|
ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை முதலில் ஏற்றுக்கொள்ளாமல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது
- கலாநிதி.ஜெகான் பெரேரா
“அரசாங்கத்தின் கடப்பாடு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியதே, தவிர அதற்கான தீர்வினை தள்ளிப்போடுவதோ, அல்லது அப்படியான பிரச்சனைகள் எதுவுமே இல்லை என்று ஒரேயடியாக மறுப்பதோ இல்லை. காலம் செல்லும்போது காயங்கள் தானே ஆறக்கூடிய வகையானதோ அல்லது பொருத்தமற்றதாக மாறக்கூடியனவாகவோ உள்ள சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. எப்படியாயினும் காணாமற் போனவர்கள் மற்றும் கொடூரமான சூழ்நிலையில் கொல்லப்பட்டவர்கள் போன்ற மக்களின் நினைவுகளோடு ஒன்றித்துவிட்ட பிரச்சினைகள் அநேகமாக ஒருபோதும் தானாகவே மறைந்து போய்விடும் என்பது நிச்சயமாக நடக்காது. பிரெஞ்சு அரசாங்கம், 1915ல் துருக்கியில் வைத்து ஒரு மில்லியன் ஆர்மேனியர்களை ஒரு இன ஓழிப்பு நடவடிக்கையாக குரூரமாக கொலை செய்ததை மறுப்பது சட்டவிரோத செயல் என சமீபத்தில் முடிவு செய்திருக்கும் செயல் ஸ்ரீலங்காவில் உள்ள நமக்கு பொருத்தமான ஒரு நினைவூட்டலாகும். தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம கடந்த காலத்தின் ஆற்ற முடியாத காயங்களாக தேங்கி நிற்கும் நினைவுகளை இப்போதிருந்து ஒரு நூறு வருடங்களுக்கு; மேலும் வளர்ச்சியடையவோ, அல்லது பல்கிப் பெருகி மற்றும் பாழடைய விட்டுவிடக் கூடாது.”
( ஸ்ரீலங்கா ஊடகவியலாளர்கள் மற்றும் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர், ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் 25 ஜனவரி, 2012, புதன்கிழமை அரங்கேற்றிய கறுப்பு ஜனவரி என்கிற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிலையங்கள் என்பனவற்றை கொலை செய்தது மற்றும் தாக்குதல் நடத்தியது போன்றவற்றுக்கு பொறுப்பானவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்;கள். அவர்களிடமிருந்த விளம்பர பதாகைகளில் காணாமற் போய் இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது, சுகிர்தராஜன் கொல்லப்பட்டு நான்கு வருடங்களாகி விட்டன, கொலையாளிகள் சுதந்திரமாகத் திரிகின்றனர். என்று எழுதப் பட்டிருந்தன)
யுத்தம் முடிவடைந்த பின்னர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள அணுகுமுறை இரண்டு விதமாக உள்ளது. ஒன்று, பிரச்சினைகளுக்கு மாறுபட்ட முன்னேற்றத்தை வழங்கக் கூடியதான பொறிமுறைகளை அமைப்பது .நாட்டின் யுத்தத்துக்கு பின்னான சூழ்நிலையின் ஒட்டு மொத்த முன்னேற்றம் பற்றிய ஆதாரங்களை, நாட்டு மக்களுக்கும் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விளக்குவதற்கு அரசாங்கத்துக்கு சொல்வதற்கு அதன் தனியான ஒரு சொந்தக் கதை உண்டு. அரசாங்கம் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அதன்மீது சுமத்தப்பட்டிருக்கும் போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகச் சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை கையாள்வதற்காக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சி) என்ற ஆணைக்குழுவை அமைத்தது. கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான எல்.எல்.ஆர்.சி யின் அறிக்கை அரசாங்கத்துக்கு மேலும் மூச்சு விடத்தக்க இடைவெளியை வழங்கப் போதுமான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
மறுப்பு முறை
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் கையாளும் மாற்று அணுகுமுறை பிரச்சினைகளின் யதார்த்த தன்மையினை மறுதலிப்பதாகவும் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்வதாக மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதாகவுமே உள்ளது. அரசாங்கத்தின் பதிலுக்கு ஆதாரமாக ஏழு ஊடக அமைப்புகள், கடந்த காலத்தில் தண்டனை விதிவிலக்குடன் நாட்டின் பல பாகங்களிலும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது மற்றும் காணாமற் போக்கடிக்கப்பட்டது போன்றவற்றுக்கு எதிராக கொழும்பில் கறுப்பு ஜனவரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள், மற்றும் அச் சம்பவங்கள் தொடர்ந்தும் ஏன் சமீப காலங்களில் கூட சுதந்திரமாக கருத்து வெளியிடும் எண்ணத்துக்கு ஊறு விளைவிக்கின்றன. அரசாங்கம் இந்தக் கூற்றை மறுப்பதற்கும் மற்றும் நம்பிக்கையின்மையை வளர்ப்பதற்கும் அரச ஊடகங்களின் சக்தியைப் பயன்படுத்துகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே எல்.ரீ.ரீ,ஈ அமைப்பு மறைந்துவிட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்துக்கு சில நாட்கள் முன்புகூட, ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டிருந்தவர்களை,;, அரசாங்க ஊடகங்கள் அவர்களை எல்.ரீ.ரீ,ஈ ஆதரவாளர்கள் என விபரித்தன,
கறுப்பு ஜனவரி
கறுப்பு ஜனவரி என்கிற பெயர் அமைப்பாளர்களால் தெரிவு செய்யப்பட்டதுக்கு காரணம் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் பெரும்பாலும் ஜனவரி மாதத்திலேயே நடந்துள்ளன என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதற்காக வேண்டியே. அதில் முதல் பாதிப்புக்கு உள்ளானவர் சுடர் ஒளி பத்திரிகைக்கு பங்களிப்பை நல்கியிருந்த திருகோணமலையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜா என்கிற சுதந்திர புகைப்படப் பிடிப்பாளராகும். அவர் இனந்தெரியாத ஒரு துப்பாக்கிதாரியால் திருகோணமலையில் வைத்து 24,ஜனவரி 2006ல் கொல்லப்பட்டார். சுகிர்தராஜாதான் 2006 ஜனவரி ஆரம்பத்தில் திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 இளைஞர்கள் பற்றிய புகைப்படங்களை தமிழ் ஊடகங்களுக்கு வழங்கியவர். எம்ரீவி – எம்ரீபி ஊடக நிலையங்களுக்கு தீவைத்தது உட்பட ஜனவரியில் இடம்பெற்ற ஏனைய தாக்குதல்கள், 2009ல் சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் 2010ல் காணாமற் போக்கடிக்கப்பட்ட அரசியல் பத்தி எழுத்தாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோராவர்.
மக்களை தடுத்தல்
எதிர்ப்பு ஆர்ப்பாட்ட தினத்தன்று காவல்துறையினர் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக அரசாங்கம் ஒரு நீதிமன்ற உத்தரவைக் கோரியிருந்தது. அதற்கு மேலதிகமாக அரசாங்க ஆதரவாளர்கள் அதேபோன்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை அதே இடத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அரசாங்க சார்பான ஊர்வலத்தில் கறுப்பு ஜனவரி ஏற்பாட்டாளர்களை தேசத்துரோகிகள். மற்றும் எல்.ரீ.ரீ,ஈ ஆதரவாளர்கள் என குறிபிடும் பதாகைகள் கொண்டு செல்லப்பட்டன. ஊடக அறிக்கைகளின்படி அரச சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் குண்டாந்தடிகள் சகிதம் ஊர்வலம் நடத்தியதுடன் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினார்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுதந்திர ஊடகவியலாளர்களின் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு வேண்டி நீதிமன்ற ஆணையைக் கோரிய காவல்துறையினர் அரசு சார்பு ஊர்வலத்தை வெறுமே கை கட்டிப் பார்த்து ரசித்தனர்.
யாழ்ப்பாண ஆர்ப்பாட்டம்
குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் யுத்தத்தின்போது மிகப்பெரிய அளவில் காணாமற்போன மற்றும் தவற விடப்பட்ட ஆட்களைப் பற்றி ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது இதேபோன்ற ஒரு அரசாங்க மூலோபாயம் இருவாரங்களுக்கு முன் யாழ்ப்பாணத்திலும் நடந்தேறியது. போரின் முடிவின்பின் தவறவிடப்பட்ட அல்லது காணாமற் போன ஆட்களின் இருப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்கு மற்றும் அவர்களின் விதியினை அறிந்து கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஒரு எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் தவறவிடப்பட்ட அல்லது காணாமற் போன ஆட்களின் குடும்பத்தாரின் துயரத்துக்கும் விரக்திக்கும் மத்தியில் அப்படியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது சம்பந்தமாக எல்.எல்.ஆர்.சி ஒரு வருடத்துக்கு முன்பு வழங்கிய இடைக்கால பரிந்துரைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறிவிட்டது.
தற்போதைய நிலமையில் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கு எந்த இயக்கமும் முன்வரவில்லை, தவறவிடப்பட்ட அல்லது காணாமற் போன ஆட்களின் குடும்பத்தினர் அவர்களின் விடயத்திற்காக பிரச்சாரக்குரல் கொடுக்க முன்வரும் எவருடனும் இணைவதற்கு எப்போதுமே தயாராக உள்ளனர். சமூக ஒன்றுகூடல் உட்பட சகல குடியியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்போது முன்கூட்டியே பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்க வேண்;டும் என்றொரு தேவை அங்கு உள்ளது. ஒரு சமூக இனத்தை சேர்ந்த பாதுகாப்பு படைகளின் மிகப்பாரிய பிரசன்னம், மற்றொரு சமூக இனத்தைச் சேர்ந்த மக்களிடம் தவறான புரிந்துணர்வுகளையும் மற்றும் தவறான நம்பிக்கைகளையும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது. எனவேதான் எதிர்ப்புக்காட்டும் வடக்கில் உள்ள மக்கள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக எதையும் ஏற்பாடு செய்வதற்கு தாங்கள் அதிகாரமற்றவர்கள் என்று உணர்வதுடன் மிகுந்த அச்சமும் அடைகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் காணாமற் போனவை
இத்தகைய ஒரு பின்னணியில் தவறிப்போன மற்றும் காணாமற்போன ஆட்கள் சார்பாக ஒரு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணத்தில் ஜேவிபியிலிருந்து பிரிந்துபோன பகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்குள்ள மக்களின் விசேடமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடையே பேராதரவைப் பெற்றது. பாரம்பரியமாக ஜேவிபி, சிங்கள தேசியவாதிகளின் கட்சி என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும் அதன் பிரிந்துபோன பகுதியினர் வடக்கிலுள்ள தமிழ் மக்களை எட்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். இது காணாமற் போனவர்களின் உறவினர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது, ஜேவிபியின் ஏனைய செயற்பாடுகளில் அதிகளவு அனுதாபம் காணபிக்காத பகுதியினரால்கூட இது வரவேற்பை பெற்றது.
எப்படியாயினும் கொழும்பில் சுதந்திர ஊடகவியலாளர்களின் போராட்டத்திற்கு நடத்தப்பட்ட உபசரிப்பினைப்போலவே, இதனையும் முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை மட்டுப்படுத்த நீதிமன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் ஜேவிபி ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் சேருமிடத்தை சென்றடைவதை தடை செய்தனர் .சுமார் 800பேர்கள் ஏ 9 பாதையூடாக யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்வதை ஓமந்தையில் வைத்து தடை செய்தனர். ஊடக அறிக்கைகளின்படி, 12 பேரூந்தகள் உட்பட 20 வாகனங்களில் அவர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. அதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்க அங்கத்தினர்கள், தவறவிடப்பட்ட அல்லது காணாமற் போன ஆட்களை கண்டுபிடித்து தரவேண்டும் என கோருபவர்களை எல்.ரீ.ரீ,ஈக்கு ஆதரவாக செயற்படுபவர்கள் என அழைப்பதற்கு அதைவிடப் பெரிய ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தார்கள். மாற்றம் எதுவும் இல்லை
மக்களின் பல்வேறு பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட பொதுசன ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் இந்த எதிர்தாக்கங்களுக்கான பிரச்சினைகள் உள்ளதுடன், ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவை எதனையும் செய்யவில்லை. ஏற்கனவே உருவாகியிருக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாயின் மாற்றங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும். மாற்றங்களுக்கான ஆயுத்தங்கள் இல்லையெனில் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. ஊடகவியலாளர்களின் கொலைகள் மற்றும் காணமற் போதல்கள் என்பனதான் ஊடக சுதந்திரத்திற்கான உலக தரப்படுத்தல் வரிசையில் ஸ்ரீலங்கா மிகவும் தாழ்வான இடத்தில் இருப்பதற்கான உண்மையான காரணமாகும். அதே போலத்தான் யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மற்றும் காணாமற்போன தமிழ் குடிமக்களின் பிரச்சினைதான் பொறுப்புக்கூறும் கடப்பாட்டுக்காக சர்வதேசம் தொடர்ச்சியான கோரிக்கைகளை மேற்கொள்வதற்கான காரணமும்.
பதிவுகளை தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்
வரும் மாதங்களில், ஜெனிவாவில் நடக்கவிருக்கும் ஐநா சபையின் மனித உரிமைகள் சபையின் வருடாந்தர அமர்வின்போது சர்வதேச சமூகத்தின் முன்பாக அரசாங்கம் தனது மனித உரிமைகள் பற்றிய பதிவுகளை தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தன்மீது குற்றம் சுமத்துபவர்கள் முன்பாக அரசாங்கம் முன்வைக்க இருக்கும் ஒரே சாதனை அநேகமாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சி) யின் அறிக்கையாகத்தான் இருக்கும். அந்த அறிக்கையில் எல்.எல்.ஆர்.சி ஆணையாளர்கள், சுதந்திர ஊடகங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்கு முக்கிய இடம் வழங்கியிருப்பதோடு, கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமற்போன ஊடகவியலாளர்களைப்பற்றி விசாரணை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை கோரியுள்ளனர். எல்.எல்.ஆர்.சி அறிக்கை மேலும் குறிப்பிடுவது அவர்களது இடைக்காலப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்று. அவற்றில் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களை அவர்களது உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதோடு மற்றும் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் ஆகியோரின் விதி என்ன என்பதையும் அறிவிக்க வேண்டும் என்பதும் உள்ளடங்கியுள்ளது.
அரசாங்கத்தின் கடப்பாடு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியதே, தவிர அதற்கான தீர்வினை தள்ளிப்போடுவதோ, அல்லது அப்படியான பிரச்சனைகள் எதுவுமே இல்லை என்று ஒரேயடியாக மறுப்பதோ இல்லை. காலம் செல்லும்போது காயங்கள் தானே ஆறக்கூடிய வகையானதோ அல்லது பொருத்தமற்றதாக மாறக்கூடியனவாகவோ உள்ள சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. எப்படியாயினும் காணாமற் போனவர்கள் மற்றும் கொடூரமான சூழ்நிலையில் கொல்லப்பட்டவர்கள் போன்ற மக்களின் நினைவுகளோடு ஒன்றித்துவிட்ட பிரச்சினைகள் அநேகமாக ஒருபோதும் தானாகவே மறைந்து போய்விடும் என்பது நிச்சயமாக நடக்காது. பிரெஞ்சு அரசாங்கம், 1915ல் துருக்கியில் வைத்து ஒரு மில்லியன் ஆர்மேனியர்களை ஒரு இன ஓழிப்பு நடவடிக்கையாக குரூரமாக கொலை செய்ததை மறுப்பது சட்டவிரோத செயல் என சமீபத்தில் முடிவு செய்திருக்கும் செயல் ஸ்ரீலங்காவில் உள்ள நமக்கு பொருத்தமான ஒரு நினைவூட்டலாகும். தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம கடந்த காலத்தின் ஆற்ற முடியாத காயங்களாக தேங்கி நிற்கும் நினைவுகளை இப்போதிருந்து ஒரு நூறு வருடங்களுக்கு; மேலும் வளர்ச்சியடையவோ, அல்லது பல்கிப் பெருகி மற்றும் பாழடைய விட்டுவிடக் கூடாது.
தேனீமொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
|