|
மனச்சாட்சிக்கு அமைவாக பிரச்சினையை அணுகுவோம்
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றிய முடிவு இத் தலையங்கத்தை எழுதுகின்ற நேரம் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை. இப் பத்திரிகை வாசகர்களுக்குக் கிடைக்கின்ற நேரத்தில் ஒரு வேளை கூட்டமைப்பு அதன் முடிவை வெளியிட்டிருக்கலாம். அல்லது முடிவு எடுப்பதை மேலும் பின்போட்டிருக்கலாம். இவ்விடயத்தைப் பொறுத்தவரையில் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆழமான கருத்துமுரண்பாடு இருப்பதால் இறுதி முடிவு எடுப்பது காலத்துக்குக் காலம் பின்போடப் பட்டு வந்தது. ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதில்லை என்றும் வேட்பாள ரொருவரை நிறுத்துவதில்லை என்றும் மாத்திரம் ஆரம்ப நாட்களில் கூட்டமைப்பினால் தீர்மானம் நிறைவேற்ற முடிந் தது. யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஒருமித்த கருத்து இல்லாததால் அப்போது நிறைவேற்ற முடியவில்லை. நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களும் குறுகிய காலத்துக்குள்ளேயே மீறப்பட்டுவிட்டன.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி´னர் சிவாஜிலிங்கம் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடு கின்றார். கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுள் ஒன்றாகிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தேர்தலைப் பகிஷ்கரிப்பதெனத் தீர்மானித்திருக்கின்றது. பிரதான வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பதையிட்டு ஓருமித்த நிலைப்பாடு கூட்டமைப்புக்குள் இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலை ப்பாட்டைப் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருப்பதாகவும் கூட்டமைப்புக்குள் சக்தி வாய்ந்தவர்க ளான சிலர் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தைத் திணிப்பதற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரியவருகின்றது. எனவே கூட்டமைப்பு வெளியிடும் முடிவு ஏகமன தான முடிவாக இருக்கப் போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாறுபட்ட நிலைப்பாடுகளை வலியுறுத்துவதும் சிலர் முடிவுகளை மீறிச் செயற்படுவதும் புதியதொரு வளர்ச்சிப்போக்கு. புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட காலம் வரை இத்தகைய சுதந்திரமான செயற்பாடு பற்றிக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைத்துப் பார்த்திருக்கவும் முடியாது.
புலிகள் என்ன சொல்கின்றார்களோ அதைச் செய்ய வேண்டியவர்களாகவே இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகரமாக முடித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றது.
இவர்களைப் போலவே தமிழ் மக்களும் இப்போது சுதந்திரமான வாழ்க் கையை வாழ்வதற்கான சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முடிவு எடுப்பதில் இவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் என்பதில் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் உடன்படுவார்களென நம்புகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்ளக் கூடாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான இவர்கள் அம் மக்களின் நல்வாழ்வுக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்க வேண்டியவர்கள்.
இன்றைய துன்பங்கள் தீர்வதும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைப்பதுமே தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கான தேவைகள். சமகால யதார்த்தத்துக்குப் புறம்பான தீர்வை வலியுறுத்திக் காத்திருப்பதால் இத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடி யாது. உடனடியாகத் தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களின் இப்போதைய துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வரலாம்.
அதை ஆரம்பமாகக் கொண்டு முழுமை யான தீர்வை நோக்கி முன்னேறிச் செல்லவும் முடியும். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் இம் முயற்சியை நாம் ஆரம்பிக்கலாம்.
ஆறு தசாப்த காலமாக நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக் கைகளை வலியுறுத்தியதன் விளைவாக இனப் பிரச்சினையை மூன்றாவது தலைமுறைக்குப் பாரப்படுத்தியிருக்கின்றோம்.
நான் காவது தலைமுறைக்கும் அதை விட்டுச் செல்லாமல் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டியது நம் எல்லோரினதும் தார்மீகப் பொறுப்பு. கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் கள் இதை உணர்ந்து மனச்சாட்சிக்கு விரோதமின்றி யதார்த்தபூர்வமாகச் செயற்படுவார்களென நம்புகின்றோம்.
- தினகரன் தலையங்கம் -
|