|
சேவையை தொடர்வார் தேர்தல் ஆணையாளர். எதிரணியினரும் விரும்புவதாக கூறுகிறார்
பாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியிலும் தொடர்ந்து பணியாற்றப் போவதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்று புதன்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததுமே உடனடியாகப் பதவி விலகப் போவதாகத் தேர்தல் ஆணையாளர் கூறியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் தனது அலுவலகப் பணியாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலும் தன்னைச் சந்தித்த எதிரணி கேட்டுக்கொண்டதன் பேரிலும் தொடர்ந்து சேவையாற்றப் போவதாகத் தேர்தல் ஆணையாளர் திசாநாயக்க கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த தயானந்த திசாநாயக்க, எதிர்வரும் பொதுத்தேர்தல் நடந்து முடியும் வரை பதவியில் தொடர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தான் தள்ளப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நாளன்றும் அதன் பின்னரும்
நான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்றதும் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தேன். என்னால் இப்பதவியில் தொடர்வது கஷ்டமான காரியமாகவுள்ளது. ஓய்வுபெறுவதற்கான வயதெல்லை தாண்டிய நிலையிலும் இதில் தொடர வேண்டியுள்ளது.ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற போதிலும் அதன் முடிவுகள் தொடர்பில் எதிரணி தரப்பில் நிறையவே முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என நினைக்கின்றேன். அவ்வாறானதொரு நிலையில் அதற்கு நானே முகம்கொடுக்க வேண்டும். அது வரையில் பதவியை விட்டுப் போக முடியாது.
நீதிமன்றத்திடம் வாக்குகள் மீள எண்ணப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டு அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் அதனைச் செய்ய வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கிறது.இதனிடையே பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. இதற்கிடையில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் பொதுத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. தேர்தல் திணைக்களத்திலுள்ள எனது அதிகாரிகளும் ஊழியர்களும் என்னைச் சந்தித்து பாரிய பொறுப்பை எம்மிடம் தந்து எம்மை நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிட வேண்டாமெனவும் தங்களைக் கைவிட வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்து இன்னும் சிறிது காலம் பதவியில் தொடருமாறு கோரினர்.
இதேபோன்று எதிர்க்கட்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்தபோது உடனடியாகப் பதவி விலகவேண்டாமெனவும் என்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்து பதவியில் தொடருமாறும் கேட்டுக்கொண்டனர். இவற்றையெல்லாம் பரிசீலித்த நிலையில்தான் பொதுத் தேர்தல்வரை பதவியில் தொடர முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் திணைக்களத்தின் தனது 35 வருட பதவிக்காலத்தில் இந்த ஜனாதிபதித் தேர்தலின் போதே மிகமோசமாக விமர்சிக்கப்பட்டதாக விசனம் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க 26 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் நிறையவே வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் மோசடிகளுக்கு இடமளிக்கவில்லை எனக்கூறிய அவர் தன் மீது களங்கம் கற்பிக்க சிலர் முயற்சிப்பதாககவலை தெரிவித்தார்.செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது;
நான் தேர்தல் திணைக்களத்தில் சேவையேற்று 35 வருடங்களாகின்றன. முன்னைய ஆணையாளர் ஓய்வுபெற்ற பின்னர் ஆணையாளராக நியமனம் பெற்று பல தேர்தல்களை நடத்தியுள்ளேன். எந்தத் தேர்தலிலும் சந்திக்காத சவாலை இந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்தித்தேன். வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் பல பிரச்சினைகளை எதிர்கொண்டேன்.
எனது உத்தரவுகளை எவரும் உரிய முறையில் பின்பற்ற வில்லை. உத்தரவுகளை விட முடியும். அவை நிறைவேற்றப்படாவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எனக்குக் கிடையாது. அவ்வாறு புதுமையானதொரு சட்டவிதிகளே தேர்தல் சட்டத்தில் காணப்படுகின்றது.அதிகாரத்தை வழங்கி ஆணையாளரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இதுதான் எமது நாட்டின் தேர்தல் சட்ட விதிகளாகக் காணப்படுகின்றன.
1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் அரசியலமைப்பும், அதன் பின்னர் கொண்டுவரப்பட்ட 17 ஆவது அரசியலமைப்புத்திருத்தமும் ஆரோக்கிய மற்றவையாகவே காணப்படுகின்றன. அதன் விளைவுகளே இந்த மோசமான அரசியல் கலாசாரத்துக்கு காரணமாக அமைந்து காணப்படுகின்றது.
26 ஆம் திகதி நள்ளிரவுக்குப்பின்னர் நாட்டில் ஒரு போதும் கேட்டறியாத வகையில் வதந்திகள் பரப்பப்பட்டன. தேர்தல் ஆணையாளர் தலைமறைவாகியுள்ளாரெனவும் அவர் துப்பாக்கி முனையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் எனவும், கடுமையாக சுகவீனமுற்றிருக்கிறார். ஆணையாளர் வீடு செல்லும் போது வாகன விபத்துக்குள்ளாகியுள்ளார், அவரது பிள்ளைகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இப்படி பல்வேறு வதந்திகள் நாடு முழுவதும் பரவியிருந்தன.இவ்வாறு பரவிய வதந்திகளில் ஒன்று கூட இடம்பெறவில்லை. நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அச்சுறுத்தலால் பயந்து போய் செயற்பட்டதாகக்கூட தெரிவிக்கப்படுகின்றது. ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்று புரியவில்லை.நான் இந்தப்பதவியிலிருக்கும் வரை எவர் பக்கமும் சாரமாட்டேன். மோசடிகளுக்கு துணை போகவும் மாட்டேன், இடமளிக்கப்போவதுமில்லை எனவும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.
Thinakural
|