டில் விமர்சனப் பகுதியைத் துவக்கி பல விஷயங்கள் பற்றி மிகவும் கூர்மையான முறையில் எழுதினார். அக்காலத்தில் மாஜினியின் எழுத்துக்களைப் படிப்பதற்கென்றே பெரிய வாசகர் வட்டம் இருந்தது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்வதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அக்காலத்தில் திலகர் எழுதிய கீதா ரகசியம் என்ற நூலை தமிழாக்கம் செய்து பாராட்டப்பட்டார்.
1964ல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட பின்பு சோவியத் நாடு பத்திரிகையில் பொறுப்பாசிரியராக இருபதாண்டு காலம் திறம்படப் பணியாற்றினார். அவரது வாழ்வின் இறுதியாண்டுகளில் அம்பேத்கரின் கட்டுரைகள், உரைகளை தமிழில் கொண்டு வருவதில் பதிப்பாசிரியராய் என்.சி.பி.எச்.நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்தார். அம் பேத்கரின் நூல்கள் 37 பெரிய தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன. இது ஒரு பெரிய சாதனையாகும். அப்பணியை அவர் மேலும் தொடர்வதற்குள் வாழ்வு முடிந்துவிட்டது.
அவர் பிறந்த ஊரான திண்டுக்கல்லிலேயே இறுதிக்காலத்தில் வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவரது பெயரும் எழுத்துக்களும் தமிழக வரலாற்றில் நிலைத்திருக்கும்.
|