|
மனோ கணேசனுக்கு...
கொழும்பு மாவட்டத்தை விட்டு இப்போது கண்டிக்குப் போயிருக்கிaர்கள். அபார துணிச்சல்தான். துணிச்சல் என்பதிலும் பார்க்கத் தந்திரோபாயம் என்பது பொருத்தமான பதம் என்று சிலர் சொல்கிறார்கள். தம்பியையும் பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கான தந்திரோபாயமாம்.
கண்டியில் தோற்றாலும் தேசியப் பட்டியலில் இடம்பெறுவதற்கான உறுதிமொழியை ரணிலிடம் பெற்றுக்கொண்டுதான் கண்டிக்குப் போனீர்கள் என்று பேச்சு அடிபடுகின்றது. அது எப்படியோ, விஷயத்துக்கு வருவோம்.
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காக நீங்கள் ஆக்ரோஷத்தோடு குரல் கொடுத்தீர்கள். தமிழ் மக்களின் தலைவனாக உங்களை இனங்காட்டும் பாணியில் பேசினீர்கள். இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கைத் திட்டமொன்றை முன்வைத்துப் போராட்டம் நடத்துவீர்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஏமாந்ததுதான் மிச்சம்.
உங்கள் வீராவேசப் பேச்சுகள் எல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே என்று இப்போது மக்கள் சொல்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியுடன் நீங்கள் சங்கமம் ஆகிவிட்டதாலேயே மக்கள் இப்படிச் சொல்கிறார்கள்.
இந்த மக்களுக்கு ஒரு சங்கதி தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டு இருக்காவிட்டால் உங்களுக்குப் பாராளுமன்றக் கதவு திறக்காது என்பது இந்த மக்களுக்குத் தெரியவில்லை.
உங்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான உறவில் கொள்கை சம்பந்தப்படவில்லை என்பதும் இந்த மக்களுக்குப் புரியவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு தமிழ்ப் பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் கூறிய சங்கதி எல்லாத் தமிழர்களினதும் கவனத்தை ஈர்த்தது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான தமிழர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒஸ்லோ அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்காது என்று அப்பேட்டியில் ரணில் கூறினார்.
நீங்களும் ஒஸ்லோ அறிக்கை பற்றிப் பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கின்றீர்கள். அந்த அடிப்படையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கூறியிருக்கின்றீர்கள்.
இன்று அந்த அறிக்கையை ரணில் நிராகரிக்கின்றார். நீங்கள் அது பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், தொடர்ந்து ரணிலைத் தலைவராக ஏற்றுக் கொள்கின்றீர்கள். என்ன செய்வது? பாராளுமன்றம் போக வேண்டுமே.
ஒஸ்லோ அறிக்கை சமஷ்டித் தீர்வு பற்றியது. சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கமும் புலிகள் அமைப்பும் இணக்கம் தெரிவித்தன என்பதே ஒஸ்லோ அறிக்கையின் சாராம்சம்.
ஒஸ்லோ அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறியதற்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்ஹ சமஷ்டித் தீர்வை நிராகரித்துவிட்டார். சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணும் கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சி கைவிட்டுவிட்டதாகப் பகிரங்கமாக அவர் அறிக்கை வெளியிட்டார்.
இனப் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுத்தாலும் நீங்கள் அந்தக் கட்சியுடனான உறவைக் கைவிடத் தயாராக இல்லை. இந்த நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் இனப் பிரச்சினை பற்றியும் நீங்கள் எப்படிப் பேசலாம்?
இனப் பிரச்சினையின் தீர்வுக்கு உங்கள் கட்சி முன்வைக்கும் தீர்வு என்ன என்ற கேள்விக்கு எவ்வளவு முயன்றும் பதில் கிடைப்பதாக இல்லை. ஒருபுறத்தில் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தடையாகச் செயற்படும் வரலாற்றைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியுடன் வலுவான உறவைப் பேணுகின்றீர்கள்.
மறுபுறத்தில் தமிழ் மக்களின் ஒரு தலைவனாக உங்களை இனங்காட்டுவதற்கு முயற்சிக்கின்றீர்கள். தமிழ் மக்களின் நலனில் நீங்கள் உண்மையான அக்கறை கொண்டிருக்கின்றீர்களென்றால், இனப் பிரச்சினையின் தீர்வுக்கு உங்கள் கட்சியின் கொள்கையை வெளிப்படுத்த வேண்டும்.
நியாயமான தீர்வு என்றோ ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு என்றோ பொதுப்படையாகக் கூறிச் சமாளிக்காமல், என்ன அடிப்படையில் தீர்வு என்பதை விளக்கமாகக் கூற வேண்டும். கூறுவீர்களா?
இப்படிக்கு
சாமான்யன்
|